Friday 17th of May 2024 05:29:04 AM GMT

LANGUAGE - TAMIL
முல்லைப்பெரியாறு - கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த எதிர்ப்பு!

முல்லைப்பெரியாறு - கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த எதிர்ப்பு!


முல்லைப் பெரியாறு விவகாரத்தில் கேரள மாநில அரசாங்கத்துடன் தமிழ்நாட்டு அரசின் தரப்பில் இனி பேச்சுவார்த்தை நடத்தவேகூடாது என அப்பகுதி விவசாயிகள் மற்றும் பாசனதாரர்கள் வலியுறுத்திவருகின்றனர். இந்நிலையில், பெரியாற்றில் புதிய அணை கட்ட அனுமதிப்பது குறித்து கேரள அரசுடன் எந்தக் காலத்திலும் பேச்சு நடத்தமாட்டோம் என்பதை தமிழக ஆட்சியாளர்கள் உறுதிபட அறிவிக்கவேண்டும் என்று அ.தி.மு.க.வின் கூட்டணிக் கட்சியான பா.ம.க.வும் கூறியுள்ளது.

இது குறித்து அக்கட்சியின் நிறுவனர் இராமதாசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ” முல்லைப்பெரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கு தமிழக அரசின் ஒப்புதல் கோரி பேச்சு நடத்தப்படும் என்று கேரள அரசு அறிவித்திருக்கிறது. இது முல்லைப்பெரியாறு விவகாரத்தில் தமிழக அரசை ஏமாற்றுவதற்கு கேரளம் விரிக்கும் மாயவலை” என்று குறிப்பிட்டுள்ளார்.

” முல்லைப்பெரியாற்றில் தற்போதுள்ள அணைக்கு மாற்றாக புதிய அணை கட்டுவதற்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்காக சுற்றுச்சூழல்தாக்க அறிக்கை தயாரிப்பதற்கான புள்ளிவிவரங்களைத் திரட்டுவதற்கான ஆய்வுகளை கேரள அரசு மேற்கொண்டுவருகிறது. சுற்றுச்சூழல் தாக்க அறிக்கையுடன் தமிழக அரசின் ஒப்புதல் கடிதத்தையும் இணைத்து தாக்கல்செய்தால் மட்டுமே, முல்லைப்பெரியாற்றில் புதிய அணை கட்டுவதற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கமுடியும் என்றும், அவ்வாறு தாக்கல் செய்யப்படாத சூழலில் புதிய அணை கட்ட சுற்றுச்சூழல் அனுமதி அளிக்க முடியாது என்றும் மத்திய அரசு கூறிவிட்டது.

அதனால் வேறு வழியே இல்லாத சூழலில், முல்லைப்பெரியாறு அணை குறித்து தமிழகத்துடன் பேச்சு நடத்தப்போவதாக கேரள நீர்ப்பாசனத்துறையின் தலைமைப் பொறியாளர் கே.எச். சம்சுதீன் கூறியுள்ளார். 123 ஆண்டுகள் பழமையான முல்லைப்பெரியாறு அணை வலுவிழந்து விட்டதால், அதற்கு மாற்றாக புதிய அணை கட்ட வேண்டியதன் தேவையை தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும் என்றும் சம்சுதீன் கூறியுள்ளார். இவை அனைத்தும் தேனில் தோய்த்தெடுத்த நச்சு வார்த்தைகள். இவற்றை நம்பக்கூடாது.

முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்திற்கு கேரள அரசு செய்த துரோகங்களையும், தமிழகத்திற்கு எதிராக செய்த நச்சுப் பிரச்சாரங்களையும் எவரும் எளிதில் மறந்து விட முடியாது. அப்படிப்பட்ட கேரள அரசு, இப்போது முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் பேச்சு நடத்த அழைப்பு விடுப்பதை நம்பி, கேரளத்துடன் தமிழ்நாடு பேச்சு நடத்தினால், தமிழகத்திற்கு தான் பாதிப்பு ஏற்படும்.

இதற்கெல்லாம் மேலாக முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் பேசுவதற்கு எந்த அவசியமும் இப்போது எழவில்லை. 2014-ஆம் ஆண்டு மே மாதம் 7-ஆம் தேதி முல்லைப்பெரியாறு அணை வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம்,‘‘அணை மிகவும் வலிமையாக உள்ளது. அங்கு புதிய அணை கட்டினால் எவ்வளவு வலிமையாக இருக்குமோ, அதைவிட கூடுதல் வலிமையுடன் இப்போதைய அணை உள்ளது. எனவே, புதிய அணை தேவையில்லை. மாறாக அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்’’ என்று ஆணையிட்டிருந்தது. உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து ஐந்தரை ஆண்டுகளாகி விட்ட நிலையில், அணையை வலுப்படுத்தி நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த ஏராளமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு விட்டன. இதற்காக அண்மையில் கூட ரூ.7.85 கோடியை தமிழக அரசு ஒதுக்கியிருக்கிறது. எதிர்பார்ப்பது போன்று அனைத்தும் நடந்தால் இன்னும் சில மாதங்களில் அணையின் நீர்மட்டம் 152 அடியாக உயர்த்தப்படுவதற்கு வாய்ப்புள்ள சூழலில், புதிய அணை குறித்து கேரளத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவது தமிழகத்திற்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தி விடும்.

முல்லைப்பெரியாறு குறித்து கேரளத்துடன் பேச்சு நடத்தும் போதெல்லாம் தமிழகத்திற்கு பின்னடைவு ஏற்படுவதும், பேச்சு நடத்த மறுக்கும்போதெல்லாம் நன்மை நடப்பதும் வாடிக்கையாகும். முல்லைப்பெரியாறு சிக்கலைப் பேசித் தீர்க்க முயலும்படி 2006-ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டதையடுத்து, அப்போதைய தமிழக முதலமைச்சர் கலைஞரும், கேரள முதலமைச்சர் அச்சுதானந்தனும் அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் முன்னிலையில் அந்த ஆண்டு நவம்பர் 29-ஆம் தேதி தில்லியில் பேசினார்கள். அதைத்தொடர்ந்து திசம்பர் 18-ஆம் தேதி இரு மாநில பாசனத்துறை அமைச்சர்களான துரைமுருகனும், பிரேமச்சந்திரனும் பேசினார்கள். இரு கட்ட பேச்சுகளும் தோல்வி அடைந்தன. அதன்பிறகும் அணையை ஆய்வு செய்ய வல்லுநர் குழு அமைக்கவேண்டும் என்ற யோசனையை திமுக அரசு ஏற்றுக்கொண்டதால், பெரியாறு அணை வழக்கின் விசாரணை தேவையின்றி தாமதமானது. இது தமிழகத்தை பாதித்தது.

அதேநேரத்தில் 2011-ஆம் ஆண்டில் முல்லைப்பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசுடன் பேச்சு நடத்த பிரதமர் மன்மோகன்சிங் மூலமாக அப்போதைய கேரள முதலமைச்சர் உம்மன்சாண்டி அழுத்தம் கொடுத்தார். ஆனால், அந்த அழைப்பை அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா நிராகரித்ததால்தான் அடுத்த இரு ஆண்டுகளில் விசாரணை முடிவடைந்து, முல்லைப்பெரியாறு அணை வலிமையாக உள்ளது; அதை இடித்து புதிய அணை கட்டத் தேவையில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. முல்லைப்பெரியாறு விவகாரத்தில் இந்த இரு நிகழ்வுகளையும் ஆட்சியாளர்கள் மனதில் கொள்ள வேண்டும்.

முல்லைப்பெரியாறு அணை மிகவும் வலிமையாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 152 அடியாக உயர்த்தப்பட்டால், நீர்த்தேக்கப் பகுதிகளில் கட்டப்பட்டுள்ள சொகுசு விடுதிகள் மூழ்கிவிடும் என்பதால்தான், அந்த முயற்சியை தடுக்கும் நோக்குடன் புதிய அணை கட்ட கேரள அரசு திட்டமிடுகிறது.” என்றும் இராமதாசு தன் அறிக்கையில் விரிவாகக் கூறியுள்ளார்.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE