கேள்வி: உள்ளுர் மற்றும் வடகிழக்குப் பிராந்தியங்களிலான உடனடி பொருளாதாரப் பாதிப்பு கொரோனாவின் பின்னரான நிலைமைகளில் எத்தகைய செல்வாக்கைச் செலுத்துவதாக இருக்கும்? இதனை எப்படி நீங்கள் நோக்குகின்றீர்கள்?
பதில்: கொரோனா வைரஸின் பாதிப்பானது தேசிய மற்றும் வடக்கு கிழக்குப் பிரதேச வாழ்க்கையில் கொரோனா வைரஸின் தாக்கத்தைப் போலவே கொரோனாவின் பின்னரான நிலைமையிலும் பாதிப்பு ரீதியான செல்வாக்கு மிக மோசமானதாகவே இருக்கும்.
நான் தொடக்கத்தில் குறிப்பிட்டது போன்று ஏனைய அழிவுகள் ஒரு சிறிய காலத்துக்குரியவை. ஒரு வெள்ளப்பொருக்கு நாட்டில் ஒரு பிரதேசத்தில் உருவாகும்போது மறு பிரதேசத்தில்; இருந்து உதவி கிடைக்கும். அத்தகைய சந்தர்ப்பங்களில் அனர்த்தம் குறுகிய காலத்தில் முடிந்துவிடும்.
ஆனால் கொரோனா வைரஸைப் போன்று உலகம் முழுதும் எல்லா பிரதேசங்களுக்கும் நீண்டகாலப் பாதிப்பாக வெள்ளப்பொருக்கு மற்றும் சுனாமி போன்ற இயற்கை அனர்த்தங்கள் வந்ததில்லை. ஒரு நாட்டில் ஒரு பிரதேசத்தில் இவ்வாறான அனர்த்தம் ஏற்;படும்போது உலக நாடுகளில் இருந்து உதவிகள் கிடைக்கின்றன. உலக மகாயுத்தங்களில் குண்டுகள் போட்டுவிட்டு விமானங்கள் சென்றவுடன் அந்த நாடுகளில் பொருளாதார நடவடிக்கைகள் ஆரம்பமாகி இருந்தன. இலங்கையில் வடகிழக்கில் யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த போதும் பொருளாதார நடவடிக்கைகள் இடம்பெற்றிருந்தன.ஆனால் கொரோனா வைரஸ் தொற்றுநோய்த் தாக்கத்தின் பொருளாதாரப் பரிமாணம் அவ்வாறானதல்ல. இது உலகப் பொருளாதார நடவடிக்கைகளையே ஸ்தம்பிதமடையச் செய்துள்ளது.. இது மாதக்கணக்கில் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இந்த நிலைமை வருடக்கணக்கில் நீடித்திருக்க மாட்டாது என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை.
ஏனெனில் இந்த நிலைமை உலகளாவிய ரீதியில் எல்லோரையும் வீடுகளில் முடக்கியுள்ளது. வீட்டில் இருந்து இணையதள சேவைகளை பயன்படுத்தி வேலை செய்தல் என்பது மிகவும் வரையறைக்கு உட்பட்டது. விவசாய மற்றும் கைத்தொழில் உற்பத்திகளை வீட்டில் இருந்து செய்ய முடியாது. எனவே இது தொடங்கிய காலத்தைவிட இனி வரும் காலங்களில்தான் பொருளாதார பாதிப்புக்கள் அதிகமாக இருக்கும்.
தேசிய ரீதியில் அரசாங்கம் இந்த அனர்த்தத்தை வெற்றிகரமாக கையாண்டுள்ளது என்றே கூற வேண்டும். நாட்டின் பொருளாதாரத்தில் வழங்கப்பட்டுவந்த இலவச சுகாதார சேவையும் இராணுவ பாணியிலான அரச நிர்வாகமும் கொரோனா நோய்த் தொற்றிப் பரவலையும் உயிரிழப்புக்களையும் குறைப்பதற்கு முக்கிய காரணங்களாகும். ஒரு புறத்தில் ஜனநாயக விழுமியங்களை மதிக்காமல் கால வரையறையற்ற ஊரடங்கின் மூலம் மக்களின் நடமாட்டங்களைத் தடுத்துக் கொண்டு மறுபுறத்தில் மக்களின் ஆதரவை பெறுவதற்கு மக்களுக்கு பல உதவிகளை அரசு செய்து வருகின்றது.
ஆனால் மக்களை வீட்டில் வைத்து எத்தனை நாளைக்கு உணவுகள், உதவிகள், சம்பளங்களை வழங்குவதற்கு நாட்டின் பொருளாதாரம் இடம்கொடுக்கும் என்ற கேள்வி இயல்பாகவே எழுகின்றது. மறுபுறத்தில் ஏற்கனவே அரசினால் தேர்தலுக்காக வழங்கப்பட்ட சலுகைகளுக்கும் அதைத் தொடர்ந்து கொரோனா பாதிப்பு தருணத்தில் வழங்கப்பட்ட உதவிகளுக்கும் நாட்டு மக்கள் என்ன விலையை கொடுக்கப்போகின்றார்கள் என்பதற்கான ஒரு அபாய மணியாக இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியைக் குறிப்பிட முடியும்.
அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த மூன்று கிழமைகளில் 8 வீதத்துக்கு மேலாக வீழ்ச்சியடைந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலினால் அமெரிக்க பொருளாதாரம் சடுதியாகச் சரிவடைந்துள்ளது. அதன் காரணமாக அமெரிக்க டொலருக்கு ஏற்பட்ட வீழ்ச்சிக்கு மத்தியிலும் இலங்கை ரூபாவின் பெறுமதி பாரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது என்பது முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியதாகும்.
உலகப் பொருளாதாரம் குறிssப்பாக அமெரிக்க பொருளாதாரம் சீரான நிலையில் திடமாக இருந்திருக்குமேயானால், இலங்கை ரூபாவின் பெறுமதி 20 வீதத்துக்கு அதிகமான வீழ்ச்சியையே கொண்டிருந்திருக்கும்.
கொரோனா வைரஸ் தாக்கம் போன்ற தேசிய ரீதியிலான திடீர் அனர்த்தங்கைளச் சந்திப்பதற்கு இலங்கையின் பொருளாதாரம் வலுவற்று இருக்கின்றது. ஹொங்கொங்கில் வணிக வங்கியொன்று தனது மத்திய வங்கியில் பேணுகின்ற ஒதுக்கம் 50 பில்லியன் அமெரிக்க டொலராக இருக்க, இலங்கை ஒரு நாடாக பேணுகின்ற ஒதுக்கம் ஏறத்தாழ 7 பில்லியன் அமெரிக்க டொலராக இருக்கின்றது.
இதுபோன்ற குறைந்த வெளிநாட்டு ஒதுக்கம், பாரிய கடன் சுமை, நட்டத்தில் இயங்குகின்ற அரச தொழில் முயற்சிகள், கீழ்நிலையில் மரபார்ந்த தொழில்நுட்பத்தில் நோய்வாய்ப்பட்டு உயிர்வாழ்கின்ற விவசாயத்துறை - இவை எல்லாவற்றுக்கும் மேலாக சமூகநலச் செலவீடுகளால் பீடிக்கப்பட்ட ஜனநாயக அரசியல் நோக்கம்கொண்ட அரச செலவீடுகள் என்பன இலங்கையில் கொரோனாவுக்கு பின்னரான பொருளாதாரத்தை மென்மேலும் பாதிப்படையவே செய்யும். இதனால் நாடு ஒரு நிதிநெருக்கடிக்கு முகம் கொடுக்கக் கூடிய அபாயங்கள் தென்படுகின்றன.
பொதுத்தேர்தல் வரையில் வெளியில் தெரியாமல் இதனை மறைக்க அரசு பல உத்திகளைக் கையாண்டாலும் வேறு பொருளாதார குறிகாட்டிகளில் இதன் தாக்கம் பிரதிபலிக்கவே செய்யும். குறிப்பாக ரூபாவின் புறப்பெறுமதி வீழ்ச்சியைக் குறிப்பிடலாம். பொதுத்தேர்தலுக்கு பின்னர் நிலமை மோசமடையக் கூடும். இருப்பினும் உலக நாடுகள் குறிப்பாக அமெரிக்கா இந்த வைரசால் உலகப்பொருளாதாரத்தில் தனது நிலையை இழந்து வரும் நிலையில் தற்போது சீனாவின் பொருளாதாரம் கொரோனா தாக்கத்தில் இருந்து மீண்டு எழுந்து உலகப்பொருளாதாரத்துக்கு தலைமை தாங்குமானால் சீனாவின் உற்ற நண்பனான இலங்கையும் அதன் சீனச்சார்பான தலைமையும் தப்பிப் பிழைக்க வாய்ப்பு உள்ளது. இது உலக அரசியல் மற்றும் உலக பொருளாதார ஒழுங்கில் உருவாகும் மாற்றத்தில் தங்கியுள்ளது.
கொரோனாவுக்கு பின்னரான நிலைமைகள் வடக்கு கிழக்கில் உருவாக்கக் கூடிய தாக்கங்கள் சிறப்பாக நோக்கப்பட வேண்டியவையாகும். வடக்கு கிழக்கின் பொருளாதாரம் வெளிநாட்டு வருவாய்களிலும் விவசாயம் மற்றும் மீன்பிடி என்பவற்றிலேயே முதன்மையாக அதிகம் தங்கியுள்ளது.
இங்கு ஒரு விடயத்தை ஞாகப்படுத்த வேண்டி உள்ளது. 1998 ஆண்டு வடக்கு கிழக்கில் பொருளாதார தடை இருந்தபோது கொழும்பில் தலைமைத்துவம் தொடர்பாக பட்டப்பின்படிப்பு மாணவர்களுக்கு விரிவுரை நிகழ்த்திய கலாநிதி பொன்சேகரா உலகிலேயே தலைமைத்துவத்துக்கு மிகவும் உயர்வாக பிரபாகரனை மதிப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.
'நாட்டின் தென்பகுதி எதுவித பொருளாதார தடையுமின்றி இருந்து கொண்டு அரிசியையும் மீனையும் நாட்டுக்கு இறக்குமதி செய்கின்ற போது, கடந்த வாரம் 20 லொறிகளில் அரசியும் கருவாடும் பல ஆண்டுகள் பொருளாதாரத் தடையின் கீழ் இருக்கின்ற புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்து வவுனியாவுக்கு வந்துள்ளன' என்று பிரபாகரனைத் தான் உயர்வாக மதிப்பதற்கான காரணத்தை அவர் கூறியிருந்தார்.
எனவே அனர்த்த காலத்தில் எவ்வாறு வாழ்வதென்பது வடக்கு கிழக்குப் பிரதேச மக்களுக்கு நன்கு பழக்கப்பட்ட ஒன்றாகும் என்பதை இங்கு நான் குறிப்பிட விரும்புகிறேன். கடினமான ஊரடங்கு கால நிலையில் வன்னிப் பிரதேச மக்கள் நெல்லில் அதிக வருமானத்தைப் பெற்றுள்ளார்கள் என்பது கவனத்துக்கு உரியது. எனவே, போக்குவரத்து நிலைமைகள் சீராகும்போது, அரிசியிலும் மரக்கறியிலும் மற்றும் கடலுணவு உற்பத்தியிலும் வடகிழக்குப் பிரதேச மக்கள் அதிக பொருளாதார வாய்ப்பைப் பெற்று வருமானத்தைப் பெறுவார்கள்.
விவசாயத்தில் வருமானம் குறைவாக இருந்த போதிலும் நாம் தொடர்ந்து பாரம்பரிய விவசாய உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றோம். இது அரச பொது வேலைவாய்ப்பில் காட்டப்பட்ட இனபேதப்படுத்தலும், அதன் வழியான யுத்தமும் எமக்குத் தந்த நன்மைகளில் ஒன்றாகும். இந்தத் துறையில் கொரோனா எமக்கு நிறைய வாய்ப்புக்களைத் தரப் போகின்றது. நாடுகளின் தனிமைப்படுத்தல் காரணமாக இறக்குமதிகள் தடைப்பட்டு, உள்நாட்டு உணவுப் பொருட்களுக்கான கேள்வி அதிகரிக்கும்போது இலங்கையில் விவசாயம் மற்றும் மீன்பிடியில் ஈடுபடும் மக்கள் அதிக நன்மைகளைப் பெறப்போகின்றார்கள். இது வடக்கு கிழக்குக்கு அதிகமாக உருவாக வாய்ப்பு உள்ளது.
வடக்கு கிழக்கு மக்களுக்கு கொரோனாவுக்கு பின்னரான இன்னொரு வாய்ப்பு வெளிநாட்டு வருவாய்களின் உள்நாட்டுப்பெறுமதி அதிகரிப்பு ஆகும். இலங்கைப் பொருளாதாரம் எவ்வளவுக்கு எவ்வளவு சரிவடைகின்றதோ அவ்வளவுக்கு அவ்வளவு வெளிநாட்டுடன் தொடர்புடைய நம்மவர்கள் (70 வீதம்) நன்மையடைவார்கள். வெளிநாட்டு தொடர்புகள் குறையும்போது வெளிநாட்டு நாணயங்களின் வருகையும் குறைவடையும். இது நிரந்தரமாக வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் இலங்கைக்கு அனுப்பும் உழைப்பின் பெறுமதியை அதிகரிக்கச்செய்யும். இரண்டு வாரங்களுக்கு முன்னர் 1000 அமெரிக்க டொலருக்கு ஒரு லட்சத்து 85 ஆயிரம் ரூபாவை ஒருவர் பெற்றார். இப்போது அது லட்ச ரூபாவாக அதிகரித்து விட்டது. அடுத்த 6 மாதங்களில் இது 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கக் கூடும்.
சுருக்கமாகக் கூறுவதானால் 1970 களில் இலங்கைப் பொருளாதாரம் விவசாயம் செய்பவர்களுக்கும் வெளிநாட்டு செலவாணிகளில் சம்பாதிப்பவர்களுக்கும் எவ்வாறான வாய்ப்பை கொடுத்ததோ அதை ஒத்த வாய்;ப்பை கொரோனாவுக்கு பின்னரான நிலைமைகளில் இலங்கைப் பொருளாதாரத்தில் இருந்து வடக்கு கிழக்கு மக்கள் பெறுவதற்கான சாத்தியம் உள்ளது.
கேள்வி: கொரோனா வைரஸ் பேரிடரின் விளைவாக அதன் பின்னரான (Post Covid 19) நிலைமைகள் நிச்சயமாக முன்னைய இயல்பு நிலைமைக்குத் திரும்பப் போவதில்லை. உலக ஒழுங்கில் கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள தாக்கம் இதனைத் தெளிவாகப் பிரதிபலித்துள்ளது.. குறிப்பாக உலக வல்லரசுகளின் நிலைமைகள் தலைகீழாக மாற்றம் பெறப் போவதை உலக நிலைமைகள் கோடி காட்டுகின்றன. இத்தகைய ஓர் எதிர்பார்ப்புச் சூழல் நாட்டின் தேசிய பொருளாதார அரசியல் நிலைமைகளில் தாக்கம் செலுத்தும் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா?
பதில்: நிச்சயமாக நான் இதை எதிர்பார்க்கின்றேன். உலகத்தின் தலைமை வலுச்சமநிலையானது அமெரிக்காவில் இருந்து சீனாவுக்கு மாறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. இருப்பினும் கொரோனாவின் தோற்றம் அதன் பரம்பல், இது சீனாவின் ஏனைய நகரங்களை விட சீனாவுக்கு வெளியே ஏற்படுத்திய தாக்கங்கள், கொரோனா தொடர்பாக தகவல்களை வெளியிட்டவர்களின் தொடர்பின்மை மற்றும் சீன அணி நாடுகளில் கொரோனாவின் குறைந்த தாக்கம் என்பன தொடர்பாக முற்றுப்பெறாத விடை காண முடியாத பல வினாக்கள் உள்ளன. இவ்வினாக்களின் அடிப்படையில், சீனாவுக்கு எதிராக உலகம் எப்படியான எதிர் நடவடிக்கை எடுக்கப்போகின்றது என்பதை பொறுத்து உலக பொருளாதார தலைமைத்துவ வலு தீர்மானிக்கப்படும். இந்த உலக வலுச் சமநிலை மாற்றமானது இலங்கையின் அரசியல் பொருளாதார நிலைமைகளில் செல்வாக்கு செலுத்தும். இலங்கையில் தற்போது உள்ள அரசியல் தலைமைத்துவமானது சீனாவின் பக்கமே சார்ந்துள்ளது. சீனாவிலும் சீனாவின் நேச அணியில் உள்ள நாடுகளிலும் கொரோனாவின் தாக்கம் குறைவாக உள்ளது. இலங்கையிலும் இது குறைவாக இருக்கின்றது. இந்த நிலைமையானது பொதுத்தேர்தலில் தற்போதைய ஜனாதிபதியின் அணியினுடைய கைகளை ஒங்கச் செய்யும். எதிர்காலத்தில் சீனாவுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையிலான உறவு மென்மேலும் வலுவடைந்து சீனாவில் இருந்து அதிக அந்நிய உதவிகளை இலங்கை பெறுவதற்கான வாய்ப்பும் உள்ளது.
உலகத்தில் யாரும் கண்ணை மூடிக்கொண்டு உதவிகள் செய்வதில்லை. அந்நிய உதவியும் ஒரு நவகாலனித்துவத்தின் அங்கமாகும். இந்த உதவிகளுக்கு மாற்றீடாக இலங்கையும் சீனாவுக்கு இலங்கையில் முதலிடுவதற்கான பல சலுகைகளை வழங்கி பல ஒப்பந்தங்களில் அரசு கையொப்பமிடுவதற்கான வாய்ப்பும் உள்ளது. இலங்கையின் மாறிவரும் அரசியல் சூ10ழலை சீனாவின் எதிர் அணியில் உள்ள அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம் போன்ற உலக சக்திகள் எவ்வாறு கையாளும் என்பதைப் பொறுத்தே இலங்கையின் எதிர்காலம் தீர்மானிக்கப்படும்.
சீனாவின் உள்நாட்டு அரசியல் ஜனநாயகம் அற்றதாகும். சீனாவின் எந்த தீர்மானங்களும் மக்கள் பிரதிநிதிகளிடம் கேட்டு எடுக்கப்படுவதில்லை. எடுக்கின்ற தீர்மானங்களுக்கு தலைவர்கள் மக்களுக்கு பொறுப்பு கூறவேண்டிய அவசியமும் இல்லை. இவ்வாறான உள்நாட்டு அரசியல் சூழலை தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு உலக வலுவை சீனா தனதாக்கிக் கொள்ளக் கூடிய சூழல் காணப்படுகின்றது. உலக ஒழுங்கு அவ்வாறு மாற்றப்படுமாக இருந்தால் அமெரிக்காவை விட சீனா வலுவான நிலையை தக்கவைத்துக் கொள்ளும் சக்தியைக் கொண்டுள்ளது.
பொருளாதாரத்தில் அரசின் பங்கும் சீனாவில் அமெரிக்காவைவிட அதிகமாக உள்ளது. இந்த காரணங்களுக்காக சீனா கொரோனாவை அமெரிக்காவைவிட இலகுவாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. இந்த சூழல் சீனாவின் எதிர் அணிக்கு பாதகமாகவே உள்ளது. அரசும் அரசியல்; தலைமைகளும் எல்லா முடிவுகளுக்கும் ஜனநாயகம் என்ற பெயரில் மக்களிடம் மண்டியிட்டு இருக்கவேண்டி உள்ளது. தலைமைகள் அடிக்கடி மாற்றப்படுகின்றது. சீனாவில் 1949 இல் இருந்து ஒருகட்சி ஆட்சியும் ஒரு குழாம் தலைமைகளுமே உள்ளன.
கேள்வி: அப்படியானால் அத்தகைய நிலைமைகள் தமிழ் சமூகத்தின் பொருளாதாரத்திலும் அரசியல் போக்கிலும் எத்தகைய மாற்றங்களைப் பிரதிபலிக்கும் என்று நீங்கள் கருதுகின்றீர்கள்?
பதில்: கொரோனா வைரசால் மாற்றமடைந்து வருகின்ற அல்லது வரப்போகின்ற இந்த உலக அரசியல் பொருளாதாரச் சூழலால் இலங்கையின் வடக்கு கிழக்கு மக்களுக்கு எவ்வாறான அரசியல் பொருளாதார நன்மைகள் தீமைகள் கிடைக்கப்போகின்றன என்பது ஒரு பெரிய ஆய்வுக்கு உரியதாகும்.
நாம் காந்திகளாக இருந்து பின்னர் புலிகளாக இருந்து சிங்கங்களிடம் தோற்றுவிட்டோம். தோல்விகளில் இருந்து மீண்டு எழுந்து கற்ற பாடங்களை நினைவில் நிறுத்தி நரிகளாக மாறி கொரோனாவால் உருவான புதிய உலக ஒழுங்கைப் பயன்படுத்த வேண்டும். மா புளிப்பது அப்பத்துக்கு நல்லது என்ற மரபுத்தொடர் தமிழில் உள்ளது. தமிழர்கள் இலங்கைத் தலைமைகளை சீனாவிடம் மண்டியிட என்னென்ன உள்ளீடுகளை இடவேண்டுமோ அவற்றை இலங்கை அரசியலில் இட வேண்டும்.
வெற்றியாளர்கள் கிடைக்கின்ற வாய்ப்புக்களை சரியாக பயன்படுத்துகின்றார்கள் அல்லது வாய்ப்புக்களை உருவாக்கக் கூடிய சூழலை உருவாக்கி அவற்றை புத்திசாதுரியமாக பயன்படுத்துகிறார்கள். தமிழ்மக்கள் இந்த இரண்டு பக்கத்திலும் பயணிக்க வேண்டிய சூழலில் வாழ்கிறோம். மேற்கு உலகுக்கும் இந்தியாவுக்கும் விரோதமான சக்திகளின் பிரசன்னம் இலங்கை அரசியலில் அதிகரித்து தமிழர்களின் அரசியல் உரிமைகள் பாதுகாப்பதற்குமான சர்வதேச சூழலை கொரோனா உருவாக்கி தந்துள்ளது. இவற்றை சரியாக பயன்படுத்தி தமிழர் இருப்பினை இலங்கையில் பாதுகாப்பது தமிழ் அரசியல் தலைமைகளிலேயே தங்கியுள்ளது.
அருவி இணையத்துக்காக பி.மாணிக்கவாசகம்
Category: வாழ்வு, நேர்காணல்
Tags: கொரோனா (COVID-19), இலங்கை