Monday 20th of September 2021 02:59:27 AM GMT

LANGUAGE - TAMIL
.
எங்கே தொடங்கியது இன மோதல் - 50 (வரலாற்றுத் தொடர்)

எங்கே தொடங்கியது இன மோதல் - 50 (வரலாற்றுத் தொடர்)


ஐ.தே.கட்சி தமிழரசுக் கூட்டாட்சியில் தோற்கடிக்கப்பட்ட தமிழ் தேசியம்! - நா.யோகேந்திரநாதன்!

'தமிழ் மக்கள் இரண்டாம் தரப் பிரஜைகளாகக் கீழே தள்ளப்பட்டு அதன் மூலம் அவர்களின் தனித்துவமும் அடையாமும் அழிக்கப்படும் நிலைக்கு இன்றைய அரசியலமைப்பு வழிவகுத்தது. தமிழ் மக்களின் பிரதிநிதிகள் எதிர்த்தரப்பில் இருந்தாலென்ன. ஆளும் தரப்பில் பங்காளியாக இருந்தாலென்ன நிலை இதுதான். தமிழ் மக்கள் ஒட்டு மொத்தமாக அழிந்து போவதிலிருந்து அவர்களைக் காக்கக்கூடியது அவர்களது விவகாரங்களை அவர்களே கவனிக்கத்தக்க சமஷ்டி முறையிலான அரசியல் யாப்பு ஒன்றுதான் என்று இலங்கைத் தமிழ் பேசும் மக்கள் நம்புகிறார்கள். இந்த நிலையின் கீழ் மட்டுமே இந்த நாட்டில் தமிழர் சுயமரியாதையுடனும் அவர்களின் பிறப்புரிமையான சுதந்திரத்துடனும் சிங்களச் சகோதரர்களுடன் சமத்துவத்துடன் வாழமுடியும். பண்டா – செல்வா ஒப்பந்தத்தின் ஊடாக நாங்கள் அடையப்பெற எண்ணியது அதிகாரப் பரவலாக்கல் மூலம் ஒரு பிராந்திய தன்னாட்சி கொண்ட மாவட்ட சபைகளையே. ஆயினும் சமஷ்டிக்குக் குறைவான எந்த ஒரு தீர்வும் தமிழ் பேசும் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமையாது. எமக்கு என்ன துன்பம் நேர்ந்தாலும் எமது விடுதலைக்கான போராட்டத்தை முன்கொண்டு செல்வோம். எமது மக்களையும் அந்த இலக்கை நோக்கி நடத்திச் செல்வோம் என உறுதியளிக்கிறோம்'.

1965ம் ஆண்டு தொடக்கம் 1969 நவம்பர் வரை ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான 7 கட்சிக் கூட்டரசாங்கத்தில் பிரதான பங்காளியாக விளங்கியதுடன், அமைச்சுப் பதவியையும் ஏற்று அதிகாரத்தில் வீற்றிருந்த பின்பு திருகோணமலை கோணேசர் ஆலயத்தைப் புனித பிரதேசமாகப் பிரகடனப்படுத்தப்படும் திட்டம் மறுக்கப்பட்டதையடுத்து திருச்செல்வம் அமைச்சர் பதவியை விட்டு விலகியதுடன், தமிழரசுக் கட்சி எதிர்க்கட்சியிலிருந்து தனிக்குழுவாகச் செயற்பட்டு அரசாங்கத்துக்கு அதன் ஆட்சிக் காலம் முழுவதும் ஆதரவு வழங்கி வந்தது. 25.03.1970ல் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு 29.05.1970 அடுத்த தேர்தல் திகதியாக அறிவிக்கப்பட்டது.

வடக்குக் கிழக்கில் சகல பகுதிகளிலும் போட்டியிட்ட தமிழரசுக் கட்சி வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டவையே மேற்கண்ட விடயங்களாகும்.

இது தமிழரசுக் கட்சி ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து அது தனது கொள்கையாக மீண்டும் மீண்டும் எந்தவித மாற்றமுமின்றிக் கூறிவரும் விடயங்கள். இன்னும் சொல்லப் போனால் இது தமிழரசுக் கட்சியின் அடிப்படைக் கொள்கை என்று கூறமுடியாது.

ஆனால் தமிழரசுக் கட்சியின் அரசியல் பயணத்தில் மேடை முழக்கமாக ஒலிக்கும் இக் கொள்கைகள் நடைமுறையில் பின்பற்றப்பட்டனவா என்ற கேள்வி எழுகிறது. அது மட்டுமின்றி அதில் கூறப்பட்ட இலட்சியத்தை அடையும் நோக்கில் ஆக்கபூர்வமான படிப்படியான நகர்வுகள் கூட மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை.

அதாவது தமிழரசுக் கட்சியின் கொள்கைகளும் நடைமுறைகளும் வெவ்வேறு பாதைகளிலேயே பயணித்துள்ளன.

தமிழ் மக்கள் இரண்டாம் தரப் பிரஜைகள் நிலைக்குத் தள்ளப்பட்டு அவர்களின் தனித்துவமும் சிதைக்கப்படுவதற்கு அன்றைய அரசியலமைப்பு இடமளித்தது என்பதை மறுக்கமுடியாது. ஆனால் அந்த சோல்பேரி அமைப்பு முன்வைக்கப்பட்டபோது ஜி.ஜி.பொன்னம்பலம், எஸ்.ஜே.வி.செல்வநாயகம், ஈ.எம்.வி.நாகநாதன் உட்படத் தமிழ் அரசியல் தலைவர்கள் முதலில் தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர். ஜீ.ஜீ.பொன்னம்பலம் ஐம்பதுக்கு ஐம்பது கோரிக்கையை முன்வைத்து சோல்பேரி அரசியல் யாப்புக்கு எதிராக லண்டன் சென்ற இடைக்காலத்தில் டி.எஸ்.சேனநாயக்க யாப்பை அரசாங்க சபையில் முன்வைத்தார். ஏற்கனவே அதை எதிர்த்த எஸ்.ஜே.வி.செல்வநாயகமும் ஈ.எம்.வி.நாகநாதனும் யாப்புக்கு ஆதரவாக வாக்களித்த நிலையில் அது 90 வீத வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

1948ல் சோல்பேரி அரசியலமைப்பு நிறைவேற ஆதரவளித்த எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தையும் ஈ.எம்.வி. நாகநாதனையும் தலைவராகக் கொண்ட தமிழரசுக் கட்சி அதே அரசியலமைப்பே தமிழ் மக்களின் அவல நிலைக்குக் காரணம் எனக் கூறுவதில் அர்த்தம் என்ன இருக்கமுடியும்?

அப்படியான நிலையில் சிங்களத் தலைவர்கள் தமிழர்களை ஏமாற்றினார்களா, சிங்களத் தலைவர்களும் தமிழ்த் தலைவர்களும் சேர்ந்து ஏமாற்றினார்கள்? அன்று சோல்பேரி அரசியலமைப்பு நிறைவேறக் கைகளை உயர்த்தி ஆதரவு வழங்கியவர்கள், பின்பு அந்த அரசியலமைப்பே தமிழ் மக்களின் இன்னல்களுக்குக் காரணம் என்று சொல்வது எவ்வளவு அப்பட்டமான ஏமாற்று என்பது புரிந்து கொள்ளப்படவேண்டும்.

மேலும் அந்தத் தேர்தல் அறிக்கையில், தமிழ் மக்களின் பிரதிநிதிகள் எதிர்க்கட்சியிலிருந்தாலும் ஆளும் கட்சியில் பங்காளிகளாக இருந்தாலும் இதே நிலைமைதான் என்ற விடயமும் சிந்தனைக்கு உட்படுத்தப்படவேண்டியதே. அவர்கள் எதிர்க் கட்சியிலிருந்தபோதும் சரி, ஆளுங்கட்சியிலிருந்த போதும் சரி இவர்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நியாயபூர்வமான தீர்வு பெறுவதை நோக்கி நேர்மையாகவும் முதன்மைப்படுத்தியும் செயற்பட்டார்களா என்ற கேள்விக்கும் பதிலைத் தேட வேண்டியுள்ளது.

ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில் சிங்கள மொழி, மதம், கலாசாரம் என்பன படுமோசமான முறையில் பாதிப்புக்குள்ளாகின. எனவே சிங்கள பௌத்த மறுமலர்ச்சியை இலக்காகக் கொண்டே சிங்கள மகா சபை ஆரம்பிக்கப்பட்டது. அது சிங்கள சுயாதிபத்தியத்தை நோக்கிய ஒரு தேசிய எழுச்சியாகும். அதன் மறுபிறப்பே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியாகும். அவ்வகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏகாதிபத்திய விரோதத் தேசிய சக்தியாக உருவாகியது.

அதேவேளையில் தமிழ் மக்களின் தேசியத்தை அதாவது, மொழி, நிலம், கலாசாரம் என்பவற்றைப் பாதுகாக்கும் ஒரு தேசியக் கொள்கையுடனே தமிழரசுக் கட்சி உருவாகியது. அதாவது தமிழ்த் தேசிய சக்தியாகப் பார்க்கப்பட்டது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சிங்கள தேசியத்தையும் தமிழரசுக் கட்சி தமிழ்த் தேசியத்தையும் வலியுறுத்திய நிலையில் இரு தரப்புமே தங்கள் இனங்களின் தனித்துவங்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் நிலையில் முரண்பாடு இருப்பது தவிர்க்க முடியாது. ஆனாலும் ஏகாதிபத்திய மேலாதிக்கம் உள்நாட்டு தேசியங்களுக்கு விரோதமானது என்ற வகையில் இரு தரப்புக்குமிடையே ஒரு ஒருமைப்பாடு உண்டு.

எனவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் தமிழரசுக் கட்சிக்குமிடையேயான முரண்பாடு ஒரு சிநேகபூர்வமான முரண்பாடாகவும் தமிழரசுக் கட்சிக்கும் ஏகாதிபத்திய சார்பு கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்குமிடையான முரண்பாடு பகை முரண்பாடாகவும் நியாயபூர்வமாக அமைந்திருக்கவேண்டும்.

ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடனான முரண்பாட்டைத் தமிழரசுக் கட்சி ஒரு சினேபூர்வ முரண்பாடாக கையாளாமல் அதற்கு வாய்த்த சந்தர்ப்பங்களையெல்லாம் பயன்படுத்தாமல் பகை முரண்பாடாகவே கையாண்டு வந்தது. ஆனால் ஐக்கிய தேசியக் கட்சியுடன் சிநேகபூர்வமான முரண்பாட்டையே கடைப்பிடித்தது.

எனவேதான் தமிழரசுக் கட்சி மொழியுரிமைக்கான போராட்டங்களை முன்னெடுத்தபோதும் தமிழ்த் தேசியத்தில் உறுதியான நிலைப்பாட்டை எடுக்கவில்லையென்ற குற்றச்சாட்டு எழுகிறது.

ஒவ்வொரு தேசிய இனங்களும் தங்கள் தேசியத்தைப் பாதுகாப்பதும் கால வளர்ச்சிக்கேற்ற வகையில் அடிப்படை அம்சங்களிலிருந்து விலகிவிடாமல் வளர்த்தெடுப்பதும் அந்த இனம் தன்னை அழிவிலிருந்து பாதுகாப்பதற்கான தவிர்க்க முடியாத தேவையாகும். ஆனால் அந்த தேசிய இனங்களின் தலைமைகள் தேசியத்தை வெகு அவதானமாகக் கையாளாவிட்டால் அது அடிப்படைவாதமாகவோ, பேரினவாதமாகவோ மாற்றமடையும் ஆபத்து உண்டு.

சிங்கள தேசியவாதமானது அநகாரிக தர்மபால தலைமையிலான குழுவினரால் ஏனைய தமிழ், முஸ்லிம் மக்களுக்கெதிரான வெறுப்புணர்வை ஊட்டி அவர்களை எதிரிகளாக நோக்கும் நிலையை நோக்கி பேரினவாதமாகத் திசை திருப்பப்பட்டது.

அதே கொள்கை அவரின் அணியில் செயற்பட்ட அவரின் சீடராக விளங்கிய டி.எஸ்.சேனநாயக்காவால் மிக லாவகமாகவும் தந்திரமாகவும் முன்னெடுக்கப்பட்டது. அவரின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியும் அதே பாதையில் மிகவும் உறுதியாகப் பயணித்தது. ஆங்கில ஆட்சியாலும் அதன் பின்பும் ஐ.தே.கட்சி முன்னெடுத்த அதே வகையிலான ஆட்சியின் பாதிப்புகளாலும் சிங்கள மக்கள் மத்தியில் ஏற்பட்ட வெறுப்புணர்வு தமிழர்கள் மீதும் முஸ்லிம்கள் மீதும் திசை திருப்பப்பட்டது.

அதேவேளையில் ஏகாதிபத்தியத்துக்கெதிராக சிங்கள தேசிய மறுமலர்ச்சியை நோக்கி உருவாக்கப்பட்ட சிங்கள மகா சபையும் அதன் வாரிசான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் பேரினவாதப் போக்கிலிருந்து விடுபடமுடியவில்லை.

ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் மலையக மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்டதன் மூலம் 6 இலட்சம் மலையக மக்கள் நாடற்றவர்களாக்கப்பட்டதுடன், பாராளுமன்றத்தில் தமிழர்களின் பலம் பாதியாகக் குறைக்கப்பட்டது. தமிழ்ப் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்கள் நிறுவப்பட்டதன் மூலம் தமிழ்ப் பிரதேசங்கள் பல சிங்கள மயப்படுத்தப்பட்டதுடன் தமிழர் தாயகத்தின் பாரம்பரிய நிலத் தொடர்பும் துண்டிக்கப்பட்டது.

1956ல் இடம்பெற்ற ஐ.தே.கட்சியின் களனி மாநாட்டில் சிங்களம் மட்டுமே இந்த நாட்டின் அரச கரும மொழி என்ற தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவால் தனிச் சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்டபோது அதற்குப் பரிபூரண ஆதரவு வழங்கியது. பண்டாரநாயக்க தமிழரசுக் கட்சியுடன் இணக்கப்பாட்டுக்கு வந்து பண்டா – செல்வா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டபோது அதை எதிர்த்து கடும் பிரசாரங்களை மேற்கொண்டதுடன், கண்டி யாத்திரை நடத்திப் பெரும் எதிர்ப்பை வெளியிட்டது.

ஐ.தே.கட்சி, பிக்கு பெரமுன ஆகியன நடத்திய எதிர்ப்புப் போராட்டங்கள் காரணமாக இனப்பிரச்சினைக்கு நியாயமான, நிரந்தரமான தீர்வை எட்ட வகை செய்யக்கூடிய பண்டா – செல்வா ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்டது. நாடெங்கும் பெயர்ப் பலகைகளில் உள்ள தமிழ் எழுத்துக்களை அழிக்கும் போராட்டத்தை ஐக்கிய தேசியக் கட்சியினர் முன்னெடுத்ததை அடுத்து, 1958 இனக் கலவரம் தொடக்கப்பட்டு தமிழ் மக்களுக்கு உயிரிழப்பு, சொத்திழப்பு உட்படப் பேரழிவை ஏற்படுத்தியது.

ஒட்டு மொத்தத்தில் தமிழ்த் தேசியத்துக்கு எதிராகவும், இன அழிப்பு நோக்குடனும் ஐ.தே.கட்சி எவ்வித ஒளிவு மறைவுமின்றிச் செயற்பட்டு வந்தது.

இவ்வாறு தமிழ் மக்கள் மீது தொடர்ந்து இன ஒடுக்குமுறை, இன அழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த ஐக்கிய தேசியக் கட்சிக்கு 1965ல் ஆட்சியமைக்கப் பலம் போதாத நிலையில் தமிழரசுக் கட்சியும் தமிழ்க் காங்கிரஸ் கட்சியும் கைகொடுத்தன. தமிழரசுக் கட்சி அமைச்சுப் பதவியையும் பெற்றுக்கொண்டது.

டட்லி – செல்வா ஒப்பந்தம் மூலம் மாவட்ட சபைகள் அமைக்கப்பட்டு அதிகாரப் பரவலாக்கம் மூலம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு எட்டப்படுமென்றே கூறப்பட்டது.

ஆனால் இந்த ஐ.தே.கட்சி, தமிழரசுக் கட்சி கூட்டாட்சியில் தமிழ்த் தேசியம் படுமோசமான முறையில் தோற்கடிக்கப்பட்டதென்பதே உண்மையாகும். தமிழரசுக் கட்சியின் ஒத்துழைப்புடனேயே இத்தோற்கடிப்பு மேற்கொள்ளப்பட்டது என்பது கசப்பான உண்மையாகும்.

ஐ.தே.கட்சி ஸ்ரீமாவோ சாஸ்திரி ஒப்பந்தத்தை அமுல்படுத்தும் சட்டத்தை நிறைவேற்றியபோது முன்னைய ஆட்சியில் அதை எதிர்த்த தமிழரசுக் கட்சியும் தொண்டமானும் ஆதரவு வழங்கி வாக்களித்து 5 இலட்சம் மலையக மக்களை நாடு கடத்த வழிவகுத்தனர். தேசிய அடையாள அட்டை மசோதாவுக்கு ஆதரவு வழங்கியதுடன் அதை எதிர்த்து வாக்களித்த வி.நவரத்தினத்தைக் கட்சியை விட்டு வெளியேற்றினர். ஐ.தே.கட்சியின் நலனுக்காகத் தங்கள் கூட்டாட்சியைப் பிளவுபடுத்தக்கூட தமிழரசுத் தலைமை தயங்கவில்லை.

மாவட்ட சபையைக் கைவிடுவதாக டட்லி சேனநாயக்க திட்டவட்டமாக அறிவித்த பின்பும் அதே அரசாங்கத்தில் பங்கு வகித்தனர். திருகோணமலையில் தமிழ் பல்கலைக்கழகம் அமைப்பது, 10 ரூபா அடையாள மானியத்துடனும் காங்கேசந்துறையில் துறைமுகம் அடிக்கல் நாட்டும் வைபவத்துடனும் கைவிடப்பட்டபோதும் ஆட்சியிலிருந்து வெளியேறவில்லை.

இறுதியில் திருகோணமலை கோணேசர் வளாகத்தைப் புனித பூமியாக்க அமைச்சர் திருச்செல்வத்தின் முயற்சி தடுக்கப்பட்ட பின்பு அரசாங்கத்தை விட்டு வெளியேறினாலும் நாடாளுமன்றத்தில் தனிக் குழுவாக இயங்கி அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கினர். அது மட்டுமின்றி ஐக்கிய தேசியக் கட்சி மேற்கொண்ட தொழிலாளர் விரோத நடவடிக்கைகளுக்கெல்லாம் தோள் கொடுத்தனர்.

இவ்வாறே ஐக்கிய தேசியக் கட்சி தமிழரசுக் கட்சி கூட்டாட்சியில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் நல்லுறவைப் பேணும் முகமாக தமிழ் மக்களின் நலன்கள் தமிழரசுக் கட்சியால் பலி கொடுக்கப்பட்டன.

சிங்கள, தமிழ் தேசியங்களுக்கிடையே நிலவ வேண்டிய சினேக பூர்வமான முரண்பாட்டைப் பகை முரண்பாடாகவும் ஏகாதிபத்திய தேசிய விரோத சக்தியான ஐ.தே.கட்சியுடன் தமிழ் தேசியத்துக்கு நிலவவேண்டிய பகை முரண்பாட்டை சிநேகபூர்வமான முரண்பாடாகவும் தமிழரசுக் கட்சி கையாண்டது. ஏனெனில் ஐக்கிய தேசியக் கட்சியினரும் தமிழரசுக் கட்சியின் தலைமையும் ஆங்கிலக் கல்வி கற்ற, மேற்கத்தைய அரசியல் மற்றும் வாழ்க்கை முறை என்பன காரணமாக உண்மையான சிங்கள, தமிழ் தேசியங்களிலிருந்து வெகுதூரம் விலகியே இருந்தனர்.

எனவேதான் 1965, 1970 காலப்பகுதியில் தமிழ் மக்களின் உரிமைகளைப் பலி கொடுத்து ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியைப் பாதுகாத்தனர் என்பது மறுக்கப்படமுடியாத உண்மையாகும். எனவே அவர்கள் ஆட்சியிலுள்ள போது சமஷ்டி பற்றி கதைக்கக் கூட இல்லை என்பதுடன் மாவட்ட சபைகளைக் கூட விட்டுக்கொடுத்த நிலையில் மீண்டும் தேர்தல் காலத்தில் சமஷ்டிக் கோரிக்கை பற்றியும் உரிமைப் போராட்டம் பற்றியும் கொக்கரிப்பது மீண்டும் தமிழ் மக்களை ஏமாற்றும் நோக்கம் கொண்ட நயவஞ்சகம் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

தொடரும்.....

அருவி இணையத்திற்காக நா.யோகேந்திரநாதன்.


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம்பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE