Saturday 4th of May 2024 03:17:46 AM GMT

LANGUAGE - TAMIL
இணையில்லாப் பெருங்கலைஞன் கலைவேந்தன் ம.தைரியநாதன்

இணையில்லாப் பெருங்கலைஞன் கலைவேந்தன் ம.தைரியநாதன்


ஈழத்தமிழர்களின் மரபு வழிக் கலைகளுள் இசைநாடகம் என்னும் அரங்க முறைமையும் முதன்மையான ஒன்றாக விளங்கி வருகின்றது. தமிழகத்தில் இருந்து ஈழத்திற்கு வந்த தமிழகக் கலைஞர்களால் இக்கலையானது வளர்க்கப்பட்டிருந்தாலும் நாளடைவில் இவ்விசைநாடகக் கலையானது ஈழத்துக் கலைஞர்களின் தனித்துவமான ஆற்றுகைகளால் மண்ணின் மணம் கொண்டதாக மாற்றம் கண்டது. ஈழத்து வரலாறுகள் இசைநாடகங்களாக நிகழ்த்தப்பட்டதே இதற்கான காரணம் எனவும் கொள்ளலாம்.

இந்த வகையில் ஈழத்து இசைநாடகத் துறையில் தனிப் பெரும் ஆளுமையாக எம்மோடு வாழ்ந்து மறைந்த கலைவேந்தன் ம.தைரியநாதன் அவர்கள் மறைந்து இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் அவரோடு கால் நூற்றாண்டு காலம் பணியாற்றியவன் என்ற வகையில் அவர் பற்றிய நினைவுகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள விளைகிறேன்.

சுருதி மாதா, லயம் பிதா என்பது இசைப் பழமொழி. அதாவது சுருதி லயம் பிசகாது பாடும் ஆற்றல் கொண்ட ஒருவரால் இசைத் துறையில் பெரும் புகழ் பெற முடியும். வேறு திறன்கள் பெருமளவில் தேவையில்லை. ஆனால் பல விதமான கலைத் திறன்கள் ஒருங்கே அமையப் பெற்ற ஒருவரால் மட்டுமே இசைநாடகத் துறையில் நின்று நிலைக்கவும் பெயர் பெறவும் முடியும்.

உணர்வு வழுவாது சுருதியோடும் லயத்தோடும் உச்ச சுருதியில் பாடும் குரல் வளத்தைக் கொண்டிருத்தல், தமிழ் மொழியைத் தெளிவாக உச்சரித்தல், நீண்ட உரையாடல்களையும் பாடல்களையும் நினைவில் வைத்திருத்தல், புராண வரலாறுகளைத் தெரிந்திருத்தல் போன்ற திறன்களுடன் பாத்திரப் பொருத்தம் கொண்ட உடற் கட்டமைப்பை இயற்கையின் கொடையாகப் பெற்றிருப்பதுடன் சிறந்த நடிப்புத் திறனையும் உடையவராக இருந்தால் மட்டுமே இசைநாடகத் துறையில் காலடி வைக்க முடியும்.

இவை அனைத்திலும் தன்னிறைவான கலைஞனாக வாழ்ந்தவர் தைரியநாதன் அவர்கள். எந்த வேடம் தரித்தாலும் அந்த வேடத்திற்கு உயிரூட்டும் அற்புதத் திறன் அவரிடம் இருந்தது. இசைநாடகத்துறையில் அவர் ஏற்காத பாத்திரம் எதுவும் இல்லை. ஒரு காலத்தில் சந்திரமதியாக நடிகமணி வி.வி.வைரமுத்து அவர்களோடு புகழ் பெற்றிருந்த தைரியநாதன் அவர்கள் நடிகமணியின் மறைவிற்குப் பின்னர் அரிச்சந்திரனாகவும் அந்திராசியாகவும் பெரும் புகழ் பெற்றிருந்தார். அத்துடன் தேவைப்படும் போது ஏனைய பாத்திரங்களாகவும் மனம் கோணாது நடித்து வந்தார். நாடகத்தை அன்றி வேறொரு கலையையோ தொழிலையோ தன் கடைசிக் காலம் வரை அவரால் தெரிவு செய்ய முடியவில்லை என்பது அவருள் இருந்த நாடகப் பற்றிற்குச் சிறந்ததோர் எடுத்துக் காட்டாகும். எமது காலத்தில் இசை நாடகத்தை முழுநேரத் தொழிலாகக் கொண்டிருந்த ஒரே ஒரு நடிகராகத் தைரியநாதனே விளங்குகின்றார்.

IMAGE_ALT

நுண்கலைத் துறையில் சிலர் ஆற்றுகையாளர்களாக மட்டும் புகழ் பெறுகின்றனர். சிலர் ஆசிரியர்களாக மட்டும் பணிபுரிகின்றனர். சிலர் ஆராய்ச்சியாளர்களாக மட்டும் காலத்தைக் கழிக்கின்றனர். ஆனால் தைரியநாதன் போன்ற சிலர் தனது துறையின் அனைத்துக் கூறுகளிலும் துறைதோய்ந்த வளவாளர்களாக வாழ்ந்துள்ளனர். தான் நடிப்பதைப் போன்று இன்னுமோர் நடிகனை உருவாக்கும் பேராற்றலும் மனப் பக்குவமும் கொண்ட மிகச் சிறந்த இசைநாடக ஆசானாக ஈழத்தின் ஊர்கள், பள்ளிகள், மன்றங்கள் தோறும் அரும்பணியாற்றிய பெரும் கலைஞன் தைரியநாதன் அவர்கள்.

மொத்தத்தில் இசைநாடகத் துறையின் கிடைத்தற்கரிய பொக்கிசமாகக் கருதப்படவேண்டியவர் தைரியநாதன்;. சந்திரமதி, சத்தியகீர்த்தி, அரிச்சந்திரன், சத்தியவான், சாவித்திரி, அழகவல்லி, அந்திராசி, பூதத்தம்பி, கண்ணகி, மாதவி, ஞானசவுந்தரி, லேனாள், புலேந்திரன், வள்ளி, நாரதர், வேடன், பெரியகிழவன், நல்லதங்காள் போன்ற பாத்திரங்களில் மிகச் சிறப்பாக நடித்துப் புகழ்பெற்றவர். எனினும் அரிச்சந்திரன், அந்திராசி போன்ற பாத்திரங்களில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தித் தனி முத்திரை பதித்தவர். அத்துடன் ஈழத்தில் நிகழ்த்தப்பட்ட அனைத்து இசைநாடகங்களையும் பயிற்றுவிக்கும் ஆற்றல் கொண்டவராகவும் திகழ்ந்தவர் என்பதுடன் இசைநாடகப் பாடல்களையும் சில இசைநாடகங்களையும் புதிதாக எழுதியவர் என்பதும் குறிப்பிடத் தக்கதாகும்.

இசைநாடக அரங்குக்குத் தேவையான அரங்கப் பொருட்களையும் ஆடை அணி கலன்களையும் உருவாக்குவதையும் தன் பணியாக ஏற்றுச் செயற்பட்டவர். காட்சி அமைப்புக்களைப் பொருத்தமான முறையில் மேற்கொள்ளுவதிலும் வல்லவராக இருந்தவர். புதியவர்களை இசைநாடகத் துறையில் சேர்த்துக் கொள்வதிலும் பயிற்சியளிப்பதிலும் பேரார்வம் கொண்டவராக இருந்தவர்.

IMAGE_ALT

தைரியநாதன் அவர்கள் இசைநாடகத் துறையில் ஆளுமை செலுத்திய முறைமை என்பது துறைசார்ந்தவர்களால் ஆராயப்பட வேண்டியது. ஒப்பனை செய்யத் தொடங்கும் கணத்தில் இருந்து அவர் முழுமையாகப் பாத்திரமாக மாறிவிடும் இயல்பு கொண்டிருந்தார் என்பது அவரோடு பழகியவர்களுக்கு மட்டுமே தெரிந்த விடயம். ஒப்பனை முடிந்த கையோடு மேடையில் தோன்றினால் அவர் அரங்கைக் கையாளும் முறைகளும் துணைக் கலைஞர்களைப் பயன்படுத்தும் விதங்களும் தனித்துவமானவை. ஏனைய இசைநாடகக் கலைஞர்களில் இருந்து அவரது நடிப்பு முறைமைகள் வேறுபட்டே இருந்தன. அங்க அசைவுகள், முகத்தில் காட்டும் பாவம், குரலில் வரும் ஏற்ற இறக்கம், சக பாத்திரத்தை அணுகும் முறை, தவறுகள் ஏற்பட்டால் சீர் செய்யும் சமயோசிதம், அரங்கை முழுமையாகத் தனவசப்படுத்திக் கொள்ளும் அனுபவம் போன்றவை அவரது தனித்துவங்களாக உள்ளன.

காங்கேசன்துறை வசந்தகான சபா, திருமறைக் கலாமன்றம் போன்றவை தைரியநாதனின் வளர்ச்சிக்குக் களம் அமைத்துக் கொடுத்த நிறுவனங்கள் ஆகும். இந்நிறுவனங்களின் வளர்ச்சியில் தைரியநாதனின் வகி பங்கினையும் நிராகரித்து விட முடியாது.

தைரியநாதன் என்னும் பெருங் கலைஞன் பற்றி அறியாத ஒருவர் எதிர் காலத்தில் இசைநாடகத் துறையில் ஈடுபட முடியாது. எனவே அவர் பற்றிய நினைவு விழாக்கள், ஆவணப்படுத்தல்கள், இசைநாடக விழாக்கள,; கருத்தரங்குகள் என்பன முன்னெடுக்கப்படவேண்டும். விருது வழங்கும் விழாக்களிற்கு விண்ணப்பங்களைக் கோரும் திணைக்களங்கள் கலை விழாக்களை நிகழ்த்திக் கலைஞர்களின் ஆற்றல்களை வெளிக்கொணர முயற்சிப்பதே காலத்தின் தேவை ஆகும்.

வசாவிளான் தவமைந்தன் யாழ்ப்பாணம்

நன்றி - உதயன்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE