Thursday 2nd of May 2024 07:08:32 PM GMT

LANGUAGE - TAMIL
தமிழ் மக்களுக்கான தீர்வு எம் வசம்; இந்தியாவை நாடுவதில் பயனில்லை!

தமிழ் மக்களுக்கான தீர்வு எம் வசம்; இந்தியாவை நாடுவதில் பயனில்லை!


"வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைக்கு - தமிழர் பிரச்சினைக்குத் தீர்வை இந்தியா தர வேண்டும் என்பது போன்ற செய்திகளை ஊடகங்களில் பார்த்தேன். அதில் எனக்கு உடன்பாடில்லை. தீர்வு எம்மிடமே உள்ளது. அதைவிடுத்து தீர்வை வெளியில் தேடுவதில் அர்த்தமில்லை."

- இவ்வாறு தெரிவித்தார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச.

தமிழ் ஊடகங்களின் தலைமை செய்திப் பொறுப்பாளர்களை – பத்திரிகை ஆசிரியர்மாரை இன்று காலை அலரி மாளிகையில் சந்தித்துக் கலந்துரையாடியபோது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, ஆறுமுகம் தொண்டமான், பந்துல குணவர்தன, சி.பி.ரத்நாயக்க, லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன, மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோரும் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் பிரதமர் மஹிந்த மேலும் கூறியதாவது:-

"தமிழ் ஊடகங்கள் மிகவும் பொறுப்பாகச் செயற்படவேண்டும். அரசையும் மக்களையும் ஊடகங்கள் விரோதப்படுத்தக் கூடாது. ஊடகங்கள் உண்மையான விமர்சனங்களைக் வெளிக்கொணர வேண்டும்.

தமிழ் மக்கள் எமக்கு வாக்களித்தாலும் வாக்களிக்காவிட்டாலும் அவர்களுக்கான எமது சேவைகள் தொடரும். வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைக்கு - தமிழர் பிரச்சினைக்குத் தீர்வை இந்தியா தர வேண்டும் என்பது போன்ற செய்திகளை ஊடகங்களில் பார்த்தேன். அதில் எனக்கு உடன்பாடில்லை. தீர்வு எம்மிடமே உள்ளது. அதைவிடுத்து தீர்வை வெளியில் தேடுவதில் அர்த்தமில்லை. நாம் எமது பிரச்சினைகளை ஒன்றுபட்டு தீர்க்க வேண்டும். அவற்றை தொடரவிடுவதில் அர்த்தமில்லை.

சம்பளப் பிரச்சினை

தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு தொடர்பில் அமைச்சரவையில் இன்று பேசப்படவுள்ளது. ஏற்கனவே ஜனாதிபதி அது தொடர்பில் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். விரைவில் அது தொடர்பில் நல்ல பதில் அறிவிக்கப்படும். கம்பனிகளுடனும் இது பற்றி பேசப்பட்டுள்ளது.

மீனவர் பிரச்சினை

இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினை குறித்து இந்திய விஜயத்தின்போது நான் பேசவுள்ளேன். அதேசமயம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் இம்மாத இறுதியில் இதுபற்றி பேச்சு நடத்தவுள்ளார்.

உண்மையில் இந்திய மீனவர்களின் ஆக்கிரமிப்பால் இலங்கை மீனவர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இதுபற்றி பேச்சு நடத்தி உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" - என்றார்.

அரசில் முஸ்லிம் அமைச்சர்மார் எவரும் இல்லாதது குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பியபோது பதிலளித்த பிரதமர்,

"முஸ்லிம் பிரதிநிதிகளை அனுப்பி அந்த நிலையைச் சரிசெய்ய முஸ்லிம் மக்கள் வரும் தேர்தல்களில் சிந்தித்துச் செயற்பட வேண்டும்" என்று குறிப்பிட்டார்.

"கடந்த முறை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சார்ந்த முஸ்லிம் ஒருவருக்கு அமைச்சுப் பதவியை வழங்க முடிவு செய்து பெயர்களை அனுப்புமாறு நாம் கேட்டோம். ஆனால், அவர்கள் பெயர்களை அனுப்பவில்லை. ஆனாலும், பைசர் முஸ்தபாவிடம் அமைச்சுப் பொறுப்பை ஏற்கக் கோரினோம். அவர் மறுத்துவிட்டார். ஆனாலும், அடுத்த முறை தேர்தலில் முஸ்லிம் மக்கள் அதனைச் சரிசெய்ய வேண்டும்" என்று பிரதமர் மேலும் கூறினார்.

13ஆவது திருத்தம்

13 ஆவது அரசமைப்பு திருத்தம் தொடர்பான உங்களின் நிலைப்பாடு என்னவென்று செய்தியாளர் ஒருவர் கேட்டபோது பதிலளித்த பிரதமர்,

"நாம் அதே நிலைப்பாட்டில் இருக்கின்றோம். ஆனால், பல தசாப்த காலமாக தமிழர்களை அவர்களது அரசியல் தலைவர்கள் ஏமாற்றியது போன்று ஏமாற்ற நாம் தயாராக இல்லை" என்று குறிப்பிட்டார்.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE