சீனாவின் குவாவி 5-ஜி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டாம் என அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கனடாவை வலியுறுத்தினார்.
5-ஜி தொழில்நுட்பத்தைப் பாவிப்பது அமெரிக்கா - கனடா நாடுகளுக்கிடையிலான உளவுத்துறை தகவல் பகிர்வுக்கு ஆபத்தானது எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
5-ஜி தொழில்நுட்பத்தின் ஊடாக கனேடியர்களின் தனிப்பட்ட தகவல்களை சீனா பெற்றுக்கொள்ள முடிவும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
குவாவி 5-ஜி தொழில்நுட்பத்தை கனடா தொடர்ந்து பயன்படுத்தலாமா? என்பது குறித்து ஆராயப்படும் என கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தேர்தலுக்கு முன்னர் கருத்து வெளியிட்டிருந்தார்.
எனினும் ஒக்டோபர் 21 தேர்தலில் வெற்றி பெற்றதில் இருந்து அவர் இந்த விவகாரம் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் எங்கள் நெருங்கிய கூட்டாளிகள் சீனாவின் தொழில்நுட்பத்தை அனுமதிப்பது உளவுத்துறை பகிர்வில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ரொபேர்ட் ஓ பிரையன் கனடா - ஹாலிபாக்ஸில் நேற்று நடந்த பாதுகாப்பு மாநாட்டின்போது தெரிவித்தார்.
சீனாவின் குவாவி தொழில்நுட்பத்தை கனடா அல்லது பிற மேற்கத்திய நாடுகளின் பயன்படுத்தும்போது அந்நாடுகளின் பிரஜைகளின் ஒவ்வொரு தனிப்பட்ட தகவல்களையும் அதனூடாக சேகரிக்க முடியும்.
தங்கள் தொழில்நுட்பத்தின் ஊடாக அவர்கள் ஒவ்வொரு கனேடியரைப் பற்றியும் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளப் போகிறார்கள் எனவும் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கூறினார்.
அமெரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் 5-ஜி தொழில்நுட்பத்தை பயன்படுத்த தடை உள்ளது. பிரிட்டன் இத்தொழில்நுட்பம் குறித்த கட்டுப்பாடுகளுடன் செயற்படுகிறது.
Category: தொழில்நுட்பம், பகுப்பு
Tags: