Wednesday 8th of May 2024 07:19:38 AM GMT

LANGUAGE - TAMIL
.
எங்கே தொடங்கியது இன மோதல் - 75 (வரலாற்றுத் தொடர்) - நா.யோகேந்திரநாதன்!

எங்கே தொடங்கியது இன மோதல் - 75 (வரலாற்றுத் தொடர்) - நா.யோகேந்திரநாதன்!


தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி! - நா.யோகேந்திரநாதன்!

'மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தங்களுக்குத் தாங்களே நம்பிக்கையுள்ளவர்களாக நடந்து கொண்டால் போதாது. தேர்ந்தெடுத்த மக்களுக்கும் நம்பிக்கை உள்ளவர்களாகவும் நடந்து கொள்ளவேண்டும்'.

இது தமிழக முன்னாள் முதலமைச்சரும் பெரியார் ஈ.வே.ரா.வின் திராவிடக் கொள்கைகளைத் தமிழகமெங்கும் பரப்புவதிலும் சீர்திருத்தக் கருத்துகளைத் தீவிரமாக முன்னெடுத்தவரும் தனது மேடைப் பேச்சுகளாலும் எழுத்துகளாலும் தமிழகத்தில் மட்டுமின்றி தமிழர் வாழும் நாடுகளில் எல்லாம் மொழியுணர்வையும் இன உணர்வையும் கொழுந்துவிட்டெரிய வைத்ததில் பெரும் பணியாற்றியவரும் அறிஞர் அண்ணா என மக்களால் அன்புடன் அழைக்கப்பட்டவருமான சி.என்.அண்ணாத்துரை அவர்கள் வெளியிட்ட கருத்தாகும்.

இலங்கைத் தமிழ் அரசியலிலும் முதலில் தமிழ் காங்கிரசும் பின்பு தமிழரசுக் கட்சியும் அடுத்து தமிழர் விடுதலைக் கூட்டணியும் தமிழ் மக்களின் இன உணர்வைத் தட்டியெழுப்புவதிலும் தமிழ் மக்களுக்கெதிரான இன ஒடுக்குமுறைக்கெதிராக மக்களைக் கிளர்ந்தெழ வைப்பதிலும் காத்திரமான பங்கை வகித்தன. அதன் உச்ச கட்டமாக 1976ம் ஆண்டு இடம்பெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணியின் முதலாவது மாநாட்டில் 'தமிழீழக் கோரிக்கை' பிரகடனம் செய்யப்பட்டது.

1977ம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்கள் 95 வீதமான வாக்குகளை அதற்கு வழங்கி ஆணை கொடுத்தனர்.

தமிழர் விடுதலைக் கூட்டணி பெற்றுக்கொண்ட அமோக வெற்றி காரணமாக அதன் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் இலங்கை நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவரானார்.

1977 இனக் கலவரம், 1981ல் யாழ். நகரம் மற்றும் தமிழ் மக்களின் அரிய புலமைச் சொத்தான நூலகம் என்பன எரிக்கப்பட்டமை, அரச படைகளும் பொலிஸாரும் மேற்கொண்ட படுகொலைகள், கைது சித்திரவதை செய்து தடுத்து வைத்தல் போன்ற கொடிய இன அழிப்பு நடவடிக்கைகளை ஜே.ஆர்.ஜயவர்த்தன தலைமையிலான அரசாங்கம் மேற்கொண்ட போதிலும் தமிழர் விடுதலைக் கூட்டணியினர் அவர்களுடன் ஒரு நெகிழ்வுப் போக்கையே கைக்கொண்டனர். தமிழ் மக்கள் வழங்கிய ஆணையிலிருந்து விலகி மாவட்ட அபிவிருத்தி சபை மசோதாவுக்கு ஆதரவளித்தமையும் அதில் பங்கு கொண்டமையும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை எதிர்த்து வாக்களிக்காமல் வெளியேறியமையும் தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியுடன் பேணி வந்த சமரச உறவும் அவர்கள் மெல்ல மெல்ல தமிழ் மக்களின் நம்பிக்கையை இழக்கும் நிலையை ஏற்படுத்தியது.

இறுதியில் 1983ம் ஆண்டில் இடம்பெற்ற உள்ளுராட்சித் தேர்தலில் மக்கள் முற்றாகவே தமிழர் விடுதலைக் கூட்டணியை நிராகரித்ததன் மூலம் தாங்கள் அவர்கள் மீது முற்றாகவே நம்பிக்கையிழந்து விட்ட நிலையைப் பகிரங்கமாகப் பிரகடனம் செய்தனர்.

1982ம் ஆண்டு டிசெம்பர் 22ம் திகதி இடம்பெற்ற சர்வஜன வாக்கெடுப்பின்போது பாராளுமன்ற ஆயுள் நீடிப்புக்கு ஆதரவாக 54.6வீத வாக்குகள் கிடைத்தன. எதிர்க்கட்சியினரைச் சிறையிலடைத்தல், வன்முறைகள், தேர்தல் மோசடிகள் மூலம் அரசாங்கம் வெற்றி பெற்றுவிட்ட போதிலும் 48 தேர்தல் தொகுதிகளில் பாராளுமன்ற ஆயுள் நீடிப்பை எதிர்த்தே வாக்களிக்கப்பட்டிருந்தது. இது ஐ.தே.கட்சிக்குக் கிடைத்த ஒரு தோல்வியாகவே பார்க்கப்பட்டது. அதைப் பூசிமெழுக ஐக்கிய தேசியக் கட்சியில் உள்ள சிலரே தோல்விக்குக் காரணம் என்ற கருத்தை உருவாக்கும் விதத்தில் ஜே.ஆர். காய்களை நகர்த்த ஆரம்பித்தார்.

அவ்வகையில் சர்வஜன வாக்கெடுப்பில் குறைந்தளவு வாக்குகள் கிடைத்த தொகுதிகளையும் சேர்ந்த ஒரு அமைச்சர். 6 பிரதியமைச்சர்கள், 17 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியை விட்டு விலகும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர். ஏற்கனவே ஐ.தே.கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருமே திகதியிடப்படாத இராஜினாமாக் கடிதங்கள் ஒப்படைக்கப்பட்டிருந்தன. அவற்றில் தேவையானவற்றுக்கு ஜே.ஆர். திகதியிட்டு விட்டுத் தேர்தல் ஆணையாளரிடம் ஒப்படைத்தார்.

1978ம் ஆண்டின் அரசியலமைப்புச் சட்டப்படி அந்த வெற்றிடங்களுக்கு கட்சியின் செயலாளரே உறுப்பினர்களை நியமித்திருக்கமுடியும். ஜே.ஆர். அதை விரும்பவில்லை. நாடாளுமன்றத்தில் 5வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றி அதன் மூலம் இடைத்தேர்தல் ஒன்றை நடத்த முடிவு செய்தார்.

அதன்படி 15.05.1983 இடைத் தேர்தல் நடத்தப்படும் நாளாகத் தீர்மானிக்கப்பட்டது. அத்துடன் உள்ளுராட்சி மன்றங்களின் தேர்தல்களையும் நடத்த முடிவெடுக்கப்பட்டது.

அதேவேளையில் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் தமிழ் மக்கள் விரோத வன்முறைகளையும் ஒடுக்குமுறை நடவடிக்கைகளையும் இராணுவத்தினரின் கொடுமைகளையும் முன்வைத்து தங்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் வடக்குக் கிழக்கில் உள்ளுர் தேர்தல்களை முழுமையாகப் பகிஷ்கரிக்க வேண்டுமென்ற கருத்து வலுப்பெற்று வந்தது.

ஏற்கனவே 1982 நவம்பரில் கத்தோலிக்கக் குருமார்களான சிங்கராயர் அடிகள், சின்னராசா அடிகள் மற்றும் யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளரான நித்தியானந்தன் அவரது மனைவியான மருத்துவர் நிர்மலா ஆகியோர் பங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டனர். அவர்கள் தங்கள் சட்டத்தரணிகளைக் கூடச் சந்திக்க விடாமல் வெளியுலகுத் தொடர்பு எதுவமின்றிச் சிறை செய்யப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் 1983 ஜனவரி 20ம் திகதி மாணவர்கள், இளைஞர்கள், யுவதிகள் ஒன்றிணைந்து யாழ்ப்பாணத்தில் ஒரு மாபெரும் எழுச்சிப் பேரணியை பயங்கரவாதத் தடைச் சட்டத்தை எதிர்த்து மேற்கொண்டனர். இவர் போராட்டங்கள், யாழ்ப்பாணத்திலும் வடக்கின் பல பகுதிகளிலும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டன. பெப்ரவரி நாலாம் நாள் இலங்கையின் சுதந்திர தினத்தைப் பகிஷ்கரித்து 'ஹர்த்தால்' நடத்த முன்வரும்படி இளைஞர்களும் மாணவர்களும் அழைப்பு விடுத்தனர். அதன் பலனாக வடக்குக் கிழக்கில் வெற்றிகரமான ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.

இப்படியாகத் தமிழ் மக்கள் மத்தியில் கொந்தளிப்பான நிலை நிலவிய போதும் தமிழர் விடுதலைக் கூட்டணி, உள்ள10ராட்சி தேர்தல்களில் பங்கு கொள்வதென்ற முடிவை எடுத்தது. இளைஞர் அணிகளும், மாணவர் அமைப்புகளும் மட்டுமின்றி தமிழர் விடுதலைக் கூட்டணியின் இளைஞர் அமைப்பும் தங்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுத் தமிழ் மக்களிடம் தேர்தலைப் பகிஷ்கரிக்குமாறு கோரின. விடுதலைப் புலிகள் தேர்தலில் பங்கு கொள்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமெனக் கைகளால் எழுதப்பட்ட சுவரொட்டிகளை ஒட்டியிருந்தனர்.

இவ்வாறு தமிழ் மக்கள் தங்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டபோதிலும் தமிழர் விடுதலைக் கூட்டணியினரும் ஐக்கிய தேசியக் கட்சியினரும் உள்ளுராட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

1983 ஏப்ரல் 23ம் திகதியன்று ஐ.தே.கட்சியில் போட்டியிடவிருந்த வேட்பாளர்கள் பருத்தித்துறையில் கே.வி.இரட்ணசிங்கமும், சாவகச்சேரியில் எஸ்.எஸ்.முத்தையாவும் வல்வெட்டித்துறையில் எஸ்.எஸ்.இராசரத்தினமும் அடையாளம் தெரியாதவர்களால் சுட்டுக்கொல்லப்படுகின்றனர். அவர்கள் சுடப்பட்ட இடங்களில் தேர்தலைப் பகிஷ்கரிக்கும்படி விடுத்த அழைப்பை ஏற்றுக் கொள்ளாததால் சுடப்பட்டதாக அறிவித்தல்கள் காணப்பட்டன.

இச்சம்பவங்களின் பின்பு ஐ.தே.கட்சி, தமிழ்க் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் தாங்கள் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தனர்.

ஆனால் தமிழர் விடுதலைக் கூட்டணி இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டனர்.

நல்லூரில் இடம்பெற்ற த.வி.கூட்டணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உட்புகுந்த விடுதலைப் புலிகள் வானத்தை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் செய்து மக்களை கலைந்து போக வைத்தனர். பின்பு மேடையை நோக்கிச் சென்ற அவர்கள் அமிர்தலிங்கத்தையும் மேடையில் இருந்தவர்களையும் கடுமையாக எச்சரித்துவிட்டு அமிர்தலிங்கத்தின் வாகனத்தையும் கடத்திக்கொண்டு சென்றனர். அந்த வாகனத்தைக் கடுமையாகச் சேதப்படுத்திவிட்டு ஒரு மயானத்தில் விட்டுச் சென்றனர்.

ஒரு காலத்தில் விடுதலைப் புலிகளை ஊக்குவிப்பதில் அமிர்தலிங்கம் ஒருவராக இருந்தபோதிலும் 1977ன் பின்பு த.வி.கூட்டணியின் நடவடிக்கைகளுடன் அவர்கள் முரண்பட்டனர். ஆனால் விடுதலைப் புலிகள், த.வி.கூட்டணிக்கும், அமிர்தலிங்கத்துக்கும் எதிராக மேற்கொண்ட முதல் நேரடி நடவடிக்கை இதுவாகும்.

அதனையடுத்து த.வி.கூட்டணியின் ஒரு சில வேட்பாளர்கள் போட்டியிலிருந்து விலகிக் கொண்ட போதிலும் தமிழர் விடுதலைக் கூட்டணி தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து பின் வாங்கிவிடவில்லை.

அதேவேளையில் ஜே.ஆர்.ஜயவர்த்தன ஆயுதக் குழுக்களுக்கு ஒரு சவாலாகத் தேர்தலை நடத்தி முடிப்பது என்பதில் உறுதியாயிருந்தார். ஆயுதக் குழுக்கள் நிச்சயமாகத் தேர்தலைக் குழப்புவார்கள் என அவர் எதிர்பார்த்த காரணத்தால் அனுராதபுரம் இராணுவ முகாமிலிருந்து மேலதிகப் படையணிகளை அனுப்பி பாதுகாப்பை மிக உயர்ந்த கட்டத்துக்குக் கொண்டு போனார்.

தேர்தல் தினத்தன்று கந்தர்மடம் வாக்குச்சாவடி மீது விடுதலைப் புலிகள் கைக்குண்டை வீசிவிட்டுத் தொடர்ந்து மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் படையினன் ஒருவன் கொல்லப்பட்டதுடன் மூவர் படுகாயமடைந்தனர்.

அதையடுத்து அங்கு குவிக்கப்பட்ட இராணுவத்தினர் பழிவாங்கும் முகமாக வீடுகளை, வாகனங்களை, வர்த்தக நிலையங்களைச் சேதப்படுத்தி வெறியாட்டம் போட்டனர். இதில் பொது மக்களில் ஒருவர் கொல்லப்பட்டார்.

வடக்குக் கிழக்கிலுள்ள வாக்குச்சாவடிகள் அனைத்தும் வெறிச்சோடிப் போய்க் கிடந்தன.

அதேநாளில் வடக்குக் கிழக்குத் தவிர்ந்த ஏனைய சிங்களப் பகுதிகளில் இடைத் தேர்தல் இடம்பெற்ற 18 தொகுதிகளில் 14 தொகுதிகளில் ஐ.தே.கட்சியினரும் 3 தொகுதிகளில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரும் ஒரு தொகுதியில் மக்கள் ஐக்கிய முன்னணியும் வெற்றி பெற்றனர். தற்போதைய அமைச்சர் தினேஷ் குணவர்த்தன முதல் முதலில் இத் தேர்தலில்தான் நாடாளுமன்றம் புகுந்தார்.

இத்தேர்தலில் தமிழ் மக்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியை நிராகரித்து விட்டமையை வடபகுதி உள்ளுராட்சி தேர்தல்கள் வெளிப்படுத்தியிருந்தன. மொத்த வாக்களார்களின் 91 வீதமானவர்கள் தேர்தலைப் பகிஷ்கரித்தனர். யாழ்ப்பாணத்தில் 5 வீதமானோரும் சாவகச்சேரியில் 2 வீதமும் வல்வெட்டித்துறையில் 2 வீதமுமாக மக்கள் 9 வீதமானவர்களே வாக்களித்திருந்தனர். தொடர்ந்தும் தமிழர் விடுதலைக் கூட்டணி உணர்ச்சிவசமான மேடைப் பேச்சுகளால் மக்களை ஏமாற்ற முடியாது என்ற செய்தி வெளிப்படுத்தப்பட்டது.

அதன் பிறகு தமிழர் விடுதலைக் கூட்டணி எந்த ஒரு தேர்தலிலும் பங்கு கொள்ளவில்லை என்பது முக்கிய விடயமாகும்.

தமிழ் மக்களின் அரசியல் தலைமை தமிழர் விடுதலைக் கூட்டணியிடமிருந்து ஆயுதப் போராளிகள் கைகளுக்கு மாறிவிட்டதென்பதை இத்தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்திவிட்டன.

தொடரும்....

அருவி இணையத்துக்காக நா.யோகேந்திரநாதன்.


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE