Thursday 23rd of May 2024 01:11:08 PM GMT

LANGUAGE - TAMIL
.
மக்களைப் பலியாடுகளாக்கும் இடைக்கால வரவு செலவுத் திட்டம் - நா.யோகேந்திரநாதன்

மக்களைப் பலியாடுகளாக்கும் இடைக்கால வரவு செலவுத் திட்டம் - நா.யோகேந்திரநாதன்


இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் நாடாளுமன்றத்தில் இடைக்கால வரவு செலவுத் திட்ட ஆலோசனைகளை முன்வைத்து உரையாற்றும்போது அவ்வாலோசனைகள் சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகளுக்கு ஏற்ற வகையிலேயே முன்வைக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார். முக்கியமாக அரச செலவினங்களை மட்டுப்படுத்தி வருமானத்தை அதிகரிக்கும் வகையில் எதிர்கால நடவடிக்கைகள் அமையுமெனவும் நட்டத்தில் இயங்கும் அரச, அரச சார்பு நிறுவனங்கள் மறுசீரமைப்புக்கு உட்படுத்தப்படுமெனவும் அவர் தெரிவித்தார். அதேவேளையில் வாற் எனப்படும் பெறுமதி சேர் வரியும் 12 வீதத்திலிருந்து 15 வீதமாக உயர்த்தப்பட்டுள்ளதுடன், 18 வயதுக்கு மேற்பட்ட எல்லோரும் இறைவரித் திணைக்களத்தில் பதிவு செய்யப்படுவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்னொருபுறம் சில கண்துடைப்பு நடவடிக்கைகளாக நஷ்டமடைந்த சிறு விவசாயிகளின் கடன்கள் ரத்துச் செய்யப்படுமெனவும் சமுர்த்தி உதவி பெறுவோர் உட்பட பொது உதவிகளைப் பெறுவோர், கர்ப்பிணிப் பெண்கள் ஆகியோருக்கு வழங்கப்படும் உதவித் தொகைகள் அதிகரிக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில் எரிபொருள், எரிவாயு, அரிசி, கோதுமை உட்பட மனித வாழ்வுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் தற்சமயம் மக்களால் சமாளிக்க முடியாதளவுக்கு உயர்ந்து விட்டன. பல குடும்பங்கள் உணவைக்கூட ஒரு நேரம் அல்லது இரு நேரங்கள் மட்டுமே உண்ணுமளவுக்கு வறுமையில் தள்ளப்பட்டுள்ளன. ஆனால் இந்த இடைக்கால வரவு செலவுத்திட்ட ஆலோசனைகளில் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவது பற்றியோ அல்லது எதிர்காலத்தில் அவற்றைக் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் பற்றியோ எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனவே மக்கள் முகம் கொடுக்கும் நெருக்கடிகளுக்குத் தீர்வுகள் எதுவும் முன்வைக்கப்படாத நிலையில் அரசாங்கம் மக்களின் கழுத்தைத் திருகித் தான் எப்படி நெருக்கடிகளை எதிர்கொள்வது என்பது பற்றியே கூடுதலாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி என்பன முன்வைக்கும் நிபந்தனைகளில் முக்கியமானவை அரச செலவினங்களைக் குறைத்தல், தனியார் முதலீடுகளை ஊக்குவித்தல் என்பனவாகும். அவை இரண்டையும் அமுல்படுத்தும் வகையிலேயே நட்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைத்தல் என்ற கருத்து ஜனாதிபதியின் உரையில் முன்வைக்கப்பட்டுள்ளது.

நட்டமடையும் நிறுவனங்களை மறுசீரமைத்தல் என்பது நியாயமான நடவடிக்கை என்பதை எவரும் மறுத்துவிட முடியாது. ஆனால் இவர்கள் எப்படி மறுசீரமைக்கப் போகிறார்கள் என்பது சில அமைச்சர்களின் உரைகளிலிருந்து நாம் புரிந்துகொள்ள முடியும்.

ஒரு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவர் உரையாற்றும்போது, இலங்கையில் 13 இலட்சம் அரச ஊழியர்கள் இருப்பதாகவும் இவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் எவ்வித வேலையுமின்றி ஊதியம் பெறுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இவர்கள் சாரதிகள், அலுவலக உதவியாளர்கள் போன்ற சிற்றூழியர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார். தங்கள் அலுவலகத்துக்கே வராமல் பல இலட்சம் ரூபா சம்பளம், ஆடம்பரவாகனம், எரிபொருள் மானியம் என்பனவற்றை அனுபவிக்கும் நிறுவனத் தலைவர்கள், பணிப்பாளர்கள் போன்ற உயர் அதிகாரிகள் இவரின் கண்களுக்குத் தெரிவதில்லை.

சக்தி வளத்துறை அமைச்சர் காஞ்சன விஜயசேகர பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் ஒரு முக்கிய பிரிவில் 4,500 பேர் பணியாற்றுவதாகவும் அந்த வேலையை 500 பேர் மட்டுமே சிரமமின்றிச் செய்யமுடியுமெனவும் தெரிவித்துள்ளார்.

இவர்கள் இந்த உரைகள் நிச்சயமாக வெகு விரைவில் அரச நிறுவனங்கள், அரச கூட்டுத்தாபனங்கள் என்பனவற்றில் ஆட்குறைப்பு செய்யப்படப் போகிறது எனவும் அதை நியாயப்படுத்தவே இப்படியான கருத்துகள் வெளியிடப்படுகின்றன எனக் கருத வேண்டியுள்ளது.

ஆனால், ஆயுதப் படைகளில் இப்போது 2 இலட்சம் பேர் பணியாற்றுகின்றனர். எந்த நாட்டுடனும் சண்டையிடாத, எந்தவொரு நாட்டாலும் அச்சுறுத்தல் இல்லாத இந்தச் சின்னஞ்சிறு நாட்டுக்கு ஏன் இவ்வளவு பெரும் ஆயுதப் படையென இதுவரை எந்தவொரு அமைச்சரும் கேள்வி எழுப்பியதில்லை. அரச செலவினங்களைக் குறைக்கப் போவதாகக் கூறும் ஜனாதிபதியோ வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டில் ஆகக் கூடிய நிதியைப் பாதுகாப்புப் பிரிவுக்கே வழங்கியுள்ளார். எனவே அரச செலவினங்களைக் குறைத்தல் என்பது சாதாரண மக்களையே இலக்கு வைக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளமுடியும்.

இதன் விளைபலன் மிகவும் ஆபத்தாகவே முடியும். ஒரு குடும்பத்தில் உழைப்பவர் ஒருவராயிருந்தால் அவர் வேலையிழக்கும்போது அக்குடும்பமே பட்டினிச் சாவை எதிர்நோக்க வேண்டி வரும். உழைப்பவர் இருவராக இருந்து ஒருவர் வேலையிழந்தால் அவரும் மற்றவர் உழைப்பிலேயே தங்கி வாழவேண்டிவரும். இப்படியான நிலைமைகள் வளர்ச்சியடையும் போது வீதிவீதியாக மக்கள் இறந்து விழும் நிலையே உருவாகும். இன்னொருபுறம் களவு, கொள்ளை, கொலை என்பன பெருகுவதையும் தடுக்கமுடியாது.

அடுத்த அரச செலவினம் கல்வி, சுகாதாரம் என்பனவாகும். இலவசக் கல்வி. இலவச மருத்துவம் எனக் கூறப்பட்டாலும் தனியார் கல்வி நிலையங்களும் மருத்துவமனைகளும் பெருகி விட்டன. அரச செலவினத்தைக் குறைத்தல் என்ற பேரில் கல்வி, சுகாதாரத்துக்கான நிதி மட்டுப்படுத்தப்படும்போது அரச கல்வி நிலையங்களும் மருத்துவமனைகளும் அவற்றுடன் போட்டியிட முடியாதவாறு பின் தங்க வேண்டிவரும். இதன்காரணமாக ஏழை மக்களுக்குப் போதுமான கல்வி, மருத்துவ வசதி கிடைக்காமலே போய்விடும்.

அடுத்து நட்டமடையும் அரச நிறுவனங்களை மறு சீரமைத்தல், ஏயர் லங்கா, மின்சார சபை, பெற்றோலியக் கூட்டுத்தாபனம். எரிவாயு விநியோகம், நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை என்பனவும் முக்கியமானவையாகும். இவைகள் ஏன் நட்டமடைகின்றன என்பதை கண்டறிந்து அவற்றை மறுசீரமைப்பது சரியான முறையாகும்.

இவை நட்டமடைவதற்குக் காரணம் லஞ்சம், ஊழல், மோசடி, முறையற்ற நிர்வாகம் என்பனவே என கோப் மற்றும் கோபா குழுக்களின் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. அவற்றைக் கண்டறிந்து களைவதற்கு ஆட்சியாளர்கள் தயாரில்லை. மாறாக அவற்றைத் தனியார் நிறுவனங்களுக்கு விற்கும் முயற்சிகளே மேற்கொள்ளப்படுகின்றன. தனியார் நிறுவனம் எனப்படும்போது வெளிநாட்டுப் பெரும் நிறுவனங்களாகும். இதன் விளைவு அவர்கள் எமது நீர், மின்சாரம், எரிபொருள், எரிவாயு, விமானப் போக்குவரத்து போன்ற தேவைகளையும் அவற்றின் விலைகளையும் தீர்மானிப்பவர்களாகவேயிருப்பர். அப்படியானால் இலங்கையின் அரசியல் தலைவர்கள் கூறும் நாட்டின் இறைமைக்கு என்ன நேரும்.

எனவே இந்த இடைக்கால வரவு செலவுத்திட்ட ஆலோசனைகள் மக்களின் நலன்களைப் பற்றியோ, மக்கள் இன்று அனுபவிக்கும் தாங்கமுடியாத இடர்களிலிருந்து விடுவிப்பது பற்றியோ எவ்வித அக்கறையும்டி காட்டப்படவில்லை. மாறாக நாட்டின் அந்நியச் செலாவணிக் கையிருப்பை அதிகரிக்கும் வகையில் சர்வதேச நாணய நிதியத்தைத் திருப்தி செய்யும் நோக்கமே முனைப்புப் பெறுகிறது.

தேசிய உற்பத்திகளை பெருக்குவதன் மூலம் அதாவது செயலிழந்துள்ள காங்கேசந்துறை சீமெந்து தொழிற்சாலை, பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை, பண்டாரவன்னியன் ஓட்டுத் தொழிற்சாலை, வாழைச்சேனை கடதாசித் தொழிற்சாலை போன்ற நிறவனங்களை மீள இயக்குவதன் மூலம் அந்நியச் செலாவணிக் கையிருப்பை அதிகரிப்பது பற்றி அக்கறை காட்டப்படவில்லை.

எனவே இந்த இடைக்கால வரவு செலவுத்திட்டம் மக்கள் நலன்களை விட மேற்குலகப் பொருளாதார வலைப்பின்னலுக்குள் இலங்கையைப் பிணைப்பதற்கே முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதே அடிப்படை உண்மையாகும்.

அருவி இணையத்துக்காக :- நா.யோகேந்திரநாதன்

06.09.2022


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: ரணில் விக்கிரமசிங்க, இலங்கைபிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE