Tuesday 28th of January 2025 04:04:01 PM GMT

LANGUAGE - TAMIL
நேர்காணல் - 01
பொருளாதாரத்தில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா - பேராசிரியர் எஸ். சந்திரசேகரம்

பொருளாதாரத்தில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா - பேராசிரியர் எஸ். சந்திரசேகரம்


சமூகத் தனிமைப்படுத்தலினால் பொருளாதார இழப்பு, அரச வரவுசெலவுத் திட்டத்தைப் பாதிக்கின்ற அளவிற்கு அபாயத்தை ஏற்படுத்தி உள்ளதாக யாழ் பல்கலைக்கழக பொருளாதாரத்துறை பேராசிரியர் எஸ்.சந்திரசேகரம் கூறுகின்றார்.

விவசாய உற்பத்திகள், சந்தைவாய்ப்பு, பொதுச் சேவைகள், ஏற்றுமதி என்பன மோசமான பாதிப்புகளுக்கு முகம் கொடுத்து வேலையின்மையை அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார். கொரோன வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள தனிமைப்படுத்தலினால் ஏற்பட்டுள்ள உடனடி தாக்கங்கள் மற்றும் அடுத்த கட்ட நிலைமைகள் குறித்து அவருடனான நேர் முகத்தில் அவர் விபரித்தார்.

கேள்வி: கொரோனா வைரஸ் பேரிடரினால் ஏற்பட்டுள்ள முழு அடைப்பு – சமூக தனிமைப்படுத்தல் சூழல் எந்த வகையில் உள்ளுர் பொருளாதாரத்தைப் பாதிக்கின்றது – பாதித்திருக்கின்றது? இந்த நிலைமையை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்: கொரோனா வைரஸ் பேரிடரினால் ஏற்பட்டுள்ள சமூக தனிமைப்படுத்தலினால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு முன்னர் நாங்கள் எத்தகைய அழிவுகளைச் சந்திக்கின்றோம் என்பதைப் பார்த்தல் அவசியம். இயற்கையினால் ஏற்படுகின்ற அழிவுகள், மனிதனால் ஏற்படுத்தப்படுகின்ற அழிவுகள் என்று இரண்டு வழிகளில் பேரிடர்களை உலக நாடுகள் சந்திக்கின்றன. அவற்றுடன் தொற்று நோயினாலும் பேரழிவுகள் - பேரிடர் ஏற்படுகின்றது.

முதலாம், இரண்டாம் உலக யுத்தங்கள் மற்றும் ஆக்கிரமிப்புக்கள், உள்நாட்டு யுத்தங்கள் என மனிதனால் அழிவுகள் ஏற்படுததப்படுகின்றன. வெள்ளப்பெருக்கு, சுனாமி, மண்சரிவு போன்றவை இயற்கையினால் ஏற்படுகின்ற அழிவுகள்.

இதைவிட தொற்று நோய்களான கொலரா, மலேரியா மற்றும் சார்ஸ், எபோலா, கொரோனா போன்ற வரிசையில் ஏற்படுகின்ற தொற்று நோய் அழிவுகளும் முக்கியமானவை. இவைகளும் இயற்கை அழிவுகளாக இருந்தாலும் இவை பரவும் தன்மை மற்றும் தாக்கத்தின் அடிப்படையில் வேறுபாடு உள்ளது.

இந்த பின்னணியிலேயே நாம் கொரோனா வைரஸினால் ஏற்பட்ட தனிமைப்படுத்தலின் பொருளாதார தாக்கத்தினை நோக்க வேண்டும். உள்ளுர் பொருளாதாரத்தில் இது பெரும் தாக்கங்களை உருவாக்கியுள்ளன.

உற்பத்தி முயற்;சிகள் நிறுத்தப்பட்டுள்ளதனால் பலர் வேலை இழந்துள்ளனர். குறிப்பாக அன்றாடம் கூலிதொழில்களில் ஈடுபடும் தொழிலாளர்கள் பாரியளவில் பாதிப்படைந்துள்ளனர். தனியார் துறை ஊழியர்களும் தங்களுடைய வேலையை இழந்து வருமானங்களை இழந்துள்ளனர். சுயமுயற்;சியாளர்கள் ஊரடங்கு காரணமாக தங்கள் தொழில்களை மூடியுள்ளனர். வெளியில் செல்ல முடியாத நிலை இருப்பதனால் முடிவுப் பொருட்களை விற்பதிலும் மூலப்பொருட்களை பெறுவதிலும் உள்ள சிரமங்கள் காரணமாக தொழிலை நிறுத்தியுள்ளனர். பல கைத்தொழில்கள் மூடப்பட்டதால் முதலாளிகள் மற்றும் அவற்றில் வேலைசெய்த தொழிலாளர்களுக்கு வருமான இழப்பு நேர்ந்துள்ளது.

இவ்வாறு இந்த தனிமைப்படுத்தலினால் வேலையின்மை அதிகரித்துள்ளது. இது வறுமை மற்றும் பட்டினி, போசாக்கின்மை போன்றவற்றை அதிகரிப்பதற்கு வழிவகுத்துள்ளது.

விவசாயிகள் தங்கள் தொழில்களை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ள போதும் அவர்கள் சுதந்திரமாக தங்கள் உற்பத்திகளை சந்தைப்படுத்த முடியாமல் இருக்கின்றது. இதன் காரணமாக அவர்களின் வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளது. மொத்த சந்தைகள் தொழிற்படாமையினால் அவர்களுடைய உற்பத்திகளுக்கு நியாயமான விலையை பெற முடியாமல் இருக்கின்றது. உதாரணமாக இந்த மாதங்களில்; மரக்கறிகளின் விலைகள் குறைவாக இருந்தாலும் கொரோனா நிலைமை இவைகளின் விலைகளை பாதாள நிலைக்குத் தள்ளியுள்ளது.

விவசாயிகளிடம் இருந்து பச்சைமிளகாய் ஒரு கிலோ 40 ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்படுகின்றது. கறிமிளகாய் ஒரு கிலோ 20 ரூபாயாகக் குறைந்துள்ளது. அநேகமான மரக்கறிகளின் கொள்வனவு விலைகள் கிலோ 40 ரூபாயாக வீழ்ச்சியடைந்துள்ளன.

ஆனால் இந்த விலை வீழ்ச்சி நுகர்வோருக்கு நன்மை அளிக்கவில்லை. இம் மரக்கறிகள் நுகர்வோனுக்கு கொள்வனவு விலையை விட இரண்டு மூன்று மடங்கு அதிகமாகவே விற்கப்படுகின்றன. தற்போதைய நிலைமை விவசாயிகளின் உற்பத்தி பக்கத்திலும் அதிக தாக்கத்தை கொண்டிருக்கின்றது. ஊரடங்கு காரணமாக அவர்கள் பருவம் அறிந்து பயிர்செய்ய முடியாமல் இருக்கின்றது. இது விளைச்சலில் பாதிப்பை ஏற்படுத்தும்.

அத்தியாவசியத் தேவைகள் தவிர்ந்த ஏனைய எல்லா சேவைகளும் முடங்கியிருக்கின்றன. இது நாட்டின் சேவை உற்பத்தியில் அதிக பாதிப்பை உருவாக்குவதோடு பலரை வேலை இழக்கச் செய்துள்ளது. வருமானத்தையும் அவர்கள் இழந்துள்ளனர். குறிப்பாக உணவகங்கள், உல்லாசப்பயணம், போக்குவரத்து போன்ற துறைகள் பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளன.

ஏற்றுமதி முடங்கியிருக்கின்றது. இதில் வருமானம் பெற்றவர்கள் பாதிப்படைந்துள்ளனர். அரசுக்கு பல புதிய செலவீடுகள் உருவாகி இருக்கின்றன. இது அரசின் நிதி நிலைமைகளில் பாதிப்பை உருவாக்கும். அரசின் வருமானங்கள் தடைப்பட்டுள்ளன. இதனால், வரவுசெலவுத் திட்டப் பற்றாக்குறை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

கேள்வி: போருக்குப் பிந்திய – அதன் தாக்கத்தில்; இருந்து முழுதுமாக மீண்டெழாத ஓர் இக்கட்டான அரசியல் சூழலில் கொரோனா வைரஸ் மூலமாகத் தமிழர் தாயகப் பகுதிகளாகிய வடகிழக்குப் பிரதேசம் எத்தகைய பாதிப்புகளுக்கு முகம் கொடுக்க நேர்ந்துள்ளது?

பதில்: இலங்கையின் வடக்கு கிழக்கு பிரதேசத்திலும் மேற்குறிப்பிட்ட தாக்கங்கள் உள்ளன. கொரோனா பேரிடர் காரணமாக விவசாயிகளும் மீனவர்களும் உற்பத்தி ரீதியாகவும் சந்தைப்படுத்தல் ரீதியாகவும் பாதிப்படைந்துள்ளனர். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் குறிப்பாக விவசாயிகள் தங்கள் பொருளாதாரத்தை மீளமைத்து வரும் காலகட்டத்தில் உருவாகியுள்ள இந்த சூழ்நிலையானது பாரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் தென்பகுதிக்கு வடபிரதேச உற்பத்திகளான மரக்கறி வகைகள் மற்றும் மீன்களை அனுப்புகின்ற சந்தைவாய்ப்பை வடபகுதி மக்கள் இழந்துள்ளார்கள். இதனால் அவர்கள் தங்கள் உற்பத்திகளை குறைந்த விலைக்கு விற்பனை செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளது. தோட்டச் செய்கையாளர்கள் பீற்றுட்டை மாடுகளுக்கு போடும் நிலை ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் கறிமிளகாய் 10 ரூபாவாகக் குறைந்துள்ளது. கடல் உணவுகளின் விலைகளிலும் இதேபோன்று வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

உள்ளுரில் மட்டுமல்லாமல் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸின் தாக்கம் இலங்கையின் வடகிழக்குப் பிரதேசங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் வடபகுதியைப் பொறுத்தமட்டில் ஏறத்தாள 65 – 75 வீதமான குடும்பங்கள் புலம் பெயர்ந்துள்ள தமது உறவினர்களின் வருவாயில் நேரடியாகவும் மறைமுகமாகவும் தங்கியிருக்கின்றன.

அபிவிருத்தி அடைந்த மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளிலும் மக்கள் வீடுகளில் முடக்கப்பட்டிருப்பதனால் அங்கு ஏற்பட்டுள்ள வருமான இழப்பு வடகிழக்கு மக்களுக்கு அங்கிருந்து பணம் அனுப்புதலின் மூலமாகக் கிடைத்து வந்த உதவிகளில் வீழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் புலம்பெயர் தேசத்து வருமானத்தை அவர்கள் இழந்துள்ளார்கள். அத்துடன் புலம்பெயர் தேசத்து உறவுகளின் உதவிகளைப் பெற்று வந்த போர்க்கால விதவைகள். பெண் தலைமைத்துவ குடும்பங்கள், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் போராளிகள் போன்றவர்கள் பெற்று வந்த உதவிகள் நின்று போயுள்ளன. அல்லது குறைந்துள்ளன.

தொடரும்

அருவி இணையத்துக்காக பி.மாணிக்காவசகம்


Category: வாழ்வு, நேர்காணல்
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE