உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் சல்லிக்கட்டுப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் மாடுபிடி வீரர் ஒருவரும் வேடிக்கை பார்க்க வந்தவரும் என இருவர் உயிரிழந்தது, துயரத்தை ஏற்படுத்தியது.
ஒரு மணி நேரம் முன்னதாக காலை 7 மணிக்கு தொடங்கிய நிகழ்வு, மாலை 4 மணிக்கு முடிவடைந்தது. இதில், 16 காளைகளை அடக்கியவர் முதல் பரிசை வென்றார்.
அனுமதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 688 வீரர்களும், காளைகளில் 745 காளைகளும் பங்கேற்கமுடிந்தது. சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தேனி மக்களவைத் தொகுதி உறுப்பினர் (ஓ.பன்னீர்செல்வம் மகன்) இரவீந்திரகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்தனர்.
காளைகளை அடக்கி வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளாக பெரிய சில்வர் பாத்திரங்கள், மிதிவண்டிகள், நாற்காலிகள், அறைகலன்கள், மாவு அரைப்பான்கள், அலமாரிகள், குளிரூட்டிகள், இருசக்கர வாகனங்கள் ஆகியவை வழங்கப்பட்டன.
அதிக அளவாக 16 காளைகளை அடக்கிய அலங்காநல்லூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான இரஞ்சித்குமாருக்கு முதல் பரிசாக கார், 14 காளைகளை அடக்கிய ஆயத்தம்பட்டியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் கார்த்திக்குக்கு இரண்டாம் பரிசாக இருசக்கர வாகனம், 13 காளைகளை அடக்கிய அரிட்டாம்பட்டியைச் சேர்ந்த கணேசனுக்கு மூன்றாம் பரிசாக ரூ.10 ஆயிரம் அறிவிக்கப்பட்டது.
அதிக திறன்கொண்ட காளைக்கான முதல் பரிசை ம.தி.மு.க.வில் மாவட்டச்செயலாளராக இருக்கும் மதுரை, குலமங்கலத்தைச் சேர்ந்த மாரநாடுவின் கருப்பன் காளை பெற்றது. இரண்டாம் பரிசை, அவனியாபுரம் சல்லிக்கட்டில் முதல் பரிசை வென்ற புதுக்கோட்டை மாவட்டத்தின் தடகள வீராங்கனையும் காவல்துறை சார்பு ஆய்வாளருமான அனுரத்னாவின் இராவணன் காளை பெற்றது. சிறந்த வீரர் மற்றும் அதிக திறன்கொண்ட காளைக்கான முதல் பரிசை சென்னையில் முதலமைச்சர் பழனிசாமி வழங்கவுள்ளதால், அதைத் தவிர்த்து, மற்றவர்களுக்கான பரிசுகள் இங்கேயே வழங்கப்பட்டன.
அலங்காநல்லூரில் மாடுபிடி வீரர்கள் 18 பேர், காளை உரிமையாளர்கள் 10 பேர், வேடிக்கைபார்க்கவந்த 8 பேர் என 36 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கு உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டது. படுகாயமடைந்த 13 பேர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கொண்டாட்டமான இந்நிகழ்வில் சோழவந்தான் சிறீதர் எனும் 24 வயது இளைஞர் தன் காளையை அழைத்துச்செல்வதற்காகக் காத்திருந்தபோது, இன்னொரு காளை முட்டியதில் உயிரிழந்தார்.
வேடிக்கைபார்த்துக்கொண்டிருந்த செக்கானூரணியைச் சேர்ந்த செல்லப்பாண்டிக்கு மயக்கம்வந்து, அவராகவே கடைக்குச் சென்று சோடா குடித்ததும் கீழே விழுந்து உயிரிழந்தார். இது அங்கு திரண்டிருந்தவர்களை சோகத்துக்கு உள்ளாக்கியது.
இதைப்போலவே, திருச்சி மாவட்டம் மருங்காபுரி ஒன்றியத்தைச் சேர்ந்த ஆவாரங்காட்டில் நடைபெற்ற சல்லிக்கட்டில், காளை உரிமையாளரான புதுக்கோட்டை மாவட்டம் சுக்காம்பட்டி ந.செல்லப்பாண்டி(55) உயிரிழந்தார்.
Category: கலை & கலாசாரம், பகுப்பு
Tags: இந்தியா, தமிழ்நாடு