Friday 26th of April 2024 08:15:27 PM GMT

LANGUAGE - TAMIL
.
பயங்கரவாத தடைச் சட்டமும் பலியாகும் நியாயங்களும்! - நா.யோகேந்திரநாதன்!

பயங்கரவாத தடைச் சட்டமும் பலியாகும் நியாயங்களும்! - நா.யோகேந்திரநாதன்!


கடந்த 22 மாதங்களாகப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு அண்மையில் விடுதலை செய்யப்பட்ட பிரபல சட்டத்தரணியும் மனித உரிமைச் செயற்பாட்டாளருமாகிய ஹஜாஜ் ஹில்புல்லா அவர்கள் விடுவிக்கப்பட்டபோது அத்தீர்ப்பை வழங்கிய நீதிபதி நீல் இத்நாவல வெளியிட்ட கருத்துக்கள் மிகமிக முக்கியமாக உற்று நோக்கப்படவேண்டியவையாகும். அவர் பயங்கரவாதத் தடைச்சட்டம் 1979ம் ஆண்டு விடுதலைப் புலிகளைக் கட்டுப்படுத்தக்கொண்டு வரப்பட்ட ஒரு தற்காலிக ஏற்பாடு எனவும், ஆனால் அது தற்சமயம் அரசியல் பழிவாங்கல் போன்ற மோசமான செயல்களுக்குப் பயன்படுத்தப்படுகிறதெ னவும் தனது தீர்ப்பின்போது கண்டனம் செய்திருந்தார்.

இப்படியான சந்தர்ப்பத்தில் பொலிஸாரும் புலனாய்வுப் பிரிவினரும் நீதிமன்றங்களைப் பிழையாக வழிநடத்த முயல்கிறார்களோ என்ற சந்தேகம் எழுவது தவிர்க்கப்பட முடியாததாகிறது.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு உறுப்பினரான ஒரு உயர்மட்டப் பொலிஸ் அதிகாரி, தற்கொலைக் குண்டுதாரி சஹ்ரானின் மனைவியான சரா என்றழைக்கப்படும் புலஸ்தினி மகேந்திரன் உயிருடன் தப்பிச் செல்ல அபூபக்கர் என்ற உதவிப் பொலிஸ் பரிசோதகர் உதவினார் எனக் குற்றம் சாட்டியிருந்தார். அதன் அடிப்படையில் அவர் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 2 வருடங்களாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். விசாரணை அதிகாரி உதவிப் பொலிஸ் அத்தியட்சகராகப் பதவி உயர்வு பெற்றார். தற்சமயம் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணையில் இது பொய்யான குற்றச்சாட்டு எனக் கண்டு பிடிக்கப்பட்ட நிலையில் அந்த விசாரணை அதிகாரி அமெரிக்காவுக்குத் தப்பியோடி விட்டார்.

சில தரப்பினர் தங்கள் அதிகாரத்தை நிலை நிறுத்தவும், தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்காகவும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பாவித்து நியாயங்களைக் குழிதோண்டிப் புதைப்பது தொடர்பாக ஆணித்தரமாக வெளிவந்த இரு விடயங்களாகும். ஆனால் இச்சட்டத்தைப் பயன்படுத்தி ஏற்கனவே ஏராளமான முறைகேடுகள் இடம்பெற்றுள்ளன., மேலும் மேலும் இடம்பெற்றும் வருகின்றன.

அண்மையில்கூட 12 வருடங்களாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த 52 வயது நபர் குற்றமற்றவராக நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார். அநீதியான முறையில் 12 வருடங்கள் தண்டனை அனுபவித்த அவருக்கு நியாயங்களை எங்கு போய்த் தேட முடியும்.

இச்சட்டம் 1979ல் விடுதலைப் புலிகளை அழிக்கும் நோக்கத்துடன் கொண்டு வரப்பட்டதாகக் கூறப்பட்ட போதிலும் கூட அது தமிழ், முஸ்லிம், சிங்களம் என இனமதபேதமின்றி அனைத்து இனங்கள் மீது பயன்படுத்தப்பட்டு வருகிறது.

குறிப்பாக அநீதிகளுக்கு எதிராகத் துணிச்சலாகக் குரல் கொடுப்பவர்களும், மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் இனம் தெரியாதவர்களால் படுகெலை செய்யப்படுவார்கள் அல்லது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என்பதுதான் நியதியோ எனக் கேட்குமளவுக்குச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்த நிலையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படவேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளது. இதன் உறுப்பினர்கள் இந்த ஆட்சியாளர்களால் நியமிக்கப்பட்டவர்களென்பதும் குறிப்பிடத்தக்கது. அது மட்டுமின்றி சர்வதேச மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து இச்சட்டத்தை நீக்கவேண்டுமென வலியுறுத்தி வருகின்றன.

எல்லாவற்றையும்விட பயங்கரவாத் தடைச் சட்டம் நீக்கப்படவேண்டுமென்ற கோரிக்கை அடங்கிய ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானத்துக்கு இலங்கையும் அனுசரணை வழங்கியிருந்தது.

ஆனால், இலங்கை அரசாங்கமோ இந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கத் தயாரில்லை. மாறாக சர்வதேசத்தை ஏமாற்றும் வகையில் அச்சட்டத்தில் சில திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது.

சர்வதேச ரீதியாக எழும் அழுத்தங்களைச் சமாளிக்கவே இந்தத் திருத்தங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஏற்கனவே ஒருவர் 18 மாதம் தடுத்து வைக்கப்படுவது 12 மாதங்கள் என மாற்றப்பட்டுள்ளதும், விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டு வழக்குகள் விரைவாக முடிக்கப்படுமென்பதும் நீதிபதிகள், சட்டத்தரணிகள் தடுத்து வைக்கப்பட்டவர்களைப் பார்வையிடமுடியும் என்பதும் கொண்டு வரப்பட்ட புதிய திருத்தங்களாகும். இது பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தி விடவில்லை.

இத்திருத்தங்களின் பின்பும்கூட அரசியல் பழிவாங்கல்கள், போதிய ஆதாரமின்றிக் கைது செய்தல், சித்திரவதைகள் மூலம் ஒப்புதல் வாக்குமூலம் பெறுதல் என்பன தடுத்து நிறுத்தப்படமுடியாது என்பது கவனத்தில் எடுக்கவேண்டும். ஆனால் வெளிவிவகார அமைச்சர் சர்வதேசம் ஏற்றுக்கொள்ளும் வகையில் சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுக்கு உட் பட்டுத் தான் திருத்தங்களைக் கொண்டு வருவதாகக் கூறிவருகிறார்.

ஆனால் நாட்டின் பாதுகாப்புக் கருதியும், மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்காமல் தடுக்கவும் பயங்கரவாதத்தின் சில விதிகள் அமுலில் இருக்கவேண்டுமென அரசாங்கத் தரப்பில் கூறப்பட்டு வருகிறது.

இப்பயங்கரவாதத் தடைச் சட்டம் பொலிஸாருக்கும் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கும் எல்லையற்ற அதிகாரங்களை வழங்குகிறது. இவர்கள் அரசியல் அதிகாரத்தால் வழிநடத்தப்படமுடியும் என்பது அப்படியொன்றும் பரம இரகசியமல்ல.

எனவே அரசியல் எதிரிகளைப் பழிவாங்குதல், அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் இலக்கு வைக்கப்படுதல், உண்மையான குற்றவாளிகளைத் தப்ப வைத்தல் போன்ற முறைகேடுகள் இச்சட்டத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டன. இனியும் மேற்கொள்ளப்படமாட்டா என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை. பல ஊடகவியலாளர்களை, மனித உரிமை செயற்பாட்டாளர்களை நாட்டை விட்டு ஓட வைத்த பெருமை இச்சட்டத்துக்கு உண்டு.

இன்று நாட்டில் உருவாகியுள்ள வாழ்க்கைச் செலவு உயர்வு, அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றமும் தட்டுப்பாடும், ஊதிய உயர்வு கோரி பல்வேறு தரப்பினரும் நடத்தும் போராட்டங்கள், எங்கும் விரிவடையும் இலஞ்சம், ஊழல் மோசடி, அதிகாரத் துஷ்பிரயோகம் போதைவஸ்து, பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகள் போன்ற முறைமீறல்கள் காரணமாக நாடு ஒரு இக்கட்டான நிலை நோக்கி நகர ஆரம்பித்துள்ளது.

எனவே தொழிலாளர்கள், விவசாயிகள், அரசபணியாளர்கள் ஆகிய தரப்பினரின் போராட்டங்கள் வலுப்படுத்துவதும், மக்கள் ஆட்சிக்கு எதிராக வீதிக்கு இறங்குவதும் தவிர்க்கமுடியாத நிலையாக ஏற்பட்டு விடும்.

எனவே இவற்றை அடக்கி ஆட்சியைத் தக்கவைக்க வேண்டுமானால் அரசாங்கத்தின் கையில் வலுவானதொரு அடக்குமுறைச் சட்டம் அவசியம். தேசத்தின் பாதுகாப்பின் பேரால் இச்சட்டம் கட்டவிழ்த்துவிடப்பட்டு சகல மக்கள் போராட்டங்களும் ஒடுக்கப்படும். இதற்கு ஏற்கனவே இராணுவ மயப்படுத்தப்பட்ட சிவில் நிர்வாகம் வாய்ப்புகளை வழங்கும்.

எனவே இதுவரை தமிழ், முஸ்லிம் மக்களின் கழுத்துகளை நெரித்த பயங்கரவாதத் தடைச்சட்டம், சிங்கள மக்கள் மேலும் பாய்வதற்கு வெகு நாட்கள் எடுக்காது. ஒட்டு மொத்தத்தில் இச்சட்டத்திற்கு நியாயங்கள் பலியாக்கப்படுவதே எதிர்காலமாக அமையு மென்றே தோன்றுகிறது.

பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை “பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படவேண்டும். அல்லது முழுமையாக மாற்றப்படவேண்டும். இச்சட்டத்தை பாவித்து குற்றவாளிகளைத் தப்ப வைத்து அப்பாவிகளை ஆட்சியாளர்கள் சிறையில் அடைத்து வருகின்றனர்” எனத் தெரிவித்துள் ளமையை யாரும் அலட்சியம் செய்துவிடமுடியாது.

அருவி இணையத்துக்காக :- நா.யோகேந்திரநாதன்

22.02.2022


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை, உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE