மதுரை அவனியாபுரம், பாலமேடு ஆகிய ஊர்களில் முறையே நேற்று முன்னாளும் நேற்றும் பாரம்பரிய ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் சல்லிக்கட்டு இன்று நடைபெற்றது.
இரண்டாவது சல்லிக்கட்டு பாலமேட்டில் நடைபெற்றது. இதில் பதிவுசெய்யப்பட்ட 700 காளைகளில் கால்நடை மருத்துவர் குழுவினர் 6 காளைகளை போட்டிக்குத் தகுதியில்லை என விலக்கிவைத்தனர். மாடுபிடி வீரர்கள் 936 பேர் இதில் பங்கேற்றனர்.
காலை 8 மணிக்குத் தொடங்கிய ஜல்லிக்கட்டு மாலை 5 மணிரை நீடித்தது.
இதில் அதிகமாக 16 காளைகளை அடக்கிய மதுரை மாவட்டம் பொதும்பு ஊரைச் சேர்ந்த சுமையுந்து ஓட்டுநரான 24 வயது பிரபாகரனுக்கு முதல் பரிசாக, ரூ. 6 இலட்சம் மதிப்புள்ள மாருதி கார் வழங்கப்பட்டது.
இரண்டாவதாக, 13 காளைகளைப் பிடித்த அய்யப்பன்நாயக்கன்பட்டி ஊரைச் சேர்ந்த 24 வயது ராசாவும், மூன்றாவதாக 10 காளைகளை அடக்கிய கருப்பாயூரணியைச் சேர்ந்த 20 வயது கார்த்திக்கும் சான்றிதழ் மற்றும் கோப்பைகளைப் பெற்றனர்.
சிறந்த காளைக்கும் பரிசு
மாடுபிடிவீரர்களுக்கு சிக்காமல் வீரம்காட்டிய காளைகளுக்காக அவர்களின் உரிமையாளர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது. இதில், திண்டுக்கல் மாவட்டம் காமாட்சிபுரத்தைச் சேர்ந்த இரமேசுக்கு, அலங்காநல்லூர் பொன்.குமார் என்பவர் பரிசாக காங்கேயம் காளை மற்றும் கன்றை அளித்தார்.
அவனியாபுரத்தில் 14 காளைகளை அடக்கிய விசய்
பொங்கலன்று அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில், 607 மாடுவிடி வீரர்களுக்கும் 641 காளைகளுக்கும் களத்திலிறங்க அனுமதி அளிக்கப்பட்டது. மாலை 4.30 மணிவரை போட்டி நீடித்தது. இதில், அதிகமாக 14 காளைகளை அடக்கிய மதுரை மாநகர், செய்கிந்துபுரத்தைச் சேர்ந்த 24 வயது விசய் என்பவர், இருசக்கர வாகனத்தை முதல் பரிசாகப் பெற்றார்.
13 காளைகளை அடக்கிய சோலையழகுபுரம் 23 வயது பரத்குமார் இரண்டாம் பரிசையும்,10 காளைகளை அடக்கிய முத்துப்பட்டி திருநாவுக்கரசு மூன்றாம் பரிசையும் பெற்றனர்.
சிறந்த காளைக்கான முதல் பரிசு, புதுக்கோட்டை மாவட்டம் காவல்துறை ஆய்வாளர் அனுராதாவின் காளைக்கு கிடைத்தது.
111 பேர் காயம்
அவனியாபுரத்தில் மாடுபிடி வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் 71 பேர் காயமடைந்தனர். பாலமேட்டில் 40 பேருக்கு காயம் ஏற்பட்டது. உடனடி மருத்துவக் குழுவினர் அவசர சிகிச்சை அளித்து, மதுரை மாவட்ட மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.
Category: கலை & கலாசாரம், பகுப்பு
Tags: இந்தியா, தமிழ்நாடு