Wednesday 21st of April 2021 04:16:19 AM GMT

LANGUAGE - TAMIL
.
எங்கே தொடங்கியது இன மோதல் - 48 (வரலாற்றுத் தொடர்)

எங்கே தொடங்கியது இன மோதல் - 48 (வரலாற்றுத் தொடர்)


ஏமாற்றியவர்களும் ஏமாற்றப்பட்டவர்களும்! - நா.யோகேந்திரநாதன்!

'நாங்கள் பண்டாரநாயக்கவால் கைவிடப்பட்டோம். பின்பு திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவாலும் கைவிடப்பட்டோம். இப்போது நாங்கள் உங்களாலும் கைவிடப் படுகிறோம் என நான் பிரதமரிடம் சொல்லி விட்டு வந்தேன்'. இது தமிழரசுக் கட்சித் தலைவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்கள் பிரதமரைச் சந்தித்து மாவட்ட சபைகள் சட்டத்தைப் பாராளுமன்றத்தில் முன்வைப்பது தொடர்பாக உரையாடல்களை நடத்தி விட்டு வந்த பின்பு பத்திரிகையாளர்களிடம் 1968ம் ஆண்டு ஜூன் மாதம் 30ம் திகதி வெளியிட்ட கருத்தாகும்.

ஏற்கனவே செல்வநாயகம் தலைமையிலான தமிழரசுக் கட்சியினர் டட்லி – செல்வா ஒப்பந்தத்தின் பிரதான அம்சமான மாவட்ட சபை உருவாக்கம் பற்றிப் பிரதமர் டட்லியுடன் பேசியபோது 'நீங்கள் பதவியில் சில காலம் இருந்தபின்பு உங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தமாட்டீர்களென எதிர்பார்த்தேன்' எனக் கூறியிருந்தார். அதிலிருந்து டட்லி –செல்வா ஒப்பந்தத்தை நிறைவேற்றுவது தொடர்பில் அவர் கொண்டிருந்த அக்கறை தொடர்பாகவும் தமிழரசுக் கட்சி தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக எவ்வளவு உறுதியற்றவர்களாக இருப்பார்கள் என அவர் கருதினார் என்பதையும் எம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

அவர் எதிர்பார்த்தது போலவே செல்வநாயகம் அவர்களும் ஒரு கட்டத்தில் உடனடியாகத் திருகோணமலையில் தமிழ் பல்கலைக்கழகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமானால் மாவட்ட சபைக் கோரிக்கையை வலியுறுத்துவதில் தளர்வுப் போக்கைக் கடைப்பிடிக்க முடியுமெனப் பிரதமருக்கு வாக்குறுதி வழங்கினார்.

எனினும் ஒரு கண்துடைப்பு நடவடிக்கையாக 1968 ஜூன் ஆரம்பத்தில் மாவட்ட சபை வெள்ளையறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதையடுத்து எதிர்க்கட்சியினரும் அரசாங்கக் கட்சியில் ஒரு பிரிவினரும் கடும் எதிர்ப்பு நடவடிக்கைகளில் இறங்கினர். அதைக் காரணம் காட்டி பிரதமர் டட்லி சேனநாயக்க ஜூன் 30ம் திகதி சந்தித்தபோது மாவட்ட சபைப் பிரச்சினையைத் தான் கைகழுவி விட்டுவிட்டதாகத் தெரிவித்தார்.

அச்சந்திப்பின் பின்புதான் செல்வநாயகம் பண்டாரநாயக்கவைப் போன்று ஸ்ரீமாவைப் போன்று நீங்களும் எங்களைக் கைவிட்டு விட்டீர்கள் எனப் பிரதமரிடம் கூறிவிட்டு வந்தாகப் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

டட்லி சேனநாயக்கவும் ஐ.தே.கட்சியும் எவ்வளவுதான் ஏமாற்றுகளையும் அலட்சியங்களையும் தொடர்ந்தபோதிலும் தமிழரசுக் கட்சித் தலைமை அவர்களுடன் ஒரு சரணாகதிப் போக்கையே கடைப்பிடித்தனர். ஆனால் இத்தகைய சமரச நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழரசுக் கட்சியின் வாலிபர் அணி கண்டனங்களைத் தெரிவித்து வந்தது. ஊர்காவற்துறை நாடாளுமன்ற உறுப்பினர் வி.நவரத்தினம் அவர்கள் தலைமையேற்று எதிர்ப்பு நடவடிக்கைகளை வழிநடத்தினார்.

ஆனால் அமிர்தலிங்கம் தனது பேச்சுவல்லமையாலும் சாதுரியமான அணுகுமுறைகளாலும் இளைஞர்களை ஆற்றுப்படுத்தி வந்தார். டட்லி – செல்வா உடன்படிக்கையின்படி தமிழரசுக் கட்சி அமைச்சர் திருச்செல்வத்தால் தயாரிக்கப்பட்ட மாவட்ட சபைச் சட்டமூலத்தில் பண்டா –செல்வா ஒப்பந்தத்தில் காணப்பட்ட சுயாதீனத்தன்மையோ, ஏறக்குறைய சமஷ்டியை ஒத்த அம்சங்களோ காணப்படவில்லை. அபிவிருத்தித் திட்டங்களை மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்யும் ஒரு ஆலோசனைக்குழுவாகவும் மத்திய அமைச்சின் அனுமதி பெற்றே சபை நிதி திரட்டும் முறையும், அமைச்சரவை அமைச்சர்களால் மாவட்ட சபைகள் கட்டுப்படுத்தக் கூடியனவாகவும் அரசாங்க அதிபரே நிறைவேற்று அதிகாரியாகவும் மாவட்ட சபைகள் வரையறுக்கப்பட்டன. இவ்வாறான ஒரு அதிகாரமற்ற சபையைக் கூட வழங்கப் போவதாகப் போக்குக்காட்டி விட்டு கடைசியில் ஐ.தே.கட்சி அரசாங்கம் கைவிரித்துவிட்டது.

அது மட்டுமின்றி மன்னாரில் இடம்பெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் அமைச்சர் திருச்செல்வம் சமஷ்டிதான் தங்கள் கொள்கையென்பதில் எவ்வித மாற்றமுமில்லையென உரையாற்றியிருந்தார்.

உடனடியாகவே டட்லி அதைக் கண்டித்து அறிக்கை விட்டதுடன், அமைச்சர் திருச்செல்வம் அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பை மீறி விட்டாரெனவும் குற்றம் காட்டினார்.

அந்த நிலையில் திருச்செல்வம் பதவி விலகப் போவதாக முடிவெடுத்தார். ஆனால் அமிர்தலிங்கம் அவ்விவகாரத்தில் தலையிட்டு அமைச்சர் திருச்செல்வத்தைச் சமாதானப்படுத்தி அவரின் பதவி விலகலைத் தடுத்துவிட்டார்.

இவ்வாறு கட்சிக்குள்ளேயே டட்லியின் நடவடிக்கைகள் காரணமாக முரண்பாடுகள் உருவாகி வளர்ந்த நிலையில் ஸ்ரீமாவோ – சாஸ்திரி ஒப்பந்தம் சட்டமூலமாகப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சிக் காலத்தில் இவ்வொப்பந்தத்தை வன்மையாக எதிர்த்த தமிழரசுக் கட்சி ஐ.தே.கட்சி கூட்டாட்சியில் அதை ஏற்றுக்கொண்டது. அது அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டபோது தனது ஆதரவைத் திருச்செல்வம் வழங்கினார். ஏற்கனவே, 'இதுவொரு குதிரைப் பேரம்' எனக் கண்டனம் செய்த தொண்டமானும் 'நீண்ட காலப் போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டது. நாடற்றவர்கள் என்ற பழிச் சொல் விரைவில் இந்திய வம்சாவழி மக்களிலிருந்து அகற்றப்பட்டுவிடும்' எனக் கூறி இச்சட்டத்துக்கு ஆதரவை வழங்கினார்.

இந்த இரு தரப்புக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி செய்தது நஞ்சாக இருந்த நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி செய்யும்போது தேனாக மாறிவிட்டது.

எனினும் ஊர்காவற்துறை நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீமாவோ – சாஸ்திரி ஒப்பந்தச் சட்ட மூலத்தைக் கர்ணகடூரமாக எதிர்த்தார். செல்வநாயகமும் அமிர்தலிங்கமும் எவ்வளவோ வற்புறுத்தியபோதும் அவர் தனது முடிவை மாற்ற மறுத்துவிட்டார். இறுதியாக செல்வநாயகம் தான் டட்லிக்கு வாக்குறுதியளித்து விட்டதாகவும் அதைக் காப்பாற்றவாவது குறைந்தபட்சம் வாக்களிக்காமல் விடும்படி கேட்டுக்கொண்டார்.

இந்த நிலையில் நவரத்தினம் மேற்படி சட்டம் சமர்ப்பிக்கப்பட்டபோது அதை எதிர்த்து உரையாற்றிவிட்டு வாக்களிப்பில் கலந்து கொள்ளாது வெளியேறி விட்டார். தமிழரசுக் கட்சியும் தொண்டமானும் மலையக மக்களை நாட்டை விட்டு விரட்டும் சட்டத்துக்கு ஆதரவு வழங்கி இன ஒடுக்குமுறையாளர்களைக் குளிர்வித்தனர்.

அடுத்து 1968ல் தேசிய ஆளடையாளச் சட்டம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. நவரத்தினம் 'இது எமது மக்களை நோக்கிச் சுடப்படும் இரட்டைக் குழல் துப்பாக்கி', என வர்ணித்து இச்சட்டத்தைக் கடுமையாக எதிர்த்தார். இந்த அட்டை மூலம் நாய்களுக்கு இலக்கம் கட்டுவது போன்று மக்களை அடிமைப்படுத்துகிறது எனவும் தமிழர்களை இலகுவில் இனங்கண்டு இன ஒதுக்கல் நடவடிக்கைகளையும் இனவன்முறைகளையும் மேற்கொள்ளமுடியும் எனவும் கூறி அவர் இதை எதிர்த்தார்.

தமிழரசுக் கட்சித் தலைமை எவ்வளவோ முயன்றும் அவரை இணங்க வைக்கமுடியவில்லை.

இச்சட்டம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது நவரத்தினம் அதை எதிர்த்து உரையாற்றியதுடன் எதிர்த்தும் வாக்களித்தார்.

அடுத்தநாள் தமிழரசுக் கட்சியில் பாராளுமன்றக் குழு கூடி ஊர்காவற்துறை நாடாளுமன்ற உறுப்பினரை கட்சியிலிருந்து வெளியேற்றியது.

தனிமனிதர்களின் இறைமையையும் தமிழர்களின் சுயாதீனத்தையும் வலியுறுத்தியமைக்காக நவரத்தினம் தமிழரசுக் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

அவ்வாறு வெளியேற்றப்பட்ட அவர் தனித் தமிழீழக் கொள்கையின் அடிப்படையில் தமிழர் சுயாட்சிக் கழகம் என்ற அமைப்பை உருவாக்கினார். எட்டு வருடங்களின்பின் அதாவது 1977 தேர்தலில் தமிழரசுக் கட்சி தமிழீழத்துக்கு தமிழ் மக்களின் ஆணைகோரிப் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

ஆனால் தமிழரசுக் கட்சி தமிழ் மக்களின் நலன்களை ஐக்கிய தேசியக் கட்சிக்கு விற்றபோது உறுதியாக நின்று தமிழரசுக் கட்சியின் துரோக நடவடிக்கைகளை அம்பலப்படுத்திய நவரத்தினம் 1970ல் இடம்பெற்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட பண்டிதர் க.பொ.இரத்தினத்தால் தோற்கடிக்கப்பட்டார்.

திருச்செல்வம் அமைச்சராகப் பதவி வகித்த கடைசி நாட்களில் திருகோணமலை திருக்கோணேஸ்வர வளாகத்தைப் புனித நகராகப் பிரகடனம் செய்வது தொடர்பாக ஆராய ஒரு குழுவை அமைத்தார். இது ஒரு தமிழர், ஒரு சிங்களவர், ஒரு பறங்கியர் ஆகியோரைக் கொண்டதாக அமைந்திருந்தது. அதேநேரத்தில் சேருவில விகாரையின் பிரதான பிக்கு அதற்குத் தனது கடும் எதிர்ப்பைத் தெரிவித்ததையடுத்து பிரதமர் அமைச்சர் திருச்செல்வத்துடன் எவ்வித கலந்துரையாடலையும் நடத்தாமலே அந்த ஆணைக்குழுவைக் கலைத்துவிட்டார்.

இது தனக்கு இழைக்கப்பட்ட அவமதிப்பு என்பதுடன் தன அமைச்சருக்குரிய கௌரவம் நிராகரிக்கப்பட்டு விட்டதாகவும் திருச்செல்வம் கருதினார். அவர் உடனடியாகவே தனது அமைச்சுப் பதவியை 16.09.1968 அன்று ராஜினாமாச் செய்தார்.

செல்வநாயகம், அமிர்தலிங்கம் ஆகியோர் பிரதரைச் சந்தித்து தங்கள் அதிருப்தியைத் தெரிவித்தனர். அச்சந்திப்பின்போது திருமலை பல்கலைக்கழகம், திருகோணமலை புனித நகரம் போன்ற விவகாரங்கள் தட்டிக் கழிக்கப்பட்ட நிலையில் அவர்கள் குறைந்தபட்டசம் மாவட்ட சபைச் சட்டமூலத்தையாவது கொண்டுவரும்படி கேட்டுக்கொண்டனர். பிரதமர் அது பற்றி அமைச்சர்களுடன் கலந்துரையாடிச் சாதகமான பதிலைத் தெரிவிப்பதாகக் கூறியனுப்பினார்.

இதேநிலையில் ஒக்டோபர் 17ம் திகதி அதாவது அமைச்சர் திருச்செல்வம் பதவி விலகி ஒரு மாதத்தின் பின்பு அறிக்கையொன்றைப் பிரதமர் வெளியிட்டார். அதில் தமிழரசுக் கட்சிக்கும் தனக்குமிடையே எவ்வித ஒப்பந்தமும் செய்துகொள்ளப்படவில்லையெனவும் அது எதிரிகளின் பொய்ப் பிரசாரம் எனவும் தான் தமிழரசுக் கட்சியின் உதவியுடன் தேசிய அரசாங்கத்தை அமைத்ததை மட்டுமே மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஏற்கனவே அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் வெறுப்புற்றிருந்த தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியினர், ஏனைய கிளைக் குழுக்கள் என்பன கொதிநிலை அடைந்து விட்டன. அதேவேளையில் அமிர்தலிங்கம் தாங்கள் தொடர்ந்து அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கப் போவதாக 12.10.1968ல் சிம்மாசன உரைக்கு நன்றி தெரிவித்துப் பேசிய போது வெளியிட்ட கருத்தும் இளைஞர் மத்தியில் பெரும் பூகம்பத்தை எழுப்பிவிட்டது.

27.101968ல் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சிக் கிளை, கட்சி அரசாங்கத்தை விட்டு வெளியேற வேண்டுமென்ற தீர்மானத்தை எடுத்தது. அடுத்த நாள் பொதுச் சபையை அமிர்தலிங்கம் கூட்டியபோதும் அத்தீர்மானம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

அதையடுத்து தமிழரசுக் கட்சி தேசிய அரசாங்கத்திலிருந்து வெளியேறியது. அவ்வாறு வெளியேறியபோதும் எதிர்க்கட்சியாகச் செயற்படாமல் ஒரு தனிக் குழுவாக இயங்கி அரசாங்கத்தின் ஆட்சிக்காலம் முடியும் வரைத் தனது ஆதரவை வழங்கி வந்தது.

தமிழரசுக் கட்சியினரின் கோரிக்கைகள் எதுவுமோ அல்லது டட்லி – செல்வா ஒப்பந்தமோ நிறைவேறாத நிலையிலும் 1965 – 1970ன் 5 வருட காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆப்த நண்பனாக அதன் நோக்கத்தை நிறைவேற்றத் தோள் கொடுத்து வந்தனர்.

இந்நிலையில் முதலில் பண்டாரநாயக்காவும் பின் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவும் கடைசியில் டட்லி சேனநாயக்கவும் கைவிட்டு விட்டனர் என்ற கூற்று உண்மையென ஏற்றுக்கொள்ள முடியாது. உண்மையிலேயே பண்டாரநாயக்க, ஸ்ரீமாவோ, டட்லி சேனநாயக்க ஜி.ஜி.பொன்னம்பலம், எஸ்.ஜே.வி.செல்வநாயகம் உட்பட்ட தமிழ்த் தலைமைகள் என அனைவரும் இணைந்தும் தனித்தனியாகவும் தமிழ் மக்களை ஏமாற்றி வந்துள்ளனர். எனவே அவர்களே ஏமாற்றுபவர்களாகவும் தமிழ் மக்களே ஏமாற்றப்படுபவர்களாகவும் இருந்து வந்துள்ளனர் என்பதே மறுக்கமுடியாத வரலாற்று உண்மையாகும்.

தொடரும்.....

அருவி இணையத்திற்காக நா.யோகேந்திரநாதன்.


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம்பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE