அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா செவ்வாய் கோளின் மேற்பரப்பில் புதிய ரோவர் ரோபோட் விண்கலத்தை நேற்று வியாழக்கிழைமை வெற்றிகரமாக களமிறங்கியுள்ளது.
செவ்வாயின் பரப்பில் இயந்திர ரோவரை நாசா களமிறக்குவது இது இரண்டாவது முறையாகும்.
ஜெசெரோ என்றழைக்கப்படும் செவ்வாயின் மத்திய ரேகை பகுதிக்கு அருகில் ஓர் ஆழமான பள்ளத்தில் விண்கலம் தரையிறக்கப்பட்டது.
புதிய விண்கலம் வெற்றிகரமாகத் தரையிறங்கியுள்ளது நல்ல செய்தியாகும். அது சிறப்பாக செயற்படுகிறது என இந்த விண்வெளிப் பயணத் திட்டத்தின் துணை முகாமையாளர் மாட் வாலஸ் கூறினார்.
புதிய விண்கலம் செவ்வாய் கோளின் மேற்பரப்பில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது உறுதிப்படுத்தப்பட்டவுடன் கலிபோர்னியாவில் உள்ள நாசாவின் கட்டுப்பாட்டு அறையில் இருந்த பொறியியலாளர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
ஆறு சக்கரங்களைக் கொண்ட இந்த ரோவர், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு செவ்வாய் கோளின் பாறைகளைத் துளையிட்டு ஆய்வு செய்யவுள்ளதுடன், அக்கோளில் முன்பு உயிரினங்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் உள்ளனவா? எனவும் ஆராயவுள்ளது.
செவ்வாயில் ஜெசெரோ பகுதியில் பில்லியன் கணக்கிலான ஆண்டுகளுக்கு முன், ஒரு பெரிய ஏரி இருந்ததாகவும், அதில் நீர் இருந்ததாகவும் கருதப்படுகிறது. எனவே அப்பகுதியில் உயிரினங்கள் வாழ்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இதேவேளை, செவ்வாயில் தரையிறங்கிய விண்கலம் உடனடியாகவே அங்கு எடுக்கப்பட்ட இரண்டு புகைப்படங்களை கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பியது. தொடர்ந்தும் அந்த விண்கலம் புகைப்படங்களை அனுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2012-ஆம் ஆண்டு க்யூரியாசிட்டி ரோவரை, செவ்வாய் கோளின் வேறொரு பள்ளத்தில் நாசா தரையிறக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது அனுப்பப்பட்டுள்ள ரோவர் தன்னோடு ஒரு சிறிய ஹெலிகப்டரை எடுத்துச் சென்றுள்ளது. விரைவில் செவ்வாய் கோளில் ஹெலிகாப்டர் பறக்க விடும் சோதனை நடைபெறும். இப்படி வேறொரு கோளில் மனிதர்கள் ஹெலிகாப்டரை பறக்கவிட முயற்சிப்பது இதுவே முதல் முறை. அதன் பிறகு தான் பெர்சவரன்ஸ் ரோவரின் முக்கியப் பணிகள் தொடங்கவுள்னன.
Category: தொழில்நுட்பம், புதிது
Tags: உலகம்