Monday 17th of May 2021 12:06:14 PM GMT

LANGUAGE - TAMIL
.
எங்கே தொடங்கியது இன மோதல் - 43 (வரலாற்றுத் தொடர்)

எங்கே தொடங்கியது இன மோதல் - 43 (வரலாற்றுத் தொடர்)


புதிய பரிமாணத்தை நோக்கிய தேசிய கலாசார எழுச்சி! - நா.யோகேந்திரநாதன்!

தமது இன அடையாளங்களைப் பாதுகாக்கவும், நிலைப்படுத்தவும் மக்கள் சமூகங்கள் காலங்காலமாகப் போராடி வருகின்றன. ஆதிகுடிகளும், இனக் குழுமங்களும், மத சமூகங்களும் தேசிய இனங்களும் தமது பண்பாட்டுத் தனித்துவங்களைப் பேணக் காலங்காலமாகப் போராடி வருகின்றன. தமது இனத்துவ பண்பாட்டு அடையாளங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும்போது அல்லது ஒரு இனம் இன்னொரு இனத்தை அடிமை கொள்ள நினைக்கும்போது அல்லது ஒரு இனத்தின் பாரம்பரிய நிலத்தை இன்னொரு இனம் ஆக் கிரமிக்க முயலும்போது இனப்போர்கள் வெடிக்கின்றன. இனப் போர்கள் நீண்ட காலமாக முடிவின்றித் தொடர்வதுண்டு. போர் நிறுத்தங்கள் ஏற்படுவதும், அவை முறிந்துபோக மீண்டும் போர் தொடங்கிவிடுவதும் இன நெருக்கடிகள் நீடிப்பதுண்டு. இனப் போர்கள் இரு நாடுகள் மத் தியிலும் எழலாம் அல்லது இரு வேறுபட்ட நாகரீகங்கள் கொண்ட இனக் குழுமங்கள், தேசிய இனங்கள் மத்தியிலும் ஏற்படலாம். ஒரே நாட்டில் வாழும் வேறுபட்ட சமூகங்கள் மத்தியிலும் எழலாம். பொதுவானதாகவே இனப் போர்கள் மிகவும் கொடூரமானதாக ஈவிரக்கமற்றதாக அமைவதுண்டு. சில சமயங்களில் இனப் படுகொலைப் பரிமானத்தையும் அவை அடைவதுண்டு. இந்த இனப் போர்கள் பல்லாயிரக்கணக்கான மக்களையும் பலிகொண்டு பல தசாப்தங்களாகத் தொடர்வதும் உண்டு".

இது 1993ம் ஆண்டு பிரபல அமெரிக்க வரலாற்றிஞரான "சாமுவேல் ஹரிங்ரன்" அவர்களால் எழுதப்பட்ட "நாகரீகங்களின் மோதல்" என்ற ஆய்வுக் கட்டுரைகளில் குறிப்பிடப்பட்ட விடயங்களாகும். அவரால் முன் வைக்கப்பட்ட இந்த வரலாற்றுக் கோட்பாடு சர்ச்சைக்குரியதாகவும் விவாதத்துக்குரியதாகவும் விளங்கியபோதிலும் இலங்கை போன்ற நாடுகளில் நிலவும் நிலைமைகளைப் படம் பிடிப்பதைப் போன்று அமைந்திருப்பதைக் காணலாம்.

எமது நாட்டிலும் ஒரு இனம் இன்னொரு இனத்தை அடிமை கொள்ள நினைப்பதும், மற்ற இனம் தன் இருப்பைப் பாதுகாப்பதற்காகப் போராடுவதுமாக வரலாற்று மோதல்களும் பேரழிவுகளுமாகவே நகர்ந்திருக்கிறது.

பிரித்தானிய சாம்ராஜ்யத்தின் அரசியல் ஆதிக்கத்தின் கீழ் ஆங்கில மொழியும் கிறீஸ்தவ மதமும், மேற்கத்தைய பழக்கவழக்கங்களும் மேலாதிக்கம் வகித்து வந்தன. அந்த நிலையில் 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மொழி, மத அடிப்படைகளை பாதுகாக்கும் உணர்வு மெல்ல மெல்ல உருவாகி வளர்ந்தன. அவற்றின் விளைவாக சிங்களவர்கள் மத்தியில் அநகாரிக தர்மபால தலைமையிலும் தமிழர்கள் மத்தியில் ஆறுமுகநாவலர் தலைமையிலும் சுதேசிய மொழிகள், மதங்களைப் பாதுகாக்கும் எழுச்சிகள் ஏற்பட்டன.

அநகாரிக தர்மபாலவால் அந்நிய எதிர்ப்புணர்வு முன்னெடுக்கப்பட்ட அதேவேளையில் அதற்குச் சமாந்தரமாக தமிழர்கள், முஸ்லிம்கள் மீதான குரோத உணர்வும் வளர்க்கப்பட்டது.

அநகாரிக தர்மபாலவால் ஊட்டி வளர்க்கப்பட்ட ஏனைய இனங்கள் மீதான வெறுப்புணர்வும், மேலாதிக்க வெறியுமே இன்று வரைத் தொடரும் இன மோதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் அடிப்படையாக அமைந்துள்ளன என்ற உண்மையை மறுத்துவிட முடியாது.

அவரைப் பின்பற்றிய டி.எஸ்.சேனநாயக்க, பரன் ஜெயதிலக, மெத்தானந்த போன்ற சிங்கள மேட்டுக்குடியினர், ஆங்கிலேயருடனும் அவர்களின் கலாசாரத்துடனும் ஒருவித சமரசப் போக்கைக் கையாண்ட அதேவேளையில் தமிழ், முஸ்லிம் மக்களுக்கெதிரான ஒடுக்குமுறைகளை மிக லாவகமாகக் கையாண்டு வந்தனர். ஆனால் சிங்கள தேசியம் என்பது அவர்களால் பொருட்படுத்தப்படாததாகவே விளங்கியது.

ஆனால் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாநாயக்க சிங்கள பௌத்த தேசியத்தை முன்னெடுத்ததுடன் அதற்கு அரசியல் வடிவத்தையும் உருவாக்கினார். அவர் அவ்வாறு ஒரு சிங்கள தேசிய எழுச்சியை உருவாக்கிய அதேவேளையில் சிங்கள மொழிக்கு முதன்மை கொடுக்கும் நோக்கில் தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறையையும் முன்னெடுத்தார். எனினும் அவர் இனப்பிரச்சினை தொடர்பாகப் பல சமரச முயற்சிகளை மேற்கொண்டாலும் இனவாதிகள் அவரை வெற்றிபெறவிடவில்லை என்பதுடன் அவர் படுகொலை செய்யப்பட்டதும் அரங்கேறியது.

அவரின் பின் ஆட்சிக்கு வந்த திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க காலத்திலும் அவர் தமிழர்களின் சத்தியாக்கிரகப் போராட்டம், இராணுவ சதிப்புரட்சி போன்ற இரு பெரும் ஆபத்துக்களைக் கடக்க வேண்டி வந்தது.

எனினும் பண்டாரநாயக்க ஆரம்பித்து வைத்த சிங்கள தேசிய எழுச்சியை அவர் முன்னெடுக்கத் தவறவில்லை. அந்நிய கலாசார மேலாதிக்கத்துக்கு எதிராக அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் சிங்களவர்கள் மத்தியில் மட்டுமின்றி தமிழர்கள் மத்தியிலும் ஒரு கலாசார பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்தின.

இரு இனங்கள் மத்தியிலும் தேசிய கலை, இலக்கிய வளர்ச்சியில் ஒரு பெரும் பாய்ச்சல் ஏற்பட்டது.

தமிழ் மக்கள் மத்தியில் கூத்து வடிவங்கள், இசைநாடகங்கள், வில்லுப்பாட்டு, கதாப்பிரசங்கம் போன்ற திட்டவட்டமான கலைவடிவங்கள் இருப்பதைப் போன்று சிங்கள மக்களுக்கு எதுவுமிருக்கவில்லை. கண்டிய நடனம், கதா போன்ற சில நாட்டார் கலைகள் நிலவியபோதும் அவை சடங்குகள் என்ற வரையறைக்குள்ளேயே அடங்கிக் கிடந்தன. அது மட்டுமின்றி அவை சடங்குகள் என்ற வரையறைக்குள்ளேயே அடங்கிக் கிடந்ததுடன் அவை சில குடும்பங்களின் பரம்பரைச் சொத்தாக விளங்கினவேயொழிய மக்கள் மயப்படவில்லை.

இந்த நிலையில்தான் சிங்கள கலை, இலக்கிய உலகில் புதிய முயற்சிகள் முளைவிட்டன.

சந்திரசேகர என்ற கலைஞரால் "மனமே" என்ற புதிய நாடக வடிவம் உருவாக்கப்பட்டது. இது சிங்கள மக்களிடையே நிலவி வந்த "கதா" மன்னார் நாட்டுக்கூத்து, மலையாள கதகளி என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு ஒரு புதிய தேசிய நாடக வடிவமாக "மனமே" உருவாக்கப்பட்டது.

இது சிங்களக் கலையுலகில் மாபெரும் முன்னேற்றமாகக் கருதப்பட்டது. அது மட்டுமின்றி கண்டிய நடனம் மேடைக்கேற்ற வகையில் வடிவமைக்கப்பட்டு ஒரு பரம்பரையின் கலை என்ற வட்டத்துக்கு வெளியே கொண்டு வரப்பட்டு மக்கள் மயப்படுத்தப்பட்டது. தற்சமயம் அது இலங்கையின் தேசிய நடனம் என்ற அந்தஸ்தைப் பெற்றுவிட்டது. "மனமே" நாடகம் சிங்கள இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்திய உத்வேகம் அவர்கள் நாடக உலகில் புதிய பரிசோதனை முயற்சிகளை நோக்கி முன்செல்ல வைத்தது. மேற்குலகின் நவீன நாடகங்களை ஒத்த புதிய முயற்சிகள் படைக்கப்பட்டன. நவீன நாடக உலகிலும் அவர்கள் தமக்கெனத் தனித்துவமான முத்திரைகளைப் பதிக்க ஆரம்பித்து விட்டனர்.

சினிமாவைப் பொறுத்தவரையில் இலங்கை, இந்திய தமிழ், ஹிந்தி சினிமாக்களின் சந்தையாகவே விளங்கியது. சாதாரண சிங்கள மக்கள் எம்.ஜி.ஆர். ரசிகர்களாக விளங்குமளவுக்கு அவர்கள் மத்தியில் தமிழ்ப் படங்களின் ஆதிக்கம் மிகுந்திருந்தது.

ஆரம்பத்தில் சில தமிழ்ப் படங்கள் சிங்களத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டன. பின்பு இங்கு சிங்களப் படங்கள் தயாரிக்கப்பட்டபோதும் அவற்றை இந்திய நெறியாளர்கள் மூலமே நெறியாள்கை செய்யப்பட்ட காரணத்தால் அவை இந்தியப் படங்களின் பாணியிலேயே அமைந்தன.

சிங்களப் படவுலகில் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் அவர்களின் பிரவேசத்தின் பின் பாரிய மாற்றம் ஏற்பட்டது. அவரின் ஆரம்ப காலப் படங்களான "கம்பெரலிய", "கொலுகதவத்த" போன்ற படங்களே சர்வதேச விருதுகளைப் பெறுமளவுக்குச் சிறப்பாக அமைந்திருந்தன.

அவரின் அடியொற்றிப் பல தரமான நெறியாளர்கள், படப்பிடிப்பாளர்கள், இசையமைப்பாளர்கள் உருவாகி சிங்கள சினிமாவை உயர்ந்த கட்டத்துக்கு இட்டுச் சென்றனர். காமினி பொன்சேகா, விஜயகுமாரணதுங்க போன்ற நட்சத்திர அந்தஸ்துப் பெற்ற நடிகர்களும் உருவாகினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்நாட்களின் சிங்கள இலக்கியங்களும் உருவாகின. புத்தக வெளியீடுகள் இடம்பெறும்போது மக்கள் வரிசையில் நின்று வாங்குமளவுக்குப் புகழ்பெற்ற படைப்புகள் வெளிவர ஆரம்பித்தன. மாட்டின் விக்கிரமசிங்கவின் நூல்கள் மீண்டும் மீண்டும் மறுபிரசுரம் செய்யப்படுமளவுக்கும் தமிழ் உட்படப் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்படுமளவுக்கும் சிறப்புப் பெற்றிருந்தன. ஒப்பற்ற பல கவிஞர்களும் உருவாகினர். ஸ்ரீமாவோ ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நிலச் சீர்திருத்தச் சட்டம் பாரிய மாற்றங்களை ஏற்படுத்திப் பல நிலமற்ற விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது. ஏராளமான காணிகளின் சொந்தக் காரியான அவர் தனது காணிகளை வழங்கியே அத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்;. அச்சட்டத்தில் ஒருவர் 50 ஏக்கர் வயல் காணியையும், 25 ஏக்கர் மேட்டுக்காணியையும் மட்டுமே வைத்திருக்கமுடியும். அத்திட்டத்துக்கு தமிழரசுக் கட்சியினர் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் 1960 – 1964 ஆண்டு கால ஆட்சியில் சிங்கள கலை, இலக்கியப் பரப்பில் மட்டுமின்றி தமிழர்கள் மத்தியிலும் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டன.

இலங்கையில் இந்திய தமிழ் சினிமாவின் மேலாதிக்கம் ஓங்கியிருந்ததைப் போலவே இலக்கியப் பரப்பிலும் இந்திய வெளியீடுகளான கல்கி, கலைமகள், ஆனந்தவிகடன், குமுதம், கல்கண்டு, கண்ணன் போன்ற வர்த்தகப் பத்திரிகைகளின் ஆதிக்கமே நிலவியது. ஈழகேசரி, வரதர் அடுத்தடுத்து வெளியிட்ட சில சஞ்சிகைகள் தரமான இலக்கியப் படைப்புகளின் களமாக அமைந்திருந்தபோதிலும் வர்த்தகப் பத்திரிகைகளுடன் போட்டியிட்டு மக்கள் மயப்படுத்தப்பட முடியவில்லை.

ஸ்ரீமாவோ காலத்தில் இந்திய சஞ்சிகைகள் இறக்குமதிக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

அதன்பின்பு இலங்கைத் தமிழ் இலக்கிய உலகிலும் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டது. அதில் பேராதனைப் பல்கலைக்கழகம் ஒரு முக்கிய பாத்திரம் வகித்தது என்பதை மறுக்கமுடியாது.

அங்கிருந்து வெளியேறிய கைலாசபதி, தில்லைநாதன் போன்ற இடதுசாரிகள் கொழும்புத் தினசரிகளில் ஆசிரியர்களானார்கள். அதையடுத்து கொழும்புத் தினசரிகளின் வாரவெளியீடுகள் புதிய புதிய இலக்கியப் படைப்பாளிகளுக்குக் களம் கொடுத்தன. அதே பணியை எஸ்.டி.சிவநாயகம் சுதந்திரன், சிந்தாமணி ஆகிய பத்திரிகைள் மூலம் செய்தார். அக் காலப்பகுதியிலேயே பல இலக்கிய சாதனைகள் செய்த பல எழுத்தாளர்கள் தோன்றினார்கள்.

இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம், இலங்கைத் தமிழ் எழுத்தாளர் சங்கம், தமிழ் இலக்கிய வட்டம் ஆகியனவும் இலக்கிய வளர்ச்சியில் காத்திரமான பங்கை வழங்கின.

அதேபோன்று கலாநிதி சு.வித்தியானந்தன், மட்டக்களப்பு இராவணேஸ்வரன் நாட்டுக்கூத்து, காத்தவராயன் கூத்து என்பவற்றை நவீனமயப்படுத்தி மத்திய தர வர்க்கத்தினரும் விரும்பிப் பார்க்கும் வகையில் நாட்டின் பல பாகங்களிலும் மேடையேற்றினார். நெல்லியடி பத்தண்ணா அவர்களின் கந்தன் கருணை, மௌனகுரு சங்காரம் ஆகிய நாடகங்களும் புதிய நாடக முயற்சிகளின் திறவுகோல்களாக அமைந்திருந்தன.

அதுபோல் திருவிழா என்ற நாடகமும் நவீன நாடகத்துறையில் ஆரம்ப முயற்சியாக மேடையேற்றப்பட்டது.

அதேபோன்று இலங்கை வானொலியில் வானொலி நாடகங்கள், நாட்டுக்கூத்துகள், கிராமியக் கலைகள் என்பவற்றை வானொலிக்கு ஏற்ற வகையில் வடிவமைத்து ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கினர். இவர்களின் சானா சண்முகநாதன், எஸ்.கே.பரராஜசிங்கம், பேராசிரியர் சிவத்தம்பி ஆகியோர் முக்கியமானவர்களாகும்.

அதேவேளையில் இந்தியப் படங்கள் 3 பிரதிகள் மட்டுமே இங்கு இறக்குமதி செய்ய முடியும் என்ற கட்டுப்பாட்டை அரசாங்கம் போட்டது. அதன் காரணமாக இலங்கையில் தமிழ் சினிமாப் படத்தயாரிப்பில் ஒரு புதிய யுகம்; தோன்றியது.

இலங்கையின் முதற் படமாகத் "தோட்டக்காரி" என்ற படம் மலையக மக்களின் பிரச்சினைகளை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது. அதையடுத்து பல படங்கள் வெளிவர ஆரம்பித்தன.

அவற்றில் பொன்மணி, குத்துவிளக்கு, வாடைக்காற்று, மஞ்சள் குங்குமம் போன்ற படங்கள் எமது மண் வாசனையை வெளிப்படுத்தும் வகையில் எமது மக்கள் மத்தியில் சிலவும் பிரச்சினைகளை மையமாக வைத்து வெளிவந்த இலங்கைப் படங்களுக்கான தனித்துவ அடையாளங்களைப் பதிவு செய்தன.

அதேவேளையில் வி.பி.கணேசன் புதிய காற்று, நான் உங்கள் தோழன் ஆகிய படங்கள் எம்.ஜி.ஆர் படங்களின் சாயலைக் கொண்டிருந்தபோதும் மலையக மக்களின் பிரச்சினைகளைப் பேசியமையாலும் தரமான தொழில்நுட்பம் பேணப்பட்டமையாலும் வெற்றிப்படங்களாக அமைந்தன. இலங்கையின் ஆற்றலும் அனுபவமும் கொண்ட கலைஞர்களின் பங்களிப்புடன் வெளிவந்த இலங்கையின் முதல் சினிமாஸ்கோப் படமான "தெய்வம் தந்த வீடு" ஏனோ எதிர்பார்த்த வெற்றியைப் பெறமுடியவில்லை. அதேபோன்று தென்னிந்திய படங்களின் பாணியில் தயாரிக்கப்பட்ட சில படங்களும் வெற்றி பெறமுடியவில்லை.

அதாவது திருமதி ஸ்ரீமாவோ பண்டாநாயக்க காலத்தில் சிங்களத்துக்கு மட்டுமின்றி தமிழிலிலும் கூட தேசிய கலை, இலக்கிய வளர்ச்சி ஒரு புதிய உத்வேகத்துடன் எழுச்சி பெற்றது. குறிப்பாகச் சில இடதுசாரி எழுத்தாளர்களின் படைப்புகள் வெளிநாட்டு மொழிகளில் மொழி பெயர்க்கப்படுமளவுக்கு கதவுகள் திறந்து விடப்பட்டன. இக்கலை இலக்கிய வளர்ச்சியில் இடதுசாரிகளின் பங்களிப்பும் மிக முக்கிய இடத்தை வகுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

"டானியல்" அவர்களின் படைப்புகள் ஜப்பானிய பல்கலைக்கழகத்தில் ஆய்வுக்குரிய பாடநூலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலைமை இந்திய சினிமாக்கள், சஞ்சிகைகளின் வர்த்தகச் சந்தையாக விளங்கிய இலங்கையைக் கட்டுப்பாடுகள் மூலம் இலங்கையின் கலை, இலக்கியப் படைப்புகள் வளர வாய்ப்பை ஏற்படுத்தியமையே காரணமாகும்.

ஆனால் இந்திய சினிமாக்கள், சஞ்சிகைகள் கட்டுப்படுத்தப்பட்டமைக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் அமிர்தலிங்கம் தலைமையில் தமிழரசுக் கட்சியினர் மாபெரும் ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை நடத்தினர்.

அதாவது தமிழில் தேசிய கலை, இலக்கியம் வளர்ச்சியடையும் சூழ்நிலை உருவாவதை அவர்கள் விரும்பவில்லை. ஏனெனில் மக்கள் இலக்கியமும் மக்கள் கலைகளும் மேலெழுவதை இந்த மேட்டுக்குடியினரால் சகிக்கமுடியவில்லை. அதேபோன்று பாடசாலைகள் தேசிய மயமாக்கப்பட்டதன் காரணமாக சிங்களவருக்குச் சிங்களமும் தமிழருக்கு தமிழும் போதனா மொழியாக்கப்பட்டபோது சாதாரண ஏனைய மாணவர்கள் உயர் கல்வி வாய்ப்புப் பெறும் நிலை உருவாவதை எதிர்த்ததும் குறிப்பிடத்தக்கது.

அதாவது தமிழரசுக் கட்சி, தமிழ் காங்கிரஸ் ஆகியவற்றால் முன்னெடுக்கப்பட்ட தமிழ் தேசியம் மேட்டுக்குடியினரின் மேலாதிக்கத்துக்குப் பாதிப்பு வரும்போது பின்வாங்கி விடுவதை மறுத்துவிட முடியாது.

ஆனால் தனிச் சிங்களச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியமை, நீதிமன்ற மசோதாவை நிறைவேற்றியமை, சிங்களம் சித்தியடையாத அரசாங்க ஊழியர்கள் வேலையிழக்கும் நிலை போன்ற ஸ்ரீமாவோ ஆட்சியின் இன ஒடுக்கல் நடவடிக்கைகள் காரணமாக அவர்கள் செய்த நல்ல விடயங்களுக்குக் கூட பிற்போக்கு சக்திகள் தமிழ் மக்களிடம் எதிர்ப்பை உருவாக்க முடிந்தது.

அந்த நாட்களில் இனமோதல் நாகரீகங்களுக்கிடையேயான மோதலாகப் பரிணமிக்கவில்லை. ஏனெனில் தமிழ், சிங்கள நாகரீகங்கள் இந்திய, மேற்கத்தைய கலாசார மேலாதிக்கத்திலிருந்து தங்கள் சொந்த நாகரீகங்களை மீட்க வேண்டியிருந்தது.

மொழியுரிமை, நில உரிமை என்பவற்றுக்கு எதிரான ஒடுக்குமுறையாக இன ஒடுக்குமுறை வடிவெடுத்தாலும் மொழியுரிமை பறிக்கப்படுவதற்கெதிரான போராட்டமாகவே தமிழ் தலைமைகளின் போராட்டம் மட்டுப்படுத்தப்பட்டது.

எப்படியிருந்த போதிலும் தமிழர் தரப்பிலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியில் இலங்கைத் தமிழ்க்கலாச்சார எழுச்சி புதிய பரிணாமம் பெற்றது என்பதை மறுக்கமுடியாது.

அதன்காரணமாக கலை, இலக்கிய களத்தில் தமிழர்கள் புதிய பரி;மாணங்களை நோக்கி வளர்ச்சியடையும் ஒரு நிலைமை தோன்றியது என்பதை எவரும் மறுத்துவிடமுடியாது.

தொடரும்.....

அருவி இணையத்திற்காக நா.யோகேந்திரநாதன்.


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம்பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE