Thursday 25th of February 2021 07:03:49 AM GMT

LANGUAGE - TAMIL
.
எங்கிருந்து தொடங்கியது இனமோதல் - 38 (வரலாற்றுத் தொடர்)

எங்கிருந்து தொடங்கியது இனமோதல் - 38 (வரலாற்றுத் தொடர்)


'தாமதிக்கப்பட்ட அவசரகாலச் சட்டமும் தடுக்கப்படாத பேரழிவும்' - நா.யோகேந்திரநாதன்!

"அதிகாரத்தின் இரும்புச் சங்கிலியால் இறுகப் பிணைத்து குடிமக்களை அடிமைகளாக நடத்தினான் அக்காலத்து மூட அரசன். ஆனால் இக்காலத்து அரசியல்வாதிகளோ தமது அறிவுநுட்பத்தால் மக்களை அடிமை கொண்டு விடுகிறார்கள். கருத்துகளின் ஆதிக்கச் சங்கிலியால் அவர்கள் மக்களை விலங்கிட்டு வைத்திருக்கிறார்கள். அரசனின் அதிகாரப் பிணைப்பை விட அரசியல்வாதிகளின் ஆதிக்கப் பிடி இறுக்கமானது, வலுவானது. மக்களை விலங்கிட்டு வைத்திருக்கும் ஆதிக்கச் சங்கிலியின் மறுமுனை அரசியல்வாதிகளின் கையில்தான் உள்ளது. இந்த ஆதிக்கப் பிடியின் சூட்சுமங்களை நாம் இலகுவில் புரிந்து கொள்ளமுடியாது. இரும்புச் சங்கிலியின் இறுக்கமான பிடி காலத்தால் சிதைவுண்டு போகலாம். ஆனால் கருத்து விலங்குகளின் அதிகாரப் பிணைப்பிலிருந்து மீளுவது கடினம்".

புதுமையான சமூகச் சிந்தனையாளரும் சமூக உலகத்தையும் மனித உறவுகளையும் ஒரு புதிய பரிமாணத்தில் நோக்கியவருமான பிரெஞ்சுத் தத்துவ மேதையான மிஷல் பூக்கோ அவர்கள் அதிகார உறவுகளுக்குள் மனித வாழ்வு சிக்குண்டு கிடப்பதை விளக்கும்போது வெளியிட்ட ஒப்பற்ற கருத்து இது.

இலங்கை சிங்களவர்களுக்கு மட்டுமே சொந்தமானது எனவும் இலங்கையை விட அவர்களுக்கு வேறெங்கும் போக்கிடம் இல்லையெனவும், இலங்கையில் வாழும் ஏனைய இனத்தவர்கள் சிங்கள மக்களின் வாழிடம், பொருளாதாரம், கலாசாரம் போன்றவற்றைப் பறிப்பதையும், சிதைப்பதையும் நோக்கமாகக் கொண்டவர்கள் எனவும், அவர்களால் எப்போதுமே சிங்கள மக்களின் உரிமைகளுக்கு ஆபத்து உண்டெனவும் ஒரு வலிமையான கருத்துச் சங்கிலி சிங்கள மக்கள் மேல் பூட்டப்பட்டுள்ளது. இதன் மறுமுனையைத் தங்கள் கையில் வைத்திருக்கும் சிங்கள மேலாதிக்க சக்திகள் தங்கள் அதிகாரம் குலைந்துவிடாமல் தக்கவைத்துக் கொள்ளத் தேவை ஏற்படும் நேரங்களில் நீள விட்டும், இழுத்துப் பிடித்தும் தங்கள் நலன்களைப் பேணிக் கொள்கின்றனர்.

சிங்கள மக்கள் இந்த அதிகாரச் சங்கிலியால் விலங்கிடப்பட்டிருப்பதை நியாயப்படுத்தும் வகையிலேயே தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிரான சட்டங்கள் இயற்றப்படுவதும், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதும், வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்படுவதுமாகும்.

அவ்வகையிலேயே சிங்களவர்களை முதன்மைப்படுத்தும் தேசியக் கொடி அமைக்கப்பட்டதும், மலையக மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டு அவர்கள் நாடற்றவர்களாக்கப்பட்டதும் தனிச் சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்டதும் போன்ற நடவடிக்கைகளாகும். 1883ல் இடம்பெற்ற கத்தோலிக்கர்களுக்கு எதிரான வன்முறைகள், 1915ல் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் 1958ல் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் எல்லாமே ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சி நிரலுக்கு உட்பட்டே இவ்வதிகாரச் சங்கிலியின் ஆதிக்க வட்டத்துக்குள்ளேயே மேற்கொள்ளப்படுகின்றன. அதிகார பீடங்களின் தேவைகள் நிறைவு பெற்றதும் அவை கட்டுக்குள் கொண்டு வரப்படுகின்றன. அப்படிக் கட்டுப்படுத்தும் சந்தர்ப்பங்களில் அதிகார பீடத்தினர் தங்கள் நோக்கங்களை நிறைவேற்றத் தாங்கள் ஏவிவிட்ட மக்களின் உயிர்களைப் பறிக்கவோ அல்லது அவர்களைத் தண்டனைக்குட்படுத்தவோ கூடத் தயங்குவதில்லை.

அத்தகைய சந்தர்ப்பங்களில் பயன்படுத்துமுகமாகவே அவர்கள் தங்கள் கையில் எப்போதும் தயாரான நிலையில் அவசரகாலச் சட்டம், ஊரடங்குச் சட்டம், இராணுவச் சட்டம் போன்றனவற்றைத் தேவையான சந்தர்ப்பங்களில் பாவிக்கும் வகையில் தயார் நிலையில் வைத்திருப்பார்கள்.

1958ல் அவசரகாலச் சட்டம் அமுலுக்கு வருவதற்கு முற்பட்ட காலங்களில் 1883, 1915 என இரு சந்தர்ப்பங்களில் இன, மதக் கலவரங்களைக் கட்டுக்குள் கொண்டுவர இராணுவச் சட்டம், ஊரடங்குச் சட்டம் என்பன பிரயோகிக்கப்பட்டன.

1883ல் கொட்டாஞ்சேனைப் பகுதியில் கத்தோலிக்கர்களுக்கு எதிரான கலவரம் மூண்டது. 20.03.1883ல் பௌத்த பெரஹர ஊர்வலத்தின்போது அதன் மீது சென்ற். லூசியா தேவாலயத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட கல்லெறித் தாக்குதலையடுத்து கொட்டாஞ்சேனையிலும் கொழும்பின் புறநகர்ப் பகுதிகளிலும் பரவிய கத்தோலிக்க மக்களைத் தேடித் தாக்கும் வன்முறைகளில் ஒரு பௌத்த சிங்களவர் கொல்லப்பட்டதுடன் ஒரு பொலிஸ் உட்பட 12 பேர் காயமடைந்தனர். எனினும் மூன்றாம் நாள் இராணுவச் சட்டம் அமுலுக்குக் கொண்டு வரப்பட்டுக் கலகம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

1915ல் இடம்பெற்ற கண்டிக் கலகம் ஆரம்பமாவதற்குக் கண்டியில் இடம்பெற்ற சில சம்பவங்கள் காரணமாயிருந்தாலும் இலங்கையில் ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம், மொத்த வியாபார ஆதிக்கம், கொழும்பு, கண்டி, காலி போன்ற நகரங்களின் வர்த்தகக் கட்டுப்பாடு முஸ்லிம் செல்வாக்குக்குட்பட்டிருந்த நிலையில் அவற்றைக் கைப்பற்றும் முகமாகவே தொடங்கப்பட்டது. சிங்களவரின் சுயாதிபத்தியத்தை முஸ்லிம்களும் தமிழர்களும் பறிக்கின்றனர் என ஏனைய இனங்களுக்கெதிராக அநகாரிக தர்மபாலவால் கட்டி வளர்க்கப்பட்ட இனக்குரோதமே இக்கலவரத்தின் தத்துவார்த்த வழிகாட்டியாக விளங்கியது. சிங்கள வர்த்தக நலன்களில் உருவாக்கப்பட்ட சிங்கள பௌத்த மேலாதிக்கக் கருத்துச் சங்கிலியில் பிணைக்கப்பட்ட சிங்கள மக்கள் இக்கலவரத்தில் இறங்கினர்.

28.051915ல் கண்டியில் ஆரம்பமான இவ் வன்முறைகள் 30.05.1915ல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு பின் கொழும்பில் 31.05.1915ல் தொடங்கியது. 02.06.1915 ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட போதிலும் இக்கலகத்தில் 25 முஸ்லிம்கள் கொல்லப்பட 189 பேர் படுகாயமடைந்தனர். 4 முஸ்லிம் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டனர். 4073 முஸ்லிம் கடைகளும் 250 வீடுகளும் தாக்கியும் கொள்ளையிடப்பட்டும் எரியூட்டப்பட்டும் அழிக்கப்பட்டன. 17 பள்ளிவாசல்கள் முற்றாகத் தீயிட்டு எரிக்கப்பட்டும் தாக்கியும் சேதப்படுத்தப்பட்டன. எனினும் பஞ்சாப் படையினர்கள் களமிறக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அங்கு பல வன்முறைகள் பொலிஸார் முன்னிலையிலேயே இடம் பெற்றன. இதில் ஆங்கில ஆட்சியாளர்களால் கைது செய்யப்பட்ட சிங்களவர்களில் 10 பேர் மரண தண்டனைக்குட்படுத்தப்பட்டதுடன், 380 பேருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 31.10.1915வரை இராணுவச் சட்டம் அமுலிலிருந்தது.

இந்த இரு கலவரங்களின் போதும் ஆங்கில ஆட்சியாளர்கள் எந்த ஒரு தரப்பினர் பக்கம் இல்லாத நிலையிலும் சிங்கள பௌத்த மேலாதிக்க கருத்துச் சங்கிலியால் கட்டப்பட்ட மக்களே களமிறக்கப்பட்டனர். அதன் பின்னணியில் வளர்ச்சியடைந்து வந்த சிங்கள வர்த்தக மேலாதிக்க சக்திகளின் நலன்கள் அமைந்திருந்தன.

21.05.1958ல் ஆரம்பிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்புக் கலவரம் 27.05.1958 பிற்பகுதியில் அவசரகாலச் சட்டம் அமுலாக்கப்பட்டுக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டாலும் அதன் பின்பும் பாணந்துறை, இரத்மலானை பகுதிகளிலும் அனுராதபுரப் பகுதியிலும் சில வன்முறைகள் இடம்பெற்றன. இதில் 300 இற்கு மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டதுடன் 1500 இற்கும் மேற்பட்டோர் படுகாயப்படுத்தப்பட்டனர். பல இலட்சக்கணக்கான பெறுமதியுள்ள சொத்துக்கள், வீடுகள் சூறையாடப்பட்டும், எரியூட்டப்பட்டும் சேதப்படுத்தப்பட்டும் அழிக்கப்பட்டன. அத்துடன் 12,926 தமிழர்கள் அகதிகளாகக் கப்பல் மூலம் வடபகுதிக்கு அனுப்பப்பட்டனர்.

இலங்கையின் அரசியலதிகாரத்தைக் கைப்பற்றும் போட்டியில் ஏகாதிபத்திய சார்பு மேட்டுக்குடி அரசியல் பிரதிநிதிகளான ஐக்கிய தேசியக் கட்சியும் ஏகாதிபத்திய எதிர்ப்பு சுயாதிபத்திய தேசிய சக்திகளின் பிரதிநிதியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் தமிழர்களுக்கு எதிரான இனவாதத்தைக் கையிலெடுத்துக் கொண்டன. இதற்கு அநகாரிக தர்மபாலவால் உருவாக்கப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்ட ஏனைய இனங்களுக்கெதிரான சிங்களப் பௌத்த பேரினவாத கருத்தியல் சங்கிலியில் சிங்கள மக்கள் பிணைக்கப்பட்டிருந்தமையே காரணமாயமைந்திருந்தது. இக்கருத்தியலை மெருகுபடுத்தி வளர்த்தெடுப்பதில் இரு தரப்பினரும் போட்டி போட்டு ஒருவரையொருவர் வெல்லும் வகையில் தங்கள் அரசியல் நோக்கங்களின் ஆயுதமாகக் கையிலெடுத்துக்கொண்டனர்.

மே 21ம் திகதி பொலன்னறுவையில் ஆரம்பிக்கப்பட்ட இன அழிப்பு நடவடிக்கைகள் 22, 23ம் திகதிகளில் ஹிங்குராங்கொட, தம்புள்ள, மின்னேரியா, குளியாப்பிட்டி எனப் பரவிய போதே அவசர காலச் சட்டத்தைப் பிரகடனப்படுத்தியிருந்ததால் 1958 பேரழிவின் பெரும் பகுதியைத் தடுத்திருந்திருக்கலாம். மே 26ல் வன்முறைகள் கொழும்பு வரை பரவி உச்ச கட்டத்தை எட்டியபோதும் பண்டாரநாயக்க வானொலி மூலம் மக்களை அமைதி காக்கும்படி அழைப்பு விடுத்தாரேயொழிய அவசரகாலச் சட்டத்தை அமுலுக்குக் கொண்டு வரவில்லை.

இங்குதான் அரசியலதிகாரத்தின் ஒரு ஆயுதமாக இரு தரப்பினராலும் இந்த இன அழிப்பு பயன்படுத்தப்பட்டது. எந்தக் கருத்தியலின் மேல் ஏறி நின்று பண்டாரநாயக்க கோலாகலமாக தனிச் சிங்களச் சட்டத்தைக் கொண்டு வந்தாரோ அதே கருத்தியலையே ஜே.ஆர்.ஜயவர்த்தன மேலும் தீவிரப்படுத்திப் பெரும் இன அழிப்புக் கலவரத்தைக் கட்டவிழ்த்து விட்டு பண்டாரநாயக்கவின் ஆட்சியை அச்சுறுத்தும் நிலையை ஏற்படுத்தினார்.

கலவரம் தொடங்கிய முதலாவது அல்லது இரண்டாவது நாளில் அவசரகாலச் சட்டத்தைப் பிரகடனம் செய்திருந்தால் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட பேரழிவைத் தடுத்திருக்கலாம். ஆனால் அப்படி அவர் செய்யத் தயங்கியமைக்கு இரு முக்கிய காரணங்கள் அமைந்திருந்தன.

இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்பு தொட்டு, அதாவது பிரிட்டிஷ் ஆட்சியின் போதிலிருந்து இலங்கையின் முப்படைகளின் தளபதிகளாகவும் அதிகாரக் கட்டமைப்பிலும் பதவி வகித்தவர்களே 1958லும் அதிகாரத்திலிருந்தனர். அவர்கள் ஏகாதிபத்திய சார்பு போக்குடையவர்களாயிருந்தபடியால் பண்டாரநாயக்கவின் ஏகாதிபத்திய எதிர்ப்புக் கொள்கைகள் அவர்களுக்கு உவப்புடையதாக இருக்கவில்லை. எனவே அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டு, இராணுவத்திடம் அதிகாரம் வழங்கப்பட்டால் ஒரு இராணுவ சதிப்புரட்சி மூலம் தனது ஆட்சி கவிழ்க்கப்பட்டு விடக்கூடுமெனப் பண்டாரநாயக்க அஞ்சினார். முப்படைகளின் தளபதியான மகாதேசாதிபதி ஒலிவர் குணதிலக்க ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது முதலாவது காரணம்.

இரண்டாவது காரணம் அந்த இனக்கலவரத்தில் புத்த பிக்குகள் பலர் நேரடியாக வீதியில் இறங்கி வன்முறைகளை வழிநடத்தினர். அது மட்டுமின்றி மின்னேரியா, தம்புள்ள போன்ற இடங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல்வாதிகளும் அவர்களின் ஆதரவாளர்களும் வன்முறைகளில் பங்கு கொண்டிருந்தனர். எனவே அவசர காலச் சட்டம் பிரகடனப்படுத்தும் நிலையில் புத்த பிக்குகளோ தனது ஆதரவாளர்களோ கொல்லப்பட்டால் ஜே.ஆர்.ஜயவர்த்தன அவற்றை வைத்தே தனது அரசியல் எதிர்காலத்தை இருளடைய வைத்துவிடுவார் என அஞ்சினார்.

அவற்றைவிட திருகோணமலையிலிருந்து பிரிட்டிஷ் கடற்படைத்தளம் அவரால் வெளியேற்றப்பட்டபோது தமிழரசுக் கட்சித் தலைவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் பிரிட்டிஷ் படையினரை வெளியேற வேண்டாமென பிரிட்டிஷ் மகாராணிக்குத் தந்தியடித்தமை, பண்டா – செல்வா ஒப்பந்தத்துக்கு எதிரான பிரசாரங்கள் மும்முரமாக இடம்பெற்ற வேளையில் போக்குவரத்துச் சபை அதிகாரிகள் வடக்குக் "ஸ்ரீ" இலக்கத் தகடு பொறித்த பஸ்களை அனுப்பியமை, அதை எதிர்த்துத் தமிழரசுக் கட்சியினரால் "ஸ்ரீ" அழிப்புப் போராட்டம் நடத்தியமை, அது தொடங்கிய அதே நாளிலேயே தென்னிலங்கையில் ஐக்கிய தேசியக் கட்சியினர் தமிழ் எழுத்துக்களை அழிக்கும் இயக்கத்தை ஆரம்பித்தமை, இப்படி நிலைமை சூடடைந்த நிலையில் தமிழரசுக் கட்சி வவுனியா மாநாட்டில் போராட்டங்களை விரிவுபடுத்தப் போவதாக அறிவித்தமை, பதவியாவில் தமிழர்களுக்கு ஒதுக்கப்பட்ட காணிகளைச் சிங்களவர் கைப்பற்றியமை இவை எல்லாமே ஏகாதிபத்திய சார்பு கொண்ட ஒரு நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் தனது ஆட்சியைக் கவிழ்க்கும் நோக்குடனேயே மேற்கொள்ளப்பட்டன என அவர் கருதியிருக்கலாம்.

எனினும் நிலைமை முற்றாகவே கட்டுக்கடங்காத நிலை ஏற்படவே மே 27 பிற்பகல் அவசரகாலச் சட்டத்தைப் பிரகடனப்படுத்தவேண்டிய நிலை எழுந்தது. அவசரகாலச் சட்டம் மேலும் 3 மாதம் நீடிக்கப்பட்டது. அத்துடன் தமிழரசுக் கட்சியும், தேசிய மக்கள் முன்னணியும் தடைசெய்யப்பட்டதுடன் தமிழரசுக் கட்சித் தலைவர்களும் தேசிய மக்கள் முன்னணித் தலைவர் கே.எம்.பி.ராஜரத்தினவும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். "ஸ்ரீ" அழிப்புக் குற்றச்சாட்டில் பல தமிழரசுக் கட்சித் தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.

1915ல் இடம் பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையில் சம்பந்தப்பட்டதாகக் கருதப்பட்டவர்கள் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டும் சிறைத் தண்டனை வழங்கப்பட்டும் தண்டிக்கப்பட்டனர். டி.எஸ்.சேனநாயக்க உட்படப் பல சிங்களத் தலைவர்கள் சிறை செய்யப்பட்டனர். அநகாரிக தர்மபால வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

ஆனால் 1958ல் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி கிடைக்கவில்லை. சம்பந்தப்பட்டதாகக் கருதப்பட்ட எவரும் தண்டிக்கப்படவில்லை. இதன் பலன் இனக்கலவரத்தைத் தூண்டி பின்னணியில் நின்று ஏவி விட்ட அதே ஏகாதிபத்தியச் சார்புச் சக்திகளின் சதி நடவடிக்கைகள் காரணமாக பண்டாரநாயக்க 1958 செப்டெம்பர் மாதம் சுட்டுக் கொல்லப்பட்டார்.

தாமதிக்கப்பட்ட அவசரகாலச் சட்டத்தால் எப்படி அவரால் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட பேரழிவைத் தடுக்க முடியவில்லையோ அவ்வாறே அவரால் அடுத்த ஆண்டு இடம் பெற்ற அவரின் படுகொலையையும் அவரால் தடுக்க முடியவில்லை.

உரிய நேரத்தில் எடுக்கவேண்டிய கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படாதவிடத்து அது சம்பந்தப்பட்டவர்களையே கூட பலி கொள்ளக்கூடும் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணமாகும்.

தொடரும்....

அருவி இணையத்துக்கா நா.யோகேந்திரநாதன்.


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம்பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE