Thursday 2nd of May 2024 01:24:53 PM GMT

LANGUAGE - TAMIL
1000 தேசிய பாடசாலைகள் திட்டம் மாகாண அதிகாரங்களை பறிக்கும் சதி!

1000 தேசிய பாடசாலைகள் திட்டம் மாகாண அதிகாரங்களை பறிக்கும் சதி!


நாடளாவிய ரீதியில் ஆயிரம் தேசிய பாடசாலைகளை உருவாக்கப்போவதாகவும் அதற்கேதுவாக ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவிலிருந்தும் மூன்று பாடசாலைகளை தெரிவு செய்யவுள்ளதாகவும் புதிய அரசின் கல்வி அமைச்சர் அறிவித்திருந்த நிலையில் அது தொடர்பிலான வர்த்தமானி அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இது மாகாண சபைகளது அதிகாரங்களை பறிக்கின்ற மற்றுமொரு புதிய சதி முயற்சியென முன்னாள் வடமாகாண கல்வி அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன் எச்சரித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்துக் கருத்து வெளியிடும்போதே இவர் இவ்வாறு எச்சரித்தார்.

மத்திய கல்வி அமைச்சின் இப்புதிய திட்டத்திற்கேதுவாக ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவிலுமிருந்து மூன்று பாடசாலைகளை தெரிவு செய்து அனுப்புமாறு கோரப்பட்டுள்ளது.

வட-கிழக்கு தமிழ் மக்களது நீண்ட ,நெடிய போராட்டத்தின் பலனாக கிடைத்த அற்ப சொற்ப சலுகையே மாகாணசபையாகும். அதில் கல்வியும் பகிரப்பட்டதொன்றே.

அவ்வாறு பகிரப்பட்ட கல்வியை பறித்து மத்திக்கு மீண்டும் கொண்டு செல்ல முன்னெடுக்கப்படும் முயற்சியே தற்போதைய மத்திய கல்வி அமைச்சின் தேசியப்பாடசாலை திட்டமாகும்.

தேசிய பாடசாலை என்பது வெறுமனே மாகாணப்பாடசாலையிலிருந்து பெயர்பலகை மாற்றத்தை மட்டுமே கொண்டிருக்கின்றது.

மாணவர்களிற்கான பாடவிதானம்,தகுதி தராதரம்,ஆசிரியர் பயிற்சி,சம்பளமென அனைத்துமே மாகாண பாடசாலைகளிற்கும் தேசியப்பாடசாலைகளிற்கும் ஒன்றாகவே இருக்கின்றது.

ஆனாலும் பெயர் பலகையில் மட்டுமே மாற்றமிருக்கின்றதென்பதை தவிர வேறு ஏதுமில்லை என்பதே உண்மையாகும்.

அவ்வகையில் அரசின் ஆயிரம் தேசியப்பாடசாலை என்ற புதிய அறிவிப்பு மாகாணசபைக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை பின்கதவால் பறிக்கின்றதொரு நடவடிக்கையேயன்றி வேறொன்றுமில்லையென்பதை மக்களும் தமிழ் அரசியல் தலைவர்களும்; புரிந்து கொள்ளவேண்டும் எனவும் சர்வேஸ்வரன் கூறினார்.

சிலர் மாகாண பாடசாலைகள் தேசியப் பாடசாலையாக தரமுயர்த்துவதாக இதனை சிலாகித்துவருகின்றனர்.

உண்மையில் இவ்வாறு தேசியப் பாடசாலையென மேலும் பாடசாலைகளை உள்ளீர்ப்பது மாகாண சபைக்கென வழங்கப்பட்ட அற்ப சொற்ப சலுகையினையும் பறித்துக்கொள்ள பின்னப்பட்ட சதியென்பதை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும்.

தேசியப் பாடசாலை என்பது உண்மையில் ஏற்கனவே மாகாண சபைக்கு பகிரப்பட்ட அற்பசொற்ப அதிகாரங்களை பறித்துக்கொள்கின்றதொரு முயற்சியே ஆகும்.

மாகாணசபையின் அதிகாரங்களை பறிக்க மத்தியால் மேற்கொள்ளப்படுகின்ற சதிகளை தடுத்து நிறுத்தவேண்டியது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களதும் தமிழ் தலைமைகளதும் வரலாற்றுக்கடமையாகுமெனவும் கலாநிதி.க.சர்வேஸ்வரன் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை தேசியப் பாடசாலைக்கென ஒதுக்கப்படவுள்ள நிதி மாகாண சபைக்கே ஒதுக்கப்பட்டவேண்டுமென கேட்டுக்கொண்ட அவர் நகரங்கள் மற்றும் கிராமங்களிலுள்ள அனைத்து பாடசாலைகளிற்கும் மாணவர்களை பகிர்ந்து கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

சுமார் 3000 பாடசாலைகள் போதிய மாணவர்களது வரவின்யைமால் பூட்டப்படும் நிலையினை எய்தியுள்ளதாக முன்னைய அரசினால் அறிவிக்கப்பட்டிருந்தது.

அரசியல் நலன்களிற்காக முன்னெடுக்கப்படும் தேசியப் பாடசாலை எனும் மாய மானினால் கிராமப் பாடசாலைகள் பல மூடப்படுகின்ற நிலையை நோக்கி செல்கின்றன

ஓவ்வொரு கிராமத்திலுமுள்ள அருகிலுள்ள பாடசாலைகளினது வளங்களை உரிய வகையில் பேணினால் ,வளங்களை பகிர்ந்தளித்தால் மாணவர்கள் நகரப்பாடசாலைகளை நோக்கி அலையும் நிலையினை போக்கமுடியுமெனவும் அவர் தெரிவித்தார்.

தேசியப் பாடசாலைகளிற்கென ஒதுக்கப்படவுள்ள நிதியை மாகாண சபை பாடசாலைகளிற்கு ஒதுக்கீடு செய்வதன் மூலம் மாணவர்களை திறமை மற்றும் ஆற்றல் அடிப்படையில் அவர்களின்தேவை மற்றும் விருப்பத்தின் அடிப்படையில் உரிய பாடசாலைகளிற்கு சேர்த்துகொள்ள முடியுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்பாக அரசு தற்போது தெரிவித்துள்ள தேசிய பாடசாலைகளிற்கு பதிலீடாக ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவிலும் தெரிவு செய்யப்படும் மூன்று பாடசாலைகளை துறை சார்ந்த கற்கைகளிற்கு முன்னுரிமை வழங்குவதன் மூலம் தேவைகளின் அடிப்படையில் மாணவர்கள் தமக்கான பாடசாலைகளை தெரிவு செய்துகொள்ள முடியும்.

இதன் மூலம் விளையாட்டு, கலைத்துறை, தொழில்சார் பயிற்சி என வகைப்படுத்தி இவ்வாறாக பாடசாலைகளை வளப்படுத்திக்கொள்ள மாகாண சபைகளிற்கு நிதி ஒதுக்கப்பட வேண்டுமென தெரிவித்ததுடன் மாகாண சபைகளது அதிகாரங்களை பறித்துக்கொள்வதை தடுக்கவேண்டுமெனவும் சர்வேஸ்வரன் கேட்டுக்கொண்டார்.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE