Friday 26th of April 2024 12:12:59 AM GMT

LANGUAGE - TAMIL
.
எங்கே தொடங்கியது இன மோதல் - 55 (வரலாற்றுத் தொடர்)

எங்கே தொடங்கியது இன மோதல் - 55 (வரலாற்றுத் தொடர்)


அரசியல் மயப்படுத்தப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி மாநாடு! - நா.யோகேந்திரநாதன்!

'1948 லிருந்து 1970 வரையிலான இலக்கிய உணர்வெழுச்சி தன் காலத்தை முடித்துக்கொண்டது போல் தோன்றுகிறது. சமுதாயத்தின் உயர் மட்டத்தில் தோன்றிய இவ்வெழுச்சி சமுதாயம் முழுவதையும் ஏதோவொரு வகையில் தொடவே செய்தது. மொழி, கலாசார உணர்வுகள் சமுதாயம் முழுமைக்கும் பொதுவாகக் காணப்பட்டபோதிலும் அவற்றின் முக்கியத்துவமும் தொடர்பும் வெவ்வேறு வகையாக உணரப்பட்டன. மேலும் ஆரம்பத்தில் உணர்ச்சி வசமான குறியீட்டு வகையில் இருந்த அவை பின்னர் மக்களின் அன்றாட சமூக பொருளாதார அரசியல் பிரச்சினைகளை உள்ளடக்கும் வகையில் பரிணமித்தன'.

1948 தொட்டு 1970 வரை மேற்கொள்ளப்பட்ட இலக்கியப் பணிகள் ஆறுமுகநாவலர், விபுலானந்த அடிகள், மி.வை.தாமோதரம்பிள்ளை போன்ற மேதைகளை அடியொற்றிய வகையில் அமைந்து எமது. மொழி, பண்பாட்டு அம்சங்களையும் வரலாற்றுப் பெருமையையும் வெளிக்கொண்டு வருவதிலேயே கூடிய கவனம் செலுத்தின. 1960ல் ஆரம்பமான மக்கள் இலக்கியத்தின் முயற்சிகள் கூர்மையடைந்து தீண்டாமை, இனஒடுக்குமுறை போன்றவற்றுக்கு எதிரான போராட்ட இலக்கியமாகப் பரிணமித்தன என்பதைப் பேராசிரியர் கைலாசபதி அவர்கள் சுட்டிக்காட்டி வெளியிட்ட கருத்துகள் இவை.

1960ல் ஆட்சிக்கு வந்த திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஆட்சியதிகாரத்துக்கு வந்தபின்பு இந்திய வர்த்தக சினிமாக்கள், இலக்கியங்களுக்கு விதித்த கட்டுப்பாட்டை அடுத்து உள்ள10ர் கலை, இலக்கிய முயற்சிகளில் ஒரு புதிய முற்பாய்ச்சல் ஏற்பட்டது. அதன் காரணமாக எமது மக்கள் முகம் கொடுத்த சமூக, வர்க்க இன ஒடுக்குமுறைகள் எமது இலக்கியங்களின் பேசு பொருளாகின. அவற்றின் காரணமாக மக்கள் இலக்கியத்தில் ஏற்பட்ட எழுச்சி காரணமாக சாதாரண மக்கள் மத்தியில் படைப்பாளிகளும் பரந்துபட்ட வாசகர்களும் உருவாகும் ஒரு நிலைமை தோன்றியது.

அதேவேளையில் புலமைசார் அறிஞர்கள், மத்தியில் எமது இனத்தின் வரலாற்றுத் தொன்மை, சிறப்பு என்பன தொடர்பாகவும் பாரம்பரிய இலக்கிய இலக்கணங்கள் தொடர்பாகவும் ஆய்வுகளும் அவை தொடர்பான படைப்புகளும் உருவாகின. எமது மொழி, பண்பாடு என்பவற்றின் மீதும் எம் மீதும் தொடுக்கப்பட்ட இன ஒடுக்குமுறைகளும் எம்மொழியையும் எமது இனத் தனித்துவ அடையாளங்களையும் நாம் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தின.

அவ்வகையில் பல ஆய்வு நூல்கள் அறிஞர்களால் வெளியிடப்பட்டன. அவற்றில் கலைப்புலவர் நவரத்தினம் அவர்கள் எழுதிய 'இலங்கைக் கலாசாரத்தில் தமிழ்த் திராவிட மூலங்கள்', எச்.டபிள்யூ.தம்பையா எழுதிய 'இலங்கையில் தமிழர்களின் சட்டங்களும் பழக்க வழக்கங்களும்', கலாநிதி இந்திரபாலாவின் 'யாழ்ப்பாண அரசின் ஆரம்ப காலத்தில் திராவிடர் குடியிருப்புகள்', பேராசிரியர் பத்மநாதனின் 'யாழ்ப்பாண ராச்சியம்', பேராசிரியர் கணபதிப்பிள்ளையின் நாடக நூலான 'சங்கிலியன்' என்பன முக்கியமானவையாகும்.

1948 தொட்டு 1970 வரை மேற்கொள்ளப்பட்ட இத்தகைய காத்திரமான முயற்சிகள் தனிமனித முயற்சிகளாகவே இருந்ததுடன் அறிஞர்கள் மத்தியில் விவாதிக்கப்படுமளவுக்கு மட்டுமே சுருங்கியிருந்தன.

இம்முயற்சிகளை ஒன்றிணைத்து நிறுவன மயப்படுத்தும் முயற்சியில் வண.சேவியர் ஸ்ரானிஸ்லஸ் தனிநாயகம் அடிகளார் அர்ப்பணிப்புடன் ஈடுபட ஆரம்பித்தார். அவர் இந்தியாவிலிருந்து வெளிவரும் 'தமிழ்க் கலாசாரம்' என்ற சஞ்சிகையில் எழுதிய கட்டுரைகள் இத்துறை சார்ந்த அறிஞர்களின் கவனத்துக்கு உட்பட்டன. 1960ல் மலேசியப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றச் சென்ற அவர் உலகம் முழுவதுமுள்ள தமிழறிஞர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி 'தமிழ் ஆராய்ச்சிக்கான அனைத்துலக நிறுவனம்' என்றொரு அமைப்பை உருவாக்கினார்.

அதையடுத்து 1988ல் மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் முதலாவது தமிழாராய்ச்சி மாநாடு இடம்பெற்றது. இதில் தமிழறிஞர்கள் மட்டுமின்றி மொழியார்வம் காரணமாகத் தமிழ் கற்றுத் தேர்ந்த ரஷ்ய, ஜப்பானிய, ஆங்கில அறிஞர்களும் கலந்து கொண்டு ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்திருந்தனர். அதை மலேசியப் பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் ஆரம்பித்து வைத்தார்.

இரண்டாவது தமிழாராய்ச்சி மாநாடு இந்தியத் தமிழகத்தின் தலைநகர் சென்னையில் 1968ம் ஆண்டு இடம்பெற்றது. அதை இந்தியக் குடியரசுத் தலைவர் சாஹிர் ஹூசைன் ஆரம்பித்து வைத்தார்.

1970ல் மூன்றாவது தமிழாராய்ச்சி மாநாடு பிரான்சின் தலைநகர் பாரிசில் இடம்பெற்றது. ஐ.நா. நிறுவனத்தின் யுனெஸ்கோ நிறுவனத் தலைவர் மல்கம் ஆதிசேசையாவால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அடுத்து நான்காவது தமிழாராய்ச்சி மாநாடு 1974ல் இலங்கையில் நடத்துவதாகத் தீர்மானிக்கப்பட்டது.

இம்மாநாட்டைச் சிறப்பாக நடாத்தும் முகமாக மாநாட்டின் ஏற்பாட்டுக் குழுத் தலைவரும் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் நிறுவன உறுப்பினருமாகிய எச்.டபிள்யூ. தம்பையா தலைமையில் கொழும்பில் ஒரு கூட்டம் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்ட தபால், தந்தி அமைச்சர் செல்லையா குமாரசூரியரின் ஆதரவாளர்கள் ஏற்கனவே இடம்பெற்ற மாநாடுகள் அந்தந்த நாடுகளின் தலைநகரங்களில் இடம்பெற்றதைப் போன்று கொழும்பில் இடம்பெறவேண்டுமெனவும் முன்னைய மாநாடுகள் அந்தந்த நாட்டுத் தலைவர்களால் ஆரம்பிக்கப்பட்டது போன்று இதுவும் திருமதி.ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவால் தொடங்கி வைக்கப்படவேண்டுமெனவும் கோரினர். அதுமட்டுமன்றி மாநாட்டை நடத்த பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தை இலவசமாக வழங்கமுடியுமெனவும் உதவிகளையும் உச்சகட்ட அளவில் பெற முடியுமெனவும் தெரிவித்தனர்.

மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவில் அங்கம் வகித்த தமிழரசுக் கட்சியினர் இக்கோரிக்கைகளை முற்றாக நிராகரித்தனர். அக்கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டால் மாநாடு மேலும் சிறப்புறுமென ஏற்பாட்டுக்குழுத் தலைவர் எம்.டபிள்யூ.தம்பையா விளக்கமளித்தபோதும் தமிழரசு கட்சி ஆதரவாளர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. காலம்காலமாக ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவை தமிழ் மக்களின் கொடிய எதிரியாகச் சித்தரித்து வந்த தமிழரசுக் கட்சியினர் அக்கோரிக்கைகளை நிராகரித்ததில் ஆச்சரியப்பட எதுவுமில்லை. ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் விவசாயப் பொருளாதாரக் கொள்கை காரணமாகவும் சிவில் தொழில் முன்னேற்றம் காரணமாகவும் திருமதி ஸ்ரீமாவோ மேல் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டு வந்த நல்லபிப்பிராயம் அவர் தமிழாராய்ச்சி மாநாட்டை ஆரம்பித்து வைத்தால் மேலும் அதிகரித்துவிடுமெனவும் அஞ்சினர்.

கலாநிதி எம்.டபிள்யூ.தம்பையாவும் ஏனைய சில சிரேஷ்ட உறுப்பினர்களும் எவ்வளவோ வலியுறுத்தியும் ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில் அவர் இம்மாநாட்டை தமிழரசுக் கட்சியினர் அரசியல் மயப்படுத்துவதுடன் தம்மால் உடன்பட முடியாதெனக் கூறி ஏற்பாட்டுக் குழுவிலிருந்து வெளியேறினர். அந்த இடங்களுக்கு தமிழரசுக் கட்சியினர் நியமிக்கப்பட்டனர்.

அதையடுத்து ஏற்பாட்டுக் குழுவின் தலைவராகப் பேராசிரியர் சு.வித்தியானந்தனும் செயலாளராக ரி.துரைராஜாவும் பொருளாளராக கோபாலபிள்ளை மகாதேவாவும் தெரிவு செய்யப்பட்டனர். தமிழர் தாயகத்தின் தலைநகர் எனக் கருதப்படும் திருகோணமலையிலேயே மாநாட்டை நடத்த வேண்டுமெனச் சிலரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டாட்சியில் ஜீ.ஜீ.பொன்னம்பலம் யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகம் அமைக்கவேண்டுமென வலியுறுத்த தமிழரசுக் கட்சியினர் அதை எதிர்த்து திருமலையில் தமிழ் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டுமென வாதாடியதை மறந்து விடமுடியாது. மெல்லமெல்ல சிங்கள மயமாக்கப்படும் திருமலையில் இம்மாநாடு நடத்தப்பட்டால் இதனால் ஏற்படும் எழுச்சி திருமலையைப் பாதுகாக்க உந்து சக்தியாக அமையும் எனச் சிலர் வலியுறுத்தியபோதும் அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

எனவே 4வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை யாழ்ப்பாணத்தில் வீரசிங்கம் மண்டபத்தில் நடத்துவதெனவும் இறுதிநாள் பொதுக்கூட்டத்தை யாழ்ப்பாணம் திறந்த வெளியரங்கில் நடத்துவதென்றும் தீர்மானிக்கப்பட்டது.

ஒரு நாட்டில் ஒரு சர்வதேச மாநாடு நடத்தப்படும்போது அந்த நாட்டின் தலைவர் ஆரம்பித்து வைப்பது ஏற்கனவே பின்பற்றப்படும் ஒரு மரபு. ஆனால் மாநாட்டுக்கு ஜனாதிபதியோ, பிரதமரோ அழைக்கப்படவில்லை. அப்படியான ஒரு நிகழ்வு நகரத்தில் நடத்தப்படும்போது நகர முதல்வர் முன்னிலைப்படுத்தப்படவேண்டும். இலங்கைக்கு பிரித்தானிய அரசி எலிசபெத் விஜயம் செய்தபோது அவரைக் கொழும்பு மேயராக இருந்த உருத்திரா அவர்களே வரவேற்றார் உருத்திரா ஒரு தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் தமிழாராய்ச்சி மாநாட்டுக்கு யாழ்.நகர மேயர் அல்பிரட் துரையப்பா ஒரு கௌரவத்துக்காகக் கூட அழைக்கப்படவில்லை. ஏனெனில் தமிழரசுக் கட்சியினர் அல்பிரட் துரையப்பாவைத் தமிழினத் துரோகியெனவே சித்தரித்து வந்தனர். அதுமட்டுமின்றி அவர் மீது கொலை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அதாவது இம்மாநாட்டைத் தமது அரசியல் நோக்கங்களுக்குப் பயன்படுத்தும் நோக்குடன் இம்மாநாட்டில் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவோ மேயர் அல்பிரட் துரையப்பாவோ பங்கு கொள்ளவேண்டிய சம்பிரதாயத்தை நிராகரித்தனர்.

1974 ஜனவரி 3ம் நாள் நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் கோலாகலமாக தனிநாயகம் அடிகளார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. இம்மாநாட்டை முன்னிட்டு யாழ்ப்பாண நகரமெங்கும் வாழை, தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு முழு நகரமுமே விழாக்கோலம் பூண்டிருந்தது. இம்மாநாட்டில் ஒரு பகுதியாக அலங்கார ஊர்திகள் ஊர்வலமும் இடம்பெற்றது. இவ்வூர்திகள் ஒளவையார், திருவள்ளுவர், கம்பர், சங்கிலியன் போன்ற தமிழ் மூதாதையர்களின் உருவப் படங்களையும் இலக்கியக் காட்சிகளையும் தாங்கி வலம் வந்தன. அதேவேளையில் தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறைகளைச் சித்தரிக்கும் ஊர்திகளும் இதில் இணைக்கப்பட்டிருந்தன.

ஜனவரி 3ம் திகதியிலிருந்து 9ம் திகதி வரை இடம்பெற்ற இம்மாநாட்டில் பல்வேறு நாடுகளையும் சேர்ந்த தமிழறிஞர்களும் கலந்து கொண்டு ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்திருந்தனர். சங்க காலத்திலும் நாயன்மார் காலத்திலும் எமது மொழி பெற்றிருந்த செழுமையும் வளமும் இலக்கிய மேன்மையும் பற்றிய கட்டுரைகளும் சிந்துவெளி காலம்தொட்டு சிறப்புப்பெற்று விளங்கிய தொன்மை வாய்ந்த திராவிட நாகரீக வளர்ச்சி பற்றியும் நவீன கலை, இலக்கியங்களிலும் பாரம்பரிய நாட்டார் கலை இலக்கியங்களிலும் பொதிந்து கிடக்கும் சிறப்பம்சங்கள் பற்றியும் பல காத்திரமான ஆய்வுக் கட்டுரைகள் அங்கு சமர்ப்பிக்கப்பட்டன.

10ம் நாள் மாநாட்டின் பலாபலன்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் முகமாக வீரசிங்கம் மண்டபத்தில் ஒரு பொதுக்கூட்டம் நடத்தப்படவிருந்தது. அங்கு பெருந்தொகையான மக்கள் கூடி விட்டதால் அதைத் திறந்த வெளியரங்கில் நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்கான அனுமதியைப் பெறமுயற்சித்தபோது மேயர் துரையப்பாவையோ மாநகர ஆணையாளரையோ கண்டு பிடிக்கமுடியவில்லை.

எனவே வீரசிங்கம் மண்டபத்துக்கு முன்னால் மேடையமைக்கப்பட்டு பொதுக்கூட்டம் மேற்கொள்ளப்பட்டது. ஏற்கனவே மாநாட்டுக்கு விசா இல்லாமல் வந்த தமிழ் நாட்டைச் சேர்ந்த நான்கு பிரமுகர்கள் கொழும்பில் வைத்துத் திரும்பியனுப்பப்பட்ட நிலையில் தமிழறிஞரான ஜனார்த்தனம் இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாகப் படகில் வந்து இதில் கலந்து கொண்டார். ஆனால் தமிழகத்திலிருந்து மாநாட்டில் கலந்து கொள்ள வந்த தமிழறிஞர்கள் எவரும் தடுக்கப்படவில்லை.

வீரசிங்கம் மண்டபத்துக்கு முன்னாலுள்ள வீதி மக்களால் நிறைந்து போக்குவரத்துத் தடைப்பட்டிருந்தது. அப்போது அவ்வழியால் வந்த இன்ஸ்பெக்டர் சேனாதிராஜா தடுக்கப்பட அவர் திரும்பி வேறு பாதையால் சென்று விட்டார். அதன்பின்பு அப்பாதையால் வந்த இன்னொரு இன்ஸ்பெக்டரும் தடுக்கப்படவே அவர் திரும்பிச் சென்று பாதையில் போக்குவரத்து தடைசெய்யப்படுவதாகப் புகார் செய்தார்.

அந்நிலையில் இரவு 8.00 மணியளவில் இந்திய அறிஞர் நய்னா முகமது உரையாற்றிக் கொண்டிருந்தபோது உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சந்திரசேகர தலைமையில் வந்த கலகமடக்கும் பொலிஸார் பாதையை விட்டு விலகி வழிவிடுமாறு ஒலி பெருக்கி மூலம் அறிவித்தனர். இளைஞர்கள் விலக மறுத்து எதிர்ப்புத் தெரிவிக்கவே சந்திரசேகரவின் வாகனம் மக்கள் நோக்கி முன்னேறியது. அதனால் கோபமடைந்த இளைஞர்கள் சந்திரசேகரவின் ஜீப் மீது கற்களையும் செருப்புகளையும் வீசித் தாக்க ஆரம்பித்தனர்.

அதனையடுத்துப் பொலிஸார் தடியடிப் பிரயோகத்தை மேற்கொண்டதுடன் கண்ணீர் புகைப் பிரயோகத்தையும் நடத்தினர். மக்கள் சிதறியோட ஆரம்பித்தனர். பொலிஸார் ஆகாயத்தை நோக்கிச் சுட்டபோது ஒரு மின்கம்பி அறுந்து றீகல் தியேட்டர் தடுப்பு இரும்புக் குழாய் வேலி மீது விழுந்தது. அதில் சிக்கி பொது மக்களில் 9 பேர் அவ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடு 9 அப்பாவிகளின் உயிர்ப் படுகொலையுடன் நிறைவடைந்தது.

அன்றிரவே யாழ்ப்பாணத்தில் அமைந்திருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் காரியாலயம் தாக்கப்பட்டது.

அதுமட்டுமின்றி குமாரசூரியரும் அல்பிரட் துரையப்பாவும் திட்டமிட்ட வகையிலேயே பொலிஸாரை ஏவி மக்களைக் கொலை செய்தனர் என்ற பிரசாரம் தமிழரசுக் கட்சியினரால் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டிருந்தது.

ஏற்கனவே பண்ணைப் பாலத்தில் குமாரசூரியர் மீதும் யாழ் பிரதான வீதியில் அல்பிரட் துரையப்பா மீதும் கொலை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுத் தோல்வியடைந்திருந்தன. இந்நிலையில் தமிழாராய்ச்சிப் படுகொலைகள் தீவிரவாத இளைஞர்கள் மத்தியில் மேலும் ஆவேசத்தை மூட்டியிருந்தன.

நாட்டுக்குள் சட்டவிரோதமாக உள்நுழைந்த இந்திய அரசியல்வாதி ஜனார்த்தனத்தை கைது செய்ய முயன்றபோதும் அவர் ஒரு பாதிரியார் வேடத்தில் கொழும்புக்குச் சென்று அங்கிருந்து இந்தியத் தூதரகம் வழியாக இந்தியா சென்றுவிட்டார்.

அப்படியிருந்தபோதிலும் ஒரு சர்வதேச மாநாடு இடம்பெறும்போது நாட்டுத் தலைவரையோ நடைபெறும் நகரத்தின் மேயரையோ அழைக்காமல் விட்டதிலிருந்தும் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகளுக்கு குமாரசூரியரும் துரையப்பாவும் தான் காரணம் என்ற பிரசாரத்தைக் கட்டவிழ்த்து தமிழ் மக்களை நம்ப வைத்ததிலிருந்தும் தமிழரசுக் கட்சியினர் இம்மாநாட்டைத் தமது அரசியல் நோக்கங்களுக்கு முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டனர் என்பது மறுக்கமுடியாத உண்மையாகும். இத்தகைய உள்நோக்கத்தை உணர்ந்து கொண்ட உலகத் தமிழாராய்ச்சிக் கழகத்தின் சிரேஷ்ட உறுப்பினர் எச்.டபிள்யூ.தம்பையா மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவிலிருந்து வெளியேறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடரும்.....

அருவி இணையத்திற்காக நா.யோகேந்திரநாதன்.


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம், தமிழ்நாடு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE