Monday 25th of January 2021 03:10:31 AM GMT

LANGUAGE - TAMIL
.
எங்கிருந்து தொடங்கியது இனமோதல் - 35 (வரலாற்றுத் தொடர்)

எங்கிருந்து தொடங்கியது இனமோதல் - 35 (வரலாற்றுத் தொடர்)


"வன்முறையால் எதிர்கொள்ளப்பட்ட உரிமைப் போராட்டம்" - நா.யோகேந்திரநாதன்!

"என்னைப் பொறுத்தவரையில் நாங்கள் எங்கள் எதிர்ப்பைத் தாக்கமுள்ள வகையில் தெரிவித்திருக்கிறோம் என்பதில் நான் திருப்தியடைகிறேன். இதை மிகச் சுருக்கமாகச் சொல்லப் போனால் இந்தளவுகூட நாங்கள் செய்யாமலிருந்தால் நாங்கள் இந்த நாட்டில் வாழ அருகதையைற்றவர்களாய் இருப்போம். இந்த அரசாங்கம் சிங்களம் மட்டும் சட்டத்தை அமுலாக்கி முழுத் தமிழ் பேசும் மக்களுக்கும் ஏற்படுத்தும் துன்பத்தில் பங்கு கொண்டு நாங்கள் அச் சட்டத்திற்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் ஒரு அம்சமாகவும் அடையாளமாகவும் சில துன்பங்களை அனுபவிக்காவிட்டால் நாங்கள் இந்தச் சபைக்கு வந்து விவாதத்தில் பங்கு கொள்வதில் அர்த்தமில்லை".

"கடந்த வாரங்களில் இடம்பெற்ற வன்முறைகளின்போது வேட்டி அணிந்தவர்களைத் தேடிச் சென்று அவர்களின் வீடுகளிலும் வேலைத் தளங்களிலும் வீதிகளிலும் தேடிப் பிடித்து அடித்தும் வேறு வகையிலும் துன்புறுத்தியுள்ளார்கள். இதற்கெல்லாம் நேரடியாகவோ மறைமுகமாகவோ சாதாரண மக்களை ஒழுங்கற்ற முறையில் தூண்டி விட்டவர்களே இவ்வன்முறைக் குற்றத்திற்குப் பொறுப்பேற்கவேண்டும். இப்படித் தாக்குவதால் எங்களைப் பயப்படுத்திவிட முடியாது என்பதைக் கௌரவ அமைச்சர் அவர்களுக்குத் திருத்தமாய்ச் சொல்லி வைக்க விரும்புகிறேன். எப்படியாயினும் இது இப்போதைய அரசின் நிர்வாகத் திறமையின்மையை எடுத்துக்காட்டுகிறது."

1956ம் ஆண்டு ஜூன் மாதம் 5ம் நாள் இலங்கைப் பாராளுமன்றத்தில் இலங்கையின் அரச கரும மொழி சிங்களம் மட்டுமே என்பதற்கான பிரேரணை முன் வைக்கப்பட்டு அதை எதிர்த்து வெளிநடப்புச் செய்து எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தலைமையில் தமிழரசுக் கட்சியினர் பாராளுமன்றத்திற்கு எதிராக உள்ள காலி முகத்திடலில் சத்தியாக்கிரகப் போராட்டத்தை மேற்கொண்டனர். அங்கு கூடிய சிங்களக் குண்டர்கள் சத்தியாக்கிரகிகள் மீது தாக்குதலை நடத்தியதுடன் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்களைத் தூக்கிக் கடலில் எறிந்தனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் அமிர்தலிங்கம் உட்படப் பல சத்தியாக்கிரகிகள் அடித்துக் காயப்படுத்தித் துன்புறுத்தப்பட்டனர். அமிர்தலிங்கம் இரத்தக் காயத்துடன் பாராளுமன்றத்தில் சென்று உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது. காலிமுகத் திடலில் தொடங்கிய வன்முறைகள் கொழும்பு நகரெங்கும் பரவி வேட்டி கட்டியவர்கள், காதில் சிறு வயதில் தோடு குத்தியவர்கள் எனத் தமிழர்களை அடையாளப்படுத்தித் தேடித்தேடித் தாக்கினர். தமிழர்களின் வர்த்தக நிலையங்கள் பல கொள்ளையிடப்பட்டன.

இச்சம்பவங்கள் தொடர்பாக தமிழரசுக் கட்சித் தலைவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்கள் உள்ளார்ந்த கோபாவேசத்துடனும் உறுதியுடனும் தமிழ் மக்களின் உரிமை வேட்கையையும் போராட்ட உறுதியையும் வெளிப்படுத்தி பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் இரு பகுதிகள் அவை.

கொழும்பில் இடம்பெற்ற தமிழர்களின் மீதான வன்முறைத் தாக்குதலைத் தொடர்ந்து கல்லோயா குடியேற்றத் திட்டத்தில் கட்டவிழ்;த்து விடப்பட்ட வன்முறைகள் காரணமாக 150க்கு மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர். 40 குடியேற்றங்களைக் கொண்ட கல்லோயா குடியேற்றத் திட்டத்தில் 34 திட்டங்கள் சிங்களவருக்கும் 6 திட்டங்கள் தமிழருக்கும் வழங்கப்பட்டன. 1956ல் இடம்பெற்ற வன்முறைகள், படுகொலைகள் என்பன மூலம் பெரும்பான்மையான தமிழ் குடியேற்றவாசிகள் விரட்டியடிக்கப்பட்டனர். 1958ல் இடம்பெற்ற இனக் கலவரத்தின்போது எஞ்சிய தமிழர்களும் வெளியேற்றப்பட இக் காணிகள் சிங்களவரால் அபகரிக்கப்பட்டு கல்லோயா தனிச் சிங்களக் குடியேற்றமாக்கப்பட்டது.

1956ல் இடம்பெற்ற இனவன்முறைகளின்போது கொழும்பில் சொத்துகள் கொள்ளையிடப்பட்டதும், கல்லோயாவில் தமிழர்களின் காணிகள் அபகரிக்கப்பட்டதும் முக்கிய இலக்குகளாக இடம்பெற்றதை அவதானிக்க முடியும். அதாவது கொலைகள், வன்முறைகள் மூலம் தென்னிலங்கையில் தமிழர்களின் இருப்பை அழிப்பதன் உள்ளார்ந்த நோக்கம் இழையோடுவது முக்கிய விடயமாகும்.

இத்தகைய படுகொலைகளும் வன்முறைகளும் தமிழ் மக்களை அச்சுறுத்தி அவர்களின் உரிமைப் போராட்டத்தை மழுங்கடித்து விடுமென்ற இன ஒடுக்குமுறையாளர்களின் எதிர்பார்ப்புப் படுதோல்வியையே கண்டது.

மாறாக அவ்வன்முறைகள் வடக்குக் கிழக்கெங்கும் பரந்துபட்ட அளவில் தமிழ் மக்கள் மத்தியில் ஒரு பேரெழுச்சியையே ஏற்படுத்தியது.

அதேவேளையில் பாராளுமன்றத்தில் தனிச் சிங்களச் சட்டத்தில் 2வது வாசிப்பின்போது இடம்பெற்ற விவாதங்களில் தமிழரசுக் கட்சியினரும், ஜீ.ஜீ.பொன்னம்பலமும், சி.சுந்தரலிங்கமும் ஆற்றிய உரைகளில் சிங்களம் மட்டும் சட்டத்துக்கு எதிரான கருத்துகளின்போது தமிழ் மக்களின் மொழியுரிமை பறிக்கப்படுவதை கண்டித்தும், காலிமுகத்திடல் வன்முறைகளின் அச்சுறுத்தலுக்கு அடிபணிந்து விடப்போவதில்லை என்பதை விளக்கியும் கருத்துரைகள் முன்வைக்கப்பட்டன. அதேபோன்று லங்கா சமசமாஜக் கட்சியைச் சேர்ந்த என்.எம்.பெரேரா, கொல்வின் ஆர்.டி.சில்வா, எட்மண் சமரக்கொடி ஆகியோரும் கம்யூனிஸ்ட் கட்சி;யைச் சேர்ந்த பீட்டர்கெனமன், டொக்டரர் விக்கிரமசிங்க, பொன்.கந்தையா ஆகியோரும் தனிச் சிங்களச் சட்டத்துக்கு எதிராகக் காத்திரமான உரைகளை ஆற்றியிருந்தனர்.

அதில் பொன்.கந்தையா ஆற்றிய உரையில் அவர் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை தொடர்பாகவும் பாரம்பரிய மொழி, வாழிடம், கலாசாரம் என்பன தொடர்பான தமிழ் மக்களின் மறுக்கமுடியாத உரிமைகள் பற்றியும் அவர் வலியுறுத்திய விடயங்கள் எவரும் மறுதலித்துப் பேச முடியாதளவுக்கு ஆணித்தரமாக அமைந்திருந்தன. பிரதமர் பண்டாரநாயக்க கூட பொன்.

கந்தையா வலியுறுத்திய விடயங்களைத் தான் ஏற்றுக் கொள்வதாகவும் ஆனால் தான் சிங்கள மக்கள் தனக்கு வழங்கிய ஆணையை நிறைவேற்ற வேண்டிய நிலையில் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். 1950ல் தமிழ் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரேயொரு தமிழ் கம்யூனிஸ்ட் பாராளுமன்றப் பிரதிநிதி பொன்.கந்தையா என்பது குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்றத்துக்கு உள்ளே மட்டுமின்றி வெளியிலும் இடதுசாரிகள் தனிச் சிங்களச் சட்டத்துக்கு எதிராகப் பல போராட்டங்களை நடத்தினர். அதில் சமசமாஜக் கட்சியினர் கொழும்பு புதிய நகர மண்டபத்தில் நடத்திய எதிர்ப்புக் கூட்டம் முக்கியமானது. அதில் என்.எம்.பெரேரா தனிச் சிங்களச் சட்டத்துக்கு எதிராக உரையாற்றிக் கொண்டிருந்தபோது இன வெறியன் ஒருவன் அவர் மீது கைக்குண்டொன்றை வீசினான். அதைத் தடுக்க முயன்ற துறைமுகத் தொழிலாளி ஒருவரின் ஒரு கைபறிபோனது.

அதேவேளையில் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியினர் தனிச் சிங்களச் சட்டத்தை எதிர்த்தும் தமிழுக்கும் சிங்களத்துக்கும் சம அந்தஸ்து வழங்கப்படுமெனக் கோரியும் நாடு பரந்த இயக்கங்களை முன்னெடுக்கும் வகையில் யாழ்ப்பாண நகர சபை மண்டபத்தில் ஒரு சர்வகட்சி மாநாட்டை நடத்த அழைப்பு விடுத்தனர். ஆங்கிலத்தை மீண்டும் அரச கரும மொழியாக்க வேண்டுமென்பதே தனது கொள்கை எனக் கூறி ஜீ.ஜீ.பொன்னம்பலம் அதில் கலந்து கொள்ள மறுத்து விட்டார். தமிழரசுக் கட்சியும் தமிழ் காங்கிரஸ் கலந்து கொள்ளாதபடியால் தாமும் கலந்து கொள்ளப் போவதில்லையெனக் கூறி மாநாட்டை நிராகரித்துவிட்டனர். அதன்மூலம் கம்யூனிஸ்ட் கட்சியின் முயற்சி முளையிலேயே கிள்ளி எறியப்பட்டு விட்டது. இதன் மூலம் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்துக்கு ஆதரவாகச் சிங்கள முற்போக்குச் சக்திகளின் ஆதரவைத்திரட்டும் வாய்ப்பு இழக்கப்பட்டதுடன், எமது நியாயங்களைச் சிங்கள மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் வாய்ப்பும் இல்லாமற் போனது. அக்காலப் பகுதியில் இடதுசாரிகள் பெரும் தொழிற்சங்கப் பலத்தைக் கொண்டிருந்ததுடன், தம் பின்னால் கணிசமான இளைஞர் சக்தியையும் திரட்டியிருந்தனர்.

இவ்வரிய சந்தர்ப்பத்தை தமிழ்த் தலைமைகள் நிராகரித்தமைக்கான இரு முக்கிய காரணங்கள் இருந்துள்ளன. முதலாவது அவர்களின் ஏகாதிபத்திய சார்பு, இடதுசாரி எதிர்ப்பு, மேட்டுக்குடி அரசியல்வாதிகளுடன் உள்ள நெருக்கமான உறவுமாகும். இரண்டாவது 1956 தேர்தலில் பருத்தித்துறைத் தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பொன்.கந்தையா அமோக வெற்றி பெற்றதுடன் ஏனைய தொகுதிகளிலும் இடதுசாரிகள் கணிசமான வாக்குகளைப் பெற்றிருந்தனர். இப்படியான நிலையில் இனப் பிரச்சினைத் தீர்வு முயற்சிகளில் இடதுசாரிகளை இணைத்துக்கொண்டால் மேலும் அவர்களின் செல்வாக்கு வடக்குக் கிழக்கில் அதிகரித்துவிடும். அதனால் தமிழ் தலைமைகள் தாங்கள் பாராளுமன்ற ஆசனத் தொகையில் குறைவு ஏற்பட்டு விடுமென அஞ்சினர். இதில் கூறப்பட்ட முதலாவது காரணத்துக்கமையப் பின்னாட்களில் தமிழ் தலைமைகள் ஐக்கிய தேசியக் கட்சியின் நலன்களைக் காப்பாற்றத் தமிழர்களின் உரிமைப் பிரச்சினைகளை விட்டுக் கொடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.

தமிழரசுக் கட்சி இடதுசாரிகளுடன் இணைந்து சிங்களத் தொழிலாளர்கள் முற்போக்குச் சிந்தனை கொண்டோரைத் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்திற்கு ஆதரவாக அணி திரட்டும் அத்தியாவசியப் பணியை நிராகரித்த போதிலும் தமிழ் மக்களை எழுச்சி பெறவைப்பதில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கியது. அதன் இரண்டாம் மட்டத் தலைவர்கள் ஒரு மக்கள் போராட்டத்தை முன்னெடுப்பதற்கான அடிப்படை அம்சங்களை உருவாக்கும் பணியில் அர்ப்பணிப்புடன் செயற்பட ஆரம்பித்தனர். கிராமங்கள் தோறும் சென்று கட்சிக் கிளைகள், இளைஞர் அமைப்புகள் என்பவற்றை உருவாக்கியதுடன் கலந்துரையாடல்கள், சிறுசிறு கூட்டங்களையும் நடத்தினர். அவர்கள் ஒவ்வொரு தொகுதிகளிலும் நடத்திய பொதுக்கூட்டங்களில் அமிர்தலிங்கம், ஆலாலசுந்தரம், வன்னியசிங்கம், இராஜதுரை, மன்சூர் மௌலானா போன்ற சிறந்த பேச்சாளர்கள் நிகழ்த்திய உணர்ச்சிகரமான உரைகள், கூட்டங்களுக்குப் பல்லாயிரக் கணக்கானோரை அணி திரள வைத்ததுடன் உரிமைப் போராட்டத்தின்பாலான ஒரு எழுச்சியை மக்கள் மத்தியில் பரப்பினர்.

இப்படித் தமிழ் மக்கள் எழுச்சிபெற்ற நிலையில் 05.07.1956ல் தமிழரசுக் கட்சியால் வட்டுக்கோட்டைத் தொகுதியின் பொன்னாலை என்ற கிராமத்திலிருந்து தனிச் சிங்களச் சட்டத்தை எதிர்த்தும் சமஷ்டிக் கோரிக்கையை வலியுறுத்தியும் ஒரு பாதயாத்திரை ஆரம்பிக்கப்பட்டது. இது கோப்பாய் பாராளுமன்ற உறுப்பினர் தலைமையில், பல பாராளுமன்ற உறுப்பினர்கள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொள்ள திருமலையை நோக்கிப் பேரெழுச்சியுடன் நகர்ந்தது. போகும் வழியெங்கும் மக்கள் உணவு வழங்கியும், இளநீர், குடிபானங்கள் வழங்கியும் பாதயாத்திரையாளர்களை ஊக்குவித்தனர்.

இடையிடையே சமபந்தி போசன நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்டன.

ஒவ்வொரு கிராமங்களையும் கடக்கும் போதும் மக்கள் பாதயாத்திரையில் தாங்களாகவே பங்கு கொண்ட நிலையில், 11வது நாள் அதாவது 17.07.1956 அன்று திருமலையை அடைந்தபோது அது ஒரு பெரும் ஊர்வலமாக மாறியிருந்தது.

பாதயாத்திரை நிறைவடைந்த பின்பு திருமலையில் ஒரு பிரமாண்டமான பொதுக்கூட்டம் இடம்பெற்றது. ஒவ்வொரு பேச்சாளர்களும் உரையாற்றும்போது மக்கள் கைதட்டியும், கரகோஷம் செய்தும் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர்.

இறுதியில் வெகு விரைவில் சிங்களம் மட்டும் சட்டத்தை எதிர்த்தும் சமஷ்டிக் கோரிக்கையை வலியுறுத்தியும் தமிழர் தாயகத்தின் சகல பகுதிகளிலும் சட்ட மறுப்புப் போராட்டத்தை மேற்கொள்வதெனவும் சத்தியாக்கிரகங்களை நடத்துவதெனவும் பிரகடனம் செய்யப்பட்டது.

அப்பிரகடனத்துக்கமைவாக தமிழரசுக் கட்சி மாநாட்டில் 20.07.1957 அன்று தமிழர் தாயகமெங்கும் சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பிப்பது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பண்டாரநாயக்கவின் தேசிய சுயசார்புக் கொள்கைகள் காரணமாக அமெரிக்காவும் அதனுடன் இணைந்த மேற்கு நாடுகளும் அவரின் ஆட்சிக்கு எதிராகப் பலவிதமான நெருக்கடிகளைக் கொடுக்க ஆரம்பித்தன. அவற்றுக்கு முகம் கொடுக்க அவர் ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுடன் நல்லுறவைப் பேணி பற்பல உதவிகளைப் பெற்று வந்தார். இந்த நிலையில் அவரால் இடதுசாரிகளின் சம அந்தஸ்துக் கோரிக்கையை உதாசீனம் செய்ய முடியவில்லை.

இன்னொருபுறம் தமிழரசுக் கட்சி தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்திய எழுச்சியும், அவர்கள் நடத்தவுள்ள சத்தியாக்கிரகப் போராட்டமும் பல நெருக்கடிகளை உருவாக்கும் என்பதையும் உணர்ந்து கொண்டார். எனவே அவர் உடனடியாக தமிழரசுக் கட்சியுடன் பேச்சுக்களை ஆரம்பித்தார். அதனடிப்படையில் 1957 ஆடி 27ம் நாள் பண்டா - செல்வா ஒப்பந்தம் கைச்சாத்தானது.

எப்படியிருந்த போதிலும் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தின் மீது காலிமுகத்திடலில் வன்முறை பிரயோகிக்கப்பட்டதன் விளைவாக தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்ட எழுச்சிக்குக் கிட்டிய வெற்றியே இந்த ஒப்பந்தமாகும்.

பின்னாட்களில் இவ்வொப்பந்தம் கிழித்தெறியப்பட்டாலும் இது கைச்சாத்திடப்படுமளவுக்கு பண்டாரநாயக்கவை இறங்கி வரவைத்தது தமிழ் மக்களின் ஐக்கியத்தினதும் பேரெழுச்சியினதும் மறுக்கமுடியாத வெற்றியாகும்.

உரிமைப் போராட்டங்கள் மீதான வன்முறைகள், போராட்டங்களை மேலும்மேலும் வலுப்படுத்தும் என்ற அனுபவ உண்மையை சிங்களத் தலைமைகள் இன்றுவரையும்கூட உணர்ந்து கொள்ளாமல் வன்முறைகள் மூலம் போராட்டங்களை அடக்கும் பாதையிலேயே பயணித்து வருகின்றனர்.

தொடரும்

அருவி இணையத்துக்கா நா.யோகேந்திரநாதன்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம்பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE