Thursday 2nd of May 2024 03:51:42 PM GMT

LANGUAGE - TAMIL
மிருசுவில் படுகொலை; இராணுவ அதிகாரிக்கு பொது மன்னிப்பு?!

மிருசுவில் படுகொலை; இராணுவ அதிகாரிக்கு பொது மன்னிப்பு?!


யாழ். மாவட்டம், தென்மராட்சி, மிருசுவிலில் எட்டுத் தமிழர்கள் குரல்வளை அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட சார்ஜென்ட் சுனில் ரத்நாயக்காவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தகவல் வெளியிட்டுள்ளார்.

நடந்தது என்ன?

போர் காரணமாக மிருசுவிலிருந்து இடம்பெயர்ந்து கரவெட்டி நாவலர்மடம் பகுதியில் வசித்து வந்த, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உள்ளிட்ட 9 பேர், தமது சொந்த வீடுகளைப் பார்ப்பதற்கு 2000 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ஆம் திகதி புறப்பட்டனர். மிருசுவில் வடக்கு படித்த மகளிர் குடியேற்றத் திட்டப் பகுதியில் அமைந்திருந்த அவர்களது வீடுகளைப் பார்ப்பதற்குச் சென்ற 9 பேரும் அன்றைய தினம் மீண்டும் திரும்பி வரவில்லை. மறுநாள் 20ஆம் திகதி மாலை, வீடு பார்க்கச் சென்ற 9 பேரில் ஒருவர் மாத்திரம் அடிகாயங்களுடன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார்.

அவர் வழங்கிய சாட்சியத்தில், "நாம் வீடுகளைப் பார்த்துக் கொண்டிருந்த வேளை அங்கு வந்த இராணுவத்தினர், நான் உள்ளடங்கலாக ஒன்பது பேரையும் கைதுசெய்து அழைத்துச் சென்றனர். கண்களைக் கட்டி கடுமையாகத் தாக்கினர். இதன்போது காயங்களுடன் நான் தப்பித்து வந்தேன்" என்று தெரிவித்திருந்தார்.

டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி, அவர் தெரிவித்த குறிப்புக்கு அமைய மிருசுவில் வடக்கு படித்த மகளிர் குடியேற்றத் திட்டப் பகுதியிலுள்ள தென்னங் காணியில், புதிதாக வெட்டப்பட்ட குழியிலிருந்து காணாமல்போயிருந்த எட்டுப் பேரினதும் சடலங்கள் மீட்கப்பட்டன.

அப்போதைய சாவகச்சேரி மாவட்ட நீதிவான் அ.பிரேமசங்கர் முன்னிலையில் குறித்த குழி தோண்டப்பட்டது. எட்டுச் சடலங்களும் ஒன்றன் மேல் ஒன்று போடப்பட்டு புதைக்கப்பட்டிருந்தன. மணல் பாங்கான தரையில் புதைக்கப்பட்டிருந்தமையால், சடலங்கள் பழுதடையாத நிலையில் மீட்கப்பட்டிருந்தன.

மீட்கப்பட்ட சடலங்களில் கைகள் பின்னால் கட்டப்பட்டிருந்த நிலையில் இருந்தன. கழுத்து, கைகளில் வெட்டுக் காயம் என்பன காணப்பட்டன. எட்டுப் பேரினதும் குரல் வளை அறுக்கப்பட்டே கொலைசெய்யப்பட்டனர் என்பது பிரேத பரிசோதனையில் வெளிச்சத்துக்கு வந்தது. அத்துடன் 5 வயது சிறுவனது வலது கால் திருகி முறிக்கப்பட்டிருந்ததும், பிரேத பரிசோதனையில் தெரியவந்தது.

கைது

இதனையடுத்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்போது இராணுவத்தின் சார்ஜன் தரத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் உள்ளிட்ட எட்டு இராணுவத்தினர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டனர். இந்த வழக்கு மிக நீண்ட காலமாக இடம்பெற்று வந்தது. 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25 ஆம் திகதி கொழும்பு உயர்நீதிமன்றம் வழக்கின் தீர்ப்பை வழங்கியது. இராணுவ சார்ஜென்ட் சுனில் ரத்நாயவுக்கு தூக்குத் தண்டனை விதித்தது.

இதற்கு எதிராகப் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டிருந்தன. சுனில் ரத்நாயக்கவை விடுவிக்க வேண்டும் என்று பல தரப்புக்களிலிருந்தும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இந்தநிலையில், கடந்த வெள்ளிக்கிழமை பௌர்ணமி தினத்தன்று, சுனில் ரத்நாயக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் பொதுமன்னிப்பு வழங்கி விடுவிக்கப்பட்டுள்ளார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE