Friday 17th of May 2024 05:51:26 AM GMT

LANGUAGE - TAMIL
வொஷிங்டனில் ஒரு நாசிஸ்ட்; ட்ரம்பை சாடும் கனேடிய தொழிலதிபர்!

வொஷிங்டனில் ஒரு நாசிஸ்ட்; ட்ரம்பை சாடும் கனேடிய தொழிலதிபர்!


பயணிகள் விமானம் ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்டமை தொடர்பில் கனேடிய மிகப்பெரும் தொழிலதிபர்களில் ஒருவரான மைக்கேல் மெக்கெய்ன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.

'வொஷிங்டனில் ஒரு நாசிஸ்ட்' என்று மறைமுகமாக ட்ரம்பை அவர் விமர்சித்தார்.

இறந்த 57 கனேடியர்களில் அவரது சகாவின் மனைவியும் மகனும் அடங்குவதாக மேப்பிள் லீஃப் ஃபுட்ஸ் தலைமை நிர்வாகி மைக்கேல் மெக்கெய்ன் தெரிவித்தார்.

அத்துடன், விமானம் சுட்டு வீழ்த்ப்பட்டு 176 பேர் கொல்லப்பட்ட துயர சம்பவம் தொடர்பில் நீதியைப் பெற்றுக்கொள்ள கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உறுதியுடன் உள்ளதாகவும் அவர் கூறினார்.

தமது தவறுகள், அரசியல் ரீதியான தோல்விகளில் இருந்து கவனத்தைத் திசை திருப்ப அமெரிக்க அரசியல் தலைவர்கள் தவறான திட்டங்களைத் தீட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மெக்கெய்னின் மேப்பிள் லீஃப் புட்ஸ் நிறுவனத்தில் 11,000 க்கும் அதிகமானோர் பணியாற்றுகின்றனர்.

அவரது சகாவின் குடும்ப உறுப்பினர்களின் மரணம் இந்த பொறுப்பற்ற, ஆபத்தான, தவறான செயற்பாடுகளால் ஏற்பட்ட விளைவு எனவும் மெக்கெய்ன் சாடினார்.

உலக வல்லரசுகளுக்கும் ஈரானுக்கும் இடையில் 2015 கைச்சாத்திடப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தை மீறச் செய்யும் வகையில் அமெரிக்காவின் இந்தச் செயற்பாடு அமைந்துவிட்டதாகவும் அவர் விமர்சித்தார்.

உக்ரேனிய விமானத்தை தவறுதலான சுட்டு விழுத்தியதாக கடந்த சனிக்கிழமை ஈரான் ஒப்புக்கொண்டது.

ஈரானிய ஜெனரல் காசிம் சுலைமானி கொல்லப்பட்ட அமெரிக்க ட்ரோன் தாக்குதலுக்கு பதிலடியாக ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படைகளின் இரண்டு விமானத் தளங்களில் ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்திய சில மணி நேரங்களுக்குப் பின்னர் விமானம் விழுந்து நொருங்கியது.

சனிக்கிழமையன்று ஆல்பர்ட்டா மாகாணம் - எட்மண்டனில் நடந்த அஞ்சலி நிகழ்வில் பங்கேற்ற கனேடியப் பிரதமர் இந்த விபத்து கனடாவின் மிகப் பெரும் சோகம் என்று கூறினார்.

2000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த நிகழ்வில் பேசிய கனேடியப் பிரதமர், இந்த கொடூரத்துக்கு நீதி கிடைக்கும்வரை நாங்கள் ஓய மாட்டோம் என என உறுதியளித்தார்.

இதேவேளை, குளோபல் நியூஸுடன் பேசிய பிரதமர் ட்ரூடோ, அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் பதட்டங்கள் அதிகரித்து வருவதாகக் குற்றம் சாட்டினார்.

இவ்வாறான பதட்டங்கள் உருவாகியிராவிட்டால் இந்தத் துயரம் நிகழ்ந்திருக்காது. கொல்லப்பட்ட கனேடியர்கள் அவர்களின் குடும்பங்களுடன் வீடுகளில் இருந்திருப்பார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

நாடுகளுக்கிடையிலான மோதல்களில் கடினமான விளைவுகளை அப்பாவிகளே அனுபவிக்கிறார்கள். மோதல்களைத் தவிர்த்து முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்பதை அப்பாவி மக்களின் மரணம் உணர்த்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

விமானம் சுட்டு விழுத்தப்பட்டதன் பின்னணியில் அது குறித்து அமெரிக்க ஜனாதிபதியுடன் தான் பேசியதாகவும் குளோபல் நியூஸிடம் பிரதமர் ட்ரூடோ கூறினார்.

பதட்டங்களை குறைக்க வேண்டிய அவசியம் குறித்தும் கனேடியர்களின் இழப்பையும் அதன் துயரத்தையும் அவருக்கு விளக்கினேன்.

இவ்வாறான ஒரு சம்பவம் மீள நிகழாமல் இருக்க நாங்கள் உறுதியெடுத்துக்கொள்ள வேண்டும். அதை நாங்கள் எவ்வாறு செய்யப்போகிறோம்? என்பது குறித்துக் கேள்வியெழுப்பினேன் என அவர் தெரிவித்தார்.

எல்லா கனடியர்களையும் போலவே நான் வலியை உணர்கிறேன். எல்லா கனடியர்களையும் போல நான் கோபமாக இருக்கிறேன் என்று அவர் கூறினார்.

இவற்றுக்கு மத்தியில் எனக்குரிய பணிகள் இருக்கின்றன. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உதவ வேண்டும். இந்த கெடூர செயலுக்கான நீதி கிடைக்க வேண்டும். இவை குறித்து எனது முழுக் கவனமும் உள்ளது எனவும் பிரதமர் தெரிவித்தார்.

இதற்கிடையில் கனடாவின் வெளியுறவு அமைச்சர் பிரான்சுவா-பிலிப் ஷாம்பெயின் நாளை வியாழக்கிழமை லண்டனுக்குச் சென்று சர்வதேச ஒருங்கிணைப்பு மற்றும் பதிலளிப்புக் குழுவின் கூட்டத்தை நடத்தவுள்ளார்.

இந்த வாரத்தில் உருவாக்கப்பட்ட இந்த கூட்டணியில் கனடா, உக்ரைன், சுவீடன், ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் உள்ளனர்.

அத்துடன் ஈரானில் விமானம் விழுத்தப்பட்டது. குறித்த விசாரணைகளில் பங்கேற்க கனடாவின் போக்குவரத்து பாதுகாப்பு குழுமத்தின் அதிகாரிகள் ஈரானுக்குச் செல்வார்கள்.

விசாரணைக்கு அணிக்கு எவ்வளவு அதிகாரம் இருக்கும் என்பது குறித்துத் தெளிவின்மை உள்ளது. சர்வதேச நெறிமுறைகளின் பிரகாரம் விபத்து நடந்த நாட்டின் அதிகார வரம்புக்குட்பட்டே விசாரணைகளை முன்னெடுக்க முடியும் என கனடாவின் போக்குவரத்து பாதுகாப்பு குழுமத்தின் தலைவர் காதி பொக்ஸ் கூறினார்.

இது குறித்து நான் தெளிவாக இருக்க விரும்புகிறேன், எங்கள் பாத்திரத்தின் நோக்கம் என்னவென்று எங்களுக்கு இன்னும் முழுமையாகத் தெரியவில்லை எனவும் அவர் குறப்பிட்டார்.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE