Wednesday 8th of May 2024 04:20:16 PM GMT

LANGUAGE - TAMIL
.
எங்கே தொடங்கியது இன மோதல் - 66 (வரலாற்றுத் தொடர்)

எங்கே தொடங்கியது இன மோதல் - 66 (வரலாற்றுத் தொடர்)


ஏகாதிபத்திய எதிர்ப்பில் உருவான தமிழ் சிங்கள ஐக்கியம்! - நா.யோகேந்திரநாதன்!

'அரசியல் தளத்தில் நடத்தப்படும் போராட்டம் வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் முதல் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு நடத்தப்படும் போராட்டங்கள் வரை பல வடிவங்களைக் கொண்டுள்ளது. நாடாளுமன்றத்தைப் பயன்படுத்தி நடத்தப்படும் அமைதி வழிப்போராட்டம், அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான புரட்சிப் போராட்டம் ஆகிய இரு வழிமுறைகளும் இதில் கடைப்பிடிக்கப்படுகின்றன. பொருளாதாரப் போராட்டம் ஒரு குறிப்பிட்ட தொழிற்சாலையில் அல்லது குறிப்பிட்ட சில தொழிலாளர்களால் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் அரசியல் போராட்டத்தில் தொழிலாளர்களும் முதலாளிகளும் வர்க்கங்கள் என்ற வகையில் ஒருவரையொருவர் எதிர்த்து அணி வகுக்கின்றனர். பொருளாதாரப் போராட்டம் சொந்த நலன்களை அடிப்படையாகக் கொண்டது என்றால் அரசியல் போராட்டம் பொதுவான வர்க்க நலன்களை அடிப்படையாகக் கொண்டு இடம் பெறுகிறது. பொருளாதாரப் போராட்டம் தொழிலாளர்களுக்குத் தேவையான தலைமையைத் தொழிற்சங்க வடிவில் வழங்குகிறது. அரசியல் போராட்டமோ ஒரு அரசியல் கட்சி வடிவில் உழைக்கும் மக்களின் உயர்ந்த அரசியல் நிறுவனத்தின் மூலம் தலைமை வழங்குகிறது'.

உழைக்கும் மக்களின் விடுதலைக்கான விஞ்ஞான பூர்வமான மாக்சிஷக் கோட்பாடுகளை உலகின் முன் வைத்த கார்ல் மாக்ஸ் - ஏங்கல்ஸ் ஆகியோரால் உலகத் தொழிலாளர்கள், விவசாயிகள் தம்மேல் மேற்கொள்ளப்படும் பொருளாதாரச் சுரண்டலுக்கு எதிரான போராட்டங்கள் அரசியல் வடிவம் எடுக்கும்போது அவை எவ்வாறு ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டங்களாக விரிவடைகின்றன என்பதை விளக்கி வெளியிடப்பட்ட கருத்துகளாகும்.

இலங்கையிலும் 1977ல் ஆட்சிப் பீடமேறிய ஏகாதிபத்திய சார்பு மக்கள் விரோத ஆட்சியின் ஏகபோக முதலாளித்துவத்தை நாட்டில் நிலைப்படுத்தும் வகையிலும் தேசிய தன்னிறைவுப் பொருளாதாரத்தை நோக்கிய பயணத்தைச் சீர்குலைக்கவும் மேற்கொண்ட முயற்சிகள் சிங்களத் தொழிலாளர்கள், விவசாயிகள் மத்தியில் எதிர்ப்பலைகளை உருவாக்கின.

ஜே.ஆர்.ஜயவர்த்தனவின் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சி எவ்வாறு வடக்குக் கிழக்கு விவசாயிகள் தொழிலாளர்கள் மீது தொடுத்த பொருளாதாரப் போர் காரணமாகத் தமிழ் மக்களின் விவசாயம், கைத்தொழில், சிறுகைத்தொழில் என்பன கடுமையான பாதிப்புக்குள்ளாகினவோ அவ்வாறே அவர்களின் கொள்கைகள் தென்னிலங்கை வாழ் தொழிலாளி, விவசாயிகளையும் பாதிப்புக்குள்ளாக்கின.

வெளிநாட்டுக் கைத்தொழில் நிறுவனங்களின் இராட்சத மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்ய விவசாய அபிவிருத்தி என்ற பேரில் ஆறுகள் திசை திருப்பப்பட்டு விக்டோரியா, ரன்தெனிக்கல, மாதுறு ஓயா போன்ற பெரும் அணைகள் கட்டப்பட்டன. இவற்றின் மூலம் பாரம்பரிய விவசாய நிலங்களின் உற்பத்தி நலிவடைந்தது. புதிய சிங்களக் குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டன. மாதுறு ஓயாவில் பாரம்பரிய மேய்ச்சல் தரவைகள் குடியேற்றத் திட்டங்களாக்கப்பட கிழக்கின் கால்நடை வளம் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியது. உரப் பசளைக்கு வழங்கப்பட்ட மானியம் நிறுத்தப்பட்டதால் விவசாயிகள் மேலும் நெருக்கடிகளுக்குள்ளாயினர். அரிசி, நெல்லு வர்த்தகம் தனியார் மயமாக்கப்பட்ட நிலையில் நெல்லுக்கான உரிய விலையை விவசாயிகளால் பெற்றுக்கொள்ளமுடியவில்லை.

அதேவேளையில் இறக்குமதி செய்யப்பட்ட ஆடம்பரப் பொருட்கள் சந்தையில் குவிந்த போதிலும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் வானளாவ உயர்ந்தன. நகர்ப்புறத் தொழிலாளர்களும் நடுத்தர மக்களும் வாழ்க்கைச் செலவு உயர்வினால் பெரிதும் பாதிக்கப்பட்டனர். கோதுமை மா, பாண், சீனி என்பவற்றின் விலைகள் இரண்டு மூன்று மடங்குகளால் அதிகரித்தன. இன்னொருபுறம் போக்குவரத்துச் செலவு, தபால் கட்டணம் என்பனவும் வேகமாக அதிகரித்தன.

இந்த நிலைமைகள் இலங்கை தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைமையில் கொழும்பு ஹைட் பார்க்கில் விலைவாசி உயர்வைக் கண்டித்தும், சம்பள உயர்வு கோரியும் ஒரு பெரும் தொழிற்சங்கங்களின் பேரணி 1979 டிசெம்பரில் இடம்பெற்றது. இதை அரசாங்கம் அலட்சியம் செய்த நிலையில் 1980 மார்ச் மாதத்தில் சுகததாச உள்ளரங்கில் இடம்பெற்ற தொழிற்சங்கக் கூட்டுக் கமிட்டியின் கூட்டத்தில் பொதுக் கோரிக்கைகள் உருவாக்கப்பட்டு முன் வைக்கப்பட்டன.

இந்த நிலையில் அரசாங்கம் சகல விதமான ஆர்ப்பாட்டங்களையும் தடை செய்து உடனடியாக அமுலுக்குக் கொண்டு வந்தது.

அந்த நிலையில் தொழில் நிலையங்களை முற்றுகையிட்டு முடக்கும் 'பிக்கெட்டிங்' போராட்டம் தொழிற்சங்கக் கூட்டுக் கமிட்டியால் முன்னெடுக்கப்பட்டது. அரச களஞ்சியத்தில் இடம்பெற்ற முடக்கல் போராட்டத்தின்போது பொலிஸாரால் சோமபால என்ற தொழிலாளி சுட்டுக்கொல்லப்படுகிறான். அத்தொழிலாளியின் மரண ஊர்வலத்தில் தடையை மீறி பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் உணர்வுபூர்வமாகக் கலந்து கொண்டனர்.

1980 ஜூலையில் தொழிலாளர்கள் பொது வேலை நிறுத்தத்தில் இறங்குகின்றனர். அரசாங்கம் அவசரகாலச் சட்டத்தைப் பிரகடனம் செய்து வேலை நிறுத்தத்தை தடை செய்த போதிலும் ஒருசில சங்கங்கள் பின் வாங்கினாலும் பெரும்பாலான தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்கின்றனர். அதன் காரணமாக ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அரச துறையிலும் தனியார் துறையிலும் பணி நீக்கம் செய்யப்படுகின்றனர்.

இதுவரை வாழ்க்கைச் செலவு, ஊதியம் என்பன தொடர்பாக இடம்பெற்ற போராட்டங்கள் தொழிற்சங்கங்களின் தலைமையிலேயே இடம்பெற்றன. அவை பயனளிக்காத நிலையில் அவை பொது நோக்கம் கொண்ட அரசியல் போராட்டமாக மாறவேண்டிய தேவை எழுந்தது. கார்ல் மாக்ஸ், வங்செல்ஸ் ஆகியோர் குறிப்பிட்டது போன்று போராட்டம் அரசியல் வடிவம் பெறும்போது அரசியல் தலைமையே தலைமை தாங்கி முன்னெடுத்துச் செல்லவேண்டிய தேவை எழுகிறது.

அந்த நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, சமசமாஜக் கட்சி, மக்கள் ஐக்கிய முன்னணி, சீன சார்பு கம்யூனிஸ்ட் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி என்பன ஒன்றிணைந்து 'ஐக்கிய தேசியக் கட்சி எதிர்ப்பு முன்னணி' என்றதொரு அமைப்பை உருவாக்குகின்றனர்.

இது ஏகபோக முதலாளித்துவ அதிகாரத்துக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிரான ஒரு வலுவான கூட்டணியாக எழுச்சி பெறுகிறது.

இம்முன்னணி கொழும்பு, திருகோணமலை, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் பிரமாண்டமான கூட்டங்களை நடத்தியதுடன் தென்னிலங்கையின் பல பகுதிகளிலும் கூட்டங்களையும் நடத்தியது.

வடக்கு, கிழக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட சகல கூட்டங்களிலும் திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க, என்.எம்.பெரேரா, கொல்வின் ஆர்.டி.சில்வா, என்.சண்முகதாசன், அமிர்தலிங்கம், எம்.சிவசிதம்பரம் ஆகியோர் பங்கு பற்றி உரையாற்றினர். இக்கூட்டங்களில் பெருந்தொகையான மக்கள் கலந்து கொண்டு ஆதரவை வழங்கினர்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க உரையாற்ற ஆரம்பித்தபோது சிலர் கூச்சலிட்டுக் குழப்ப முயன்றனர். ஆனால் இளைஞர்கள் உடனடியாகத் தலையிட்டுக் கூச்சலிட்டவர்களை அமைதிப்படுத்தினர். திருமதி ஸ்ரீமாவோ எவ்வித இடையூறுமின்றி உரையாற்றி முடித்தார். அவர் தனது உரையில் தான் இனப்பிரச்சினைக்கு நியாயபூர்வமான தீர்வு மேற்கொள்ள மனப்பூர்வமாக விரும்பியதாகவும் ஆனால் ஐ.தே.கட்சியினரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள்ளிருந்த இனவாதிகளாலும் தன்னால் அதை முன்னெடுக்க முடியாமல் போனதாகவும் அதற்காகத்தான் தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கேட்பதாகவும் தெரிவித்தார்.

ஏற்கனவே சிங்கள மேட்டுக்குடியினரைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஐ.தே.கட்சிக்கும் தமிழ் தலைமைகளுக்குமிடையே உள்ளார்ந்த ஒரு புரிந்துணர்வு நிலவியது. தமிழ் மக்கள் மீது சிங்கள மக்களுக்கும் சிங்கள மக்கள் மீது தமிழ் மக்களுக்கும் வெறுப்பையும் கசப்புணர்வையும் வளர்ப்பதில் இரு தரப்பினரும் லாவகமாகச் செயற்பட்டு வந்தனர்.

தமிழ் தேசியத்தின் பிரதிநிதியாகத் தமிழ் மக்களின் ஆணைபெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணியும் சிங்கள தேசிய சக்தியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், தொழிலாளர் அமைப்புகளைப் பிரதிநிதித்துவம் செய்யும் இடதுசாரிகளும் ஒன்றிணைந்தமை ஜே.ஆர்.ஜயவர்த்தனவுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் மூலம் தமிழ் இளைஞர்களிடம் எழும் எதிர்ப்பையும் ஸ்ரீமாவோவின் குடியுரிமையைப் பறிப்பதன் மூலம் சிங்கள மக்களின் எதிர்ப்பையும் மழுங்கடித்து விட முடியுமென எதிர்பார்த்த அவருக்கு இந்த ஐக்கியம் பெரும் அச்சுறுத்தலாகவே தென்பட்டது.

எப்படியும் இந்த ஐக்கியத்தைச் சிதைப்பதெனத் தீர்மானித்தார்.

ஏற்கனவே தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பொத்துவில் நாடாளுமன்ற உறுப்பினர் 1977ம் ஆண்டு டிசெம்பரில் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டார். அவர் 1978 ஒக்டோபர் மட்டக்களப்பு மாவட்ட அமைச்சராக நியமிக்கப்பட்டார். தமிழரசுக் கட்சி ஸ்தாபக உறுப்பினரில் ஒருவரும் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான செ.இராசதுரை 1979 மார்ச்சில் ஐ.தே.கட்சியில் இணைந்து இந்து கலாசார அமைச்சரானார். வட்டுக்கோட்டை மாநாட்டில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர்களில் ஒருவராகத் தெரிவு செய்யப்பட்ட எஸ்.தொண்டமான் அரசாங்கத்தில் இணைந்து 1978 செப்டெம்பரில் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சராகப் பதவியேற்றார்.

இத்தகைய பிளவுகளால் தமிழர் விடுதலைக் கூட்டணி பலவீனமடைந்து விடும் என்ற ஜே.ஆரின் எதிர்பார்ப்பும் பொய்த்துப் போய்விட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணியும் இளைஞர் குழுக்களும் மேலும் உத்வேகமடைந்தன.

எனவே தமிழர் விடுதலைக் கூட்டணியை 'ஐ.தேக.கட்சி' எதிர்ப்பு முன்னணியிலிருந்து உடைக்கும் தந்திரத்தை வகுத்தார்.

அவ்விடயத்தில் அவர் வைத்த முதல் கண்ணி மாவட்ட அமைச்சுப் பதவிகளில் மூன்றை அதாவது யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு அமைச்சுகளைத் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு வழங்கமுடியுமெனவும் அவர்கள் எதிர்க்கட்சியிலிருந்தே பதவி வகிக்க முடியுமெனவும் பேரம் பேசினார்.

1979 ஜூலை மாதம் ஆவரங்காலில் இடம்பெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணியின் மாநாட்டில் இளைஞர்களால் தமிழீழத் தேசியப் பேரவை அமைக்கப்படவேண்டுமெனவும் அதற்கான அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டுமெனவும் தீர்மானம் முன்வைக்கப்பட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணி தலைமையால் தேவையேற்படும்போது உரிய நேரத்தில் அது மேற்கொள்ளப்படுமென ஒரு திருத்தத்தை இணைத்து அது ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் மாவட்ட அமைச்சுப் பதவிகளை ஏற்றால் நாம் முற்றாகவே இளைஞர்களின் நம்பிக்கையை இழக்க வேண்டிரும் என்ற நிலையில் அவர்கள் மாவட்ட அமைச்சுப் பதவிகளை ஏற்க மறுத்துவிட்டனர்.

அது வெற்றிபெறாமல் போகவே ஜே.ஆர். 1980 ஆரம்பப் பகுதியில் மாவட்ட சபைத் தீர்மானத்தைக் கொண்டு நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றினார். சட்டவாக்க அதிகாரமோ, நிதி அதிகாரமோ நிறைவேற்று அதிகாரமோ இல்லாத மாவட்ட சபை தீர்மானங்களை நிறைவேற்றி அமைச்சருக்குச் சமர்ப்பிக்குமளவுக்கே அதிகாரத்தையே கொண்டிருந்தது. சாதாரண உள்ளுராட்சி மன்றத்தின் அதிகாரங்கள் கூட இல்லாத இந்த மாவட்ட சபைக்கு தமிழர் விடுதலைக் கூட்டணி தனது ஆதரவை வழங்கியது. ஏனைய எதிர்க்கட்சிகள் இதை எதிர்த்து வாக்களித்தனர்.

ஐக்கிய தேசியக் கட்சி எதிர்ப்பு முன்னணியில் இவ்விடயம் காரணமாக முரண்பாடுகள் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் ஏனைய கட்சிகளுக்குமிடையே உருவான நிலையில் ஜே,ஆர். அதைப் பயன்படுத்த எண்ணி தமிழர் விடுதலைக் கூட்டணியைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார்.

அத்துடன் ஐ.தே.க. எதிர்ப்பு முன்னணியின் ஆயுள் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. சிங்கள தேசிய சக்திகள், தமிழ்த் தேசிய சக்திகள், இடது சாரிகள் தலைமையில் உருவாகிய ஒரு முற்போக்கான ஆரோக்கியமான தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களின் ஐக்கியம் தமிழர் விடுதலைக் கூட்டணியின் புத்திபூர்வமற்ற நடவடிக்கையால் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

பேச்சுவார்த்தைகள் வருடக் கணக்கில் இழுத்தடிக்கப்பட்டு எவ்வித பயனுமின்றி முறிவடைந்தன.

அதேவேளையில் ஜே.ஆர். பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நிறைவேற்றுவதிலோ திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் குடியுரிமையை இல்லாமற் செய்வதிலோ எவ்வித தயக்கத்தையும் காட்டவில்லை.

தமிழர் விடுதலைக் கூட்டணி பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதைப் பேச்சுகள் ஆரம்பிப்பதற்கான ஒரு முக்கிய நிபந்தனையாக முன் வைக்கவுமில்லை, ஏற்கனவே மாவட்ட சபை மசோதாவுக்கு எதிர்ப்பை வெளியிட்ட இளைஞர் அமைப்புகள் பேச்சுவார்த்தையில் எள்ளளவு நம்பிக்கையும் வைக்கவில்லை. அப்படியான நிலையில் பேச்சுவார்த்தைக்கான நிபந்தனையாக 'பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கவேண்டும்' என்பதை த.வி.கூட்டணி முன் வைக்காமை இளைஞர் அணிகள் மத்தியில் மேலும் கோபத்தை ஏற்படுத்தியது.

தொடரும்.....

அருவி இணையத்திற்காக நா.யோகேந்திரநாதன்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE