ஒரு வீட்டை கட்டுவதென்றால் சும்மாவா.. ? அதனால்த்தான் சொல்வார்கள் வீட்டைக் கட்டிப்பார் கல்யாணத்தை பண்ணிப்பார் என்று. ஒரு வீட்டை கட்டுவதற்கு எத்தனை திட்டங்கள், எத்தனை ஆலோசனைகள் அதுமட்டுமல்லாமல் எத்தனை வாரங்கள், மாதங்கள் எடுக்கும் ஆனால் தற்போது பொறியியலாளர்கள் புதிய முறையை கையாண்டு 24 மணி நேரத்தில் ஒரு வீட்டை அமைத்து விடுகிறார்கள் அதாவது முப்பரிமாண அச்சியந்திரம் இருந்தால் 24 மணி நேரத்திற்குள் ஒரு வீட்டை கட்டி முடிக்க முடியும்.
ஜெர்மனி, சீனா, சவுதி போன்ற பல நாடுகளில் வீடு, அலுவலகம், வர்த்தக வளாகம் போன்றவற்றை பெரிய முப்பரிமாண அச்சியந்திரங்கள் மூலம் பரிசோதனை முறையில் கட்டி அசத்தி இருக்கின்றனர் பொறியாளர்கள்.
அதன் தொடர்ச்சியாக லத்தீன் அமெரிக்க நாடு ஒன்றில் விரைவில் பல வீடுகள் அடங்கிய ஒரு குடி இருப்பையே முப்பரிமாண அச்சு முறையில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
முப்பரிமாண இயந்திரம் காங்கிரீட் கலவையை ஒரு குழாய் வழியாக மென்பொருள் வழிகாட்டும் வடிவத்தில் ஊற்றுகிறது. கதவுகள் ஜன்னல்கள் போன்றவற்றுக்கு இடைவெளி விட்டு வீட்டின் சுவர்களை 24 மணி நேரத்திற்குள் வல்கன் 2 இயந்திரம் கட்டி முடித்துவிடுகிறது. பின் பணியாளர்கள் வந்து ஜன்னல் கதவுகளை மாட்டிவிட வீடு குடியேறுவதற்குத் தயாராகி விடுகிறது.
நியூ ஸ்டோரி என்ற லாப நோக்கற்ற அமைப்பு பியூஸ் புராஜக்ட் என்ற வடிவமைப்பு நிறுவனம் மற்றும் ஐகான் என்ற கட்டுமான நிறுவனம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியே இந்த திட்டம்.
மாதம் குறைந்த வருவாய் உள்ள எளிய குடும்பங்களுக்கு 350 சதுர அடியில் வீடுகளை கட்டுவது தான் திட்டம். இதற்கு ஐகான் நிறுவனத்தின் வல்கன் 2 என்ற கட்டடங்களுக்கான முப்பரிமாண அச்சு இயந்திரம் பயன்படுத்தப் படவுள்ளது.
Category: தொழில்நுட்பம், புதிது
Tags: