Tuesday 7th of January 2025 09:19:08 PM GMT

LANGUAGE - TAMIL
.
எங்கே தொடங்கியது இன மோதல்? - 95!

எங்கே தொடங்கியது இன மோதல்? - 95!


இந்திய புலிகள் போரும் மாகாண சபை உருவாக்கமும்! - நா.யோகேந்திரநாதன்!

'எதிரி பலமாக நிலைகொண்டிருக்கும்போது நாம் பின்வாங்கி விடவேண்டும். எமது வீரர்கள் சிறுசிறு அணி களாகப் பிரிக்கப்பட்டு சிறுசிறு தாக்குதல்களை நடத்திவிட்டு திடீரென மறைந்து விடும் தந்திரோபாயத்தைக் கையாளவேண்டும். எதிரி நகர்வுகளை மேற்கொள்ளும்போது எதிர்பாராத தாக்குதல்களை நடத்தி இழப்புகளை ஏற்படுத்தி விட்டு மறைந்து விடுதல், எதிரி ஓய்வெடுக்கும்போது தொல்லை கொடுத்தல், தூங்கும்போது தாக்குதல், பின்வாங்கும்போது விரட்டுதல் என்ற அடிப்படையில் எமது நடவடிக்கைகள் அமையவேண்டும். அதேவேளை எதிரி பலவீமடையும்போது நாம் எமது அணிகளை ஒன்று திரட்டிப் பெரும் தாக்குதலை மேற்கொண்டு எதிரிக்குப் பேரழிவை ஏற்படுத்தித் தொடர்ந்து இயல்பாகச் செயற்படமுடியாத வண்ணம் முடக்க வேண்டும். அதாவது எதிரி எம்மைவிடப் பலமாக உள்ள நிலையில் எதிரியைக் குழப்பமடையவும் சலிப்படையவும் வைத்து அவர்களின் பௌதீக பலம், மனோ பலம் என்பவற்றை பலவீனப்படுத்தும் வகையில் எமது நடவடிக்கைகள் அமைந்திருக்கவேண்டும்'.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதரவு பெற்ற சியாங்கை ஷேக்கின் அடக்குமுறை ஆட்சிக்கெதிராகவும் ஜப்பானிய படையெடுப்பு எதிராகவும் பெரும் போராட்டங்களை நடத்தி மாபெரும் சீன தேசத்தை சீன செஞ்சேனைக்குத் தலைமை தாங்கி விடுவித்த தலைவர் மாஓசேதுங் அவர்கள் தனது இராணுவக் கட்டுரைகள் என்ற நூலில் 'தந்திரோயாயங்களும், யுத்த தந்திரங்களும்' என்ற செஞ்சேனைக்கான அறிக்கையில் குறிப்பிட்டுள்ள விடயமாகும் இது.

சீனாவில் 13 வருடங்கள் விடுதலைப் பிரதேசமாகக் கம்யூனிஸ்ட்டுகள் தலைமையில் இருந்த கியாங்கி மாவட்டம் 1924ல் சியாங்கை சேக்கின் படைகளால் சுற்றி வளைக்கப்பட்டபோது, செஞ்சேனை முற்றுகையை உடைத்துக்கொண்டு வடமேல் சீனாவை நோக்கிப் பின் வாங்குகிறது. போராட்டங்களை நடத்தியும், எதிர்த்தாக்குதல்களை முறியடித்தும் மாஓசேதுங் தலைமையிலான செஞ்சேனை 10,000 மைல்களைக் கடந்து வடசீனாவைச் சென்றடைகிறது. 1927ல் ஜப்பானியப் படையெடுப்பு இடம்பெற்றபோது சியாங்கை சேக்குடன் ஐக்கிய முன்னணி அமைத்து ஜப்பானுக்கு எதிரான போராட்டத்தை நடத்தியபோதும் இதே யுத்த தந்திரமே செஞ்சேனை வீரர்களால் பின்பற்றப்பட்டது. ஜப்பான் வெளியேற்றப்பட்ட பின் சியாங்கை சேக் போரைக் கம்யூனிஸ்டுகளுக்கு எதிராகத் திருப்புகிறார். இறுதியில் அவர் தாய்வானுக்குத் தப்பி ஓடி விட 1949ல் சீனா மா ஓசேதுங் தலைமையில் விடுதலை பெறுகிறது.

அமெரிக்க உதவியுடன் பெரும் படையணியைக் கொண்டு போரை நடத்தி சியாங்கை சேக், ஜப்பான் ஆகிய பலமான சக்தியை சீன மக்கள் படை வெற்றி கொண்டமைக்கு மாஓவின் இந்த யுத்த தந்திரமே பிரதான காரணமெனக் கருதப்படுகிறது.

இலங்கையின் வடக்குக் கிழக்கிலும் புலிகளுக்கெதிரான போரை நடத்த இந்தியா இங்கு ஒரு இலட்சம் படையினரை இறக்கியது. ஒருசில ஆயிரம் போராளிகளையும் குறைந்த ஆயுதத் தளபாடங்களையும் மட்டும் கொண்டிருந்த புலிகள் மா ஓசேதுங் அவர்களின் மேற்படி யுத்த தந்திரத்தையே கடைப்பிடிக்க வேண்டியேற்பட்டது.

அவ்வகையில் புலிகளின் பிரதான அணி மணலாற்றுக் காட்டுக்குப் பின் வாங்க ஏனைய போராளிகள் சிறுசிறு அணிகளாக இங்கு களத்தில் நின்று இந்திய அமைதிப் படையினர் மீது சிறு சிறு தாக்குதல்களை மேற்கொண்டு வந்தனர்.

குறிப்பாக இந்தியக் காவல் நிலைகள் மீது தாக்குதலை மேற்கொள்ளல், சுற்றி வளைப்புகள், ரோந்து நடவடிக்கைகளின்போது இந்தியப் படைகளைத் தாக்கி விட்டுத் தப்பியோடுதல் போன்ற கெரில்லாப் பாணித் தாக்குதல்களைப் புலிகள் மேற்கொண்டு வந்தனர்.

ஒவ்வொரு சோதனைச் சாவடிகளிலும் அதைக் கடப்பவர்கள் உடற்சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், கொண்டு செல்லப்படும் உடைமைகளும் சோதனையிடப்பட்டன. அங்கு வாகனங்களில் செல்பவர்கள் இறங்கி வரிசையாக நடந்து சென்றே கடக்க வேண்டும். துவிச்சக்கர வண்டிகளில் செல்வோர் கூட அதனை உருட்டிக் கொண்டே முகாம்களையோ சாவடிகளையோ கடக்கவேண்டும்.

எங்காவது ஒரு தாக்குதல் நடத்தப்பட்டால் பஸ்களில் பயணிப்பவர்கள் உட்பட பயணம் செய்பவர்கள் இறக்கப்பட்டும், மறிக்கப்படும் வரிசையாக நடக்கவிடப்பட்டு, அடித்து நொருக்கப்படுவார்கள். எதற்காககத் தாக்கப்படுகிறோம் என்பது தெரியாமலே மக்கள் கொட்டன்களாலும் துப்பாக்கிப் பிடிகளாலும் அடி வாங்க வேண்டிய வரும் சில நேரங்களில் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுக் கொண்டு செல்லப்படுவதுண்டு.

இன்னொருபுறம் அடிக்கடி ஊர்கள் சுற்றி வளைக்கப்படும். வேலிகளையும் பிரித்துக் கொண்டேதான் படையினர் காணிகளுக்குள் புகுந்து கொள்வார்கள். சோதனை என்ற பேரில் வீட்டுப் பொருட்களையும் புரட்டிப் போடுவார்கள். இப்படியான சந்தர்ப்பத்தில் பணம், நகைகள் என்பன சில சமயம் காணாமற் போவதுண்டு.

இத்தகைய நடவடிக்கைகளின்போது யாழ்.குடாநாட்டில் ஈ.பி.ஆர்.எல்.எப்., ரெலோ போன்ற அமைப்புகளும், கிளிநொச்சியில் ஈ.என்.டி.எல்.எப். அமைப்பும் இப்படியான படை நடவடிக்கைகளின்போது இந்திய அமைதிப் படையுடன் துணைப்படையினராகச் செயற்படுவதும், விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களைக் காட்டிக்கொடுப்பதும் இடம்பெற்றன.

அதைவிட இக்குழுக்கள் தாங்களாக குழுவாக வெளிவந்து புலிகளின் ஆதரவாளர்களைப் பிடித்துச் செல்வதும், கழுத்தை வெட்டிக் கொலை செய்தல் போன்ற பயங்கர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதும் இடம்பெற்றன.

அடிப்படையில் வடக்குக் கிழக்கெங்கும் ஒரு பயங்கர நிலைமையே நிலவியது.

இன்னொருபுறம் புலிகள் சில இடங்களில் முகாம் அமைத்திருப்பதாகக் கருதப்பட்டு எறிகணை வீச்சுகளும் இடம்பெறுவதுண்டு. ஆனால் இவற்றில் பொது மக்களே கொல்லப்பட்டும் காயப்பட்டும் பாதிக்கப்பட்டனர். மேலும் மணலாறு இரணைமடு காடுகளை நோக்கி மணித்தியாலக் கணக்கில் தொடர் ஆட்டிலறி தாக்குதல்களும் இடம்பெற்றன. சில மயங்களில் உலங்கு வானூர்தித் தாக்குதல்களும் விமானக் குண்டு வீச்சுகளும் இடம்பெற்றன.

மணலாற்றுப் பகுதியை நோக்கி பல ஆயிரம் படையினர் பங்கு கொண்ட 'செக்மெற் 1' என்ற சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. ஆனால் புலிகளின் கண்ணி வெடிகள் கால் மிதித்த இடங்களில் மட்டுமின்றி கைபட்ட இடங்களில்கூட வெடித்தன. எனவே ஏராளமான படையினர் இறந்தும் காயமடைந்தும் பாதிப்படைந்தனர். எனவே அவர்கள் தங்களை இலக்கை எட்டமுடியாமல் பின்வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

அடுத்து மேற்கொள்ளப்பட்ட செக்மெற்- 2 நடவடிக்கை முன்னையதைவிடப் பெருமெடுப்பில் மேற்கொண்டபோதும் அதுவும் தோல்வியிலேயே முடிந்தது.

முன்னால் செம்மரி ஆடுகளைக் கலைத்து விட்டு பின்னால் படையினர் தொடர்ந்த போதும் அந்தத் தந்திரோபாயம் ஆரம்பத்திலேயே தோற்கடிக்கப்பட்டு விட்டது. ஒன்றிரண்டு வெடிவெடிக்கவே ஆடுகள் சிதறி ஓட ஆரம்பித்து விட்டன. கண்ணி வெடிகள் முன்பும் புலிகளில் எதிர்த் தாக்குதலின் முன்பும் படையினரால் நின்று பிடிக்கமுடியவில்லை.

வன்னியில் இந்திய இராணுவத்தினருக்கும் புலிகளுக்குமிடையே கடும் மோதலும் வடக்கின் ஏனைய பகுதிகளில் புலிகளின் கெரில்லாத் தாக்குதல்களும் இடம்பெற்று வந்த வேளையில் புலிகள் தவிர்ந்த ஏனைய போராட்ட அமைப்புகளுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டு மக்கள் தொண்டர் படை என்றொரு இராணுவ அமைப்பு உருவாக்கப்படுகிறது. வடக்கிலுள்ள இளைஞர்கள் பலவந்தமாகப் பிடிக்கப்பட்டு இப்படையில் இணைத்துக் கொள்ளப்படுகின்றனர். சென்னையில் நிலைகொண்டிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணி இவ்வமைப்பு உருவாக்கப்படுதற்குப் பகிரங்கமாகவே தன் எதிர்ப்பை வெளியிட்டது. எனினும் அது இந்திய அமைதிப் படையின் அனுசரணையுடன் உருவாக்கப்பட்டுப் பயிற்சிகளும் வழங்கப்பட்டன.

இந்த நிலையில் இந்தியாவின் வேண்டுகோளுக்கமைய வடக்குக் கிழக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்த இலங்கை அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்பித்தது. விடுதலைப் புலிகள் தேர்தலைப் பகிஷ்கரிக்குமாறு அறிவித்த நிலையில் தமிழர் விடுதலைக் கூட்டணியும் தாம் தேர்தலில் போட்டியிடப் போவதில்லையென அறிவித்தனர்.

இந்த நிலையில் ஈ.பி.ஆர்.எல்.எப். தேர்தலில் போட்டியிட முன்வந்தது. ரெலோ, புளட் ஆகிய அமைப்புகள் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட மறுத்த நிலையில் ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பு கிளிநோச்சியில் இயங்கி வந்த ஈ.என்.டி.எல்.எவ் அமைப்புடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடத் தயாரானது. தமிழர் விடுதலைக் கூட்டணி தேர்தலில் போட்டியிடாதபோதிலும் த.வி.கூ.தலைவர் அமர்தலிங்கம் சென்னையிலிருந்து ஒரு அறிக்கை மூலம் இலங்கை - இந்திய ஒப்பந்தம் மூலம் தமிழ் மக்கள் பெற்றுக்கொண்ட நன்மைகளை உறுதி செய்யவும், வடக்கு கிழக்கில் ஜனநாயக செயல்முறையை தூண்டுவதற்காகவும் தமிழ் மக்கள் மாகாண சபைத் தேர்தலில் வாக்களிக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.

1988 நவம்பர் 19ல் மாகாண சபைத் தேர்தல் இடம்பெற்றது.

வடக்கில் ஈ.பி.ஆர்.எல்.எவ், ஈ.என்.டி.எல்.எவ் கூட்டணி தவிர்ந்த வேறு எவருமே போட்டியிடாத நிலையில் அனைவரும் போட்டியின்றித் தெரிவு செய்யப்பட்டனர். கிழக்கில் அக்கூட்டணியும் சில சிங்கள முஸ்லிம் குழுக்களும் போட்டியிட்டன. ஈ.பி.ஆர்.எல்.எவ். வாகனங்கள் விட்டு ஏற்றியும், மக்களை பலவந்தமாக வாக்களிக்கும்படி மிரட்டியும் அச்சுறுத்தல்களை மேற்கொண்ட போதிலும் மிகக் குறைந்தளவு மக்களே வாக்களித்திருந்தனர். எனினும் கிழக்கிலும் ஈ.பி.ஆர்.எல்.எவ், ஈ.என்.டி.எல்.எவ் கூட்டணியே பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்றது.

அவ்வகையில் ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் அதன் தலைவரான வரதராஜப் பெருமாள் முதலமைச்சராகப் பதவியேற்கிறார். ஏனைய நான்கு அமைச்சர்களில் ஒரு முஸ்லிமும், ஒரு சிங்களவரும் அமைச்சர்களாக நியமிக்கப்படுகின்றனர். தீவிர இடதுசாரி ஆதரவாளரும் பிரபல அரசியல் விமர்சகருமான தயான் ஜெயதிலக்க தான் அந்தச் சிங்கள அமைச்சராவார். அவர் பின்னாட்களில் ஜனாதிபதி பிரேமதாஸவின் ஆலோசகராக விளங்கியவரும் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் வதிவிடப் பிரதிநிதியாகவும் செயற்பட்டவராவார்.

அப்படியிருப்பினும் வன்னியில் புலிகளுக்கும் இந்திய அமைதிப் படைக்குமிடையே கடும் மோதல் இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளையில் திருமலையில் வடக்கு. கிழக்கு மாகாண சபை ஈ.பி.ஆர்.எல்.எப். கூட்டணியின் தலைமையில் இந்திய அமைதிப் படையின் ஆதரவுடன் இயங்க ஆரம்பித்தது.

இந்தியா புலிகள் போர் வடக்கிலும் வன்னியிலும் தொடர்ந்து கொண்டிருந்தது.

பேரளவில் மாகாண சபை அமைக்கப்பட்டபோதிலும் இலங்கையின் ஆட்சி பீடம் அதன் குறைந்த பட்ச அதிகாரங்களைக் கூட செயற்படுத்த முடியாமல் பலவிதமான முட்டுக்கட்டைகளைப் போட்டதுமன்றி அதை ஒரு ஏமாற்று நடவடிக்கையாகவே இந்தியாவில் முன்பு கையாண்டு கொண்டு வந்தது முக்கியமான விடயமாகும்.

தொடரும்....

அருவி இணையத்துக்காக :- நா.யோகேந்திரநாதன்.


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இந்தியா, இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE