Friday 17th of May 2024 06:27:27 AM GMT

LANGUAGE - TAMIL
சென்னைப் புத்தகக்காட்சியில் சர்ச்சையான ’பத்திரிகையாளர் அரங்கு அகற்றம்’!

சென்னைப் புத்தகக்காட்சியில் சர்ச்சையான ’பத்திரிகையாளர் அரங்கு அகற்றம்’!


சென்னையில் நடைபெற்றுவரும் 43ஆவது புத்தகக்காட்சியில் அரசுக்கு எதிரான ஊழல் எதிர்ப்பு வெளியீடுகளைக் காட்சிப்படுத்தியதால், அதிலிருந்து ’பத்திரிகையாளர்’ ஒருவரின் காட்சியரங்கு அகற்றப்பட்டுள்ளது. இதற்கு பல கட்சிகளின் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (BAPASI) சார்பில் நடத்தப்படும் சென்னைப் புத்தகக்காட்சியில், அண்மைக்காலமாக ஊடக நிறுவனங்களின் காட்சியரங்குகள் அதிகரித்துவருகின்றன. பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பதிப்புத்துறையில் ஈடுபட்டுவரும் பதிப்பகத்தாருக்குகூட, இங்கு அரங்குகள் கிடைக்காதநிலையில், அரசியல் கட்சிகளுக்கு இணையான அதிகாரத்தைக் கொண்ட பெரிய ஊடக நிறுவனங்களின் பதிப்பகங்களுக்கு எளிதாக அரங்குகள் ஒதுக்கப்படுவது தொடர்ந்துவருகிறது. இதில் ‘செல்வாக்கு’ மிக்க சில ஊடகத்தினருக்கும் அரங்குகள் ஒதுக்கப்படுவதும் உண்டு. இந்தவகையில், நக்கீரன் புலனாய்வு ஏட்டில் நீண்ட காலம் பணியாற்றியவரான அன்பழகன்- நக்கீரன் அன்பு என்பவர், மக்கள் செய்தி மையம் எனும் பெயரில் அரசாங்கத்தின் ஊழல்களை அம்பலப்படுத்தும் செய்திகளை வெளியிட்டுவருகிறார். அவ்வப்போது இவர் வெளியிடும் செய்திகள், வெளியீடுகள் ஆகியவை அரசியல் களத்தில் சர்ச்சையானதும் உண்டு.

இதேவேளை, அரசாங்கத்தின் உயர்பொறுப்புகளில் இருக்கும் இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள், பிற அதிகாரிகள், தனி நபர்கள், அவர்களின் குடும்பத்தினர் குறித்து, செய்திநெறிக்குப் புறம்பாகவும் அவதூறாகவும் செய்திவெளியிடப்பட்டதாக குற்றச்சாட்டுகளும் இருந்துவருகின்றன. பத்திரிகையாளர் என்கிற பெயரில் தமிழ்நாட்டில் மிரட்டி பணம்பறிப்பது, வேறு ஆதாயம் பெறுவது போன்றவற்றில் ஈடுபடுவோர் அவ்வப்போது கைதுசெய்யப்படுவது தொடர்ந்துவரும் நிலையில், கடந்த வாரம் வழக்கொன்றில் உயர் நீதிமன்றமானது, போலி பத்திரிகையாளர் அமைப்புகள், நபர்கள் குறித்த விவரத்தை அளிக்குமாறு தமிழ்நாட்டு அரசுக்கு உத்தரவிட்டது.

இந்த நிலையில், அரசாங்கத்தின் மீதான ஊழல் புகார்களை சான்றுகளுடன் வெளியிட்டுள்ளதாகக் கூறப்படும் அன்பழகன் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. புத்தகக்காட்சியில் அவருடைய காட்சியரங்கத்தை காட்சியைநடத்தும் சங்கத்தினர் அகற்றவைத்தபோது, இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மோசமான வார்த்தைப் பிரயோகமும் இடம்பெற்றுள்ளது. அதையடுத்தே பிரச்னை காட்சி மைதானம் அருகிலுள்ள சைதாபேட்டை காவல்நிலையம்வரை போயுள்ளது. சென்னைப் புறநகரில் வசித்துவரும் அன்பழகன், நேற்று அதிகாலையில் அவருடைய வீட்டில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர் மீது பிணையில் வெளிவரமுடியாத வழக்குப் பிரிவும் சேர்க்கப்பட்டுள்ளது.

புத்தகக்காட்சியில் மாறுபட்ட, முரண்பட்ட கருத்துநிலை புத்தகங்கள் ஒரே நேரத்தில் காட்சிப்படுத்தப்படுவதில் இதுவரை எந்த சிக்கலும் ஏற்பட்டதில்லை. முதல்முதலாக சட்டவிரோதமில்லாத, அரசால் தடைசெய்யப்படாத புத்தகம் ஒன்றுக்காக காட்சியிலிருந்து ஒரு அரங்கே அகற்றப்படுவது இப்போதுதான் நிகழ்ந்திருக்கிறது. கருத்துரிமை ஆதரவாளர்கள், கலைஞர்கள், இலக்கியவாதிகள் பலரும் அரசின் இந்த நடவடிக்கையை கடுமையாகக் கண்டித்துள்ளனர். குறிப்பாக, காட்சியரங்க அகற்றம் தொடர்பில் புத்தக சங்கத்தினர் அளித்திருந்த விளக்க வாசகம், கடுமையான கண்டனத்துக்கும் எள்ளலுக்கும் இலக்காகியுள்ளது.

பல தரப்பிலிருந்தும் எதிர்ப்பு வந்தபோதும் சங்கத்தின் முதன்மைப் பொறுப்பாளர்கள் அமைதிகாத்துவருகின்றனர்.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE