Friday 26th of April 2024 07:59:19 AM GMT

LANGUAGE - TAMIL
.
அதிகாரப் பார்வையும் அடிப்படைத் தேவைகளும்! - நா.யோகேந்திரநாதன்!

அதிகாரப் பார்வையும் அடிப்படைத் தேவைகளும்! - நா.யோகேந்திரநாதன்!


கடந்த மே மாதம் 21ம் திகதி விதிக்கப்பட்ட நாடளாவிய பயணத்தடை எதிர்வரும் ஜூன் 21ம் நாள் வரை நீடிக்கப்பட்டுள்ளது. இடையில் மே மாதம் 25ம் நாள் ஒரு தளர்வு வழங்கப்பட்டிருந்த போதிலும் ஏற்கனவே மே 31ம் திகதியும் ஜூன் 4ம் திகதியும் வழங்கப்படுமென அறிவிக்கப்பட்ட தளர்வு இரத்துச் செய்யப்பட்டு விட்டது. அதுமட்டுமின்றி ஜூன் மாதம் 21ம் திகதி நீக்கப்படுமென அறிவிக்கப்பட்ட பயணத்தடையும் மேலும் நீடிக்கப்படக்கூடிய அறிகுறிகளும் தென்படுகின்றன.

இவ்வாறு தொடர்ச்சியாக விதிக்கப்பட்ட தடைகள் காரணமாக மக்கள் குறிப்பாக வறிய, நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் மிகக் கடுமையான நெருக்கடிகளைச் சந்திக்க நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். கொரோனா தொற்று என்ற பேரிடரிலிருந்து எம்மையும் நாட்டையும் பாதுகாக்க நாம் சில அசௌகரியங்களை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளத் தான் வேண்டும்.

அதேவேளையில் எம்மத்தியில் இந்த அசௌகரியங்கள் தவிர்க்கப்பட முடியாதவையா அல்லது குறைக்கப்படமுடியாதவையா என்ற கேள்வி எழுவதுடன் இத்தடைகள் மூலம் எதிர்பார்த்தளவு பலன்கள் கிட்டினவா என்பதில் சந்தேகமும் எழுந்துள்ளது.

கடந்த மே மாதம் 21ம் திகதி தடைபோடப்பட்டபோது நாளொன்றுக்கு இனங்காணப்படும் தொற்றாளர்கள் தொகை சராசரியாக இரண்டாயிரமாக இருந்த நிலையில் தற்சமயம் ஒரு நாளுக்கு கிட்டத்தட்ட 3,000 நோயாளர்கள் புதிதாக இனம் காணப்படுவதாக அறிவிக்கப்படுகிறது. இவ்வாறே நாளாந்தம் மரணிப்போர் எண்ணிக்கையும் சராசரியாக முப்பதிலிருந்து நாற்பதுக்கு உயர்வடைந்துள்ளது. அண்மையில் அரச மருத்துவ சங்கத்தினர் வெளியிட்ட தகவலில் நாளாந்தம் தொற்றுக்கு உள்ளாபவர்கள் தொகை 12 வீதத்தாலும் இறப்பவர் தொகை 28 வீதத்தாலும் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எப்படிப் பார்த்தாலும் பயணத் தடை விதிக்கப்பட்ட பின்பும்கூட தொற்றாளர்கள் தொகையும் மரணிப்போர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது என்பதை மறுத்துவிடமுடியாது.

எனவே இவ்விவகாரத்தில் எங்கோ தவறு நேர்கிறதோ அல்லது நோக்கம் நிறைவேறுவதற்கான சாதகமான அம்சங்களைச் சீர்குலைக்குமளவுக்கு இயலாமை காணப்படுகிறதா என்ற கேள்வி எழத்தான் செய்கிறது.

எனவே இந்தப் பயணத் தடையின் சாதகபாதக அம்சங்களை ஆராய்வதும் அதை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்களை இனங்காண்பதும், இப்பயணத்தடை போடப்பட்டு 14 நாட்களைக் கடந்து விட்டபோதிலும் தொற்று குறைவடைவதற்கான அறிகுறி ஏன் தென்படவில்லை என்பது பற்றியும் ஆழமாகவும் நேர்மையாகவும் திறந்த மனதுடனும் கண்டுபிடிக்க முயல்வது அவசியமாகும். அப்படியான ஒரு ஆய்வின் மூலம் நாம் அடுத்த கட்ட நகர்வுக்குச் செல்வது பற்றிச் சிந்திக்கவேண்டும்.

ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்துவதில் எந்தப் பயனும் கிட்டப் போவதில்லை. தற்சமயம் எதிர்க்கட்சியினர், அரசாங்க மருத்துவ சங்கத்தினர், சில மகாசங்கத்தினர் ஆகியோர் முழுக் குற்றத்தையும் அரசாங்கத்தின் மீது சுமத்துகின்றனர். அதேவேளையில் அரசாங்கமும் தொற்று நோயத் தடுப்பு ஜனாதிபதிச் செயலணியும் குற்றச்சாட்டை மக்கள் மீது சுமத்துகின்றனர்.

இதுவரைத் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 26,000 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் தொற்று நோய்த் தடுப்புப் பிரிவின் தலைவரும், இராணுவத் தளபதியுமான சவேந்திர சில்வா பொது மக்கள் மீது குற்றம் சுமத்துவதை அலட்சியம் செய்துவிட முடியாது.

அதேவேளையில் மே 25ம் திகதி பயணத் தடை தளர்த்தப்பட்டிருந்தபோது மக்கள் கட்டுப்பாட்டின்றி நடந்து கொண்டமையாலேயே 31ம் திகதியும் 4ம் திகதியும் வழங்கப்படவிருந்த பயணத்தடைத் தளர்வு இரத்துச் செய்யப்பட்டதாக அவர் தெரிவித்திருந்தார்.

இலங்கையின் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ் ஒரு முன்னாள் கேணல் தர அதிகாரி, தொற்றுநோய்த் தடுப்பு ஜனாதிபதிச் செயலணியின் தலைவர் சவேந்திர சில்வா ஒரு ஜெனரல் தர இராணுவத் தளபதி. அவ்வகையில் அவர்கள் பிரச்சினைகளை இராணுவ அதிகாரப் பார்வையில் நோக்குவதையிட்டு ஆச்சரியப்பட்டு விட முடியாது.

இராணுவ ஒழுங்கின்படி மேலிடத்தின் கட்டளைகள் கண்டிப்பாக நிறைவேற்றப்படவேண்டும். அப்படி நிறைவேற்றத் தவறினால் அது மரண தண்டனை உட்பட பாரிய தண்டனைகளுக்கு உள்ளாக வேண்டிய பாரிய குற்றமாகும்.

எனவே 25ம் திகதி மக்கள் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கத் தவறியமைக்காக 31ம் திகதி, 4ம் திகதி தளர்வுகள் ரத்துச் செய்யப்பட்டதுடன் 7ம் தி்கதி வரை விதிக்கப்பட்ட பயணத் தடை 14ம் திகதி வரை நீடிக்கப்பட்டது.

இவ்வளவு பெரிய தண்டனை மக்களுக்கு வழங்கப்பட்டபோதிலும் 26,000 பேர் தனிமைப்படுத்தலை மீறியமைக்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி புதிதாக நாளாந்தம் இனம் காணப்படும் தொற்றாளர்கள் தொகை 12 வீதத்தாலும் மரணிப்போர் தொகை 28 வீதத்தாலும் அதிகரித்துள்ளது.

எனவே விதிக்கப்பட்ட பயணத் தடைகளும் அவற்றை அமுல்படுத்தக் கையாளப்படும் இராணுவ வழிமுறைகளும் தோல்வியடைந்து விட்டன என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளமுடிகிறது.

எனவே கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதில் ஏன் நாம் வெற்றி காணமுடியவில்லை அல்லது வெற்றியை நோக்கி முன் செல்ல முடியவில்லை என்பதை அரசாங்கம், சுகாதார வைத்தியப் பிரிவினர், கொரோனா தொற்று எதிர்ப்பு ஜனாதிபதி செயலணி, அரச வைத்தியர் சங்கம், எதிர்க்கட்சியினர் என அனைவரும் ஒன்றிணைந்து ஆராய வேண்டும். அதன் மூலம் மாற்றுவழி ஒன்ற உருவாக்கப்படவேண்டும்.

இப்படியான ஒரு மாற்றுவழி பற்றிச் சிந்திக்கும்போது அது எப்படி உருவாக்கப்படவேண்டும் என்பது முக்கியமானது. ஒரு மாற்று வழிமுறை மீண்டும் இராணுவ அதிகாரப் பார்வையில் உருவாக்கப்படுமானால் அது வெற்றி பெறுமென்று சொல்லிவிடமுடியாது. எனவே மக்களின் நலன்களின் அடிப்படையில் மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பாரதூரமாகப் பாதிக்காத வகையில் அமையும் போதே அது வெற்றிபெற முடியும். எனவே பயணத்தடை நாட்களின் அனுபவங்களிலிருந்து காணப்பட்ட நன்மை தீமைகளின் அடிப்படையிலேயே வகுக்கப்படவேண்டும்.

நாட்டில் ஆடைத் தொழிற்சாலைகள், சில கட்டுமான நிறுவனங்கள் உட்படச் சில நிறுவனங்கள் மட்டுப்படுத்தப்பட்ட பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளன. இவற்றில் குறிப்பாக ஆடைத் தொழிற்சாலைகளில் சுற்றிவர உள்ள ஊர்களில் வாழ்பவர்களே பணியாற்றுகின்றனர். இப்பணியாளர்களிடமிருந்து அவர்களின் குடும்பத்துக்கும் அக்குடும்பத்தினர்களிலிருந்து முழு ஊருக்கும் பரவும் அபாயம் உண்டு. பாணந்துறை, துல்கிரிய, புதுக்குடியிருப்பு, கிளிநொச்சி, நுவரெலியா ஆகிய பிரதேசங்களில் அமைந்திருந்த ஆடைத் தொழிற்சாலைகளில் ஒவ்வொன்றிலும் நுற்றுக்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் இனம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஆனால் பயணத்தடை நாட்களில் கடைகளைத் திறந்திருந்த கிராமங்களிலுள்ள சிறுகடை உரிமையாளர்கள் கூட தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து 21 நாட்கள் முன்னறிவித்தலின்றி முடக்கப்பட்ட நிலையில் சாதாரண மக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்கு என்ன செய்வது என்ற கேள்வி எழுகிறது. வாகனங்களில் பொருட்கள் விநியோகிக்கப்படும் எனச் சொல்லப்படுகிறது. அது நடைமுறையில் சாத்தியப்படுமா?

எனவே இராணுவ மயப்பட்ட அதிகாரப் பார்வையைக் கைவிட்டு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைக் கவனத்திலெடுப்பதுடன், முதலாவது அலையில் எவ்வாறு அது ஆரம்பமான போதே குறுகிய காலத்தில் கட்டுப்படுத்தப்பட்டது என்ற அனுபவங்களையும் கணக்கிலெடுத்து வலுவான திட்டம் வகுத்து, ஆணித்தரமாக அமுல்படுத்தப்படவேண்டும்.

எனவே கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளை இராணுவ அதிகாரப் பாணியில் தீரமானிப்பதை விட்டு யதார்த்த நிலைமைகளுக்கேற்ற வகையில் மேற்கொள்வதே ஆரோக்கியமான வழியாகும்.

எதிர்வரும் 21 ஆம் திகதியுடன் பயணத்தடை தளர்த்தப்படுமென அறிவி்க்கப்பட்டுள்ளது. அத்தளர்த்தலானது தற்காலிகமாகவோ அல்லது வேறு விதமாகவோ அமையாமல் பொருத்தமான மாற்று வழியொன்றை கடைப்பிடிப்பதற்கான ஆரம்பமாக அமையவேண்டுமென்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.

அருவி இணையத்திற்காக : நா.யோகேந்திரநாதன்.

15.06.2021


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: கொரோனா (COVID-19), கோத்தாபய ராஜபக்ஷ, இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE