Thursday 25th of April 2024 11:08:27 PM GMT

LANGUAGE - TAMIL
.
புதிய அரசியலமைப்பும் மாகாண சபைகளும்! - நா.யோகேந்திரநாதன்!

புதிய அரசியலமைப்பும் மாகாண சபைகளும்! - நா.யோகேந்திரநாதன்!


புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடா்பாக பணியாற்ற நியமிக்கப்பட்ட குழுவினர் தமது அறிக்கையை இம்மாத முடிவுக்குள் சமர்ப்பிக்கவுள்ளனர் எனவும், அதனையடுத்து அது அமைச்சரவையின் அங்கீகாரத்துக்குச் சமர்ப்பிக்கப்பட்டு, பின் நாடாளுமன்றத்தில் பகிரங்க விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இது மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டால் அது இலங்கையின் 4வது அரசியலமைப்பாக அமையும். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைப் பொறுத்தவரையில் உள்ளக முரண்பாடுகள் நிலவுவதாக வெளியில் தோன்றினாலும் இப்படியான சந்தர்ப்பங்களில் அவர்களால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை உருவாக்கிவிட முடியும் என்பது அவர்களின் கடந்தகால வரலாறாகும்.

உத்தேச புதிய அரசியலமைப்பு தொடாபான தகவல்கள் சில சிங்கள ஊடகங்களில் வெளியாகியுள்ளன. அதில் தமிழ் மக்களின் கவனத்தை ஈர்க்கும் ஒரு விடயமும் முக்கியமானதாகும். அதாவது 13ம் அரசியலமைப்புத் திருத்தத்திற்கமைவாக அமைக்கப்பட்ட மாகாண சபை முறைமை புதிய அரசமைப்பில் நீக்கப்படுமென ஒரு பிரபல சிங்களப் பத்திரிகை தலைப்புச் செய்தி வெளியிட்டுள்ளது. ஏற்கனவே இலங்கையின் தற்போதைய நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ் அடிக்கடி இனப்பிரச்சினைத் தீர்வுக்கு உள்ளூராட்சி சபைகளைப் பலப்படுத்துதல், அதாவது பஞ்சாயத்து அமைப்பு முறையிலான அதிகாரப் பரவலாக்கமே ஒரே வழி எனக் கூறிவரும்நிலையில் மேற்படி செய்தி உண்மையாகவே அமைந்திருக்குமென நம்பக் கூடியதாயுள்ளது.

இதுவரைத் தமிழ் மக்கள் இலங்கைத் தீவில் உரிமையுள்ள ஒரு தேசிய இனமாக வாழவேண்டுமென்பதற்காக நடத்திய போராட்டங்களும், செய்த தியாகங்களும் சந்தித்த இழப்புகளும் கொஞ்சநஞ்சமல்ல. உலகில் இடம்பெற்ற எந்தவொரு விடுதலைப் போராட்டத்துக்குக் குறைந்தாகக் கருதமுடியாதளவு இலட்சிய உறுதியும் வீரமும் அர்ப்பணிப்புகளும் நிறைந்ததாகவே எமது போராட்டமும் வரலாற்றில் அதனைப் பதிவு செய்துள்ளது.

ஜனநாயக அடிப்படையிலான அஹிம்சைப் போராட்டங்கள் முதல் ஆயுதப் போராட்டங்கள் வரை வீரத்துடன் இடம்பெற்ற போராட்டம் 2009ல் முள்ளிவாய்க்கால் இறுதிச் சமருடன் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

ஆயுதப் போராட்டம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட போதிலும்கூட நாம் இன்று ஒரு வெற்றிடத்தில் இல்லை. எமது அஹிம்சை மற்றும் ஆயுதப் போராட்டங்களின் பின்பு எங்களிடம் எஞ்சிக்கிடப்பது 13வது அரசியலமைப்புச் சட்டமும், அதை அடிப்படையாகக் கொண்ட பல அதிகாரங்கள் பறிக்கப்பட்ட மாகாண சபையும் மட்டும்தான்.

நிச்சயமாக இனப் பிரச்சினைக்கு நியாயபூர்வமான தீர்வை எட்டவும் எமது குறைந்த பட்ச அபிலாஷைகளை நிறைவு செய்யவும் மாகாண சபைகளால் முடியாது என்பதில் சந்தேகத்துக்கு இடமில்லை. ஆனால் இன்று எஞ்சிக் கிடப்பது அது மட்டும்தான் என்ற உண்மையும் அதைக் கூட இழந்து விடக்கூடாது என்ற தேவையும் அவசியம் உணரப்பட வேண்டிய உண்மையாகும்.

இந்த நிலையில்தான் புதிய அரசியலமைப்பில் மாகாண சபை முறைமை நீக்கப்படும் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

ஏறக்குறைய 60 வருடங்கள் நடத்திய உரிமைப் போராட்டத்தின் பலனாக எம்முன்னால் எஞ்சிக் கிடப்பது இந்தப் 13வது அரசியலமைப்புச் சட்டம் மட்டுமே என்பதை நாம் ஒப்புக் கொண்டேயாக வேண்டும்.

மாகாண சபைகள் சட்டம் அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. அது இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு அமைவாகவே நிறைவேற்றப்பட்டது.

இலங்கை இந்திய ஒப்பந்தம் என்பது இந்தியா, இலங்கை என இரு நாடுகளுக்கிடையே உருவாக்கப்பட்ட ஒரு உடன்படிக்கையாகும். அவ்வகையில் அதற்கு நாடுகளின் எல்லைதாண்டிய ஒரு சர்வதேச அந்தஸ்து உண்டு.

அதுமட்டுமின்றி இலங்கையின் இனப் பி்ரச்சனைத் தீர்வு காண 13வது அரசியலமைப்புத் திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்படவேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் வலியுறுத்தியிருந்தார். அது மனித உரிமைகள் பேரவையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

எனவே 13வது அரசியலமைப்புத் திருத்தம் இலங்கையின் எல்லைக்குள் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. அது சர்வதேச மயப்படுத்தப்பட்டது என்பதை மேற்படி இரு விடயங்களும் தெளிவுபடுத்தியுள்ளன.

எனவே போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், பயங்கரவாத தடைச்சட்டம் உட்பட்ட முறை மீறல்கள் உள்நாட்டு விவகாரங்களெனவும் அவற்றுக்கு உள்நாட்டிலேயே தீர்வு காண முடியுமெனக் கூறி வருவது போன்று 13வது திருத்தத்துக்கு சாட்டுகள் முன்வைக்கமுடியாது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

எனவே தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறைகளை மேலும் தீவிரமாக ஆளும் தரப்பினர் தொடர்வதற்கு 13வது திருத்தச் சட்டத்தை நீக்க வேண்டியுள்ளது. நேரடியாக அதை நீக்கினால் அது இலங்கை இந்திய உறவில் சிக்கல்களை ஏற்படுத்தும். எனவேதான் ஒட்டு மொத்தமாக புதிய அரசியலமைப்பை உருவாக்குவதன் மூலம் 13வது திருத்தம் வழங்கக்கூடிய அழுத்தம் இல்லாமற் செய்யப்பட முயற்சிக்கப்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது.

இப்படியான நிலையில் இச் சட்டம் இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் அடிப்படையிலானது என்ற வகையில் இது தொடர்பாக அக்கறை செலுத்தும் உரிமை இந்தியாவுக்கு உண்டு.

அந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட 7 கட்சிகள் இணைந்து இலங்கை இந்திய ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தும்படி இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு கோரி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

ஆனல் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் சில புலம்பெயர் தமிழர்களும் இந்நடவடிக்கை தொடர்பாகக் கடும் கண்டனங்களை வெளியிட்டுள்ளனர். இது இனப்பிரச்சினைத் தீர்வை 13வது திருத்தத்துக்குள் முடக்கும் சதி என்றும் கூறி வருகின்றனர்.

13வது திருத்தம் தொடர்பாக இவர்களும் அரசாங்கமும் ஒரே நிலைப்பாட்டில் உள்ளதை அவதானிக்கலாம். அது மட்டுமின்றி 13வது திருத்தத்தை தமிழ் மக்களில் ஒரு பகுதியினரும் எதிர்க்கின்றனர் என்ற காரணத்தை அரசாங்கம் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தக்கூடுமோ என்ற கேள்வியும் எழச் செய்கிறது.

13வது திருத்தச் சட்டம் தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றப் போதுமானதல்ல என்பதை எல்லாத் தமிழ்த் தரப்பும் ஏற்றுக்கொள்கின்றனர். ஆனால் இருக்கும் ஒரு வாய்ப்பை இழக்கக்கூடாது என்பதுதான் அதை நீக்க அனுமதிக்கக்கூடாது என்று கோருவதற்கான அடிப்படையாகும்.

ஆனால் 13வது திருத்தத்தை நிராகரிப்பவர்களிடம் அதற்கு உகந்த வேறு வேலைத்திட்டம் இருப்பதாகத் தெரியவில்லை. அதேவேளை 6 கட்சிகளும் கடிதத்தை அனுப்பி விட்டு ஓய்வெடுக்கப் போகிறார்களா அல்லது அடுத்த கட்டத்தை நோக்கி நகரப் போகிறார்களா என்ற கேள்வியும் உண்டு.

அறிக்கை அரசியலும், வீராவேசப் பிரகடனங்களும்தான் தமிழ்த் தலைமைகளின் அரசியல் என இருக்கும் வரை விமோசனம் கிட்ட வழி பிறந்துவிடப் போவதில்லை என்பதுதான் 2009ன் பின்பு கடந்த கால அனுபவம் தரும் பாடமாகும். இனியாவது தமிழ்த் தேசியத்தைப் பேசும் தலைமைகள் அறிக்கைகளுடனும் ஊடகசந்திப்புக்களுடனும் வீராவேசச் சவால்களுடனும் தாங்கள் அரசியல் பணிகளை மட்டுப்படுத்துவதற்கு அப்பால் நடைமுறைச்சாத்தியமான வழிகளில் தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான முயற்சிகளை எடுக்கவேண்டும் என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும்.

அருவி இணையத்துக்காக :- நா.யோகேந்திரநாதன்.

15.02.2022


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இந்தியா, இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE