Monday 19th of April 2021 09:40:39 PM GMT

LANGUAGE - TAMIL
.
எங்கிருந்து தொடங்கியது இனமோதல் - 37 (வரலாற்றுத் தொடர்)

எங்கிருந்து தொடங்கியது இனமோதல் - 37 (வரலாற்றுத் தொடர்)


உயிர்ப்பலிகளாக உருவெடுத்த இனவெறி! - நா.யோகேந்திரநாதன்!

"ஏதேனும் அநீதியான துன்புறுத்தலான செயலுக்கு அவர்கள் முகம் கொடுக்க நேரிடும் போது பலப் பிரயோகத்துக்கோ அல்லது சமுதாய மேன்நிலை ஆதிக்கத்திற்கோ இலகுவில் அடிபணிந்திடாத அதற்கு மாறாக போராட்ட வழியையும் சட்டமீறல்களையும் நாடுகிறார்கள். தமது உரிமையை நிலைநாட்டச் சண்டையிடவும் தயங்கமாட்டார்கள்".

இது சமுதாய வரலாற்று அறிஞரான ஹொப்ளபோம் அவர்கள் ஆங்கிலேயரின் ஆட்சிக்கெதிராகச் சிங்கள மக்கள் வீரஞ்செறிந்த போராட்டத்தை வீரபுறங்அப்பு தலைமையில் துணிச்சலுடன் முன்னெடுத்தமை பற்றித் தனது நூலில் வெளியிட்ட விளக்கமாகும். அதே நிலைமை சிங்கள ஆட்சியாளர்களால் தமிழ் மக்களுக்கு தீங்கு ஏற்பட்டபோது தமிழ் மக்களும் ஆதிக்க நடவடிக்கைகளுக்கோ, பலப்பிரயோகத்திற்கோ அடிபணிந்து விடாமல் தமது உரிமைகளுக்கான போராட்டங்களைத் தொடர்ந்தனர்.

அவ்வகையிலே தனிச் சிங்களச் சட்டத்துக்கு எதிராகக் காலிமுகத்திடலில் தமிழர்கள் நடத்திய சத்தியாக்கிரகப் போராட்டத்தின் மீது பலப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டபோதும் தமிழ் மக்கள் தமது உரிமைப் போராட்டத்தைப் பல்வேறு வழிகளில் முன்னெடுத்ததன் காரணமாக இனப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு எட்டும் வகையில் பண்டா – செல்வா ஒப்பந்தம் கைச்சாத்தாகியது.

அதேவேளையில் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க தனது ஏகாதிபத்திய எதிர்ப்புக்கொள்கை காரணமாக திருகோணமலையில் அமைந்திருந்த பிரித்தானிய கடற்படைத் தளத்தை வெளியேற்றினார். அதன் காரணமாக அங்கு பிரிட்டிஷ் படைத் தளத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்களாகப் பணியாற்றிய 400 தமிழ்க் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வேலையிழந்தனர். ஒப்பந்தம் தொடர்பான பேச்சுக்களின் போது இணங்கிக் கொண்டமைக்கமைவாக பண்டாரநாயக்கவால் அத்தொழிலாளர்களுக்கு விவசாயக் காணிகளை பதவியாப் பிரதேசத்தில் வழங்கி அவர்களை அங்கு குடியேற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அந்த நேரத்தில் பண்டா – செல்வா ஒப்பந்தத்துக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியினரும் இனவாத பௌத்த சிங்கள அமைப்புக்களும் பெரும் பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். இனவாத சிங்கள அரசியல்வாதிகள் பதவியாவில் தமிழர்களுக்குக் காணி வழங்குவதை முன்வைத்து அப்பகுதி மக்கள் மத்தியில் திருகோணமலையிலிருந்து தமிழர்கள் திரண்டு வந்து சிங்களவர்களை விரட்டிவிட்டு பதவியாவை ஆக்கிரமிக்கப் போகின்றனர் என்ற பெரும் பிரசார இயக்கத்தை முடுக்கி விட்டனர். அவற்றின் அடிப்படையில் சில கிராம சபைத் தலைவர்கள், புத்த பிக்குகளும் பதவியாவிலும் அயல் கிராமங்களிலுமுள்ள சிங்களவரை அணி திரட்டித் தமிழர்களிடமிருந்து பதவியாவைப் பாதுகாக்கவென "சிங்களப் படை" என்ற பேரில் ஒரு அமைப்பை உருவாக்கினர்.

ஒரு இரவில் அந்த சிங்களப் படையினர் ஒரு பௌத்த பிக்குவின் தலைமையில் அங்கு தமிழர்களுக்கென அமைக்கப்பட்ட பதினொரு வாடிகளை அங்கிருந்த தமிழர்களை விரட்டி விட்டுக் கைப்பற்றிக் கொள்கின்றனர். அவர்கள் அங்கேயே தங்கி குழுக்களை அமைத்துக் காணிகளைத் துப்புரவு செய்ய ஆரம்பிக்கின்றனர். அவர்களின் பின்னணியில் பௌத்த பிக்குகளும் அரசியல்வாதிகளும் இருந்த நிலையில் காணி அமைச்சினாலோ பொலிஸாரினாலோ எவ்வித நடவடிக்கையையும் எடுக்கமுடியவில்லை.

இவ்வாறு தமிழர்களுக்கெதிரான நடவடிக்கைகள் மெல்ல மெல்லச் சூடுபிடித்து வந்த நிலையில் வடபகுதிக்குச் சிங்கள "ஸ்ரீ" இலக்கத் தகடுகள் பொறித்த பேருந்துகள் அனுப்பப்படுகின்றன. அதற்கான எதிர்ப்புணர்வை வெளிப்படுத்தும் முகமாகத் தமிழ் இளைஞர்கள் சிங்கள இலக்கத் தகடுகளை அழிக்கும் போராட்டத்தை ஆரம்பிக்கின்றனர். இப்படியான சந்தர்ப்பத்திற்காக காத்திருந்த ஜே.ஆர்.ஜயவர்த்தன தென்னிலங்கையிலுள்ள பெயர்ப் பலகைகளில் தமிழை அழிக்கும் போராட்டத்தை முடுக்கி விடுகின்றார். இந்நடவடிக்கைகளின்போது ஆங்காங்கே வன்முறைகள் இடம்பெற்றதுடன் தமிழர் மீதான துவேஷ உணர்வும் எங்கும் பற்ற வைக்கப்படுகிறது.

இவ்வாறான கொதிநிலை வேகமாக உருவாகிக் கொண்டிருந்த வேளையில் "பண்டா – செல்வா" ஒப்பந்தத்தைக் கிழிக்கக் கோரி பிக்குகள் பெரமுனைவின் தலைமையில் பிரதமர் இல்லத்தின் முன் பெரும் சத்தியாக்கிரகப் போராட்டத்தை மேற்கொள்கின்றனர். அவர்கள் முன்னிலையிலேயே பண்டாரநாயக்க 28.04.1958ல் ஒப்பந்தத்தைக் கிழித்தெறிகிறார்.

வடக்குக்கும் ஸ்ரீ பஸ்களை அனுப்பியமை, பதவியாவில் திருமலைத் தொழிலாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட காணிகளில் சிங்களவர் குடியேறியமையைத் தடுக்காமை, பண்டா – செல்வா ஒப்பந்தம் கைவிடப்பட்டமை போன்ற தமிழ் மக்கள் விரோத நடவடிக்கைகள் காரணமாக முற்றிலும் நம்பிக்கையிழந்து விட்ட தமிழரசுக் கட்சியினர் மேற்படி அநீதிகளை எதிர்த்து பரந்தளவிலான போராட்;டங்களை முன்னெடுப்பதெனத் தீர்மானிக்கின்றனர். மே மாத முற்பகுதியில் இடம்பெறும் தமிழரசுக் கட்சி மாநாட்டில் மேற்படி தீர்மானத்தைப் பிரகடனம் செய்வது எனவும் அதையடுத்து நேரடி நடவடிக்கைகளில் இறங்குவதெனவும் முடிவெடுக்கின்றனர்.

ஏற்கனவே இனவெறி எங்கும் பரப்பப்பட்டிருந்த நிலையில் தமிழரசுக் கட்சியின் மாநாட்டை நடக்க விடாது குழப்பும் நடவடிக்கைகளில் சிங்களவர்களைத் தூண்டி விடும் முயற்சிகளில் சிங்கள இனவெறி கொண்ட அரசியல்வாதிகள் சிலர் இறங்குகின்றனர். இவ்வன்முறைகளுக்கும் "39 சிங்களப் படை" என்ற அமைப்பைக் களமிறக்கினர்.

குண்டர்களையும் காடையர்களையும் கொண்டமைந்த இந்தப் படையினர் மே 21ல் வாகனங்களில் பொலன்னறுவைக்குக் கொண்டு செல்லப்படுகின்றனர். பொலன்னறுவை புகையிரத நிலையத்தின கதவுகள், ஜன்னல்கள் அடித்து நொருக்கப்படுகின்றன. மட்டக்களப்பிலிருந்து வந்த புகையிரத்திற்;குள் புகுந்து கொண்ட காடையர்கள் தமிழரசுக் கட்சி மாநாட்டுக்குச் செல்பவர்களைத் தேடுவதாகச் சொல்லி பயணம் செய்த தமிழ் பயணிகளை வாள்களாலும் கத்திகளாலும் பொல்லுகளாலும் தாக்குகின்றனர். பலர் புகையிரதத்தைவிட்டு இறங்கி ஊர்மனைகளுக்குள்ளும் காடுகளுக்குள்ளும் ஓடுகின்றனர். அப்படி ஓடியவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த சிங்களவர்களும் தாக்கப்படுகின்றனர்.

அடுத்து வன்முறைகள் பொலன்னறுவை கடைத் தெருவுக்கும் பரவுகின்றது. தமிழர்களின் வர்த்தக நிலையங்கள் கொள்ளையிடப்பட்டு எரியூட்டப்படுகின்றன. பொலன்னறுவை பண்ணையிலும் புகுந்து காடையர்கள் வெறியாட்டம் போடுகின்றனர். இக் கொடிய நடவடிக்கைகளில் கிராம சபைத் தலைவர்களும் ஆதிக்க வெறிகொண்ட அரசியல்வாதிகளும் முன்னின்று செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது. பொலன்னறுவை பொலிஸ் நிலையத்தில் மிகக் குறைந்தளவு பொலிஸாரே இருந்தமையால் அவர்கள் வீதியில் இறக்கவே அஞ்சினர்.

மே 24, 25ம் திகதிகளில் இனக்குரோத வெறியாட்டம் ஹிங்குராங்கொட, மின்னேரியா, தம்புள்ள போன்ற இடங்களுக்கும் பரவுகின்றது. வீதிகள், வீடுகள் எங்கும் தொடர்ந்த வெறியாட்டத்தில் பல தமிழர்களின் உயிர்கள் பலி கொள்ளப்படுகின்றன. ஹிங்குராங்கொட பண்ணையில் காடையர் கூட்டம் புகுந்தபோது ஆண்கள் பலர் கரும்புத் தோட்டங்களுக்குள் ஒளிந்து கொள்கின்றனர். அங்கும் தேடிப் பிடித்துத் தாக்குதல்கள் நடத்துகின்றனர். ஒரு பெண்ணையும் அவளின் இரு குழந்தைகளையும் கிணற்றில் தூக்கி வீசி அவர்கள் முக்குளித்துச் சாவதை ஆரவாரம் செய்து ரசித்தனர். ஒரு கர்ப்பிணிப் பெண்ணை பலர் சேர்ந்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதில் அவர் இரத்தப் பெருக்கில் உயிரிழக்கிறாள். ஒரு துப்புரவுத் தொழிலாளி அடித்தே கொல்லப்பட்டார். ஹிங்குராங்கொடவில் ஒரு தமிழரும் மின்னேரியாவில் இன்னொரு தமிழருமாக சிறுவர் உயிருடன் எரிக்கப்பட்டார்.

காடையர் கூட்டத்தைச் சேர்ந்த சிலர் மட்டக்களப்பை நோக்கி முன்னேற முயன்றபோது மன்னம்பிட்டிப் பாலத்தில் தேனீர்க்கடை நடத்திய ஒரு சிங்களவரின் தலைமையில் தமிழ், சிங்களக் கிராமவாசிகள் ஒன்றிணைந்து கலகக்காரரை மட்டக்களப்பு நோக்கி முன்னேறவிடாமல் விரட்டியடிக்கின்றனர்.

ஒட்டுமொத்தமாக ஹிங்குராகொட, பொலன்னறுவை, மின்னேரியா ஆகிய பகுதிகளில் 100இற்கும் 200இற்கும் இடைப்பட்டோர் கொல்லப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. ஹிங்குராங்கொடவில் மட்டும் 40 குடும்பங்கள் கொல்லப்பட்டும் காயப்படுத்தப்பட்டும் பாதிப்புக்குள்ளாகின.

அதேவேளையில் திருகோணமலையிலிருந்து வந்த புகையிரதம் கல்லோயாச் சந்தியில் தாக்கப்பட்டதில் பல தமிழர்கள் காயமடைந்தனர். தொடர்ந்து கல்லோயா குடியேற்றத் திட்டத்தில் பரவிய கலவரம் காரணமாகச் சில தமிழர்கள் கொல்லப்பட்டதுடன் அங்கிருந்த தமிழர்கள் முற்றாகவே வெளியேறிவிட்டனர்.

மே 26ல் பொலன்னறுவை பொலிஸ் நிலையம் முன்பு கூடிய 3,000திற்கும் மேற்பட்ட குழப்பக்காரர்கள் தமிழ் பொலிஸாரை வெளியே விடும்படி கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொலிஸார் இராணுவத்தை உதவிக்கு அழைத்தபோது அவர்கள் தங்களுக்கு சுடுவதற்குக் கட்டளை வரவில்லை எனக் கூறி உதவிக்கு வர மறுத்துவிட்டனர். பின் குழப்பக்காரர் பொலிஸ் நிலைய வாசலில் வைத்து ஒரு தமிழ் அரசாங்க அதிகாரியை நையப்புடைத்து தூக்கி வீசி விட்டு கலைந்து சென்றனர்.

அதேவேளையில் தமிழர்களுக்கெதிரான வன்முறைகள் தம்புள்ள, கலவெல்ல, குளியாப்பிட்டி ஆகிய பகுதிகளில் பரவியதுடன் கொழும்பிலும் தமிழ் எழுத்துக்களை அழிக்கும் நடவடிக்கைகளுடன் ஆரம்பமான குழப்பங்கள் வலுவடைந்து தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகளாக வெடித்தன.

இவ்வாறு நாட்டின் பல பகுதிகளிலும் வன்முறைகள் வெடித்த நிலையில் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க வானொலியில் நிகழ்த்திய உரையில் துரதிஷ்டவசமாக நாட்டில் இனமோதல் ஏற்பட்டு விட்டதாகவும் அதன் விளைவாக மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் நுவரெலியா மேயர் செனவிரத்ன உட்படச் சிலர் உயிரிழக்க நேர்ந்ததாகவும் அதன் காரணமாக வன்முறைகள் பொலன்னறுவை, கலாவெல, குளியாப்பிட்டி பகுதிகளில் மட்டுமின்றி கொழும்புக்கும் பரவியதாகவும் இப்படியான கட்டுக்கடங்காத நிலைமை மோசமடைவதைத் தவிர்க்கச் சிங்கள மக்கள் பொறுமையுடன் அமைதி காக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

ஆனால் பொலன்னறுவையில் புகையிரத நிலையத் தாக்குதலுடன் இனவன்முறைகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டன. தொடர்ந்து நான்கு நாட்கள் இடம்பெற்ற வன்முறைகளின்போது 25ம் திகதியே செனவிரத்ன கொல்லப்பட்டான். இக்கொலை தனிப்பட்ட முரண்பாடுகள் காரணமாகவே இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இவ்வுரையை அடுத்து செனிவரத்தினவின் கொலைக்குப் பழிவாங்குவது என்ற பேரில் தமிழர்கள் மீதான வெறியாட்டம் மேலும் பல பகுதிகளுக்கும் உக்கிரமாகப் பரவியது.

இந்த நிலையில் 27.05.1958ல் பல்வேறு குழுக்களின் பிரதிநிதிகள் பிரதமரைச் சந்தித்து நிலைமை படுமோசமடைந்து விட்டதாகவும் அவசரகால நிலைமையைப் பிரகடனப்படுத்தும்படியும் கேட்டுக்கொண்டனர். எனினும் குழுவினர் நிலைமையைப் பெரிதுபடுத்துவதாகவும் அவசரகாலச் சட்டம் பிறப்பிக்குமளவுக்கு நிலைமை மோசமில்லையெனவும் கூறித் தயக்கம் காட்டினார்.

இப்படியாகப் பேச்சுகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கும்போதே குண்டர்கள் புறக்கோட்டையிலுள்ள 15 தமிழர்களின் கடைகளைத் தீக்கிரையாக்கியதுடன் மறியல்கடையிலுள்ள ஒரு வரிசைக் கடைகளையும் எரியூட்டினர். அத்துடன் மருதானை, வெள்ளவத்தை, ரத்மலானை, குருநாகல், பாணந்துறை, களுத்துறை, பதுளை, காலி, மாத்தறை, வெலிகம எனப் பல பகுதிகளில் கொலைகள், கொள்ளைகள், எரியூட்டல் எனக் கொடிய வன்முறைகள் இடம்பெற்றன. இவற்றில் பாணந்துறையில் இந்துக்கோயில் பூசகர் உயிருடன் எரித்துக்கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இன்னொருபுறம் கலவானயிலிருந்து நாலாந்த வரையுள்ள சகல கிராமங்களிலும் தமிழர்களின் வீடுகள் அனைத்தும் எரிக்கப்பட்டன.

இந்த நிலையில் 27.05.1957 அவசரகால நிலைமை மகாதேசாதிபதி ஒலிவர் குணதிலக்கவால் பிரகடனப்படுத்தப்பட்டு இராணுவம் வீதிகளில் இறக்கப்பட்டது. அத்துடன் உடனடியாகவே தமிழரசுக் கட்சியும் கே.எம்.ராஜரத்தினவின் தேசிய மக்கள் முன்னணியும் தடைசெய்யப்படுகின்றன.

எனினும் மே 28ல் கல்கிசையில் சில வன்முறைகள் இடம்பெற்று அவை அன்று நண்பகலே கட்டுக்குள் கொண்டு வரப்படுகின்றன.

அன்று பொலன்னறுவ, ஹிங்குராகொடப் பகுதிகளில் வெறியாட்டம் நடத்திய குண்டர்கள் லொறிகளில் வன்முறைகளைத் தொடரும் நோக்குடன் அனுராதபுரம் நோக்கிப் பயணிக்கின்றனர். அப்போது வடபகுதிக் கட்டளைத் தளபதியாயிருந்த பறங்கியரான "சேரம்" ரம்பாவைச் சந்தியில் வைத்து அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு அவர்களை விரட்டியடிக்கின்றார்.

இக்கலவரங்கள் காரணமாகப் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் தமது தொழில் நிலையங்களையும் குடியிருப்புகளையும் இழந்து றோயல் கல்லூரியிலும் புனித பீட்டர் கல்லூரியிலும் அகதிகளாகத் தஞ்சமடைகின்றனர். இவர்களில் ஒரு பகுதியினர் ஜூலை 1ம் திகதியிலும் மறு பகுதியினர் ஜூன் 6ம் திகதியிலும் மொத்தமாக 14.426 தமிழர்கள் கப்பல்கள் மூலம் வடபகுதிக்கு அனுப்பப்படுகின்றனர். அனுராதபுரம், கல்கமுவ, தளாவ போன்ற இடங்களிலிருந்து வெளியேறிய தமிழ் மக்கள் முதலில் வவுனியாவில் தங்கவைக்கப்பட்டுப் பின் கிளிநொச்சி தர்மபுரத்தில் குடியேற்றப்பட்டனர்.

இக்கலவரங்களின்போது 300இற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டதுடன், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்ததாகவும் தெரிய வருகிறது. தென் பகுதியின் சிறிய நகரங்களில் அமைந்திருந்த தமிழர்களின் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் சிங்களவரால் கைப்பற்றப்பட்டு விட்டன.

எவ்வாறாயினும் அநகாரிக தர்மபாலவில் தொடங்கிப் பின்வந்த சிங்கள அரசியல்வாதிகள் வரை சிங்கள மக்களுக்கு ஊட்டிய சிறுபான்மை மக்களுக்கு எதிரான இனவெறியின் விளைபலனாக 1958ல் ஏராள தமிழர்களின் உயிர்கள் பலி கொள்ளப்பட்டதுடன் தமிழர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டும் அழிக்கப்பட்டும் ஒரு பேரவலம் அரங்கேற்றப்பட்டது.

எனவே அவர்களால் ஊட்டப்பட்ட இனவெறி அகோர வடிவில் பரிணாமம் பெற்று தமிழர்கள் மீதான உயிர்ப்பலியாக உருவெடுத்தது.

தொடரும்

அருவி இணையத்துக்கா நா.யோகேந்திரநாதன்.


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம்பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE