Friday 19th of April 2024 10:59:03 AM GMT

LANGUAGE - TAMIL
.
ரஷ்யா - உக்ரேன் போர் - நா.யோகேந்திரநாதன்

ரஷ்யா - உக்ரேன் போர் - நா.யோகேந்திரநாதன்


24.02.2022 அன்று ரஷ்யப் படைகள் சரமாரியான எறிகணைத் தாக்குதல்களுடன் அதன் அயல் நாடான உக்ரேனுக்குள் இறங்கியபோது உலகமே ஒருமுறை அதிர்ச்சியில் ஆழ்ந்தது. உக்ரேனின் தென்பகுதியில் ரஷ்யப் படைகளின் ஊடுருவல், அதை எதிர்த்து அமெரிக்கா உட்பட்ட மேற்குலக நாடுகள் விடுத்த கடும் எச்சரிக்கைகள் என்பன மூன்றாம் உலகப் போர் தொடங்கி விடக்கூடுமென்ற அச்சத்தை ஏனைய நாடுகளிடையே ஏற்படுத்தின.

வெலடிமோர் ஜெலன்ஸ்கி உக்ரேனின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிய பின்பு அந்த நாடு அரசியல், பொருளாதார, இராணுவ முனைகளில் வேகமாக மேற்கு நாடுகள் பக்கம் சாய ஆரம்பித்தது. அதன் உச்சக்கட்டமாக அண்மைக் காலத்தில் உக்ரேன் “நேட்டோ” என அழைக்கப்படும் வடஅத்திலாந்திக் ஒப்பந்தக் கூட்டமைப்பில் இணைய முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. அவ்வாறு அந்த நாடு நேட்டோவில் இணையுமானால் அதன் அடிப்படையில் அமெரிக்கா உக்ரேனில் தனது படைத்தளங்களை அமைக்கக்கூடுமெனவும் அது ரஷ்யாவின் பாதுகாப்புக்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்குமெனவும் ரஷ்யா கருதியது. எனவே உக்ரேன் நேட்டோவில் இணைவதற்கு எதிராக ரஷ்யா கடும் ஆட்சேபனைகளைத் தெரிவித்து வந்தது. அதைப் பொருட்படுத்தாமல் உக்ரேன் தொடர்ந்து மேற்கொண்டு வந்த நடவடிக்கைகள் காரணமாகவே ரஷ்யா தனது படைகளை உக்ரேன் எல்லைக்குள் இறக்கியது.

21.02.2022 அன்ற ரஷ்யப்படைகள் உக்ரேனின் தென் பகுதிக்குள் ஊடுருவுகின்றது. 22.02.2022 ரஷ்யக் கூட்டமைப்புப் பேரவை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுக்கு நாட்டுக்கு வெளியே படை நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதி வழங்குகிறது.

24.02.2022 அன்று ரஷ்யா போர்ப் பிரகடனம் மேற்கொண்டு உக்ரேனிய தலைநகர் “கீவ்” உட்பட முக்கிய நகரங்கள் மீது எறிகணை வீச்சுகளைத் தொடர்கிறது. எறிகணை வீச்சுகள் தொடங்கி இரண்டு மணித்தியாலங்களில் பெருமளவு ரஷ்யப் படைகள் உக்ரேனின் தென் பகுதியில் பரவலாகத் தரையிறங்குகின்றன.

இப்படை நடவடிக்கை அமெரிக்காவைக் கடும் சினம் கொள்ள வைக்கிறது. கடுமையான பதில் நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போவதாக எச்சரிக்கை விடுக்கிறது. ஏனெனில் இப்படையெடுப்பு மேற்கு ஐரோப்பாவில் வலுவான படைத்தளம் ஒன்றை அமைக்கும் அதன் கனவுகளை முறியடிக்கும் விதத்தில் அமைந்திருந்தது. அது மட்டுமின்றி நேட்டோ உக்ரேனில் நிலை கொள்வதன் மூலம் ரஷ்யாவின் இராணுவ நகர்வுகளைக் கண்காணிக்க முடியுமெனவும் நம்பியது.

எனவே உக்ரேனுக்கு உதவியாக நேட்டோ படைகள் இறங்கக் கூடுமெனவும் அதனைத் தொடர்ந்து மூன்றாம் உலக யுத்தம் வெடிக்கக்கூடுமெனவும் ஒரு அச்சம் எழுந்தது.

அமெரிக்காவோ, நேட்டோவோ நேரடியாகப் படை நடவடிக்கைகளில் ஈடுபடாவிட்டாலும் ரஷ்யாவுக்கு எதிராக மேற்கு நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டன.

03.03.2022 அன்று ஐக்கிய நாடுகள் சபையில் ரஷ்யா படை நடவடிக்கைகளைக் கைவிட்டு உக்ரேனை விட்டு வெளியேற வேண்டுமென 141 நாடுகளின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்துக்கு எதிராக 5 நாடுகளே வாக்களித்தன.

கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் வான்பரப்பில் ரஷ்ய விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டது. அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்பன ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதித்ததுடன், சகல நிதிப் பரிமாற்றங்களும் ரத்துச் செய்யப்பட்டன மேலும் உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, பிரிட்டன் ஆகியன நிதிப் பரிவர்த்தனைகளை இரத்துச் செய்து விட்டன.

மேலும் அமெரிக்கா, நேட்டோ ஆகியன உக்ரேனுக்குப் பெருமளவு நவீன ஆயுதங்களையும் யுத்த தளபாடங்களையும் வழங்கியுள்ளதுடன், படைத்துறைப் பயிற்சி, இராணுவ ஆலோசனைகள் என்பனவற்றையும் கொடுத்து வருகின்றன.

அதன் காரணமாக ரஷ்யாவின் எரிபொருள் வர்த்தகத்தில் தொய்வு ஏற்பட்டதுடன், பங்குச் சந்தையும் 10 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.

இவற்றின் காரணமாக ரஷ்யா தனது நடவடிக்கைகளை எவ்விதத்திலும் குறைத்துவிடவில்லை. ரஷ்யா ஐரோப்பாவுக்கு வழங்கி வந்த எரிவாயு விநியோகத்தை நிறுத்தி விட்டதால் அந்த நாடுகள் பெரும் நெருக்கடிகளை எதிர்கொள்கின்றன. எரிபொருள் விலையுயர்வு காரணமாகப் பல நாடுகள் திக்குமுக்காடுகின்றன.

இன்னொருபுறம் உக்ரேனின் பல நகரங்கள் ரஷ்யாவால் கைப்பற்றப்பட்டு விட்டன. ஐரோப்பாவின் பெரும் அணுமின் நிலையங்கள் ரஷ்யாவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. உக்ரேனுக்குப் பெரும் வருவாயைக் கொடுக்கும் தானிய ஏற்றுமதிக்கான முக்கிய துறைமுகங்கள் ரஷ்யாவால் கைப்பற்றப்பட்டு விட்டன.

போர் தொடங்கி 100 நாட்களில் உக்ரேனின் 20 வீதமான பகுதிகள் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளன.

எனினும் சில நாட்களின் முன்பு ரஷ்யாவால் கைப்பற்றப்பட்டிருந்த கார்கில், டொனஸ்டல் ஆகிய பகுதிகளை விட்டு ரஷ்யா பின்வாங்கி விட்டதாகவும் அவற்றை உக்ரேன் படைகள் மீளக் கைப்பற்றி விட்டதாகவும் சில செய்திகள் வெளிவந்துள்ளன. இது ரஷ்யா சந்திக்கிற ஒரு பின்னடைவா அல்லது ஒரு பெரும் பாய்ச்சலுக்கான தந்திரோபாயப் பின்வாங்கலா என்பது இனித்தான் தெரியவரும்.

அதேவேளையில் ரஷ்யாவின் ஆயுதங்கள் பெரும் போருக்கானவையெனவும் நேட்டோவின் ஆயுதங்கள் சிறு போர்களுக்கு உகந்தவையெனவும் ரஷ்யா நேரடியன தோல்வியைத் தவிர்க்கவே பின்வாங்கியுள்ளதெனவும் மேற்கு நாட்டு ஊடகங்கள் பிரசாரம் செய்கின்றன.

ஆனால் இப்போரில் ரஷ்யா உக்ரேனை விட்டு வெளியேறுமானால், மேற்கு ஐரோப்பாவில் அமெரிக்கா நேட்டோ என்பவற்றின் கை ஓங்கி விடுமென்பதால் ரஷ்யா இப்போரை விட்டு வெளியேறுவதற்கான சாத்தியங்கள் குறைவாகவே உள்ளன.

உக்ரேனின் பின்னால் மேற்கு நாடுகளும் ரஷ்யாவின் பின்னால் சீனா உள்ளிட்ட கிழக்கு நாடுகளும் உள்ளன. எனவே இப்போரில் எந்தவொரு தரப்பும் உடனடியாக வெற்றி ஈட்ட முடியாதெனவும், இது நீண்ட காலம் தொடருமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

உக்ரேன் கிழக்கேயும், வடகிழக்கிலும் ரஷ்யாவை எல்லைகளாகக் கொண்ட நாடாகும். மேலும் வடக்கே பெலருஸ், மேற்கே போலந்து, ஸ்லாவாக்கியா, ஹங்கேரி, தெற்கே ருமேனியா, மல்தோவா, கருங்கடல் என்பனவும் அதன் எல்லைகளாகும். அதன் அமைவிடம் காரணமாக இதன் வரலாறு முழுவதுமே போர்களாலும் அந்நிய ஆக்கிரமிப்புகளாலும் நிறைந்துள்ளது.

பல்வேறு படையெடுப்புகளாலும் அந்நிய ஆக்கிரமிப்பாலும் பிளவுண்டு போயிருந்த இந்த நாடு 13ம் நூற்றாண்டில் மங்கோலியப் பேரரசின் படையெடுப்பை அடுத்து பேரழிவைச் சந்தித்தது. மங்கோலியப் பேரரசின் வீழ்ச்சியையடுத்து கொசாக்கியப் பேரரசு உருவாகியது. 17ம், 18ம் நூற்றாண்டில் கொசாக்கிய ஆட்சியில் சுதந்திர நாடாக விளங்கிய இது போலந்து, ரஷ்யா ஆகிய நாடுகளால் இரு பகுதிகளாகக் கைப்பற்றப்பட்டு ஆட்சி செய்யப்பட்டு வந்தது.

1917ல் ரஷ்ய ஜார் ஆட்சி வீழ்த்தப்பட்டு சோவியத் ஒன்றியம் உருவானபோது உக்ரேனிய மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையில் உக்ரேனிய மக்கள் குடியரசு உதயமானது, 1922ல் உக்ரேன் சோவியத் ஒன்றியத்துடன் தன்னை இணைத்துக்கொண்டு அதன் உறுப்பு நாடானது. அக்காலப்பகுதியில் உக்ரேன் தானிய உற்பத்தி, கைத்தொழில் வளர்ச்சி, அணுமின் உற்பத்தி ஆகிய துறைகளில் வேகமாக முன்னேறிப் பொருளாதார வளமுள்ள நாடாக உருவாகியது.

1991ல் சோவியத் ஒன்றியம் உடைந்ததையடுத்து உக்ரேன் தன்னைத் தனி நாடாகப் பிரகடனப்படுத்தியது.

அதையடுத்து உக்ரேன் தனது பொருளாதாரத்தை மேற்குலக மயப்படுத்த ஆரம்பித்தது. ஊழல், மோசடி, வேகமான தனியார் மயமாக்கல் என்பன காரணமாக உக்ரேன் கடும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டது. கடன்களுக்காகவும், வட்டி கட்டுவதற்காகவும் 17 பில்லியன் தேவைப்பட்ட நிலையில் அது சர்வதேச நாணய நிதியத்தை நாடியது. சர்வதேச நாணய நிதியம் உக்ரேனின் வர்த்தகத்தைத் திறந்து விடுவது உட்படக் கடும் நிபந்தனைகளை விதித்தது. தானிய ஏற்றுமதி உக்ரேனின் பிரதான வருவாய் என்பதால் உக்ரேன் அந்த நிபந்தனைகளை ஏற்க மறுத்தது. இந்த நிலையில் ரஷ்யா 15 பில்லியன்களை வழங்கியதையடுத்து அதிபர் விக்டர் யானுகொவிச் மேற்குலகுடனான வர்த்தக உறவுகளைத் துண்டித்தார்.

அதையடுத்து நாடு பரந்த போராட்டங்கள் வெடித்தன. சில வருடங்கள் இடம்பெற்ற போராட்டங்களின் பின்பு அதிபர் விக்டர் யானுகோவிச் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

புதிய ஆட்சியாளர்கள் ரஷ்யாவுடனான் உறவுகளை மெல்ல மெல்ல குறைத்து மேற்குலகுடனான உறவுகளை வலுப்படுத்தினர்.

அதன் காரணமாக ரஷ்யாவால் குருசேவ் காலத்தில் உக்ரேனுக்கு வழங்கப்பட்ட கருங்கடல் துறைமுக நகரமான கிரிமியாவை ரஷ்யா மீண்டும் 2014 கைப்பற்றிக் கொண்டது. 2021ல் உக்ரேனில் ரஷ்ய மக்கள் செறிந்து வாழும் டந்தன், சிலுகனாய் ஆகிய பிரதேசங்கள் தம்மைச் சுதந்திரக் குடியரசுகளாகப் பிரகடனப்படுத்தின. அவற்றை ரஷ்யா தனிநாடுகளாக அங்கீகரிகத்தது.

ஏற்கனவே உக்ரேனிய அதிபர் வெலொடிமிர் ஜெலன்ஸ்கி மேற்கு நாடுகளுடன் உறவை வலுப்படுத்தி வந்த நிலையில் தொடர்ந்து நேட்டோவில் இணையும் முயற்சிகளை மேற்கொண்டார்.

அம்முயற்சிகளுக்கான ரஷ்ய ஆட்சேபனைகள் பொருட்படுத்தப்படாத நிலையில் ரஷ்யா 24.05.2022 தனது படைகளை உக்ரேனுக்குள் இறக்கியது.

போர் தொடங்கி 100 நாட்கள் கடந்து விட்டபோதிலும் இன்னும் அது தொடர்கிறது. முடிவடைவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.

இப்போரில் உக்ரேன் தோற்கடிக்கப்படுமானால் வெலொடிமிர் ஸெலன்ஸ்கி ஆட்சியிலிருந்து விரட்டப்படுவார். உக்ரேனின் தானிய உற்பத்தி வளம், எரிபொருள் வளம், அணுமின் உற்பத்தி வளம் என்பன ரஷ்யாவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும். உக்ரேனை மையமாக வைத்து ரஷ்யா, முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகள், கிழக்க ஐரோப்பிய நாடுகள் என்பனவற்றைத் தனது கண்காணிப்பு வலயத்திற்குள் கொண்டு வரும் அமெரிக்கக் கனவு சிதைக்கப்பட்டு விடும்.

அதேவேளை ரஷ்யா உக்ரேனை விட்டு வெளியேறுமானால் அதன் கருங்கடல் போக்குவரத்து கேள்விக்குள்ளாக்கப்படும். மேலும் அதன் பிரதான ஏற்றுமதி வருவாய்களான மசகு எண்ணெய், எரிவாயு என்பனவற்றின் விநியோகப் பாதைகளின் இடையூறுகள் ஏற்படும். அது மட்டுமின்றி நேட்டோ படைகள் ரஷ்ய எல்லையிலேயே நிலை கொண்டுவிடும்.

இது அடிப்படையில் ரஷ்ய உக்ரேன் போர் என்பதைவிட ரஷ்ய அமெரிக்கத் தலைமையிலான மேற்குலகப் போர் என்பதே பொருத்தமாக இருக்கும்.

எனவே இப்போர் எந்தத் தரப்பும் உடனடி வெற்றிகாண முடியாதவாறு நீண்டு செல்லும் என்றே கருதப்படுகிறது.

எனினும் அண்மையில் ரஷ்யா போர் நிறுத்தத்தை மேற்கொண்டு தான் கைப்பற்றிய நான்கு பிரதேசங்களில் ரஷ்யாவுடன் இணைவதா இல்லையா என்பதை உறுதி செய்யும் முகமாக பொதுசன வாக்கெடுப்பை நடத்துகிறது. இவை ரஷ்ய மக்கள் அதிகமாக கொண்ட பிரதேசங்களாதலால் சர்வஜனவாக்கெடுப்பில் ரஷ்யா வெற்றியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றில் இரு பிரதேசங்கள் ஏற்கனவே உக்ரேனின் தலைமையை ஏற்க மறுத்து சுதந்திர நாடுகளாகப் பிரகடனப்படுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

எப்படியிருப்பினும் அமெரிக்கத் தரப்போ உக்ரேனோ இப்போரை முடிவுக்குக்கொண்டுவர விருப்பங்கொண்டுள்ளதற்கான எவ்வித அறிகுறியும் தென்படவில்லை. எனவே நீண்டகால ஒரு போரை உலகம் இப்பிரதேசத்தில் எதிர்பார்க்கவேண்டியுள்ளது.

அருவி இணையத்துக்காக :- நா.யேகேந்திரநாதன்.

27.09.2022


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: அமெரிக்கா, உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE