Friday 26th of April 2024 02:06:42 AM GMT

LANGUAGE - TAMIL
.
இந்தியாவை விட்டு கைநழுவும் இலங்கையின் இனப்பிரச்சினை! - நா.யோகேந்திரநாதன்!

இந்தியாவை விட்டு கைநழுவும் இலங்கையின் இனப்பிரச்சினை! - நா.யோகேந்திரநாதன்!


அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அமெரிக்காவின் அழைப்பை ஏற்று இனப் பிரச்சினை தொடர்பான பேச்சுகளை நடத்த அமெரிக்கா சென்றுள்ளனர். இனப்பிரச்சினை தொடர்பாகப் பேச்சுகள் நடத்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் நேரடியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அழைத்தமை பலருக்கு ஆச்சரியத்தை மூட்டியிருக்கலாம். ஆனால் அண்மைக் காலங்களில் அமெரிக்கா உட்பட மேற்குலகின் இனப்பிரச்சினை தொடர்பான நகர்வுகள் இந்தியாவைத் தவிர்த்தே இடம்பெற்று வந்ததை அவதானிக்க முடியும். கடந்த இரு மாதங்களில் அரசாங்கத்துடன் பேச்சுகளை நடத்த வந்த அமெரிக்க ராஜாங்கப் பிரதிநிதிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரையும் சந்தித்து உரையாடியிருந்தனர்.

இலங்கையில் அமெரிக்கா வலுவூன்றுவதற்கான தயாரிப்புகள் இடம்பெற்றுவரும் நிலையில் அமெரிக்கா தமிழர் தரப்புடன் தொடர்புகளைப் பேணுவது அந்தத் தயாரிப்புகளில் ஒரு பகுதியா எனவும் சில தரப்பினர் கருதக்கூடும்.

அதேவேளையில் இலங்கைக்கான சீனத் தூதுவர் வெகு விரைவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைச் சந்தித்துப் பேச்சுகளை நடத்தவுள்ளதாகத் தென்னிலங்கையிலிருந்து வெளிவரும் சிங்கள ஊடகங்கள் தலைப்புச் செய்திகளை வெளியிட்டுள்ளன.

இச்செய்திகளைப் பார்க்கும்போது பூகோள, பிராந்திய வல்லாதிக்கப் போட்டிகளில் மீண்டும் இலங்கையின் இனப்பிரச்சினை பகடைக்காயாக உருட்டப்படப் போகிறதா என்ற கேள்வி எழத்தான் செய்கிறது.

அண்மையில் சீனாவிலிருந்து இலங்கைக்கெனக் கொண்டு வரப்பட்ட சேதனப் பசளையில் தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகள் இருப்பதாகக் கூறப்பட்டு அது நிராகரிக்கப்பட்டது. ஏற்கனவே இலங்கை மக்கள் வங்கியுடன் கடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு அதன் அடிப்படையிலேயே சீனப் பசளை கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில் திறைசேரி மக்கள் வங்கியின் கொடுப்பனவை நிறுத்தியிருந்தது. எனவே சீனா உடனடியாக மக்கள் வங்கியை சீனாவின் வர்த்தகக் கறுப்புப் பட்டியலில் இணைத்துவிட்டது. மேலும் பசளைக்கு இறக்குமதி தடை அறிவிக்கப்பட்டதையடுத்து மேற்படி சீனக் கப்பல் திரும்பிச் சென்று பெயர் மாற்றி மீண்டும் வந்து இலங்கைக் கடற்பரப்பிலேயே தரித்து நிற்கிறது.

அதேவேளையில் இங்கு பசளையை அனுப்பிய சீன வர்த்தக நிறுவனம் பசளை திருப்பி அனுப்பப்படுமானால் போக்குவரத்துக் கட்டணமாகவும் தாமதக் கட்டணமாகவும் 8 பில்லியன் டொலர் செலுத்தவேண்டுமெனத் தெரிவித்துள்ளது. இலங்கை எரிபொருள், சமையல் எரிவாயு, சீனி, பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்யவே அந்நியச் செலாவணி தட்டுப்பாட்டில் தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில் 8 பில்லியன் டொலர் என்பது இலங்கையைப் பொறுத்தவரையில் சுலமாகச் செலுத்தக் கூடிய தொகையல்ல.

எனினும் சீனத் தூதுவர் பசளையின் தரம் பற்றி மூன்றாம் தரப்பு மூலம் ஆய்வு செய்ய சம்மதித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் விவசாய அமைச்சின் செயலாளர், விவசாயப் பணிப்பாளர் ஆகியோர் சீனப் பசளையை மூன்றாம் தரப்பால் ஆய்வு செய்யப்படுவதை தாங்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லையெனத் தெரிவித்துள்ளார்.

சீனத் தூதுவர் இதைச் சிலர் அரசியல் பிரச்சினையாக்குகிறார்களெனவும் இது வர்த்தகம் தொடர்பான பிரச்சினை மட்டுமே எனத் தெரிவித்துள்ளார். ஆனால் சீனப் பசளை நிறுத்தப்பட்டதும், உடனடியாக இந்தியாவிலிருந்து மொனோ நைட்றஜன் உரம் இறக்குமதி செய்யப்பட்டதும் அரசியல் உள்நோக்கம் இல்லாதவை என்று சொல்லி விடமுடியுமா?

எது எப்படியிருந்த போதிலும் நீண்டகாலமாக நெருக்கமான உறவைப் பேணி வந்த சீனாவுக்கும், இலங்கைக்குமிடையே ஒரு கோடு விழுந்து விட்டது என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.

முன்னாள் அமெரிக்கப் பிரஜையான கோத்தபாய ராஜபக்ஷ்வை ஜனாதிபதியாகவும் அமெரிக்கப் பிரஜையான பசில் ராஜபக்ஷ்வை நிதியமைச்சராகவும் கொண்ட இலங்கை அரசு மெல்ல மெல்ல அமெரிக்கா பக்கம் சாயும் போக்கை அவதானி்க்க முடியும். இந்த இருவரினதும் குடும்பங்கள் அமெரிக்கப் பிரஜைகள் என்பதும் அவர்கள் அமெரிக்காவிலேயே நிரந்தரமாகக் குடியிருந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

“யுகனெவிய” திட்டம் மூலம் கெரவலப்பிட்டிய மின் நிலையத்தின் 40 வீதப் பங்குகளை வழங்குவது, இலங்கையின் எரிபொருள் விநியோக உரிமையை வழங்குவது, திருகோணமலை எண்ணெய் குதங்களை வழங்குவது போன்ற நடவடிக்கைகளால் அமெரிக்கா இலங்கையில் வலுவாகக் காலூன்றுவதற்கான அடித்தளம் உருவாக்கப்பட்டு விட்டது. அது மட்டுமின்றி 2022 வரவு செலவுத்திட்டம் மேற்கு நாடுகளையும் சர்வதேசக் கடன் வழங்கும் நிறுவனங்களையும் திருப்திப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தனியார் முதலீடுகளை ஊக்குவித்தல், அரச செலவினங்களைக் குறைத்தல் என்ற பேரில் மக்கள் விரோத நடவடிக்கைகள் பல முன்னெடுக்கப்படவுள்ளன. கொழும்பின் பல முக்கிய பகுதிகள் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு 1220 கோடி ரூபாவுக்குக் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. அரச செலவினங்களைப் குறைப்பது என்ற பேரில் அரச ஊழியர்களின் வேதனம் உயர்த்தப்படவில்லை என்பதுடன் ஓய்வூதிய வயதெல்லையும் 10 வருடங்களால் அதிகரிக்கப்படவுள்ளது. அதனால் ஓய்வூதியர்கள் பெறும் சலுகைகள் 10 வருடங்கள் பின்தள்ளப்படுவதுடன் 10 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்படுகின்றன. பாவனைப் பொருட்களின் கட்டுப்பாட்டு விலைகள் நீக்கப்பட்டதால் இறக்குதியாளர்களும் பெரும் வர்த்தக முதலைகளும் கொள்ளை இலாபம் ஈட்டும் நிலையில் சகல சுமைகளும் பொது மக்கள் தலையிலேயே சுமத்தப்படுகின்றன.

இவை ஒரு சில உதாரணங்கள் மட்டுமே. ஆனால் ஒட்டு மொத்தத்தில் இலங்கையின் பொருளாதார வழிமுறை மேற்கு நாடுகளைத் திருப்திப்படுத்தும் வகையிலே அமைந்துள்ளது.

சீனாவின் பட்டுப்பாதைதை் திட்டத்தில் ஒரு முக்கியமான இலங்கையின் இந்தப் போக்கை சீனா விரும்பப்போவதில்லை. இதைக் கட்டுப்படுத்த சீனா பல்வேறு பொருளாதார, ராஜதந்திர வழிமுறைளை மேற்கொள்ளத் தவறப் போவதில்லை.

அவ்வகையில் சீனா இலங்கை இனப்பிரச்சினை விவகாரம் தொடர்பாக பார்வையைத் திருப்பியிருப்பது ஆச்சரியப்படக்கூடிய விடயமல்ல.

ஏனெனில் கடந்த காலங்களில் இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா என்பன இலங்கையைக் கையாள்வதில் இனப்பிரச்சினையை ஒரு ஆயுதமாகப் பாவித்தன என்பதை மறுக்கமுடியாது.

தற்சமயம் இந்த நிலை கடந்து விட்டது போலவே தென்படுகிறது. இதுவரை மேற்குலகம் இந்தியாவை அனுசரித்தே இலங்கை இனப்பிரச்சினையைக் கையாண்டு வந்தது. இப்போது நேரடியாகவே அமெரிக்கா களமிறங்கிவிட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அமெரிக்கா செல்லவுள்ள நிலையில் சீனாவின் அழைப்பு பற்றிய செய்திகள் வெளி வந்துள்ளன.

எனவே இப்போது இலங்கை இனப்பிரச்சினையில் அமெரிக்கா, சீனா என எதிரெதிரான தரப்புகள் தலையிடும் சாத்தியம் தோன்றியுள்ளது.

இந்த நிலையில் தமிழ்த் தேசியத் தரப்பினர் இனியும் பழைய பாதையில் மற்றவர்களுக்குப் பயன்படுபவர்களாகச் செயற்படப் போகிறார்களா? ஆனால் தமிழ்த் தேசியக் கட்சிகளிடமுள்ள பாரம்பரிய சீன எதிர்ப்புணர்வு, மேற்குலக பக்தி என்பவற்றைக் களைந்து ஒரு ஒடுக்கப்பட்ட இனமென்ற அடிப்படையில் அரசியல் ரீதியாகவும் தந்திரோபாய வழிமுறைகளூடாகவும் செயற்படுவது ஒன்றே எம் முன்னால் உள்ள விமோசனத்திற்கான ஒரே பாதையாகும்.

அருவி இணையத்துக்காக :- நா.யோகேந்திரநாதன்.

23.11.2021


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: சீனா, இந்தியா, இலங்கை, அமெரிக்கா, கிழக்கு மாகாணம், வட மாகாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE