Friday 26th of February 2021 06:01:43 PM GMT

LANGUAGE - TAMIL
.
எங்கே தொடங்கியது இனமோதல் - 40 (வரலாற்றுத் தொடர்)

எங்கே தொடங்கியது இனமோதல் - 40 (வரலாற்றுத் தொடர்)


இனப்பிரச்சினைத் தீர்வின் இரண்டாவது தோல்வி! - நா.யோகேந்திரநாதன்!

"சிறுபான்மையினர் ஒருவரையொருவர் அவநம்பிக்கையுடன் நோக்கத் தொடங்கியுள்ளனர். அடிப்படையிலிருந்து அத்தகைய வேற்றுமைகள் உருவாகவில்லை என நினைப்பது தவறு. ஒருசிலர் ஒரு நோக்கத்துடனேயே பிரிவினைகளை உருவாக்கினர். அவர்கள் இறந்த பின்பு இந்த வேற்றுமைகள் மறைந்துவிடுமென நினைத்தவர்களும் உண்டு. நூறு வருடங்களின் முன்பு அவ்வாறான பிரிவினைகள் இருக்கவில்லை. காரணம் அப்போது இந்த நாட்டிலிருந்த சிங்களவர், தமிழர் தலைகளிலெல்லாம் ஆங்கிலேயர் ஏறி அமர்ந்திருந்தனர். அரசாங்கத்தை அவர்கள் தமது கரங்களில் ஏந்தப் போவதாகக் கூறிய கணப்பொழுதில்தான் உள்ளே எரிந்து கொண்டிருந்த கனல் வெளிப்பட்டது. சரித்திரத்தைப் புரட்டிப் பார்த்தால் இந்த நாட்டில் மூவின மக்களும் பல ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்திருந்தாலும் அவர்களிடம் ஒன்று சேர வேண்டும் என்ற மனப்போக்கு எழுந்ததில்லை என்பதை அறிந்து கொள்ளலாம். அவர்கள் தங்கள் மொழியை, மதத்தை, சடங்குகளைப் பாதுகாத்தனர். அந்த வேற்றுமைகள் படிப்படியாக மறையும் என நம்பும் எவரும் அவசரத்தில் காரியம் செய்பவர்களாகவே இருப்பர்".

1920ம் அரசியலமைப்பை மீளாய்வு செய்யும் முகமாக பிரித்தானிய ஆட்சியாளர்களால் அமைக்கப்பட்ட டொனமூர் ஆணைக்குழு முன்பு பல்வேறு தரப்பினரும் ஆலோசனைகளை முன்வைத்தபோது எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க யாழ்ப்பாணத்தில் யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸால் ஒழுங்கு செய்யப்பட்ட கருத்தரங்கில் சமஷ்டி அரசியலமைப்பை வலியுறுத்தி ஆற்றிய உரையில் ஒரு பகுதி. ஆனால் சேர்.பொன்.இராமநாதன் உட்பட்ட தமிழ்த் தலைவர்கள் சமஷ்டிக் கோரிக்கையை நிராகரித்ததுடன் பிரதேசவாரியான பிரதிநிதித்துவத்தை எதிர்த்து இனவாரியான பிரதிநிதித்துவத்தை வலியுறுத்தினர். ஆனால் பண்டாரநாயக்க தலைமையிலான கண்டிய தேசிய சங்கம் சமஷ்டியையே தமது கோரிக்கையாக முன் வைத்தது.

"ஒரே நாடு ஒரே மக்கள்", "ஒரே நாடு ஒரே சட்டம்" போன்ற கோஷங்கள் போலியானவை என்பதையும் அவை ஒரு இனம் ஏனைய இனங்களின் மேல் மேலாதிக்கம் செலுத்துவதன் வெளிப்பாடு என்பதையும் அவர் அன்றே தெளிவுபடுத்தியிருந்தார். இனங்களிடையேயுள்ள மொழி, மத, கலாசார வேறுபாடுகள் மறைந்து ஒன்று சேர்வது என்பது சாத்தியமில்லை என்ற அடிப்படையிலேயே சமஷ்டி ஒன்றின் மூலமே நியாயமான தீர்வைக் காணமுடியுமென அவர் நம்பினார்.

அவ்வகையில் அவர் சில நிர்ப்பந்தங்கள் காரணமாக 1956ல் தனிச் சிங்களச் சட்டத்தைக் கொண்டு வந்தாலும், 1957ல் ஏறக்குறைய சமஷ்டி அமைப்புக்குச் சமாந்தரமான பண்டா – செல்வா ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டார். ஆனால் ஐக்கிய தேசியக் கட்சியும் இனவாதப் பௌத்த பிக்குகளும் மேற்கொண்ட இனக்கலவரங்கள், கண்டி யாத்திரை, சத்தியாக்கிரகம் ஏற்படுத்திய நெருக்கடிகள் காரணமாக அவர் அந்த ஒப்பந்தத்தைக் கிழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

1959ல் அவர் கொலை செய்யப்பட்டதுடன் அவரின் சமஷ்டிக் கனவும் மரணமடைந்து விட்டது. அடுத்து பிரதமராகப் பதவியேற்ற டபிள்யூ.தஹநாயக்க உரிய காலத்துக்கு முன்பே நாடாளுமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தலை அறிவித்தார்.

1960 தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி ஒருபுறமும் இன்னொரு புறம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, சமசமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி என்பன தனித்தனியாகவும் போட்டியிட்டன. ஐ.தே.கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியன போன்று லங்கா சமசமாஜக் கட்சியும் நாடு பரந்த ரீதியில் ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கில் போட்டியிட்டது. மார்ச் 19ல் இடம்பெற்ற இத் தேர்தலில் Ningteenth March என்பதில் N.M ஆகிய எழுத்துக்களைப் பெரிதாக அச்சிட்டு என்.எம்.பெரேராவே அடுத்த பிரதமர் என சமசமாஜக் கட்சி பெரும் பிரசாரத்தை மேற்கொண்டது.

ஏகாதிபத்திய சார்பு பெரும் முதலாளித்துவக் கட்சியான ஐ.தே.கட்சி ஒரு அணியிலும் தேசிய முதலாளித்துவக் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஏகாதிபத்திய எதிர்ப்பு முற்போக்கு இடது சாரிக் கட்சிகளும் பிரிந்து நின்று போட்டியிட்டதாலும் எந்த ஒரு கட்சியாலும் அரசாங்கத்தை அமைப்பதற்கான அறுதிப் பெரும்பான்மையைப் பெறமுடியவில்லை.

1960 மார்ச் மாதம் இடம்பெற்ற தேர்தலில் ஐ.தே.கட்சி 50 ஆசனங்களையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 48 ஆசனங்களையும் பிலிப் குணவர்த்தனவின் மக்கள் ஐக்கிய முன்னணி 10 ஆசனங்களையும் லங்கா சமசமாஜக் கட்சி 17 ஆசனங்களையும் தமிழரசுக் கட்சி 15 ஆசனங்களையும் கம்யூனிஸ்ட் கட்சி 3 ஆசனங்களையும் வென்றெடுத்தன. இரு பெரிய கட்சிகளும் போதிய பெரும்பான்மையைப் பெற்றிராத நிலையில் இரு தரப்பினருமே ஆட்சியமைக்க தமிழரசுக் கட்சியை நாடவேண்டிய நிலை ஏற்பட்டது.

இனப்பிரச்சினைக்கு நியாயபூர்வமான தீர்வை எட்டுவதற்கான வாய்ப்பாகப் பயன்படுத்தும் முகமாகத் தமிழரசுக்கட்சி இரு தரப்பினரிடமும் சில நிபந்தனைகளை முன் வைத்தது. அவற்றை எழுத்து மூலமாகப் பெற்றுக்கொண்ட ஐ.தே.கட்சியின் தலைவர் டட்லி சேனநாயக்க உடனடியாக நிராகரித்து விட்டார். அதேவேளையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அவை பண்டா, செல்வா ஒப்பந்தத்திற்கு ஏற்ற வகையில் அமைந்திருந்தபடியால் அவற்றை ஏற்றுக்கொள்வதாக ஒப்புக்கொண்டது.

போதிய பெரும்பான்மை இல்லாத போதும், அதிக ஆசனங்களைப் பெற்ற கட்சி என்ற அடிப்படையில் ஐ.தே.கட்சி ஆட்சி அமைத்து டட்லி சேனநாயக்க பிரதமராகப் பதவியேற்றார். ஆனால் அவர்களின் சிம்மாசனப் பிரசங்கம் வாக்கெடுப்புக் விடப்பட்டபோது அது தோற்கடிக்கப்பட்ட நிலையில் ஐ.தே.கட்சி பதவியிழந்தது.

எனவே தமிழரசுக் கட்சித் தலைவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் மகாதேசாதிபதி ஒலிவர் குணதிலக்கவைச் சந்தித்து தாங்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியமைக்கத் தங்கள் ஆதரவை வழங்கவுள்ளதாகத் தெரிவித்தார். ஒரு கட்சி பதவியிழந்தால் எதிர்க்கட்சித் தலைவரை அழைத்து ஆட்சியமைக்கும்படி கேட்பது பாராளுமன்ற சம்பிரதாயமாகும். ஆனால் ஐ.தே.கட்சியைச் சேர்ந்தவரான மகாதேசாதிபதி ஒலிவர் குணதிலக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியமைப்பதை விரும்பாத நிலையில் நாடாளுமன்றத்தைக் கலைத்தார். அவர் கூறிய காரணம் தமிழரசுக் கட்சி நிபந்தனையுடன் கூடிய ஆதரவை வழங்குவதால் அது ஸ்திரமான அரசாங்கமாக இருக்கமுடியாது என்பதுதான். ஆனால் இன்னொரு தேர்தல் ஐ.தே.கட்சி வெற்றிபெற்று ஆட்சியமைக்கும் என்ற நம்பிக்கையும் "சாலம" சாதியைச் சேர்ந்த சி.பி.டி.சில்வா பிரமராக வரக்கூடாதென்ற சாதித்துவேஷமுமே காரணமென அப்போது இடதுசாரிகள் குற்றம் சாட்டியிருந்தனர்.

எனவே அடுத்த தேர்தல் 1961 ஜூலை இடம்பெறுமென அறிவிக்கப்பட்டது. இந்தச் சூழ்நிலை ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தியது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இரகசிய உடன்படிக்கை ஒன்றை தமிழரசுக் கட்சியுடன் செய்து கொண்டுள்ளதாகவும் அதன் மூலம் நாடு தமிழர்களுக்குத் தாரை வார்க்கப்படப் போகிறதெனவும் தீவிர பிரசாரத்தை நாடு முழுவதும் கட்டவிழ்த்து விட்டது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவை இத்தகைய பிரசாரங்கள் அச்சமடைய வைத்தன. இத்தகைய இனவாத முனைப்புகளே பண்டா – செல்வா ஒப்பந்தத்தைக் கிழித்தெறிய வைத்தது என்பதையும் இனக்கலவரங்கள், பண்டாரநாயக்க கொலை என்பற்றின் அடிப்படையாக அமைந்தது என்பதையும் அவர் உணர்ந்து கொண்டமையால் தாங்கள் படுதோல்வியை அடையவேண்டிவரும் என்பதையும் வேறு பல நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டிவரும் என்பதையும் நினைத்து அச்சமடைந்தார். எனவே அவர் தனது மருமகனான பீலிக்ஸ் டயஸ் பண்டாநாயக்கவின் ஆலோசனையின் பேரில் மாற்று நடவடிக்கைகளை எடுக்கத் தீர்மானித்தார்.

ஒன்று – தமிழரசுக் கட்சிக்கும் தங்களுக்கும் எவ்வித உடன்படிக்கையும் இல்லையெனப் பகிரங்க அறிக்கை ஒன்றை விடுத்தார். இரண்டாவதாக பண்டா – செல்வா ஒப்பந்தத்துக்கு எதிராகத் தீவிர பிரசாரம் செய்த முன்னாள் நீதியரசர் ஹேமா பஸநாயக்கவைத் தமது பக்கம் சேர்த்துக் கொண்டார். மூன்றாவதாக சமசமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி ஆகியோருடன் தொகுதிப் பங்கீட்டை மேற்கொண்டு போட்டி தவிர்ப்பு ஒப்பந்தத்தைச் செய்து கொண்டார்.

இந்த மூன்று வழிமுறைகளும் ஐக்கிய தேசியக் கட்சியினரின் இனவாதப் பிரசாரத்தை முறியடிப்பதில் கணிசமான பங்கை வகித்தன. அத்துடன் பண்டாரநாயக்க கொலையால் ஏற்பட்ட அனுதாப அலையும் அவருக்குச் சாதகமான சூழலைத் தோற்றுவித்தது.

எனவே 1960 ஜூலை 21ல் இடம்பெற்ற தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமோக வெற்றி பெற்றது.

அத்தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 75 ஆசனங்களையும் ஐக்கிய தேசியக் கட்சி 30 ஆசனங்களையும் தமிழரசுக் கட்சி 16 ஆசனங்களையும் பெற்றுக்கொண்டன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இடது சாரிகளினதோ தமிழரசுக் கட்சியினதோ ஆதரவின்றி ஆட்சியமைக்கும் பெரும்பான்மையைப் பெற்றது. தேர்தலில் போட்டியிடாத திருமதி ஸ்ரீமாவோ பண்டாநாயக்க செனட் சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டுப் பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டார்.

எனினும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தமிழசுக் கட்சியுடன் நல்லுறவையே பேணி வந்தது. 1957ம் ஆண்டு தொடக்கம் சிம்மாசனப் பிரசங்கம் தனிச் சிங்களத்திலேயே நிகழ்த்தப்பட்டதால் தமிழரசுக் கட்சி அதை பகிஷ்கரித்து வந்தது. ஆனால் ஸ்ரீமாவோ பண்டாநாயக்க பிரமதராகப் பதவியேற்ற பின்பு அதற்குத் தமிழிலும் மொழி பெயர்ப்பு வழங்கப்பட்டது. எனவே தமிழரசுக் கட்சி சிம்மாசனப் பிரசங்கத்தில் கலந்து கொள்ள ஆரம்பித்தது.

மேலும் அதே ஆண்டு இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் தமிழரசுக் கட்சிக்குமிடையே பேச்சுகள் ஆரம்பமாகின. பண்டா – செல்வா ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக ஆராய்வது என இரு தரப்பினராலும் இணக்கம் காணப்பட்டது. முதல் சுற்று 1961 நவம்பர் 8ம் திகதி இடம்பெற்றது.

அதில் சிங்களம் மட்டும் சட்டத்தின் மூலம் தமிழ் அரசாங்க ஊழியர் முகம் கொடுக்கும் பிரச்சினைகள் பற்றி விரிவாக ஆராயப்பட்டன.

எனினும் 1956ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தனிச் சிங்களச் சட்டத்தை நிறைவேற்ற வகுக்கப்பட்ட காலக்கெடு நிறைவடைந்து விட்ட நிலையில் 1961ம் ஆண்டு ஜனவரி 1ம் நாள் அரசாங்கம் நாடு முழுவதும் தனிச் சிங்களச் சட்டத்தை அமுல்படுத்தப் போவதாக அறிவித்தது.

அத்துடன் நீதிமன்ற மொழி மசோதாவையும் கொண்டு வரப்போவதாக முன்னறிவித்தல் கொடுத்தது. அத்துடன் தமிழரசுக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குமிடையே இடம்பெற்ற பேச்சுகள் முறிவடைந்ததுடன் நிலவிய உறவும் அறுந்தது.

இந்த நிலையில் உடனடியாகவே தமிழரசுக் கட்சி வடக்கு கிழக்கில் பரந்தளவில் போராட்டங்களை ஆரம்பித்தது. ஹர்த்தால், சத்தியாக்கிரகம், தபால் விநியோகம், காணிபங்கீடு போன்ற பலவித போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன. தமிழ் மக்கள் கட்சி, மத, சாதி பேதங்களைக் கடந்து ஒன்றிணைந்து போராட்டங்களில் இறங்கினர்.

இனப் பிரச்சினைத் தீர்வு தொடர்பான பேச்சுக்கள் இடம்பெற்றபோது அரசாங்கம் தனிச் சிங்களச் சட்டத்தை அமுலாக்குவதை பேச்சுகள் நிறைவடையும் வரை ஒத்திவைத்திருக்கலாம். ஐக்கிய தேசியக் கட்சியின் தீவிர ஆதரவாளரும் பண்டா – செல்வா ஒப்பந்தத்தைக் கடுமையாக எதிர்த்தவருமான முன்னாள் நீதியரசர் ஹேமா பஸநாயக்க, பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க மேல் செலுத்திய அழுத்தம் காரணமாகவே மேற்படி நடவடிக்கைகள் அவசரமாக மேற்கொள்ளப்பட்டன என அப்போது சி.பி.டி.சில்வா குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.

அதேவேளையில் தனிச் சிங்களச் சட்டம் தொடர்பான அறிவித்தல் வெளிவந்த நிலையில் தமிழரசுக் கட்சியும் சற்றுப்பொறுமை காத்திருக்கலாம். ஏற்கனவே இடம்பெற்ற பேச்சு தொடரப்படும்போது இப்பிரச்சினையை முன்வைத்து ஒரு இணக்கப்பாட்டுக்கு வரமுடியாத பட்சத்தில் போராட்டங்களை ஆரம்பித்திருக்கலாம்.

1958ல் பண்டா – செல்வா ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்டபோது முதலாவது இனப் பிரச்சினைத் தீர்வு தோல்வியடைந்தது போன்று 1961 ஆரம்பத்தில் இரண்டாவது தீர்வு முயற்சியும் தோல்வியடைந்தது.

பண்டா – செல்வா ஒப்பந்தம் கைச்சாத்தாகியிருந்த நிலையில் ஸ்ரீ இலக்கத் தகடு பொறித்த பஸ்களை வடக்குக்கு அனுப்பிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கமும் அப்பிரச்சினையைப் பேசித் தீர்க்கும் வாய்ப்பிருந்தபோதும் "ஸ்ரீ" எதிர்ப்புப் போராட்டத்தை நடத்திய தமிழரசுக் கட்சியும் முதலாவது இனப்பிரச்சினைத் தீர்வை முறியடித்ததில் சம பங்காளிகளாவார்கள். அதேபோன்று 1961ல் பேச்சுகள் இடம்பெற்ற போதே தனிச் சிங்களச் சட்டத்தை அமுலாக்கும் முயற்சியில் இறங்கிய ஸ்ரீலங்கா சு.கட்சி அரசாங்கமும் அதைப் பேச்சுகள் மூலம் தடுத்து நிறுத்த முயலாமல் உடனடியாகவே மக்கள் போராட்டங்களை ஆரம்பித்த தமிழரசு கட்சியும் இரண்டாவது தீர்வு முயற்சியை முறியடித்ததில் சம பங்காளிகளாவார்கள்.

மலையக மக்களின் வாக்குரிமையைப் பறித்து தமிழ் மக்களின் நாடாளுமன்ற பலத்தை சரி பாதியாகக் குறைத்தமை, தேசியக் கொடியில் தமிழ் மக்களுக்கு உரிய இடம் வழங்காமை போன்ற ஐக்கிய தேசியக் கட்சியின் இன ஒடுக்குமுறை நடவடிக்கைகளுக்கு தமிழரசு கட்சி தனது எதிர்ப்பை நாடாளுமன்ற உரைகள், அறிக்கைகள் என்பனவற்றுடன் மட்டுப்படுத்தியிருந்தது. ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மேற்கொண்ட இன ஒடுக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிராக அரசாங்கத்தை நிலைகுலைய வைக்குமளவுக்கு வலிமையாக மக்கள் போராட்டங்களைத் தமிழரசுக் கட்சியினர் மேற்கொண்டனர்.

எப்போதுமே தமிழரசுக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒரு மென்போக்கையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கடும் போக்கையும் மேற்கொண்டமைக்கான அடிப்படைக் காரணம் ஐ.தே.கட்சியும் தமிழரசு, தமிழ்க் காங்கிரஸ் கட்சிகளும் ஏகாதிபத்திய சார்பு, மேட்டுக்குடியினரின் நலன் சார்ந்த அரசியலையே தங்கள் கொள்கையாகக் கொண்டிருந்தமையாகும்.

எப்படியிருப்பினும் இனப்பிரச்சினையின் முதலாவது, இரண்டாவது தீர்வு முயற்சிகள் தோல்வியடைந்தமைக்கு மூலகாரணம் ஐக்கிய தேசியக் கட்சியாக இருந்தபோதிலும் அவற்றின் நேரடி விளைவுகளில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் தமிழரசுக் கட்சிக்கும் சமபங்குண்டு என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.

தொடரும்....

அருவி இணையத்திற்காக நா.யோகேந்திரநாதன்.


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம்பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE