Wednesday 8th of May 2024 05:16:25 PM GMT

LANGUAGE - TAMIL
.
எங்கே தொடங்கியது இனமோதல்? - 84!

எங்கே தொடங்கியது இனமோதல்? - 84!


திம்புப் பேச்சுகளும் தொடர்ந்த வன்முறைகளும்! - நா.யோகேந்திரநாதன்!

'இந்திய அரசின் முயற்சியால் 1985 ஜுலை மாதம் 15ம் திகதி ஏற்படுத்தப்பட்ட போர் நிறுத்த உடன்பாடு ஒரு மோசடி நடவடிக்கையாக்கப்பட்டிருப்பதை நான் நேரில் கண்டேன். போர் நிறுத்த உடன்பாடு அமுலில் இருந்ததாகக் கூறப்பட்ட மூன்று மாத இடைவெளியில் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட தமிழ் மக்கள் சிங்கள இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டார்கள். இலட்சத்திற்கு மேற்பட்டவர்கள் அகதிகளாக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சொந்த நாட்டில் வாழமுடியாமல் இந்தியாவில் இரண்டு இலட்சம் பேரும், மலேசியா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் அமெரிக்கா, ஜெர்மனி, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகளிலும் சுமார் 5 இலட்சத்திற்கு மேற்பட்டவர்கள் அகதிகளாகச் சிதறிக் கிடக்கின்றனர். இலங்கைத் தமிழரின் பிரச்சினையை இந்தியர்கள் இந்தியாவின் தேசியப் பிரச்சினையாகக் கருதி உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். தமிழ் பகுதிகளில் நான் நேரில் சென்று 23 நாட்கள் சுற்றிப் பார்த்து அறிந்து வந்து சொல்கிறேன், அழிவின் விளிம்பில் நிற்கும் அந்த மக்களின் ஒரே நம்பிக்கை இந்தியா மட்டும்தான். அவர்களை அழிவிலிருந்து காப்பாற்ற முடியும். காப்பாற்றவும் வேண்டும்.'

இது தமிழ் உணர்வாளரும் இலங்கைத் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கெதிராகத் தொடர்ச்சியான துணிச்சலான போராட்டங்களை நடத்தி வருபவருமான பழ.நெடுமாறன் அவர்கள் 1985ம் ஆண்டு இந்தியாவின் காஷ்மீர், பஞ்சாப் உட்படப் பல பகுதிகளிலுமுள்ள பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஈழத்தமிழர் பாதுகாப்பு மாநாட்டை ஆரம்பித்து வைத்து உரையாற்றியபோது வெளியிட்ட கருத்தாகும்.

1985ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பூட்டான் தலைநகர் திம்புவில் போராளிக் குழுக்கள் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியோருக்கும் இலங்கை அரச தரப்புக்குமிடையே இந்தியாவின் அனுசரணையுடன் சமாதானப் பேச்சுகள் இடம்பெற்றன. இப்பேச்சுகள் ஆரம்பிப்பதற்கு முன்னோடி நடவடிக்கையாக இந்தியாவின் அனுசரணையின் பேரில் போராளிக் குழுக்களுக்கும் இலங்கை அரச தரப்புக்குமிடையே 18.06.1985 அன்று போர் நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டது.

எனினும் திம்புவில் பேச்சுகள் இடம்பெற்றிருந்த காலப்பகுதியிலேயே இலங்கை இராணுவத்தினர் போர் நிறுத்தத்தை மீறி வவுனியா நூல் நிலையத்தில் தஞ்சமடைந்திருந்த 200 இற்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், முதியோர்கள் ஆகியோரைச் சுட்டுக் கொன்றனர். அடுத்து மூன்றாம் நாளில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி நூலகத்தை படையினர் தாக்கி 7,000 நூல்களை அழித்ததுடன், காவலாளியைச் சுட்டுக் கொன்றும், பலரைக் காயப்படுத்தியும் வெறியாட்டம் நடத்தினர். இவ்வாறே மணலாற்றிலுள்ள ஒதியமலை என்ற கிராமத்தைச் சுற்றி வளைத்த படையினர் சுற்றிவளைப்பை நடத்திப் பலரைக் கைது செய்து கூட்டிச் சென்று அங்குள்ள சனசமூக நிலையத்தில் வைத்து 28 பேரைச் சுட்டுக் கொன்றனர். இவ்வாறே கிழக்கிலும் பல கிராமங்கள் சுற்றி வளைக்கப்பட்டு விசேட அதிரடிப் படையினரால் பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில்தான் பழ.நெடுமாறன் அவர்கள் படகு மூலம் இந்தியாவிலிருந்து வந்து 23 நாட்கள் தமிழர் தாயகத்தில் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று நிலைமைகளைப் பார்வையிட்டார். மீண்டும் அவர் இந்தியா திரும்பிய பின்பு தமிழ் நாட்டில் இடம்பெற்ற ஈழத்தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் தொடக்கவுரையாற்றும் போது அவரின் மேற்படி கருத்துகள் அவரால் முன்வைக்கப்பட்டன.

ஏற்கனவே இடம்பெற்றுவந்த பேச்சுவார்த்தைகள் எவற்றையும் விட திம்புப் பேச்சுகள் மிக முக்கியத்தும் வாய்ந்தவையாகக் கருதப்பட்டன. ஏனெனில் இலங்கை அரச தரப்பினருடன் இடம்பெற்ற பேச்சுகளில் திம்புப் பேச்சுகளில்தான் முதல் முதலாகப் போராளிகள் குழுக்கள் கலந்து கொண்டன. எனவே இப்பேச்சுகளின் அடிப்படையில் ஒரு நியாயமான தீர்வு எட்டப்படமுடியுமெனவும் அம்முடிவு அமுல்படுத்தப்படுமெனவும் பல தரப்பினர் மத்தியிலும் ஒரு பலத்த எதிர்பார்ப்பு உருவாகியிருந்தது.

இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் போராளிக் குழுக்களுக்கு ஆயுத உதவி, பயிற்சி, நிதியுதவி என்பனவற்றை வழங்கி அவற்றைத் தனித்தனியாகப் பலப்படுத்தினார்களேயொழிய அவர்களைப் பலம் மிக்க ஒரே சக்தியாக ஐக்கியப்படுத்துவதில் அக்கறை காட்டவில்லை.

அந்த நிலையில்தான் 'ஈரோஸ்' அமைப்பின் சிரேஷ்ட உறுப்பினரில் ஒருவரான 'அருள்' 1982ல் போராளி அமைப்புகளை ஒன்றிணைக்கச் சில முயற்சிகளை மேற்கொண்டார். எனினும் அதில் அவரால் வெற்றி பெற முடியவில்லை.

இந்நிலையில் 1984ல் ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் தலைவரான பத்மநாபா அவர்களின் முயற்சியின் பேரில் ஈ.பி.ஆர்.எல்.எவ்., ஈரோஸ், புளட், ரெலோ ஆகிய அமைப்புகள் ஒன்றிணைந்து ஒரு அமைப்பை உருவாக்கின. அதையடுத்து 10.04.1984ல் அந்த இயக்கங்களுடன் விடுதலைப் புலிகளும் இணைந்து ஈழ தேசிய ஜனநாயக முன்னணி அதாவது ஈ.என்.டி.எல்.எவ் என்ற பேரில் ஒரு ஐக்கிய முன்னணி உருவாக்கப்படுகிறது.

இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி, எச்.டபிள்யூ.ஜயவர்த்தன, அனுசரணையாளர்கள் என மூவரும் இணைந்து தயாரித்த 'இணைப்பு சி' அறிக்கையை இலங்கை அமைச்சரவை நிராகரிக்கிறது. இந்த நிலையில் 31.11.1984 அன்று இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்படுகிறார். அவரின் மரணத்தையறிந்து சர்வகட்சி மாநாடு முடிவுக்குக் கொண்டு வரப்படுகிறது. இந்திரா காந்தியின் மறைவையடுத்து ரஜீவ் காந்தி இந்தியப் பிரதமராகின்றார். அதன் பின்பு மீண்டும் தீர்வு முயற்சிகள் ஆரம்பமாகின்றன.

அடுத்து இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பான பேச்சுகள் ஆரம்பிப்பதெனவும் அதில் இலங்கை தரப்பினருடன் பேச்சுக்களை நடத்த தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் போராளிக் குழுக்களும் கலந்து கொள்வதாகவும் முடிவெடுக்கப்படுகிறது.

முதலாம் கட்டப் பேச்சின்போது அரச தரப்பால் ஏற்கனவே சர்வகட்சி மாநாட்டில் முன்வைக்கப்பட்ட 'பி' அறிக்கை முன்வைக்கப்படுகிறது. அதில் முன்வைக்கப்பட்ட தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிடவேண்டும், பிரதேச சுயாட்சி அலகுகள் சர்வஜன வாக்கெடுப்பினால் அங்கீகரிக்கப்பட வேண்டும் உட்பட 14 அம்சங்கள் முன் வைக்கப்பட்டன. அதை முற்றாகவே தமிழர் தரப்பு நிராகரித்து விட்டது. அந்த நிலையில் மீண்டும் திம்புவில் 12.08.85 அன்று 2ம் கட்டப் பேச்சுகள் ஆரம்பிக்கப்படுமென முடிவெடுக்கப்பட்டது.

அதேவேளையில் இப்பேச்சுகளை முன்னிட்டு இலங்கை அரசுக்கும் போராளி அமைப்புக்குமிடையே இந்திய மத்தியஸ்தத்துடன் 18.06.1985 போர் நிறுத்தம் அமுலுக்கு வந்தது.

இலங்கையின் 14 அம்சத் திட்டத்தை நிராகரித்த தமிழர் தரப்பு 13.07.1985, தமிழர் விடுதலைக் கூட்டணி, விடுதலைப் புலிகள், ஈரோஸ், ஈ.பி.ஆர்.எல்.எப்., ரெலோ, புளட் என அனைவரும் இணைந்த ஒரு திட்டத்தை முன்வைக்கின்றனர். அதன்படி தமிழர் ஒரு தேசிய இனம் என்பது, தமிழருக்கு ஒரு தனியாக நிலப்பரப்பு உண்டு என்பது. தமிழர்களின் சுயநிர்ணய உரிமை, எல்லாத் தமிழருக்கும் குடியுரிமை என்ற நான்கு அம்சங்களுக்கு உட்பட்டே எந்தப் பேச்சும் நடைபெற முடியுமென வலியுறுத்தப்பட்டது.

12.08.1985 தொடக்கம் 17.08.1985 வரை இடம்பெற்ற திம்புப் பேச்சுகளின் இலங்கை அரச தரப்பானது தமிழர்களால் முன்வைக்கப்பட்ட விடயங்களை முற்றாகவே நிராகரித்தது.

பேச்சுகள் 17ம் திகதி வரை இடம்பெற்ற போதிலும் இலங்கை அரசு 16ம் திகதியே போர்நிறுத்தத்தை மீறி தமிழ் மக்கள் மீதான கொலை வெறியாட்டத்தை ஆரம்பித்துவிட்டது.

எனவே அரச படைகளே போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்துவிட்ட நிலையில் போராளி அமைப்புகளும் பதில் தாக்குதல்களை மேற்கொள்ள வேண்டி வந்தது. அந்த நிலையில் பெரும் எதிர்பார்ப்புடன் தொடங்கப்பட்ட திம்புப் பேச்சுகள் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டன.

பேச்சுவார்த்தைகள் வெற்றிபெற முடியாதவாறு ஏற்கனவே தமிழர் விடுதலைக் கூட்டணியால் நிராகரிக்கப்பட்ட 'பி' அறிக்கையை முன்வைத்தும், பேச்சுகளை இடையில் குழப்பும் வகையிலும் தமிழ் மக்கள் மீதான இராணுவ வன்முறைகளை ஆரம்பித்தும் ஜே.ஆர். திம்புப் பேச்சுகள் மூலம் தீர்வு எட்டப்படுவதை இல்லாமற் செய்து விட்டார்.

ஆனால், இந்தியக் கொள்கை வகுப்பாளர்களால் தமிழர் தரப்பின் இறுக்கமான நிலைப்பாடே பேச்சுகள், முறிவடையக் காரணம் என்ற வகையில் செயற்பட ஆரம்பித்தனர்.

தமிழர் தரப்பின் இறுக்கமான நிலைப்பாட்டுக்கு அன்ரன் பாலசிங்கம், சந்திரகாசன், சத்தியேந்திரா ஆகியோரே காரணம் எனக் கூறி அவர்கள் மூவரையும் இந்திய அரசு நாடு கடத்தியது.

இந்த நாடு கடத்தல் விவகாரம் தமிழகமெங்கும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஆட்சியிலிருந்த அ.தி.மு.க. எதிர்க்கட்சியான தி.மு.க. உட்பட தமிழ் நாட்டின் சகல கட்சிகளும், அமைப்புகளும் போராட்டங்களில் குதித்தனர். இப்போராட்டங்கள் தொடர்பாக ஆயிரக் கணக்கானோர் தமிழ் நாட்டில் கைது செய்யப்பட்டதையடுத்து தமிழ் நாடு சட்ட மன்றத்திலும், மத்திய அரசின் லோக் சபாவிலும் கடும் எதிர்ப்புக் குரல்கள் எழும்பின.

அதேவேளையில் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் வைத்திய சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். உடனடியாக நாடு திரும்பி ராஜீவ் காந்தியைச் சந்தித்து மூவரினதும் நாடு கடத்தலை ரத்துச் செய்யும்படி வலியுறுத்தினார்.

இந்த நிலையில் மூவரது நாடு கடத்தல் உத்தரவு ரத்துச் செய்யப்பட்டதுடன் அவர்கள் மீண்டும் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.

இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் இவ்விவகாரம் தங்களுக்கு ஏற்பட்ட ஒரு அவமானம் என்றே கருதினர். எனவே அவர்கள் போராளிகளை மீண்டும் சிக்கலில் மாட்டி அவர்களைப் பிரித்து பலவீனப்படுத்துவதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்தனர்.

இந்த நிலையில் சென்னை சூளை மேட்டில் ஈ.பி.டி.பி.யினருக்கும் அப்பகுதி மக்களுக்குமிடையே ஏற்பட்ட கைகலப்பில் தற்போது அமைச்சராயிருக்கும் டக்ளஸ் தேவானந்தா மேல் மாடியிலிருந்து மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒரு முதுநிலைப் பட்டதாரி மாணவன் இறந்து விடுகிறான்.

இதை இந்திய மாநில பொலிஸ் மா அதிபர் மோகனதாஸ் போராளிக் குழுக்களைக் கட்டுக்குள் கொண்டு வருமுகமாக நன்றாகவே பயன்படுத்தினார். துப்பாக்கிப் பிரயோகம் ஈ.பி.ஆர்.எல்.எப்.பினால் மேற்கொள்ளப்பட்ட போதும் அவர் எல்லா இயக்கங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கிறார். போராளிகளின் முகாம்கள் காவலுக்கு உட்படுத்தப்பட்டதுடன், போராளி அமைப்புகளின் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்படுகின்றனர். அவர்களின் ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்படுகின்றன.

அதேநேரத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், அன்ரன் பாலசிங்கம் ஆகியோர் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்படுகின்றனர். அவர்களின் தொலைத் தொடர்பு சாதனங்களும் ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்படுகின்றன.

இந்த நிலையில் 22.11.1986 அன்று விடுதலைப் புலிகளின் தலைவர் பி;ரபாகரன் தம்மிடம் பறிமுதல் செய்யப்பட்ட தொலைத் தொடர்பு சாதனங்களையும் ஆயுதங்களையும் திரும்பவும் ஒப்படைக்க வேண்டுமெனக் கோரி சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கிறார். இது தமிழகத்தில் பெரும் போராட்டங்களை வெடிக்க வைக்கிறது.

ராஜீவ் காந்தியின் விசேட அழைப்பின் பேரில் பெங்கள10ர் சென்றிருந்த எம்.ஜி.ஆர். பிரபாகரனிடம் உண்ணாவிரதத்தைக் கைவிடும்படியும், தான் வந்து நடவடிக்கை எடுப்பதாகவும் அறிவிக்கிறார். தங்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் திருப்பி வழங்கப்படும்வரை உண்ணாவிரதத்தைக் கைவிடப் போவதில்லையெனப் பிரபாகரன் மறுத்துவிட்டார்.

இரண்டாம் நாள் சென்னை வந்த எம்.ஜி.ஆர். தொலைத் தொடர்பு சாதனங்களையும் ஆயுதங்களையும் மீண்டும் போராளிகளிடம் ஒப்படைக்கும்படி கட்டளையிடுகிறார். அத்துடன் பிரபாகரன் உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டுவருகிறார்.

இப்பறிப்பு நடவடிக்கைகளும் கைதுகளும் எம்.ஜி.ஆருக்கும் புலிகள் அமைப்புக்குமிடையே முரண்பாடுகளை ஏற்படுத்த சில சக்திகளின் ஆலோசனையின் பேரில் டி.ஐ.ஜி மோகனதாஸால் மேற்கொள்ளப்பட்ட சதி என்பதை எம்.ஜி.ஆர். புரிந்து கொள்கிறார். எனவே மோகனதாஸை பதவியிறக்கம் செய்து வீட்டு வாரியத்துக்கு மாற்றி விடுகிறார்.

அதுமட்டுமின்றி அவர் விடுதலைப் புலிகளுக்கு 3 இலட்சம் ரூபாவும் ஈரோஸ் அமைப்புக்கு 1 இலட்சம் ரூபாவும் வழங்கி உதவி செய்கிறார். இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண போராளி அமைப்புகளையும் பலப்படுத்துவதே ஒரேவழி என்பதைப் புரிந்து கொண்ட நிலையிலேயே அவரின் அடுத்த நடவடிக்கைகள் தொடர்ந்தன.

அதேவேளை ஜே.ஆர். திம்புப் பேச்சுகளைத் தோல்வியடைய வைத்ததன் மூலம் வன்முறைகள் மூலம் தமிழரை ஒடுக்குவதே தனது பாதை என்பதையும் தெளிவுபடுத்தி விட்டார்.

தொடரும்....

அருவி இணையத்துக்காக :- நா.யோகேந்திரநாதன்.


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இந்தியா, இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம், தமிழ்நாடு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE