Thursday 25th of April 2024 07:58:50 PM GMT

LANGUAGE - TAMIL
.
மன்னார் மாவட்டத்தில் 49 பேருக்கு தொற்றுறுதி: மொத்த தொற்று 66 ஆக அதிகரிப்பு!

மன்னார் மாவட்டத்தில் 49 பேருக்கு தொற்றுறுதி: மொத்த தொற்று 66 ஆக அதிகரிப்பு!


மன்னார் மாவட்டத்தில் 49 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்த தொற்றாளர்களது எண்ணிக்கை 66 ஆக அதிகரித்துள்ளது.

மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை 66 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, இம் மாதம் மட்டும் 49 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.

மன்னார் பிராந்திய சகாதார சேவைகள் பணிமனையில் இன்று(18) திங்கட்கிழமை மாலை இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பண்டிகைக் காலங்களை ஒட்டி மன்னார் மாவட்டத்தில் மக்களினுடைய நடமாட்டங்கள் அதிகரித்த காரணத்தினால் தற்போது கொரோனா தொற்று மாவட்டத்தில் அதிகரித்த நிலையில் காணப்படுகின்றது.

கடந்த முதலாம் திகதியில் இருந்து இன்று வரை மன்னார் மாவட்டத்தில் 49 நபர்கள் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 20 பேர் மன்னார் பஸார் பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர்.பரிசோதனைகளின் போது தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இது வரையில் மன்னார் மாவட்டத்தில் 66 பேர் தற்போது வரை கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 5 பேர் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற உத்தியோகத்தர்கள் மற்றும் பணியாளர்கள்.

இந்த மாதத்தில் மாத்திரம் சுமார் 2 ஆயிரததிற்கும் மேற்பட்ட பீ.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் பீ.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட போது மக்கள் தாமாகவே முன் வந்து தமக்கு பீ.சி.ஆர்.பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டமை ஒரு முன் மாதிரியான செயல்பாடாக அவதானிக்கப்பட்டது.

இதே போன்று மக்கள் எமக்கு பீ.சி.ஆர்.பரிசோதனைகளை மேற்கொள்ள ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதோடு, சுகாதார நடை முறைகளையும் ஒழுங்காக கடை பிடிக்க வேண்டும்.

முக்கியமாக பலர் கூடி இருந்து உணவு உண்ணுதல், பொதுவான மலசல கூடங்களை பாவிக்கும் போது கை சுகாதாரத்தை கடுமையாக பேனுதல் போன்ற விடையங்களை கடைபிடித்தல் அவசியம்.

அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் கதைத்ததன் அடிப்படையில் அதிகமானவர்களுக்கு மிகவும் இலகுவில் தொற்று ஏற்படவில்லை. சுகாதார விதிமுறைகளை பின்பற்ற தவறியமை, கை சுகாதாரத்தை கடை பிடிக்காமை போன்ற செயற்பாடுகள் தொற்றுக்கான மூல காரணமாக அமைந்துள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் 4 கொரோனா தொற்று நோயளர்கள் மிகவும் கடுமையான பாதிப்புடன் முருங்கன், எருக்கலம்பிட்டி, பேசாலை வைத்திய சாலைகளில் இருந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டனர்.

வைத்தியர்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்களின் அர்ப்பனிப்பான சேவையினால் அவர்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது. எவ்வாறாக இருந்தாலும் தொடர்ந்தும் நிறைய தொற்றாளர்கள் வருகின்ற போது இவர்களுடைய உயிர்களை பாதுகாக்க எமக்கு மிகவும் கடினமாக இருக்கும். எனவே இந்த நிலையை அவதானத்தில் கொண்டு மக்கள் மிகவும் பொறுப்புடனும், ஒத்துழைப்புடனும் நடந்து கொள்ள வேண்டும்.

குறிப்பாக வர்த்தக நிலையங்களுக்கு செல்பவர்கள் தமது தேவகைளை நிறைவேற்றியவுடன் உடனடியாக தமது வீடுகளுக்கு செல்வது நன்று. வர்த்தக நிலையங்களுக்கு செல்லுகின்ற போது தமது சுகாதார நடைமுறை, கை சுகாதாரங்களை கடை பிடிக்க வேண்டும்.

தேவை இன்றி நகர் பகுதிகளில் நடமாடுவதை தவிர்த்துக் கொள்வது நல்லது. எதிர் வரும் இரண்டு வாரங்கள் மன்னார் நகர் பகுதியில் அத்தியாவசிய தேவைகள் இன்றி எவரும் வர்த்தக நிலையங்களுக்கு வருவதை தவிர்த்துக் கொண்டால் இத் தொற்று தொடர் சங்கிலியை நாங்கள் உடைத்து தொற்று இல்லாத நிலைக்கு கொண்டு வர உதவியாக இருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், மன்னார்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE