Thursday 20th of January 2022 07:38:37 AM GMT

LANGUAGE - TAMIL
.
எங்கே தொடங்கியது இன மோதல்? - 86!

எங்கே தொடங்கியது இன மோதல்? - 86!


தோல்வியடைந்த பெங்களூர் பேச்சுகள்! - நா.யோகேந்திரநாதன்!

'நாம் தனித்துவமான போக்குடையவர்கள் என்பது இந்திய அரசுக்குத் தெரியும். அத்தோடு வரித்துக்கொண்ட இலட்சியத்தில் நாம் உறுதியாக நிற்கிறோம் என்பதும் அவர்களுக்குத் தெரியும். எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியாவின் இரகசியத் திட்டங்களுக்கு இயைந்து போய் வளைந்து கொடுக்கமாட்டோம் என்பதும் அவர்களுக்குத் தெரியும். ஏனைய அமைப்புகள் அப்படியல்ல. அவர்களுக்கு உறுதியான இலட்சியங்கள் எதுவுமில்லை. இந்திய அரசின் அழுத்தங்களுக்கு அவர்கள் பணிந்து சென்று வளைந்து கொடுக்கத் தயாராயுள்ளார்கள். இதன் காரணமாகவே ஏனைய போராளி அமைப்புகளை இராணுவ ரீதியாகப் பலப்படுத்தி விடுதலைப் புலிகளைப் பலவீனப்படுத்த இந்திய அரச முனைகிறது'.

இது திருமதி அடேல் பாலசிங்கம் அவர்களால் எழுதப்பட்ட சுதந்திர வேட்கை என்ற நூலில் இந்திய அரசு ஏன் புலிகளுக்கு உதவி செய்யப் பின்னிற்கிறது என்பது தொடர்பாகத் திரு.அன்ரன் பாலசிங்கம் அவர்கள் அப்போதைய தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆருக்கு வழங்கிய விளக்கமெனக் குறிப்பிடப்பட்டுள்ள விடயமாகும்.

ஏனைய போராளி அமைப்புகளுக்கு இந்திய உளவு நிறுவனம் போதிய பயிற்சிகள், ஆயுதங்கள் என்பனவற்றுடன் தாராளமாக நிதியுதவியையும் வழங்கி வந்தது. தொடக்கத்தில் புலிகளுக்கு எவ்வித உதவிகளும் வழங்கப்படவில்லை. அதற்கு முக்கிய காரணம் திரு. அடேல் பாலசிங்கத்தின் நூலில் குறிப்பிட்டிருந்ததைப் போன்று புலிகள் உறுதியான இலட்சியப் பற்றுக் கொண்டவர்களாகவும் இந்திய அரசின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து தமது கொள்கைகளை விட்டுக் கொடுக்காதவர்களாகவும் விளங்கினர். எனினும் திருமதி இந்திரா காந்தியின் தலையீட்டின் பேரில். 200 புலி இயக்க உறுப்பினர்களுக்குப் பயிற்சி வழங்கப்பட்டதுடன் சிறிதளவு ஆயுதங்களும் வழங்கப்பட்டன.

இந்த நிலையில் புலிகள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரிடம் சில உதவிகளைக் கோரினர். அவர்கள் போராளிகளுக்குப் பயிற்சி வழங்க ஒரு கோடி ரூபாவும், ஆயுதங்கள் வாங்க ஒரு கோடி ரூபாவும் கோரியிருந்தனர். அப்போதுதான் திரு.அன்ரன் பாலசிங்கம் அவர்கள் தங்களுக்கு உதவியளிக்க ஏன் இந்தியா தயங்குகிறது என்பதைத் தெளிவுபடுத்தியபோதே மேற்படி விளக்கத்தை வழங்கியிருந்தார். எனவே எம்.ஜி.ஆர் அவர்கள் புலிகள் கேட்டதற்கு அதிகமாகவே 3 கோடி ரூபாவைத் தனது சொந்தப் பணத்தில் வழங்கியிருந்தார்.

இந்த நிலையில். இந்தியாவின் கர்நாடகாவின் தலைநகரான பெங்களூரில் தென்னாசிய நாடுகளின் 'சார்க் மாநாடு' 15.11.1985 தொடக்கம் 17.11.1985 வரை இடம்பெறவிருந்தது. இம்மாநாட்டில் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தனவும் கலந்து கொள்ளவிருந்ததால் அச்சந்தர்ப்பத்தைப் பாவித்து இலங்கை இனப் பிரச்சினைத் தீர்வு முயற்சிகளை மேற்கொள்ள ராஜீவ் காந்தி திட்டமிட்டார்.

அம்மாநாடு கர்நாடகாவில் இடம்பெறவிருந்த நிலையில் அப்பகுதி போராளிகள் நடமாடக்கூடிய இடமென்பதால் அங்கு ஜே.ஆர்.ஜயவர்த்தனவுக்கு ஏதாவது ஆபத்து ஏற்படக்கூடுமென இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் அஞ்சினர். அவ்வகையில் போராளிகள் விடயத்தில் முன்னெச்சரிக்கையாக இருக்கும்படி தமிழ்நாடு உதவி பொலிஸ் ஆணையாளாளர் மோகனதாசுக்கு உத்தரவு வழங்கப்பட்டது.

இவ்வுத்தரவைப் பயன்படுத்தி போராளிகளின் முகாம்கள் அனைத்தும் காவலுக்கு உட்படுத்தப்பட்டதுடன் போராளிக் குழுக்களின் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும் அன்ரன் பாலசிங்கமும் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் பல மணி நேரம் தடுத்து வைத்து வாக்குமூலங்கள் பெறப்பட்ட பின்னர் அவர்கள் இருவரும் அவர்களைச் சார்ந்தவர்களும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.

அன்ரன் பாலசிங்கம் எம்.ஜி.ஆருடன் தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை. தொலைபேசி உட்பட சகல வெளித்தொடர்புகளும் அவர்களுக்குத் துண்டிக்கப்பட்டிருந்தன.

பெங்களூர் மாநாடு ஆரம்பிப்பதற்கு முதல் நாள் திடீரென அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்கும் பிரபாகரனுக்குமான வீட்டுக் காவல் நீக்கப்பட்டது. அடுத்தநாள் மாலை ராஜீவ் காந்தி அவர்களைச் சந்திக்க விரும்புவதாகக் கூறப்பட்டு இருவரும் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். அவர்கள் எங்கு கூட்டிச் செல்லப்படுகின்றனர் என்பது பற்றியோ, ராஜீவ் எதைப் பற்றிப் பேசப் போகிறார் என்பது பற்றியோ எவ்வித விபரங்களும் அவர்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை.

அவர்கள் இருவரும் இந்திய விமானப் படை விமானம் மூலம் 'சார்க் மாநாடு' இடம்பெறவிருந்த பெங்களூர் நகரத்துக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

பெங்களூரிலுள்ள ராஜ்பவன் ஹோட்டலுக்கு அவர்கள் இரவு பத்து மணியளவில் போய்ச் சேர்ந்தபோது அங்கு இலங்கைக்கான இந்தியத் தூதுவர் டிக்சிற், அமைச்சர் நட்வர் சிங், வெளியுறவுச் செயலர் வெங்கடேஸ்வரன் உட்படப் பல பிரமுகர்கள் அவர்களை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். அவர்களை டிக்சிற் வரவேற்று, அவர்களிடம் அழைக்கப்பட்ட காரணத்தை விளக்கியதுடன் இனப்பிரச்சினைத் தீர்வாக ஜே.ஆர்.ஜயவர்த்தனவும் ரஜீவ் காந்தியும் ஒரு உடன்பாட்டுக்கு வந்திருப்பதாகவும் கூறினார். பின்பு அத்திட்டம் பற்றி நீண்ட விளக்கமளித்தார்.

அதில் கிழக்கு மாகாணம் மூவினங்களும் வாழும் பிரதேசமாதலால் மூன்றாகப் பிரிக்கப்பட வேண்டுமென்ன இணக்கம் காணப்பட்டிருந்தது. ஏற்கனவே கைது செய்யப்பட்டமை வீட்டுக் காவலில் வைக்கப்பட்டமை என்பவற்றால் மனம் நொந்து போயிருந்த பிரபாகரன், கிழக்கு மாகாணத்தைக் கூறுபோடும் திட்டம் இந்தியத் தூதுவரால் முன் வைக்கப்பட்டபோது கோபமடைந்தார். அவர் டிக்சிற்றிடம் ஒரேயடியாக 'நாங்கள் தமிழர் தாயகத்தை பிரிக்கவும் விடமாட்டோம்; பிரிக்கவும் முடியாது' எனக் கடுமையாகப் பதிலளித்தார். ஆனாலும் இந்தியத் தூதுவர் இலங்கையின் வரைபடத்தைக் காண்பித்தவாறு விளக்கங்களை வழங்கிக் கொண்டிருந்தார். பிரபாகரன் மௌனமாகவும் கோபமாகவும் அதைக் கேட்டுக் கொண்டிருந்த வேளையில் அன்ரன் பாலசிங்கம் குறுக்கிட்டு 'எமது நிலைப்பாட்டை நாம் இறுக்கமாகச் சொல்லி விட்டோம். தமிழர் தாயகத்தைப் பிரிக்கும் எந்தவொரு நடவடிக்கைக்கும் நாம் இணங்கப் போவதில்லை' எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். டிக்சிற் இருவரை முறைத்துப் பார்த்துவிட்டு அங்கிருந்து வேகமாக வெளியேறினார்.

அங்கிருந்தவர்கள் வெளியுறவுச் செயலர் வெங்கடேஸ்வரன் ஒரு தமிழர் என்பதால் இருவருடனும் பேச அடுத்து அவரை அனுப்பினர். அவர் மிகவும் அன்புடனும் பண்புடனும் பேசியதுடன் ராஜீவ் காந்தி நன்மனதுடன் இப்பிரச்சினையைத் தீர்க்க விரும்புவதால் அதை ஏற்கும்படி இருவரையும் கேட்டுக் கொண்டார். அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த பிரபாகரன் 'ராஜீவ் காந்தியைத் திருப்திப்படுத்த எமது விடுதலைப் போராட்டத்தை விற்கவா சொல்கிறீர்கள்?' எனக் கேட்டார். திகைத்துப் போன வெங்கடேஷ்வரன், 'எனக்கு உங்கள் மனநிலை புரிகிறது' எனக் கூறி விட்டு எழுந்து சென்றுவிட்டார். அடுத்து புலனாய்வுத் துறை அதிகாரிகள் உட்படப் பல அதிகாரிகள் மேற்கொண்ட சகல முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன.

இறுதியில், எம்.ஜி.ஆர். மூலமாக பிரபாகரனை இணங்க வைப்பது என்ற முடிவின் பேரில் அவரை பெங்களூருக்கு அழைத்து வருகின்றனர்.

அடுத்தநாள் காலையில் பிரபாகரனும் அன்ரன் பாலசிங்கமும் எம்.ஜி.ஆரைச் சந்திக்க அழைத்துச் செல்லப்பட்டனர். அவர் அன்புடன் அவர்களை வரவேற்றதுடன், ராஜீவின் திட்டம் பற்றியும், அது பற்றிய பிரபாகரனின் அபிப்பிரயாம் பற்றியும் விரிவாகக் கேட்டறிந்து கொண்டார். பின்பு அவர், 'நீங்கள் போகலாம். இந்தியாவின் யோசனையை நீங்கள் விரும்பவில்லையானால் நீங்கள் ஏற்கவேண்டாம். ஏற்கும்படி நான் வற்புறுத்தமாட்டேன்' எனக் கூறி வழியனுப்பி வைத்தார்.

சார்க் மாநாட்டுடன் இலங்கையின் இனப்பிரச்சினைக்குப் பெயரளவிலான ஒரு தீர்வை முன்வைத்து இலங்கையை தங்கள் கட்டுக்குள் வைத்திருக்கத் திட்டமிட்டிருந்த ராஜீவ் காந்திக்கும் இந்தியக் கொள்கை வகுப்பாளர்களுக்கும் இது ஒரு பெரும் தோல்வியாகவும், அவமானமாகவும், கருதப்பட்டது. ஏனைய போராளி அமைப்புகளும் தமிழர் விடுதலைக் கூட்டணியும் இணங்கிப் போகவிருந்த சமயத்தில் புலிகள் மறுத்தமை பெரும் கோபத்தை ஏற்படுத்தியிருந்தது. எனவே புலிகளுக்குப் பாடம் படிப்பிப்பதென இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் முடிவு செய்கின்றனர்.

இப்படியான ஒரு சூழ்நிலையில்தான் சென்னை சூழமேட்டில் ஒரு முச்சக்கர வண்டி ஓட்டுனருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அப்போது ஈ.பி.ஆர்.எல்.எப். உறுப்பினராயிருந்த டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒரு முதுநிலைப் பட்டதாரி மாணவன் உயிரிழக்கிறான். இது தமிழகமெங்கும் பெரும் எதிர்ப்பலையை உருவாக்குகிறது.

இந்தச் சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்ட தமிழக உதவிப் பொலிஸார் ஆணையாளர் மோகனதாஸ் விடுதலைப் புலிகளின் ஆயுதங்களையும் தொலைத் தொடர்பு சாதனங்களையும் பறிமுதல் செய்கிறார்.

இந்த நிலையில்தான் தொலைத் தொடர்பு சாதனங்களையும் ஆயுதங்களையும் திருப்பி ஒப்படைக்குமாறு பிரபாகரன் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியமையும் தமிழ்நாடு முழுவதும் கட்சி பேதமின்றிக் கொதித்தெழுந்தமையும் உண்ணாவிரதத்தின் 2ம் நாளில் எம்.ஜி.ஆரின் உத்தரவின் பேரில் ஆயுதங்களும் தொலைத் தொடர்பு சாதனங்களும் திரும்பவும் புலிகளிடம் ஒப்படைக்கப்பட்டமையும் நிகழ்ந்தன. அன்று மாலை திராவிடக் கழகத் தலைவர் வீரமணி குளிர்பானம் வழங்கிப் பிரபாகரனின் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.

இது விடுதலைப் புலிகளுக்கு இந்தியாவின் மீது கொண்டிருந்த நம்பிக்கையை முற்றாகவே இழக்க வைத்தது.

எனவே அவர்கள் மெல்ல மெல்ல தங்கள் போராளிகளையும் பெருமளவு ஆயுதங்களையும் இலங்கைக்குக் கடல் வழியாக அனுப்பத் தொடங்கினர். அப்படியான நகர்த்தல்களுக்கு இந்தியாவில் நம்பிக்கையிழந்தது மட்டுமின்றி இன்னொரு காரணமும் இருந்தது.

அதாவது வடக்கில் உள்ள இராணுவ முகாம்கள் போராளிகளால் சுற்றி வளைக்கப்பட்டிருந்தன. எனவே இராணுவத்தினர் வெளியேற முயலும் போதெல்லாம் மோதல்கள் இடம்பெற்றமையால் அங்கு பெருமளவு போராளிகளும் ஆயுதங்களும் தேவைப்பட்டன.

இறுதியில் பிரபாகரனும் எம்.ஜி.ஆருக்குக் கூடத் தெரிவிக்காமலே இந்தியாவை விட்டுக் கடல் மார்க்கமாக வெளியேறி விட்டார்.

தோல்வியடைந்த பெங்களூர் பேச்சுகளும் அதற்குப் பழிவாங்க இந்தியா மேற்கொண்ட நடவடிக்கைகளும் போராளிகள் முற்றாகவே இந்தியா மீது நம்பிக்கையிழக்க வைத்து விட்டன. ஆனாலும் எம்.ஜி.ஆர். புலிகளுடன் மிகவும் அந்நியோன்யமான உறவைப் பேணி வந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடரும்....

அருவி இணையத்துக்காக :- நா.யோகேந்திரநாதன்.


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இந்தியா, இலங்கை, கிழக்கு மாகாணம், கர்நாடகம், வட மாகாணம், தமிழ்நாடு, பெங்களூர், சென்னைபிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE