Saturday 1st of June 2024 06:37:47 AM GMT

LANGUAGE - TAMIL
காணிகள் ரத்துசெய்யப்பட்டு காணி அற்றோருக்கு வழங்கப்படும்!!

காணிகள் ரத்துசெய்யப்பட்டு காணி அற்றோருக்கு வழங்கப்படும்!!


அரச ஊழியர்களிற்காக ஓமந்தையில் வழங்கப்பட்ட காணிகளில் குடியிருக்காதவர்களது காணிகள் ரத்துசெய்யப்பட்டு காணி அற்றோருக்கு வழங்குவதற்கான நடவடிக்கைளை மேற்கொள்ளவுள்ளதாக தேசிய வீடமைப்பு அதிகார சபையின் வவுனியா மாவட்ட முகாமையாளர் எம்.வீ.குரூஸ் தெரிவித்தார். வவுனியா மாவட்டத்தில் கடமையாற்றும் காணி அற்ற 600ற்கும் மேற்பட்ட அரச உத்தியோகத்தர்களிற்கு கடந்த 2009 ஆம் ஆண்டு ஓமந்தை பகுதியில் காணிகள் வழங்கப்பட்டு குடியேறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. எனினும் 600 பேர் வரையில் குறித்த பகுதியில் காணிகளை பெற்றுக்கொண்ட நிலையில் வெறும் 80குடும்பங்கள் மாத்திரமே அப்பகுதியில் தற்போது வாழ்ந்து வருகின்றனர்.

200 பேர்வரையில் பகுதியளவில் வீடுகளை அமைந்துள்ளதுடன் ஏனையோர் தமக்கு வழங்கப்பட்ட காணிகளிற்குள் எந்தவிதமான அபிவிருத்தி நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.

தமக்கு காணியில்லை என்று தெரிவித்து பலர் இங்கு காணிகளை பெற்றுக்கொண்ட நிலையில் மிகவும் சொற்ப அளவிலானோரே குறித்த பகுதியில் வசிக்கின்றனர். குறிப்பாக 100 ற்கும் மேற்பட்டோருக்கு வீடமைப்பு அதிகாரசபையால் வீடு கட்டுவதற்காக ஜந்து இலட்சம் ரூபாய் நிதியும் வழங்கப்பட்டிருந்தது.

எனினும் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளனவே தவிர அவர்கள் குடியிருக்க வரவில்லை.எனவே அவை பற்றைக்காடுகளாக வளர்ந்து காடுமண்டி கிடக்கிறது. இதனால் மக்கள் நடமாட்டமற்ற பகுதியாக இது இருப்பதுடன் அங்கு வசிக்கும் மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலான நிலை ஏற்பட்டுள்ளதாக கிராம அபிவிருத்தி சங்கம் மற்றும் கிராமமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

குறித்த விடயம் தொடர்பாகவும், தமது பகுதிகளில் மேற்கொள்ளப்படவேண்டிய அத்தியாவசிய உட்கட்டுமான வசதிகள் தொடர்பாகவும் கிராம அபிவிருத்தி சங்கத்தினால் மாவட்ட அரசஅதிபர், மற்றும் தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் முகாமையாளருக்கு தெரியப்படுத்தப்பட்டிருந்ததுடன், கடந்த மாதம் ஓமந்தை பகுதியில் பொதுமக்களால் ஆர்பாட்டம் ஒன்றும் முன்னெடுக்கபட்டிருந்தது.

அதற்கமைய ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத்திட்டத்தில் வசிக்கும் உத்தியோகத்தர்களின் குறைபாடுகள் தொடர்பாக துரித நடவடிக்கை எடுக்குமாறு வவுனியா மாவட்ட அரச அதிபர் எம்.கனீபா வீடமைப்பு அதிகாரசபைக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளதுடன், கடந்த 2 ஆம் திகதி வட மாகாண ஆளுநர் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளிற்கமையவே இக்கடிதம் அனுப்பிவைக்கப்படுவதாகவும் அதில் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக தேசியவீடமைப்பு அதிகார சபையின் வவுனியா மாவட்ட முகாமையாளர் எம்.வீ.குரூஸ் அவர்களிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது..

குறித்த பிரச்சனை தொடர்பாக தமது தலைமை அலுவலகத்திற்கு தெரியப்படுத்தி காணிகளில் வதியாதோர் தொடர்பிலான தகவல்களை சேகரிக்கவுள்ளதுடன், வழங்கப்பட்ட காணிகளில் குடியிருக்காதவர்களது காணிகள் ரத்துசெய்யப்பட்டு காணி அற்றோருக்கு வழங்குவதற்கான நடவடிக்கைள் மேற்கொள்ளப்படும். காணி வழங்கப்பட்டவர்களிற்கு இது தொடர்பாக அறிவித்தல்கள் வழங்கப்படும் என தெரிவித்தார்.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE