Thursday 21st of November 2024 03:48:13 AM GMT

LANGUAGE - TAMIL
-
ஜனநாயகமற்ற குடும்ப நிறுவனங்களும் கணவர்களினால் வன்முறைகளை எதிர்கொள்ளும் பெண்களும்!

ஜனநாயகமற்ற குடும்ப நிறுவனங்களும் கணவர்களினால் வன்முறைகளை எதிர்கொள்ளும் பெண்களும்!


இலங்கையில் ஐந்து பெண்களில் ஒருவர் தன் கணவனால் முன்னெடுக்கப்படும் வன்முறையை எதிர்கொள்கின்றாள் என்ற அதிர்ச்சியூட்டும் புள்ளிவிபரம் ஒன்று கடந்த வாரம் வெளியாகியிருந்தது. சனத்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் கடந்த ஆண்டில் நிகழ்ந்த பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பான தனது முதலாவது தேசிய கணக்கெடுப்பை ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்தின் ஆதரவுடன் முன்னெடுத்திருந்தது. இந்த ஆய்வின் முடிவில் வெளியான அறிக்கையிலேயே இந்த முக்கியமான தகவல் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் 25 மாவட்டங்களையும் உள்ளடக்கியதாக 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட பெண்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இலங்கையில் ஐந்து பெண்களில் ஒருவர் அதாவது சுமார் 20.4 சதவீதமானோர் தன் வாழ்க்கைத் துணையினால் அதாவது கணவனால் உடல் உள ரீதியிலான வன்முறைகளை அனுபவித்துள்ளனர் என்று இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. பொதுவாகவே இலங்கையில் அதிகரித்துச் செல்லும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள், பாலியல் தொந்தரவுகள் மற்றும் அத்துமீறல்கள் பற்றி பேசப்படும் நிலையில் வெளியாகியுள்ள இந்த ஆய்வறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ள உண்மைகளானது, பெண்களுக்கு மிகுந்த பாதுகாப்பினை தரும் என்று கருதப்பட்டு நிலைநாட்டப்படுகின்ற குடும்பம் என்ற நிறுவனத்தின் ஜனநாயக தன்மையையும் அதில் காணப்படும் பெண்களுக்கான சமநீதியையும் மீண்டும் கேள்விக்குட்படுத்தியிருக்கின்றது. அதுமட்டுமன்றி குடும்பம் பற்றிய கட்டமைக்கப்பட்ட புனிதமான சிந்தனைகளையும் தகர்த்;தெறிந்திருக்கின்றது.

பெண்கள் சமூகத்தில் தனித்து சுதந்திரமாக வாழ்தல் என்பது பாதுகாப்பற்றது என்று கருதும் ஒட்டுமொத்த சமூகமானது, பெண்களுக்கு சமூக பாதுகாப்பினை அளிப்பதற்காக குடும்ப நிறுவனத்திற்குள் அவர்களை அமிழ்த்தி தள்ளி விடுகின்ற நிலையில், அந்த குடும்பம் என்ற நிறுவனமே பெண்களுக்கு எதிரான மிகவும் மோசமான அடக்குமுறைகளுக்கும், வன்முறைகளுக்கும் பிரதான காரணியாக உள்ளது என்பதற்கு இந்த ஆய்வு முடிவை விட வேறு சிறந்த உதாரணம் தேவையற்றதாகும்.

பெண்கள் திருமணமாகி குடும்பத்திற்குள் சென்று வாரிசுகளைப் பெற்றுக்கொடுத்தால் மட்டும் தான் அவர்களது வாழ்க்கை முழுமைப் பெறும் என்றும் சமூக ரீதியிலான கருத்தியல்கள் பலமான அழுத்தத்தினை ஒவ்வொரு பெண்ணின் மீது பிரயோகிக்கின்ற அதேவேளை, மனைவியை அடிப்பதற்கும், திருத்தி நல்வழிப்படுத்தவும் கணவருக்கு முழு உரிமையும் உண்டு என்று வலியுறுத்தி மறைமுகமான உரிமையை ஆண்களுக்கு வழங்கி அதனை மீள மீள வலியுறுத்தி பேணிக் கொண்டு வருகின்றமை பெண்களுக்கு இழைக்கப்படும் பாரியதொரு அநீதியாகும்.

இந்த முரண் நிலைக்கு மத்தியில் குடும்ப பந்தத்தில் இணைக்கப்பட்ட பெண்களும் கணவன் அடித்தால் மறுத்துப் பேசாமல் இருக்கவும், ‘அடிக்கின்ற கை தான் அணைக்கும்’ என்று அதனை மௌனமாக அங்கீகரித்துக் கொள்ளவும் பழக்கப்படுத்தப்படுகின்றனர். கணவனின் கட்டாய பாலியல் உறவு, விரும்பாத கருவை சுமக்க நேர்வது, பிள்ளைகளின் எண்ணிக்கை பற்றி தீர்மானிக்கும் உரிமை அற்ற நிலைமை, கருத்துச் சுதந்திரம் மறுக்கப்படுதல், தொடர் வன்முறைகள், குடும்ப பராமரிப்பு சேவைக்கு ஒருதலைப்பட்சமாக தன்னை அர்ப்பணித்துக் கொள்ளல் போன்ற பல சமத்துவமற்ற தன்மையையே பெரும்பாலான பெண்கள் இந்த குடும்ப நிறுவனத்திற்குள் எதிர்கொள்கின்றனர் என்பதனை எவருமே மறுதலிக்க முடியாது.

‘கணவனே கண் கண்ட தெய்வம்’, ‘கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்’ என்று கூறிக் கூறியே பெண்கள் குடும்பத்தில் எதிர்கொள்ளும் வன்முறைளையும், அநீதிகளையும் சமூகம் பொருட்படுத்தாமல் விட்டு விடுகின்ற அதேவேளை பெண்களையும் பொறுத்துப்போகக் கற்றுக் கொள்ள பணிக்கின்றது.

இந்த வகையில் நோக்கும் போது குடும்பம் என்ற நிறுவனமானது ஆண்களின் அதிகாரத்தினாலும் பெண்களுக்கென ஒருதலைப்பட்சமாக திணிக்கப்பட்ட கடமைகளினாலும் வடிவமைக்கப்பட்டுள்ள கட்டாயமானதொரு உறவு நிலையே என்பது நன்கு புலப்படுகின்றது. இதில் பலவீனமான படிநிலையில் இருக்கின்ற அதேவேளை சந்ததி பெருக்கத்திற்காக பாதுகாக்கப்பட வேண்டியவளாகவும் கருதப்படும் பெண்கள் மீது பல்வேறு வடிவங்களில் வன்முறைகள் பிரயோகிக்கப்படுவது என்பது ஆச்சரியத்திற்குரிய விடயமல்ல.

மேலும் இந்த ஆய்வில் தெரியவரும் மற்றொரு முக்கிய விடயம் ஒன்றும் உள்ளது. அதாவது வாழ்க்கைத் துணையினால் வன்முறைகளை அனுபவித்த பெண்களில் 49.3 சதவீதமானோர் தாம் எதிர்நோக்கிய வன்முறைகளை முறையிட முன்வரவில்லை. குறிப்பாக கணவனால் நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறைகளின் போது அதனை முறையிடும் போது சமூகத்தில் எதிர்கொள்ள வேண்டிய அவமானம், முறையிடுவதில் உள்ள கூச்ச சுபாவம், தம்மீதே குற்றச்சாட்டுக்கள் திருப்பி விடப்படும் என்ற அச்சம் மற்றும் முறையிட்டாலும் நம்ப மறுக்கும் சமூகத்தின் மனோபாவம் ஆகிய காரணங்களினால் உரிய தரப்புகளிடம் முறையிட்டு சட்ட உதவிகளையோ இதர உதவிகளையோ நாட விரும்பாது பாதிக்கப்படும் பெண்கள் மௌனம் காத்து வருகின்றனர். இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். அதேபோன்று இந்த ஆய்வுக்குட்படுத்தப்பட்ட பெண்களில் பெரும்பாலானவர்கள் கணவன் தம்மீது வன்முறையைப் பிரயோகிப்பது ஒரு குற்றச்செயல் என்று கருதி சட்ட உதவிகளை நாடி அதற்கு தீர்வு காண வேண்டியது தேவையற்ற ஒரு விவகாரம் என்று கருதியுள்ளனர். இதுவும் மற்றுமொரு மிகவும் முக்கியமானதொரு விடயமாகும்.

ஏனெனில் வன்முறைகள் என்பது ஒரு குற்றச்செயலாக சட்டத்தினால் கருதப்படும் நிலையில் கணவனால் மட்டும் இழைக்கப்படும் வன்முறைகள், சித்திரவதைகள், பாலியல் வன்கொடுமைகள், துன்புறுத்தல்கள் மட்டும் எப்படி குற்றச் செயல் என்ற வரையறைக்குள் உட்படாமல் இருக்க முடியும் என்ற கேள்வி எழாமல் இல்லை. ஆனால் எமது ஆணாதிக்க சமூக மற்றும் கலாசாரக் கட்டமைப்புகள் பெண்ணுக்கு எதிராக வன்முறைகளை நிகழ்த்தும் ஆணுக்கு கணவன் என்ற அந்தஸ்தினை வழங்கி அவனை பாதுகாத்து நியாயப்படுத்தும் வகையில் குடும்பம் என்ற நிறுவனத்தினை மிகவும் பாதுகாப்பாக வடிவமைத்து பேணி வருகின்றன என்பதே இங்கு உண்மையான நிலையாக உள்ளது.

வன்முறைகள் எந்த வடிவத்திலிருந்தாலும், யாரால் பிரயோகிக்கப்பட்டாலும் அது அங்கீகரிக்கப்பட முடியாத விடயமாகும். அதனால்தான் பால்நிலை சமத்துவத்தை வலியுறுத்தியும் பெண்களின் மனித உரிமைகளை அங்கீகரித்தும் பலவிதமான திட்டங்கள் பல்வேறு தரப்புகளினால் முன்னெடுக்கப்படுகின்றன. பால்நிலை சமத்துவத்தினை வலியுறுத்தும் Gender policies பல்வேறு மட்டங்களில் முன்வைக்கப்படுகின்றன. குடும்ப வன்முறை தடுப்பு சட்டம் உட்பட ஐக்கிய நாடுகள் சபையின் பெண்கள் உரிமைகள் சம்பந்தப்பட்ட பரிந்துரைகளிலும் பிரேரணைகளிலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்படும் நிலையில் அவ்வாறான குற்றச்செயல்களுக்கு கடுமையான சட்டத்திட்டங்களை இயற்றுமாறும் உலக நாடுகளுக்கு பரிந்துரைக்கப்படுகின்றது. இதன்படி உடல் சித்திரவதைகள், அடி உதை, தகாத வார்த்தைப் பிரயோகங்கள், பாலியல் துன்புறுத்தல்கள், தொந்தரவுகள், உள ரீதியிலான கொடுமைகள் போன்ற அனைத்துக்கு எதிராகவும் சட்ட ரீதியிலான பாதுகாப்பினை பெறுவதற்கான வழிமுறைகள் உள்ளன. இதனை எத்தனைப் பெண்கள் அறிந்து வைத்துள்ளார்கள் என்பதற்கு அப்பால் குடும்ப கௌரவம் பாதிக்கப்படும் என்ற ஒரே காரணத்திற்காக ஒவ்வொரு பெண்களும் அமைதி காத்து வருகின்றனர். இது ஒருவகையில் குற்றவாளிகளை பாதுகாக்கும் ஒரு செயலாக அமைவதுடன், வன்முறைகளை மீண்டும் நிகழ்த்த தடையில்லை என்ற மனப்பான்மையை வன்முறையை நிகழ்த்துபவர்களுக்கு ஏற்படுத்தியும் விடுகின்றது. இதனால் தான் குடிபோதையில் வரும் கணவன் வீடு வந்து சேர்ந்ததும் முதல் வேலையாக மனைவி மீது வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடுகின்றான்.

இந்த யதார்த்தத்தினை வன்முறைகளினால் பாதிக்கப்படும் பெண்களும் உணரத் தலைப்படாமை மிக மிக வேதனைக்குரிய விடயமாகும். வன்முறைகள் மிகுந்த பாரபட்சம் மிக்க வாழ்க்கையே தனது தலைவிதி என்று நினைத்து தன்னைத் தானே ஆசுவாசப்படுத்திக் கொண்டு மிகவும் மன உளைச்சலுடனும், அச்சத்துடனும் வாழும் பெண்களின் ஆரோக்கியம் மற்றும் அவர்களை சார்ந்திருக்கும் பிள்ளைகளின் நல்வாழ்க்கை பற்றி இங்கு எவரும் சிந்திக்க தலைப்படுவதில்லை. இதன் விளைவுகள் கோவிட் 19 பெருந்தொற்று எம்மை ஆக்கிரமித்துள்ள இந்த சூழலிலும் பெரும் தாக்கத்தினை சமூக மட்டத்தில் ஏற்படுத்தக் கூடியதாகும்.

எனவே இந்த வகையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளின் யாதார்த்த நிலைமையை வெளிக்கொண்டு வந்திருக்கும் இந்த ஆய்வானது உண்மையில் ஒரு மாற்றத்திற்கான சிந்தனையைத் தூண்டும் விதத்தில் அமைந்துள்ளதுடன் இலங்கையில் பெண்கள் வன்முறைகளை பெருமளவில் எதிர்கொள்கின்றனர் என்பதற்கும் சான்று பகர்கின்றது. எவ்வாறாயினும் இங்கு நாம் ஒரு விடயத்தினை மறந்து விட முடியாது. அதாவது, பெண்கள் மீதான வன்முறைகளை ஆணாhதிக்க கட்டுமானம் கொண்ட சமூகங்கள் அங்கீகரித்து ஆதரிக்கும் வரை பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குடும்பங்களில் தொடர்ந்து கொண்டே இருக்கத் தான் போகின்றது. அவ்வாறாயின் இந்த பிரச்சினைக்கான தீர்வு தான் என்ன என்று சிந்திக்கும் பொழுது, கணவனால் பாதிக்கப்படும் ஒவ்வொரு பெண்களும் குடும்ப கௌவரம் கருதாது உரிய சட்ட உதவிகளைப் பெற முன்வருவதன் மூலமே வன்முறைகளுக்கு எதிரான விழிப்புணர்வினை அனைத்து மட்டங்களிலும் ஏற்படுத்த முடியும். தாம் எதிர்கொள்கின்ற வன்முறைகளை வெளிப்படுத்துவது என்பது ஒருவகையில் வன்முறைகளின்றி வாழ்வதற்கான பாதிக்கப்படும் பெண்களின் நியாயமான போராட்டமாகவே அமைவதுடன் பாதிக்கப்படும் இதர பெண்களுக்கும் ஓர் முன்னுதாரணமாக அமைகின்றது. அத்துடன் கணவனின் வன்முறைகளினால் பாதிக்கப்படும் ஒவ்வொரு பெண்ணும் வன்முறைகள் அற்ற வாழ்க்கையை வாழ தனக்கும் உரிமையுள்ளது என்பதனை உறுதிபட உலகுக்கு வலியுறுத்துவதற்கான ஒரு வாய்ப்பாகவும் அமைகின்றது.

அருவிக்காக பிரியதர்ஷினி சிவராஜா

2020.11.16


Category: பெண்கள் & குழந்தைகள், புதிது
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE