Friday 26th of April 2024 04:47:40 PM GMT

LANGUAGE - TAMIL
.
எங்கே தொடங்கியது இன மோதல் - 62 (வரலாற்றுத் தொடர்)

எங்கே தொடங்கியது இன மோதல் - 62 (வரலாற்றுத் தொடர்)


1977 தேர்தல் வெற்றியும் வன்முறை வெறியாட்டமும்! - நா.யோகேந்திரநாதன்!

'நீங்கள் தனிநாடு கோருகிறீர்கள். திருகோணமலை உங்கள் தனிநாட்டின் தலைநகரம் என்கிறீர்கள். நீங்கள் வன்முறை வழியை விரும்பவில்லையென்றும் தேவையேற்படின் நேரம் வரும்போது வன்முறையைப் பயன்படுத்துவோம் என்கிறீர்கள். இதைக் கேட்ட மற்றைய இலங்கையர்கள் என்ன செய்வார்கள் என நீங்கள் நினைக்கிறீர்கள்? அவர்கள் இதற்கு எப்படி எதிர்வினையாற்றுவார்கள்? நீங்கள் சண்டையிட விரும்பினால் இங்கு சண்டை நடக்கட்டும். நீங்கள் சமாதானத்தை விரும்பினால் இங்கு சமாதானம் நிலவட்டும். இப்படித்தான் அவர்கள் பதில் சொல்வார்கள். இதை நான் சொல்லவில்லை. இலங்கை மக்கள் இதனைச் சொல்கிறார்கள்'.

1977ம் ஆண்டு தேர்தல் முடிந்து சில நாட்கள் கழிந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் பொலிஸார் நடத்திய வெறியாட்டத்தில் கடைகள் தீக்கிரையாக்கப்பட்டதுடன் அவர்கள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 4 பேர் கொல்லப்பட்டதுடன் 30 பேர் காயமடைந்தனர். அடுத்த நாளிலும் பொலிஸார் ஆஸ்பத்திரி வீதியில் இறங்கி வன்முறைகளை மேற்கொண்டதுடன் சந்தைக் கட்டிடங்களைத் தீக்கிரையாக்கினர். அன்றும் இருவர் கொல்லப்பட்டனர். அவற்றைத் தடுத்து நிறுத்தும்முகமாக அங்கு சென்ற எதிர்க்கட்சித் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் முன்னிலையில் ஒரு பொலிஸ்காரனால் தாக்கப்பட்டார்.

இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் அமிர்தலிங்கம் ஒத்திவைப்புப் பிரேரணையின்போது கண்டன உரையாற்றியபோது, அதற்குப் பதிலளித்த பிரதமர் ஜெயவர்த்தனவின் உரையில் குறிப்பிடப்பட்டவையே இவை.

ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் இந்த உரை பத்திரிகைகளிலும் வானொலியிலும் முக்கியத்துவம் கொடுத்த வெளியிடப்பட்டது. அதையடுத்து நாடு முழுவதும் 'போர் என்றால் போர்; சமாதானம் என்றால் சமாதானம்' என்ற கோஷத்துடன் தமிழ் மக்கள் மீதான இனவன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. நாடுமுழுவதும் பரவிய இன அழிப்பு வெறியாட்டத்தில் 112 தமிழர்கள் கொல்லப்பட்டதுடன் 25,000 வீடுகள் அழிக்கப்பட்டும், 1,000 மில்லியனுக்கு மேலான சொத்துக்கள் கொள்ளையிடப்பட்டும் கோரத் தாண்டவம் ஆடப்பட்டது.

1958ம் ஆண்டின் பின்பு அதாவது 19 வருடங்களின் பின்பு இடம்பெற்ற பெரும் இன அழிப்புக் கலவரம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இரு பேரழிவுகளினதும் சூத்திரதாரியாக ஜே.ஆர்.ஜெயவர்த்தனவே விளங்கினார் என்பது முக்கிய விடயமாகும்.

1977ம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் தெற்கில் ஐக்கிய தேசியக் கட்சியும் வடக்கில் தமிழர் விடுதலைக் கூட்டாணியும் வரலாறு காணாத வெற்றியை ஈட்டின.

ஐக்கிய தேசியக் கட்சி 140 ஆசனங்களைக் கைப்பற்றியதன் மூலம் நாடாளுமன்றத்தில் 5/6 பெரும்பான்மையைப் பெற்றது. அதேவேளையில் வடக்குக் கிழக்கில் தமிழர் விடுதலைக் கூட்டணி 18 ஆசனங்களைக் கைப்பற்றியது. 1970ம் ஆண்டு தேர்தலில் 2/3 க்கு அதிகமான பெரும்பான்மையைப் பெற்றிருந்த ஐக்கிய முன்னணிக்குத் தலைமை தாங்கிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, எட்டு ஆசனங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது. இடதுசாரி ஐக்கிய முன்னணி என்ற பெயரில் போட்டியிட்ட சமசமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, மக்கள் ஐக்கிய முன்னணி என்பன ஒரு ஆசனத்தைக் கூடப் பெறமுடியாமல் படுதோல்வியடைந்தன. சேவல் சின்னத்தில் போட்டியிட்ட இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் தொண்டமான் வெற்றிபெற்று ஒரு ஆசனம் பெற்றார். அவரது கட்சியில் கொழும்பில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஆதரவுடன் செல்லச்சாமி போட்யிட்டபோதிலும் சில வாக்குகளால் தோல்வியடைந்தார்.

ஐக்கிய முன்னணி அரசில் பலம் வாய்ந்த அமைச்சர்களாக விளங்கிய பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க, ஹெக்டர் கொப்பேகடுவ, ரி.பி.இலங்கரத்தின, பதியுதீன் மஹ்மூத் போன்றவர்கள் தங்கள் சொந்தத் தொகுதிகளிலேயே கூட வெற்றி பெறமுடியவில்லை.

வடக்கில் கிழக்கில் தமிழர் விடுதலைக் கூட்டணி அமோக வெற்றி பெற்றிருந்தாலும் தமிழீழக் கோரிக்கை அலை பலமாக எழுச்சியுற்றிருந்த நிலையில் வடக்கில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளர்கள் கணிசமான வாக்குகளைப் பெற்றிருந்தனர். விவசாயிகளைப் பெரும்பான்மையாகக் கொண்ட கோப்பாயிலும் ஸ்ரீலங்கா சு.கட்சிக்கு 3,000 வாக்குகள் கிடைத்தன. இவ்வாறே வினோதனும், கே.ரி.ராஜசிங்கமும் 2,000க்கு அதிகமான வாக்குகளைப் பெற்றிருந்தனர்.

எப்படியிருந்த போதிலும் நாடாளுமன்றத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி இரண்டாவது பெரும்பான்மையைப் பெற்றிருந்த நிலையில் அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவரானார். இளைஞர் குழுக்கள் அதைக் கடுமையாக எதிர்த்த போதிலும் அமிர்தலிங்கம் தமிழீழக் கோரிக்கையைத் தேசிய அளவிலும் சர்வதேச மட்டத்திலும் பிரசாரம் செய்யும் மேடையாக நாடாளுமன்றத்தைப் பாவிக்கப் போவதாகக் கூறி இளைஞர்களைச் சமாதானப்படுத்தினார்.

அதேவேளையில் 1977ல் வரலாறு காணாத வெற்றியைப் பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் தங்கள் வெற்றியை வன்முறை வெறியாட்டம் மூலம் கொண்டாடத் தொடங்கினர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, சமசமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் ஆதரவாளர்கள் தேடித் தேடித் தாக்கப்பட்டனர். கண்டி, கேகாலை, கம்பஹா மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் தாக்கப்பட்டதுடன் சொத்துக்களும் சூறையாடப்பட்டன. சில முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் இல்லங்களை விட்டு வெளியேறி வேறு பாதுகாப்பான இடங்களில் தங்க வேண்டிய நிலையும் எழுந்தது.

இவ்வாறு நாடு முழுவதும் கட்டற்ற வகையில் வன்முறைகள் பரவியபோது அவசரகாலச் சட்டத்தைப் பிறப்பிக்கும்படி பல தரப்பினராலும் கோரிக்கை முன்வைக்கப்பட்டபோது தான் ஸ்ரீமாவை போல் அவசரகால நிலைமையின் கீழ் ஆட்சி செய்யப் போவதில்லை எனக் கூறி ஜே.ஆர். மறுத்துவிட்டார். இரு வாரங்கள் கடந்த நிலையில் சில மாவட்டங்களில் மட்டும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது. ஆனால் ஊரடங்கு வேளையிலேயே பொலிஸார் முன்னிலையிலேயே வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டன.

அதேவேளையில் வடக்கிலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. வடக்கின் ஏனைய பகுதிகளில் சிறுசிறு சம்பவங்கள் இடம்பெற்ற போதிலும் கிளிநொச்சியில் தாக்குதல்கள் மோசமாக இடம்பெற்றன. ஒரு மரண விசாரணை அதிகாரி, ஒரு பாடசாலை அதிபர் ஆகியோர் பரந்தன் சந்தியில் வைத்து ஆடைகள் உரியப்பட்டு அவமானப்படுத்தப்பட்டுத் தாக்கப்பட்டனர். கிளிநொச்சி, பரந்தன் பகுதிகளிலேயே வன்முறைகள் இடம்பெற்றனவேயொழிய கிராமங்களுக்குப் பரவவில்லை. ஆனால் கிளிநொச்சியில் குமாரசூரியரால் அமைக்கப்பட்ட நகர சபைக் கட்டிடம், நகர மண்டபம், சந்தை என்பன கூரைகள் புத்தவிகாரை போல் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டு இடிக்கப்பட்டன. இதில் கவனிக்க வேண்டிய விடயம் அதில் ஈடுபட்ட நபர்கள் அவற்றின் கூரைத் தகடுகள், ஓடுகள், கட்டிடக் கற்கள் என அனைத்தையும் தங்கள் சொந்த வீடுகளுக்குக் கொண்டு போய் சேர்த்தனர்.

இந்நடவடிக்கைகள் இளைஞர் குழுக்களின் பேரால் மேற்கொள்ளப்பட்டபோதும் இவற்றில் ஈடுபட்டவர்களுக்கும் போராளி குழுக்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இருக்கவில்லை. இதில் ஈடுபட்டவர்கள் ஊர்ச் சண்டியர்களும் காடையர் கூட்டமுமேயாகும். தமிழர் விடுதலைக் கூட்டணியின் அடியாட்களுமேயாகும்.

இவ்வாறு வடக்கிலும் தெற்கிலும் தேர்தலில் தோற்றுப்போன கட்சிகளின் ஆதரவாளர்கள் மீது வன்முறைகள் தொடர்ந்த நிலையில், தெற்கில் எதிர்க்கட்சியினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நடவடிக்கைகள் ஒரு மாத காலத்திற்குள் தமிழர்கள் மீது திசை திருப்பப்பட்டன.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ரொட்டறி கழகத்தின் களியாட்டு விழாவில் சிவிலுடையுடன் வந்த சில பொலிஸார் அனுமதிச் சீட்டின்றி உள்நுழைய முயன்றபோது வாசலில் கடமையில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் உள்ளே செல்லவிடாமல் தடுத்தபோது அவர்களின் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டது. அதன் காரணமாக அங்கு நின்ற சில இளைஞர்கள் சிவில் உடையினரைத் திருப்பித் தாக்கி விரட்டினர். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாகப் பொலிஸார் வீதியால் சென்ற பொது மக்கள் மேல் தாக்குதல்களை நடத்தினர். அப்போது அப்பாதையால் வந்த இரு இளைஞர்கள் வழி மறித்துத் தாக்கப்படவே அவர்கள் பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டுத் தப்பி விடுகின்றனர்.

அடுத்த நாள் காலையில் ஆஸ்பத்திரி வீதியில் வந்திறங்கிய பொலிஸார் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததுடன் கடைகளையும் தீக்கிரையாக்கினர். மேலும் சந்தைக்குள் புகுந்து கடைகளைத் தீயிட்டு எரித்தனர். இதில் பொது மக்கள் 6 பேர் கொல்லப்பட்டதுடன் 30 பேருக்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். இவற்றைத் தடுத்து நிறுத்துமுகமாக அங்கு வந்த எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கத்தை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் முன்னிலையில் ஒரு பொலிஸ்காரன் தாக்கினான்.

இது தொடர்பாக அமிர்தலிங்கம் கண்டித்து உரையாற்றியபோது அதற்குப் பதிலளிக்கும் வகையில் போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம் என ஜே.ஆர்.ஜயவர்த்தன சவால் விட்டார். அதுவரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் மீது தாக்குதல்களை நடத்திய ஐ.தே.கட்சிக் காடையர்களுக்கு இந்தச் சவால் புதிய உற்சாகத்தைக் கொடுக்கவே அவர்கள் தங்கள் வன்முறைகளை தமிழ் மக்கள் மீது திருப்பினர்.

ஒரு ஜனநாயக நாட்டில் பிரதமருக்குரிய அத்தனை வரப்பிரசாதங்களும் கௌரவமும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் உண்டு. ஆனால் ஜே.ஆரின் ஜனநாயகத்தில் ஒரு சாதாரண பொலிஸ்காரன் நடுவீதியில் வைத்து உயர் பொலிஸ் அதிகாரி முன்னிலையில் எதிர்க்கட்சித் தலைவரை தாக்க முடிந்தது மட்டுமின்றி அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, அவர்களை நியாயப்படுத்தும் முகமாக ஜே.ஆர்.நாடாளுமன்றத்தில் சவால் விட்டார். ஸ்ரீமாவோ கொடுங்கோன்மை ஆட்சியை வீழ்த்தி ஜனநாயக ஆட்சியைக் கொண்டு வரப்போவதாகச் சொல்லியே ஜே.ஆர்.மக்களிடம் ஆணை கோரினார். அதேபோன்று அமிர்தலிங்கமும் மீண்டும் ஜனநாயகத்தைக் கொண்டுவர அவர்களுக்கு ஆதரவளிப்பதாக தேர்தல் காலத்தில் ஜே.ஆர்.ஜயவர்த்தனவுக்கு வாக்களித்திருந்தார்.

இருவரும் கொண்டு வந்த ஜனநாயகம் எதிர்க்கட்சித் தலைவரை வீதியில் வைத்து ஒரு பொலிஸ்காரன் தாக்குமளவுக்கும் ஒரு நாட்டின் பிரதமர் ஒரு இனத்தை நோக்கிப் போர்ச் சவால் விடுமளவுக்கும் தலைகீழான அர்த்தத்தைக் கொண்டிருந்தது.

இச்சம்பவத்தையடுத்து அமிர்தலிங்கம் பாராளுமன்றத்தில் தெளிவான ஒரு உரையை ஆற்றிவிட்டு பதவியை இராஜிநாமா செய்திருந்தால் அது தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் சில தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கும். ஜே.ஆர். ஜனநாயகத்தின் போலித் தன்மை அம்பலப்பட்டிருக்கும்.

ஜீ.ஜீ.பொன்னம்பலம், எஸ்.ஜே.வி செல்வநாயகம், மு.திருச்செல்வம் முதலிய தமிழ் தலைவர்கள் ஐம்பதுக்கு ஐம்பது, சம அந்தஸ்து, சமஷ்டி, மாவட்ட சபை, தமிழ், இந்து பல்கலைக்கழகங்கள் எனக் காலத்துக்குக் காலம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினாலும் கூட கடைசியில் எதுவும் நிறைவேறாவிட்டாலும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணங்கிப் போய்விடுவார்கள் என்பதை ஜே.ஆர்.அனுபவபூர்வமாக அறிந்திருந்தார். ஆனால் வடக்கில் ஆயுதக் குழுக்கள் வலுப்பெற்றுவரும் நிலையில் அமிர்தலிங்கத்தை முன்னைய தலைவர்களைப் போன்று இணங்கிப் போக வைப்பது சிரமம் என்பதை அவர் உணர்ந்து வைத்திருந்ததால் சிங்களப் பகுதிகளில் வாழும் தமிழர்களுக்கும் பேரழிவை ஏற்படுத்துவதன் மூலம் தமிழர் தரப்பை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கிக் கட்டுப்படுத்த எண்ணினார்.

அதன் காரணமாகவே வடக்கில் இடம்பெற்ற ஆயுத நடவடிக்கைகளுடன் எவ்வித தொடர்புமற்ற தென்னிலங்கை வாழ் அப்பாவித் தமிழர்கள் மீது அவர் போர்ப் பிரகடனம் செய்தார்.

1958ல் இனக் கலவரத்தைத் தூண்டி பண்டா – செல்வா ஒப்பந்தத்தை கிழிக்க வைத்த பெருமை அவருக்கு உண்டு.

கொழும்பில் இருந்த வர்த்தகர்கள், அரச ஊழியர்கள், கொழும்பை நிரந்தர வசிப்பிடமாகக் கொண்ட தமிழர்கள் என அனைவரும் தாக்கப்பட்டதுடன் அவர்களின் வீடுகள், தொழில் நிலையங்கள் கொள்ளையிடப்பட்டு எரிக்கப்பட்டன. உயிர் கொலைகள், பாலியல் வல்லுறவுகள் என்பனவும் கட்டின்றி இடம்பெற்றன. ஆயிரக்கணக்கான தமிழர்கள் அகதி முகாம்களில் அடைக்கலம் புகுந்தனர்.

இக்கலவரங்கள் சிங்களப் பகுதியெங்கும் பரவின.

அகதி முகாம்களில் தங்கியிருந்த தமிழர்கள் கப்பல்கள் மூலம் வடபகுதிக்கு அனுப்பப்பட்டனர்.

இக்கலவரம் மலையகத்தையும் விட்டு வைக்கவில்லை. பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் தோட்டங்களை விட்டு அழிவுகளுடன் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் வெளியேறி வவுனியாவிலும் திருகோணமலையிலும் அகதிகளாகத் தஞ்சமடைந்தனர்.

நிலைமை மோசமடைந்த நிலையில் ஜே.ஆர். அவசரகால நிலைமையைப் பிரகடனப்படுத்தினார். அதன் பின்பு அவர் ஆற்றிய வானொலி உரையில் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்ட பேரழிவுகளுக்காக வருத்தம் தெரிவிக்கவில்லை. அதற்குப் பதிலாக அவரின் உரை தமிழர்களை எச்சரிக்கும் வகையில் அமைந்திருந்தது. ஜே.ஆர்.ஜயவர்த்தன தனது ஜனநாயகம் எப்படிப்பட்டது என்பதைத் தெளிவுபடுத்தியதுடன், இந்த இன அழிப்பு நடவடிக்கைகளின் மூலம் தான் கட்டவிழ்த்து விடவுள்ள அரச பயங்கரவாதத்துக்கான முன்னறிவித்தலாக அவற்றை நடத்தினார் என்றே கருதவேண்டியுள்ளது.

தொடரும்.....

அருவி இணையத்திற்காக நா.யோகேந்திரநாதன்


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE