வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி இலங்கையின் பல சிறந்த கல்விமான்களை உருவாக்கிய பெருமை பெற்றது. அது மட்டுமின்றி இலங்கையின் .. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்திலும் இலங்கை சுதந்திரம் பெற்ற ஆரம்பகாலத்திலும் வழிநடத்தியவர்களில் பலர் இக்கல்லூரியில் கல்வி பயின்றவர்களே.
இவ்வாறு காலவளர்ச்சிக்கேற்ற வகையில் கல்விப்புலத்தில் தன்னை ஒரு உயர்மட்டத்தில் நிலைநிறுத்திக் கொண்ட இந்தக் கிராமம் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தில் விளைந்த ஒரு திருப்பு முனையின் ஒரு தளமாகவும் விளங்கியது. 1986ம் ஆண்டு தமிழரசுக் கட்சியின் மகாநாட்டில் முன்வைக்கப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானம் மூலமே முதன்முதலாகத் தமிழீழக் கோரிக்கை பிரகனப்படுத்தப்பட்டது. இந்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையிலேயே தமிழீழ விடுதலைப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போரின் போதும், இனப்பிரச்சனைக்கான தீர்வை எட்டும் முகமாக மேற்கொள்ளப்பட்ட பேச்சு வார்த்தைகளின் போதும் அவை அனைத்தும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை அடிப்படையாக வைத்தே முன்னெடுக்கப்பட்டன. எனவே தமிழினத்தின் வரலாற்றில் வட்டுக்கோட்டை தனக்கென ஒரு தனி இடத்தை வகிக்கும் என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.
இவ்வாறு கல்வித்துறையில், உரிமைப்போராட்டத்தில் தனது பெயரை நிலையாக பதித்துள்ள வட்டுக்கோட்டை எமது இனத்துக்குரிய பண்பாட்டு அம்சங்களைக் கட்டிக்காப்பதிலும் முன்னணியிலேயே திகழ்ந்து வந்தது. எந்த ஒரு இனத்தினதும் பாரம்பரிய கலை, இலக்கியங்கள் அந்த இனத்தின் பண்பாட்டின் அடிப்படை அம்சங்களில் ஒன்றாகவும் அவற்றை அழகியல் வடிவத்தில் முன்வைப்பவையாகவும் திகழ்கின்றன. அவ்வகையில் எமக்கே உரிய பாரம்பரிய கலைவடிவங்களை பேணிப்பாதுகாத்து வளர்த்தெடுப்பதில் வட்டுக்கோட்டைக் கிராமம் காத்திரமான பங்கை வகித்துகிறது. இவற்றில் தருமபுத்திரன் நாடகம், விராட நாடகம், குருகேத்திர நாடகம் என்பன முக்கியமான ஆட்டக்கூத்துக்கள் அதில் இவை வடமோடிக்கூத்துகளுக்குரிய பொது முறையை கொண்டிருந்த போதும் வட்டுக்கோட்டைக்குரிய தனித்துவம் இருப்பது அவதானிக்க முடியும். அத்துடன் தமிழரின் முக்கிய கலைகளான குதிரை ஆட்டம், காவடி ஆட்டம், கரகாட்டம், பொம்மலாட்டம், சூரன் ஆட்டம், தயிர் முட்டி அடித்தல் போன்றவற்றை இவ்வூர் கலைஞர்கள் பாதுகாத்து நிகழ்த்தி வருகின்றனர்.
வட்டுக்கோட்டை மோடி
இங்கு நிகழ்த்தப்பட்டுவரும் தருமபுத்திரன் கூத்து, விராடன் கூத்து, குருகேத்திரன் கூத்து என்பன பொதுவாகவே வடமோடிக் கூத்து என்ற வகைக்குள் அடங்குவதாகக் கூறப்படுகிறது. எனினும் இதில் காணப்படும் சில சிறப்பம்சங்கள் காரணமாக இவை வட்டுக்கோட்டை மோடி என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக வட இந்திய இதிகாசக்கதைகளைக் கொண்ட நாடகங்களே வடமோடிக்கூத்துக்கள் என அழைக்கப்படுகின்றன. வட்டுக்கோட்டைக்கூத்துக்களும் வடநாட்டு இதிகாசக் கதைகளையே கொண்டவை. ஆனால் இவற்றின் ஆட்ட ஒழுங்கு முறைகளும், மத்தளத் தாளக் கட்டுக்களும் வழமையான வடமோடிக் கூத்துக்களைவிட வித்தியாசமாக வட்டுமோடி என அழைக்கப்படும் இந்தச் சிந்து புரக்கூத்துக்கள் வேறுபடுகின்றன. அது மட்டுமன்றி இக்கூத்துக்கள் கடுமையான ஆட்டங்களைக் கொண்டிருந்தபோதிலும் மரச்சட்டங்களாலும் கண்ணாடிகள், மணிகள் போள்றவற்றால் செய்யப்பட்ட மிகவும் பாரம் கூடிய உடுப்புகளான கரப்புடுப்புகளை அணிந்து கூத்தாடியதாக அறியமுடிகிறது. இந்தக்கரப்புடுப்பை ஆக்குவதற்கு ஏற்படும் அதிக செலவீனம் காரணமாகவோ அல்லது அதன் பாரம் காரணமாகவோ, அவற்றை ஆக்கக்கூடிய கலைஞர்கள் அருகிப்போய்விட்டதாலோ தற்சமயம் அவை கைவிடப்பட்டு பாரம் குறைந்த துணிகளிலான உடுப்புகளே பாவிக்கப்படுகின்றன.
ஆதிகாலத்தில் வேட்டைகள், விளைச்சல்கள் என்பனவற்றில் நல்ல பலன் கிடைக்கும்போது தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தவும், தெய்வங்களை திருப்திப்படுத்தும் வழிபாடுகளின் போதும் மக்கள் ஆடிப்பாடினார்களெனவும், காலப்போக்கில் அவற்றின் வளர்ச்சியே முதலில் ஆடல்களாகவும், பின்பு பாடல்களாகவும், அதையடுத்து ஆடல்களும் பாடல்களும் சேர்ந்து கூத்துகளாகவும் பரிணாம வளர்ச்சி பெற்றன எனக்கருதப்படுகிறது.
அவ்வகையில் இந்த வட்டுமோடி இங்கேயே உருவான கூத்தா அல்லது இந்தியாவின் தென்பகுதியில் இருந்து வந்ததா என்பதை அறியுமளவிற்கு எந்த ஆவணங்களும் இருப்பதாக தெரியவில்லை. எனினும் இக்கூத்தில் மலையாளத்தில் நிலவி வரும் கதகளி ஆட்டத்திற்குரிய தாளக்கட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இப்பகுதி மக்கள் தாங்கள் சிந்து நதிக்கரையிலிருந்து வந்தவர்கள் எனக்கூறி இக்கூத்தை சிந்துபுரக்கூத்தென அழைக்கின்றனர்.
எனினும் தருமபுத்திரன் என்ற மகாபாரதக் கதையைத் தழுவி எழுதப்பட்ட கூத்தை அப்போது வட்டுக்கோட்டை மணியகாரனாக இருந்த சுவாமிநாத முதலியாரே எழுதினார் எனவும் அவ்வூரில் திறமையாக மத்தளம் வாசிக்கக்கூடியவராக இருந்த வேலுப்பிள்ளை என்பவர் மூலம் அதை ஏனையோருக்கு பழக்கி அரங்கேற்றினார் எனவும் கூறப்படுகிறது.
வேலுப்பிள்ளையே அவ்வூரில் உள்ளவர்களையும் சேர்த்து தானே அண்ணாவியாராக மற்றவர்களுக்கு இந்த ஆட்டக்கூத்தை மிகுந்த முயற்சியுடன் பழக்கினார். இடையிடையே மணியகாரன் வந்து ஆட்டமுறைகள் தாளங்கள் என்பவற்றை சொல்லிக்கொடுப்பதும் திருத்துவதுமாக மீண்டும் மீண்டும் இக்கூத்து பழக்கத்தின்போதே மெருகேற்றப்பட்டது. அதன் காரணமாக இதை அண்ணாவி மரபு வழிக்கூத்து என அழைப்பதுண்டு.
இலுப்பையடி முத்துமாரி அம்மன் கோவில் முன்றலிலேயே முதன்முதலாக இக்கூத்து மேடையேற்றப்பட்டதாக தெரிகிறது. சுவாமிநாத முதலியார் கூத்தர்களுக்கும் அண்ணாவியாருக்கும் ஆடைகளையும், பணமுடிப்புகளையும் வழங்கி சால்வைகளை போர்த்திக் கௌரவித்தார்.
ஏற்கனவே இலங்கையைச் சேர்ந்த கந்தசாமிப் புலவர் என்பவர் 1660ல் திருச்செந்தூர் நொண்டி நாடகம் என்ற கூத்தை எழுதினார் எனவும் அதையொட்டி தென்னிந்தியாவில் பல நொண்டி நாடகங்கள் ஆடப்பட்டதாகவும் அறியமுடிகிறது. அதன் பின்பு இக்காலகட்டத்திலேயே முக்கூடற்பள்ளு, குற்றாலக்குறிவஞ்சி போன்ற கூத்துகள் உருவாக்கப்பட்டன.
1709 தொட்டு 1784 வரையான காலப்பகுதியில் வட்டுக்கோட்டையை சேர்ந்த கந்தசாமி ஐயர் என்பவர் அலங்கார ரூபன் என்ற கூத்தை இயற்றி வட்டுக்கோட்டை மக்களால் அது ஆடப்பட்டு வந்தது. மேலும் அவரால் வேறு சில ஆட்டக்கூத்துகளும் எழுதப்பட்டு அப்பகுதி மக்களால் மேடையேற்றப்பட்டதாக அறியமுடிகிறது. இக்கூத்துகள் அவரால் ஏட்டில் எழுதப்பட்ட போதிலும் அக்கால மக்களில் பெரும்பான்மையோர் கல்வி அறிவற்றவர்களாக இருந்தமையால் இவை வாய்மொழி இலக்கியங்களாகவே நிலைத்திருந்தன. ஆனால் இவற்றின் பாடல்கள் கூத்தர்களால் மட்டுமன்றி ஊரிலுள்ள பெரும்பான்மையான மக்களால் மனனம் செய்யப்பட்டு பாடப்படும் அளவிற்கு இக்கூத்துகள் மக்கள் மயப்பட்டிருந்தன.
ஆரம்பத்தில் வட்டுக்கோடடையின் மணியகாரனாக இருந்த சுவாமிநாத முதலியார் எழுதி அதை ஆடும்படி பலரை வேண்டியபோதும் அதை சரியாக செய்யமுடியுமோ என்ற பயத்தில் பலர் ஆடுமறுத்துவிட்டனர். இறுதியில் சிறந்த மத்தள வாசிப்பாளரான வேலுப்பிள்ளையே கூத்தையாட முன்வந்தார்.
அவர் நல்ல உடற்கட்டும், குரல் வளமும் பொருந்தியவர்களை தெரிவுசெய்து அவர்களுக்கு கூத்துகளைப் பழக்கினார். அந்த ஊரில் உள்ள 22 இரத்த உறவு கொண்ட குடும்பங்களிலிருந்தே நடிகர்கள் தெரிவுசெய்யப்பட்டனர். ஒரு பாத்திரத்தில் நடிப்பவருக்கு வயது முதிர்ச்சி காரணமாகவோ அல்லது வேறு ஏதாவது விதத்திலோ கூத்தாட இயலாமல் போனால் அவரின் மகனோ அல்லது சகோதரனோ அப்பாத்திரத்தில் நடிக்கவேண்டுமென்பது கட்டாண விதியாக்கப்பட்டிருந்தது. அதன் மூலம் ஒவ்வொரு பாத்திரமும் ஒவ்வொரு குடும்பத்தின் பரம்பரை உரிமையாகப் பேணப்பட்டு வந்தது.
இதையடுத்து வட்டுக்கோட்டையில் நாட்டுக்கூத்துகளில் புதிய யுகம் ஆரம்பமாகியது.
அதில் கலாபூசணம் கந்தையா நாகப்பூ வட்டுக்கோட்டை கூத்துகளை ஒரு உயர்ந்த கட்டத்திற்கு இட்டுச்சென்றதுடன் அவற்றை நாடு முழுவதிலும் பிரபலப்படுத்துவதிலும் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டார்.
தர்மபுத்திரன,; விராட நாடகம், குருகேத்திரன் கூத்து என்பன இவரின் முயற்சியால் நாடுபரந்தளவில் புகழ் பெறும் நிலைமை ஏற்பட்டதுடன் பல்கலைக்கழகங்களில் மாணவர்களால் மெருகுபடுத்தப்ட்டு மேடையேற்றப்படும் வாய்ப்புகளும் உருவாகின.
எமது இனத்தின் கலாச்சார அடையாளங்களாக நாட்டார் கலைகள் முழங்கி வருகின்றன. வட்டுக்கோட்டை மக்கள் நாட்டுக்கூத்துகளை மட்டுமன்றி காவடியாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் போன்ற கிராமியக்கலைகளையும் பேணிப்பாதுகாத்து வருகின்றனர் என்பது எமது இனத்தின் தனித்துவத்தை நிலைநாட்டும் பணியில் ஒரு மகத்தான பங்களிப்பாகும்.
அருவி இணையத்துக்காக நா.யோகேந்திரநாதன்
Category: கலை & கலாசாரம், புதிது
Tags: வட மாகாணம், யாழ்ப்பாணம்