Friday 26th of April 2024 06:58:45 PM GMT

LANGUAGE - TAMIL
.
சாணக்கியன் கருத்துக்கு வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் கடும் கண்டனம்!

சாணக்கியன் கருத்துக்கு வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் கடும் கண்டனம்!


வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டத்தை தான் நடத்தியதாக த.தே.கூட்டமைப்பு பாராளுடன்ற உறுப்பினர் சாணக்கியன் புலம்பெயர் தேசத்தில் வைத்து தெரிவித்த கருத்துக்கு வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அவர்கள் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

வடக்கு,கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தைச் சேர்ந்த நாம் இலங்கை அரசாலும், அரச படைகளாலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகளைத் தேடி 1735 நாட்களாகத் தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டும் எம்முடன் போராடிய உறவுகளில் நூற்றுக்கு மேற்பட்டவர்களை இழந்தும் உள்ள நிலையில் ஓரு முக்கியமான விடயத்தை தாயக, புலம்பெயர் உறவுகளுக்குத் தெளிவுபடுத்த விரும்புகின்றோம்.

நான்கு வருடங்களையும் கடந்து தொடரும் எமது போராட்டத்தில் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம், சர்வதேச சிறுவர் தினம், சர்வதேச மனித உரிமைகள் தினம் என பல நாட்களில் பாரிய பேரணிகளையும், போராட்டங்களையும் நடாத்தி சர்வதேசத்தின் கவனத்தை எம் போராட்டத்தின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தோம். இப்படியான போராட்டங்களின் போது அரசுக்குத் துணை போகும் தீய சக்திகளாலும், போராட்டத்தை தம் கையிலெடுக்க முயலும் பிரமுகர்களாலும் எமக்கு தடைகள் ஏற்படுத்தப்படுவது வழமை. அத்தடைகளெல்லாம் எமக்கு ஆதரவு தர திரண்டிருக்கும் பொதுமக்களின் பங்களிப்புடன் அவற்றை முறியடித்திருக்கின்றோம். உதாரணத்துக்கு 25.02.2019 இல் “எமக்கு ஓ.எம்.பி வேண்டாம்” என்ற முடிவை சர்வ தேசத்துக்கும், ஐ.நா விற்கும் அழுத்தி ஆணித்தரமாகச் சொல்வதற்காக பாரிய பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்பேரணி செல்லும் வழியில் சில அடிவருடிகளால் எமது கோசத்துக்கு எதிர்க்கருத்தில் கோசமிடப்பட்டதோடு ஒலிவாங்கி வயர்கள் பிடுங்கி எறியப்பட்டு ஊடகவியலாளர் ஒருவரும் தாக்கப்பட்டார். ஆனால் ஒரு சில நிமிடங்களில் எமது மக்களின் உதவியுடன் நிலமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு பேரணி தன் இலக்கை நிறைவு செய்து பெரு வெற்றியடைந்தது.

இதே போன்று 30.08.2020 சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தன்று பாரிய பேரணி மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மட்டக்களப்பு மாவட்டத் தலைவிக்கு நீதிமன்றால் இதில் பங்குபற்றுவதற்கான தடையுத்தரவு வழங்கப்பட்டிருந்த நிலையில் அம்பாறை மாவட்டத் தலைவியினால் இப் பேரணி வழி நடத்தப்பட்டது. இந்நிலையில் இப்பேரணியை முன்னேற விடாது பாதை மூடப்பட்டது.

இந்நேரத்தில் எமது பேரணிக்கு ஆதரவு தர திரண்டிருந்த பொது மக்களாலும், பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், மற்றும் வேறு சில பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சிப் பிரமுகர்கள் என அனைத்துத் தரப்பினராலும் மூடப்பட்ட பாதை உடைத்து எமக்கு வழி சமைத்துத் தரப்பட்டது. எமது போராட்டம் வெற்றிகரதாக நிறைவேறியது.

இங்கு கௌரவ சாணக்கியனதும் மற்றைய பாராளுமன்ற உறுப்பினர்களதும் செயற்பாடானது அவர்கள் மக்களுக்குச் செய்யவேண்டிய கடமை. மக்களின் வாக்குகளால் தான் அவர்கள் பாராளுமன்ற கதிரையில் அமரும் பெரும் பேறையும் பல வரப்பிரசாதங்களையும் பெற்றார்கள். ஆனால் இவற்றை தொடர்ந்து அனுபவிக்கும் பேராசையில் வலி சுமந்த எங்கள் போராட்டத்தை வலியே என்னவென்று தெரியாத இவர்களைப் போன்றவர்கள் கையில் எடுப்பதையோ, உரிமை பாராட்டுவதையே எம்மால் அனுமதிக்க முடியாது. தமது சுகபோகங்களை தக்க வைப்பதற்காக எங்கள் கண்ணீரில் எவரும் அரசியல் செய்ய வேண்டாம். நாம் ஆரம்பத்திலிருந்தே அரசியலுக்கு அப்பாற்பட்டு நீதிக்கான இந்த போராட்டத்தை நீதியுடன் முன்னெடுத்து வருகின்றோம். எந்த பாராளுமன்ற உறுப்பினரோ, அல்லது அரசியல் கட்சியோ அல்லது தனி நபரோ அல்லது எமது சங்கம் தவிர்ந்த வேறு அமைப்புக்களோ எமது போராட்டத்துக்கு உரிமை கோர முடியாது. கோரவும் கூடாது என்று கண்டிப்புடன் தெரிவிக்கின்றோம்.

அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அவர்கள் புலம்பெயர் தேசத்தில் குறிப்பிட்ட எமது போராட்டத்தை தான் நடாத்தியதாக தெரிவித்த கூற்று முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்பதை எங்கள் உறவுகளுக்கு உறுதிபடத் தெரிவிப்பதோடு அவரின் இக் கூற்றை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

எம் உறவுகளுக்கான நீதி கிடைக்கும் வரை தொடர்ந்தும் உங்கள் ஆதரவை கோரி நிற்கின்றோம்.

நன்றி

இங்ஙனம்,

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்.

வடக்கு,கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம்

(அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்கள்)


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம், அம்பாறை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, திருகோணமலை, வவுனியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE