Friday 30th of September 2022 04:48:46 AM GMT

LANGUAGE - TAMIL
-
மக்கள் மயப்படுத்தப்பட்ட இனவெறி - (எங்கே தொடங்கியது இனமோதல்  76) - நா.யோகேந்திரநாதன்

மக்கள் மயப்படுத்தப்பட்ட இனவெறி - (எங்கே தொடங்கியது இனமோதல் 76) - நா.யோகேந்திரநாதன்


'எமது விருந்தோம்பல் காரணமாக தென்னிந்தியாவிலிருந்து வந்த படையெடுப்பாளர் களை இங்கு தங்கியிருக்க நாம் அனுமதித்தோம். தமிழர்களை நாட்டில் எங்கும் வாழ அனுமதித்தோம். எங்களுடன் திருமணம் செய்யவும் அனுமதித்தோம். தமிழர்கள் வடக்கிலும் கிழக்கிலும் 261 புத்த கோவில்களை அழித்துள்ளனர். 1977ல் ஒரு இலட்சத்துக்கு மேலான தமிழர்கள் கொழும்பில் வாழ்ந்தனர். ஒருசில ஆயிரம் சிங்களப் படையினர் தான் வடக்கில் இருக்கிறார்கள். ஆயிரம் பேரைக் கொண்ட படையணி ஒன்றை வடக்குக்கு அனுப்ப வேண்டும்'.

இது கொழும்பின் வஜிராம விகாரையின் பிரதான மதகுருவும் சிங்கள வரலாற்றியல் புலமையாளர் எனக் கருதப்பட்டவருமான படிலவ பன்ன தேரர் வெளியிட்ட கருத்து என 1983ம் ஆண்டு செப்டெம்பர் 15ம் திகதி வெளிவந்த இந்தியா டுடே சஞ்சிகையில் குறிப்பிடப்பட்டிருந்த ஒரு விடயமாகும்.

1981ம் ஆண்டு யாழ்.நூலகத்தை எதிர்த்தழிப்பதில் பங்கு கொண்டுவிட்டு கொழும்பு திரும்பிய முன்னாள் அமைச்சர் சிறில் மத்தியூ வடக்குக் கிழக்கில் 261 சிங்கள ஆலயங்கள் தமிழர்களால் அழிக்கப்பட்டு விட்டதாகவும் அவற்றைக் காக்க சிங்கள மக்களை எழுச்சி கொள்ளும்படியும் வரைபடத்துடன் கூடிய துண்டுப் பிரசுரம் அச்சிட்டு சிங்களப் பிரதேசங்களெங்கும் விநியோகித்தார். அதன் விளைவாக நாடெங்கும் தமிழ் மக்களுக்கெதிரான வன்முறைகள் 1981ல் கட்டவிழ்த்துவிடப்பட்டதுடன் பேரழிவு ஏற்படுத்தப்பட்டதும் மறந்து விடமுடியாது.

புத்தர் இலங்கைக்கு 3 முறை விஜயம் செய்ததாகவும் அதில் ஒரு தடவை சிவனொளி பாதமலையில் தன் பாதத்தைப் பதித்துச் சென்றதாகவும் நிலவும் கட்டுக்கதைகளையும் சிங்கள மக்கள் புத்த பிக்குகளால் நம்ப வைக்கப்பட்டுள்ளனர். இலங்கையிலேயே தனது தத்துவம் நிலைபெறுமென புத்தர் நம்பியதாகவும், எனவே இலங்கையின் பாதுகாப்பை அவர் சக்ரா என்பவனிடம் ஒப்படைத்ததாகவும் சக்ரா மகாவிஷ்ணுவிடம் கையளித்ததாகவும் பௌத்தம் சிங்களவருக்குரிய மதமெனவும் மகாவம்சத்தில் குறிப்பிடப்படுவதாகக் கூறப்படுகிறது. ஆனால் இலங்கையின் பிரதம தொல்லியலாளரான பரணவிதான இவை வெறும் கட்டுக்கதைகள் எனவும் வரலாற்றில் எவ்வித ஆதாரமும் இல்லையெனவும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். சிங்கள பௌத்த இனவெறிக்கு இத்தகைய கட்டுக்கதைகளே மூலாதாரமாக அமைந்துள்ளன என இலங்கையர் அனைவராலும் மதிக்கப்படும் சிங்களக் கல்வியலாளரான டாக்டர் டபிள்யூ.அதிகாரம் தனது கட்டுரைகளில் எடுத்துக்காட்டியுள்ளார்.

இவ்வாறு சிங்களத்தின் மதிப்புக்குரிய அறிஞர்கள் இக்கட்டுக்கதைகளை ஆதாரபூர்வமாக மறுத்தபோதிலும் பௌத்தமத பீடங்களும் அரசியல்வாதிகளும் அதிகாரத்தைக் கைப்பற்றவும் கைப்பற்றிய அதிகாரத்தைப் பேணிப் பாதுகாக்கவும் இவற்றை சிங்கள, பௌத்த மக்களின் வேதமாகப் போற்றி மெருகுபடுத்திப் பயன்படுத்தி வருகின்றனர்.

இவற்றுக்குத் தத்துவார்த்த நிறுவன வடிவம் கொடுத்து, சிங்கள பௌத்தம் என்ற கருத்தியலுக்கு இனவெறி வடிவம் கொடுத்து மக்கள் மயப்படுத்தியதில் அநகாரிக தர்மபாலவுக்கு பிரதான பங்குண்டு.

ஒரு சிங்கள, பௌத்தர் அல்லாதவர் நாட்டின் அதிபராக வரமுடியாததாக இருந்தபடியால் கிறிஸ்தவர்களான எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க, ஜே.ஆர்.ஜயவர்த்தன ஆகியோர் பௌத்தர்களாக மதம் மாறினர் என்பதை நினைவு கூரலாம். டட்லி சேனநாயக்க கூட ஒரு தமிழ்ப் பெண்ணான சேர்.கந்தையா வைத்தியநாதனின் மகளைக் காதலித்தார். ஒரு தமிழ்ப் பெண்ணைத் திருமணம் செய்தால் பிரதமர் பதவி வகிக்க முடியாதென்பதால் அவர் கடைசி வரைத் திருமணம் செய்யாதிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவற்றிலிருந்து சிங்கள பௌத்தம் இலங்கை அரசியலில் எவ்வாறு தீர்மானிக்கும் சக்தியாக வலிமைபெற்றுள்ளது என்பதைப் புரிந்து கொள்ளமுடியும்.

அதன் காரணமாகவே சிங்கள அரசியல்வாதிகள் தங்கள் மக்கள் விரோத நடவடிக்கைகளை மூடி மறைக்க சிங்கள பௌத்த இனவெறியைக் கையில் எடுத்துத் தமிழ் மக்கள் மீது பிரயோகித்து வருகின்றனர்.

1977ல் 5/6 பெரும்பான்மையுடன் வெற்றிபெற்ற ஐ.தே.கட்சியின் செல்வாக்கு ஜனாதிபதித் தேர்தல், சர்வஜன வாக்கெடுப்பு, பின் இடம்பெற்ற இடைத் தேர்தல் மற்றும் உள்ள10ராட்சி தேர்தல்கள் என்பவற்றில் சரிந்து வருவதை ஜே.ஆர்.ஜயவர்த்தன உணர்ந்து கொண்டார். மீண்டும் ஸ்ரீ.ல.சுதந்திரக் கட்சி எழுச்சி பெறும் நிலையும் ஜே.வி.பியின் ஆதரவு வலுவடையும் நிலையும் ஏற்பட ஆரம்பித்தன. மீண்டும் ஒரு இன அழிப்புக் கலவரத்தை நடத்தத் திட்டமிட்டார். ஆனால் முன்பு போலன்றி மக்கள் மயப்படுத்தப்பட்டதாக அமையும் வண்ணம் தயாரிப்புகள் மேற்கொள்ளப்பட்டன.

உள்ள10ராட்சித் தேர்தலன்று கந்தர்மடம் வாக்குச் சாவடியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு இராணுவ வீரர் கொல்லப்பட்டதன் காரணமாக படையினர் யாழ்ப்பாணத்தில் நடத்திய வெறியாட்டத்தில் ஒரு தமிழர் கொல்லப்பட்டதுடன் ஏராளமான சொத்துக்கள் அழிக்கப்பட்டன. தற்சமயம் பாதுகாப்புச் செயலாளராக உள்ள மேஜர் ஜெனரல் கமல் குணவர்த்தன, அப்போது இராணுவத்தினர் சட்டவிரோதமாகத் தமிழர் சொத்துக்களை அழித்தபோது தனக்கு ஒருவித திருப்தி ஏற்பட்டதாகத் தெரிவித்திருந்தார். இவ்வாறுதான் 1983 கறுப்பு ஜுலைக்கு தயாரிப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.

அதையடுத்து விடுதலைப் புலிகளைத் தேடுவது என்ற பேரில் வடக்கின் பல பகுதிகளிலும் சுற்றிவளைப்புகள் இடம்பெற்று காரணமின்றி ஏராளமான இளைஞர்கள் கைது செய்யப்பட்டுச் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு இராணுவ முகாம்களில் தடுத்து வைக்கப்படுகின்றனர். போராளிகளும் இப்படியான சுற்றிவளைப்புகளின்போது தாக்கிவிட்டு தப்பியோடுவது என்ற தந்திரோபாயத்தைப் பின்பற்றுகின்றனர்.

தமிழ் மக்கள் ஒற்றுமையுடன் உள்ள10ராட்சித் தேர்தல்களை முற்றாகப் புறக்கணித்தமை, தேர்தலைப் பகிஷ்கரிக்கும்படியும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கும்படியும் கோரி யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியமை சிங்கள இனவெறியரைச் சினம் கொள்ள வைக்கிறது. அதற்குப் பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ் மாணவர்கள் மீது பழி தீர்க்கும் முகமாகச் சிங்கள மாணவர்கள் தமிழ் மாணவர்கள் மேல் தாக்குதல் தொடுக்கிறார்கள். இத்தாக்குதல் காரணமாக பேராதனைப் பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் வெளியேற வேண்டிய நிலை எழுகிறது. மே மாதம் வெளியேறிய மாணவர்கள் மீண்டும் ஜூன் மாதத்தில் திரும்பிய பின்பும் தாக்குதல் நடத்தப்படுகிறது. இத்தாக்குதலில் ஈடுபட்ட சிங்கள மாணவர்களில் இருவர் மீது வகுப்புத் தடை விதிக்கப்படுகிறது. இத்தடையை எதிர்த்து பேராதனை சிங்கள மாணவர்கள் வகுப்புப் பகிஷ்கரிப்பில் ஈடுபடுகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக கொழும்பு, களனி பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டத்தில் இறங்குகின்றனர். இச்சம்பவங்கள் மூலம் முழு சிங்கள மாணவர் சமூகமுமே இனவெறியூட்டப்பட்டதை அவதானிக்க முடியும்.

இவ்வேளையில் வவுனியாவில் புளட் இயக்கத்தினரால் 1983 ஜூன் 7ம் திகதி விமானப் படை வாகனம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இரு விமானப் படையினர் கொல்லப்படுகின்றனர். அதைத் தொடர்ந்து வவுனியாவில் தமிழ் மக்களுக்கு எதிரான இனவெறித் தாக்குதல்கள் ஆரம்பமாகின்றன. அதேவேளை உயிரிழந்த படையினரின் சொந்த இடங்களான மினுவாங்கொடை, கண்டி ஆகிய இடங்களிலும் தமிழ் மக்கள் மீதான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன.

திருகோணமலையில் கல்லோயா குடியேற்றத்திலிருந்து மெல்லமெல்ல குடியேறியவர்கள் தமக்கென 'சேருவில' என்ற தேர்தல் தொகுதியை அமைக்குமளவுக்கு அதிகரித்திருந்ததனால் திருமலை நகரிலும் மீன் சந்தையும் புறநகர்ப் பகுதிகளில் ஸ்ரீமாபுர, அன்பு வழிபுரம் போன்ற பகுதிகளும் சிங்களவரின் ஆதிக்கத்திலேயே இருந்தன. சிங்கள மக்கள் மத்தியில் தமிழர்கள் தமிழீழம் அமைத்து சிங்களவர்களைத் திருகோணமலை மாவட்டத்தை விட்டு விரட்டப் போகிறார்கள் என்ற வாந்தி வேகமாகப் பரப்பப்பட்டது.

அதன் காரணமாக வெகுண்டெழுந்த சிங்களவர் ஆங்காங்கே தமிழ் மக்கள் மீது தாக்குதல்களைத் தொடுத்தனர். பல இடங்களில் தமிழர்களும் பதில் தாக்குதலை நடத்தினர். அதையடுத்து பொலிஸார், இராணுவத்தினரின் அனுசரணையுடன் பெரும் இனவெறித் தாக்குதல்கள் தொடங்கப்பட்டு இரு மாதங்களாக நீடித்தன.

இந்த நிலையில் இந்த வன்முறைகளைக் கண்டித்து திருகோணமலையில் ஜுலை 1ம் திகதி தமிழர் விடுதலைக் கூட்டணியால் ஹர்த்தால் ஏற்பாடு செய்யப்பட்டது. அதேவேளை மருத்துவர் எஸ்.ஏ.தர்மலிங்கம் தலைமையிலான தமிழீழ விடுதலைக் கூட்டணி கடும் கண்டனங்களைத் தெரிவித்ததுடன் வன்முறைகளைத் தடுத்து நிறுத்தும்படி கோரி சர்வதேச நாடுகளின் தூதரகங்களுக்குக் கடிதங்களை அனுப்பியது.

எனினும் பேராதனை, வவுனியா, திருகோணமலை ஆகிய பகுதிகளின் தமிழ் மக்கள் மீதான வன்முறைகள் படையினரின் அனுசரணையுடன் தொடர்ந்து இடம்பெற்று வந்தன.

அதேவேளையில் 'ரெலா' என அழைக்கப்பட்ட தமிழீழ விடுதலை இராணுவத்தால் யாழ்.தேவி ரயில் எரிக்கப்பட்டதுடன் அரச பஸ்கள், காரியாலயங்கள் என்பனவும் தீக்கிரையாக்கப்பட்டன.

அச்சம்பவத்தையடுத்து, தமிழீழ விடுதலைக் கூட்டணியின் ஆதரவு ஏடுகளான 'சற்றர்டே ரிவியூவும்', 'சுதந்திரனும்' ஜூன் 2 ஆம் திகதி தடைசெய்யப்படுகின்றன.

அதன் தலைவர் மருத்துவர் எஸ்.ஏ.தர்மலிங்கமும், சுதந்திரன் ஆசிரியர் கோவை மகேசனும் கைது செய்யப்படுகின்றனர்.

ஜுலை மாதம் 2ம் திகதி தமிழ் மக்களின் குரலாக விளங்கிய 'சற்றர்டே ரிவியூ', சுதந்திரன் ஆகிய இரு பத்திரிகைகளும் தடை செய்யப்பட்டதுடன், தமிழீழ விடுதலைக் கூட்டணியின் தலைவர் எஸ்.ஏ.தர்மலிங்கம், கோவை மகேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டதுடன் ஜுலை 3ம் திகதி அவசர காலச் சட்டத்தின் 154 விதி பிரகடனப்படுத்தப்படுகிறது. அதன்படி படையினர் யாரையாவது சுட்டுக் கொன்றால், கொல்லப்பட்டவர்கள் இனங்காணப்படாத நிலையிலும் எவ்வித விசாரணையுமின்றி எரிக்கவோ புதைக்கவோ முடியும். இதுபற்றி இங்கிலாந்திலிருந்து வெளிவரும் 'கார்டியன்' பத்திரிகை 'ஆயுதப் படைகள் ஆயுதங்களைப் பயன்படுத்தும் தேவை எழும்போது, அதற்காக இனி அரச படைகளைச் சட்டத்தைக் கொண்டு தண்டிக்கமுடியாது. நூற்றுக்கணக்கான உடல்கள் பெரும் புதை குழிகளில் புதைக்கப்படுகின்றன' எனத் தெரிவித்திருந்தது.

ஏற்கனவே வன்முறைகளில் வடக்கில் ஈடுபட்ட படையினருக்கு இச்சட்டம் மேலும் உற்சாகத்தை வழங்கியது. சுற்றி வளைத்து இளைஞர்களைப் பாடசாலை மாணவர்களைக் கொண்டுவந்து பஸ் நிலையத்தில் வரிசையாக நிற்க வைத்துத் தாக்கிவிட்டு ஓட விட்டுக் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிப் பி;ரயோகம் செய்வது போன்ற கொடுமைகளைப் படையினர் மேற்கொள்ள ஆரம்பித்தனர். படையினர் வாகனங்களில் செல்லும்போது ஓடிக் கொண்டே துப்பாக்கிப் பிரயோகம் செய்வதும் அடிக்கடி இடம்பெற்றன. ஜுலை 15ம் திகதி படையினர் சாவகச்சேரிப் பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது காயமடைந்த சீலன் என அழைக்கப்படும் சார்ள்ஸ் அன்ரனி காயமடைந்த நிலையில் தனது நண்பனைக் கொண்டே தன்னைச் சுட வைத்து வீரச் சாவடைகிறான். ஜுலை 18ம் திகதி பஸ்ஸுக்குக் காத்திருந்த மாணவிகளை தங்கள் பஸ்ஸில் கடத்திக்கொண்டு சென்ற படையினர் அவர்களைக் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துகின்றனர். அதன் காரணமாக ஒரு மாணவி தற்கொலை செய்து கொள்கிறாள்.

இவ்வாறான தொடர் சம்பவங்கள் வடபகுதி மக்களைத் தாங்கமுடியாத கொதிநிலைக்குத் தள்ளுகின்றன.

எனவே இராணுவத்தினரின் நடமாட்டத்தைக் கட்டுக்குள்கொண்டு வராவிட்டால் தமிழ் மக்களின் உயிர்களுக்கு எவ்வித உத்தரவாதமும் இல்லையென்பதை விடுதலைப் புலிகள் உணர்ந்து கொள்கின்றனர்.

அதன் விளைவுதான் 1983 ஜுலை 23ம் திகதி தின்னவேலி தபால் பெட்டிச் சந்தியில் இடம்பெற்ற 13 இராணுவத்தினர் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் தாக்குதல் நடவடிக்கையாகும்.

இது தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒரு முக்கிய திருப்புமுனை எனக் கருதப்பட்டது.

அதேவேளையில் ஏற்கனவே வவுனியா, பேராதனை, திருமலை, மினுவாங்கொட, கண்டி ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தமிழ் மக்களுக்கெதிரான வன்முறைகளை தின்னைவேலித் தாக்குதலில் 13 படையினர் கொல்லப்பட்டதை வைத்து ஜே.ஆர்.ஜயவர்த்தன நாடு முழுவதும் கட்டவிழ்த்து விட்டார்.

தொடரும்

அருவி இணையத்துக்காக நா.யோகேந்திரநாதன்.


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags:பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE