Friday 26th of April 2024 12:19:09 PM GMT

LANGUAGE - TAMIL
.
ரஷ்ய - உக்ரேன் போரும் இலங்கையில் அதன் தாக்கங்களும்! - நா.யோகேந்திரநாதன்!

ரஷ்ய - உக்ரேன் போரும் இலங்கையில் அதன் தாக்கங்களும்! - நா.யோகேந்திரநாதன்!


கடந்த சில மாதங்களாக எதிர்பார்க்கப்பட்ட உக்ரேன் மீதான ரஷ்யப் படையெடுப்பு ஆரம்பமாகி விட்டது. அண்மைக் காலங்களில் ரஷ்யா உக்ரேன் எல்லையில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான படையினரைக் குவித்ததும், அதற்கெதிராக அமெரிக்கா, பிரிட்டன் உட்பட மேற்குலக வல்லரசுகள் தங்கள் கண்டனங்களையும் எச்சரிக்கைகளையும் விடுத்து வந்தமையும் ஒரு பெரும் போருக்கான முன்னறிவிப்பாகவே தென்பட்டன.

முன்னைய சோவியத் ஒன்றியத்தில் உக்ரேனும் ஒரு பங்காளி நாடாக இருந்து வந்தது. 1990ன் பின்பு சோவியத் யூனியனின் உடைவை அடுத்து உக்ரேன் தனி நாடாகியது. எனினும் கடந்த இரு வருடங்களின் முன்பு உக்ரேனின் துறைமுக நகரமான கிரிமியாவை ரஷ்யா கைப்பற்றிக் கொண்டது. எனினும் அதன் பின்பும்கூட உக்ரேனின் குடி மக்களின் 40 வீதமானோர் ரஷ்ய மொழி பேசுபவர்கள். அவர்கள் உக்ரேனில் தனியாட்சி கோரிக்கை கிளர்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

“நேட்டோ“ அமைப்பு என்பது சோவியத் யூனியனுக்கு எதிராக அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உட்பட்ட பன்னிரண்டு நாடுகளைக் கொண்ட ஒரு இராணுவ அமைப்பாகும். தற்சமயம் சில சோவியத் ஒன்றியத்திலிருந்து பிரிந்த நாடுகளையும் இணைத்து 30 நாடுகளைக் கொண்ட ஒரு அமைப்பாக விரிவடைந்து விட்டது.

இந்த நிலையில்தான் உக்ரேன் நேட்டோ அணியில் இணைவதற்கு முயற்சிகளை மேற்கொண்டது. தனது எல்லையில் தனக்கு விரோதமான ஒரு படைக்கட்டமைப்பு நிலை கொள்வதை விரும்பாத ரஷ்யா உக்ரேன் நேட்டோவில் இணைவதைக் கடுமையாக எதிர்த்து வந்தது.

ஏற்கனவே ரஷ்ய எல்லையில் அமைந்துள்ள முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளான எஸ்தோனியா, லாத்லிவியா, லிதுவேனியா மற்றும் போலந்து ஆகிய நாடுகளில் நேட்டோ படைகள் நிலை கொண்டுள்ளன.

எனவே உக்ரேனிலும் நேட்டோப் படைகள் நிலை கொள்ளுமாயின் தனது பாதுகாப்புக்கு அது மேலும் அச்சுறுத்தலாக அமையுமென ரஷ்யா கூறி வந்தது. ஆனால் உக்ரேன் நேட்டோவில் இணைவதில் பிடிவாதமாக இருந்தது.

இந்த நிலையில்தான் கடந்த 24ம் திகதி அதிகாலையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உக்ரேன் மீதான போர்ப் பிரகடனத்தை வெளியிட்டார். அதையடுத்து ரஷ்ய மக்கள் செறிந்து வாழும் டான்ஸ்லான் பகுதி மூலமும் பரானஸ் நாட்டின் எல்லையூடாகவும் ரஷ்யப் படைகள் தரையிறங்கின.

போர் ஆரம்பிக்கப்பட்ட நாளிலேயே ரஷ்யாவின் 5 விமானங்களையும் ஒரு உலங்கு வானூர்தியையும் தான் சுட்டு விழுத்தி விட்டதாக உக்ரேன் அறிவித்தது. எனினும் ரஷ்யா அதை மறுத்துள்ளது. எனினும் உக்ரேனின் பாதுகாப்பு உளவுத் துறையின் தலைமைச் செயலகம் தீப்பற்றி எரிவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அதேவேளையில் நேட்டோ அமைப்பு அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக முடிவெடுக்க அங்கத்துவ நாடுகளின் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்ஷவா வான்டேக்லேயன் ரஷ்யா மீதான கடுமையான பொருளாதாரத் தடையைப் போடப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

போர் தொடங்கிய இரண்டாவது நாளிலேயே ரஷ்யப் படைகள் உக்ரேனின் தலைநகரான “கீவ்” நகரை அண்மித்து விட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. தற்சமயம் கீவ் நகர் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாகவும் உக்ரேனின் இரண்டாவது பெரிய நகரம் ரஷ்யாவால் கைப்பற்றப்பட்டு விட்டதாகவும் அறிவிக்கப்படுகிறது.

பெலாரஸ், சீனா போன்ற நாடுகள் ரஷ்யாவுக்கு தமது ஆதரவை வழங்கிவரும் அதேவேளையில் உக்ரேனின் பக்கம் அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம் போன்ற மேற்கு நாடுகள் நிற்கின்றன.

இப்படியான நிலையில் இது ஒரு உலகப் போராக விரிவடையக் கூடுமோ என்ற அச்சம் சில தரப்பினரிடம் காணப்பட்டாலும் அதற்கான சாத்தியக் கூறுகள் குறைவாகவே தென்படுகின்றன. ஏனெனில் வல்லரசுகள் தம்மை கொடிய அணு ஆயுதங்களால் ஆயுதபாணியாக்கியுள்ள நிலையில் உலகப் போர் ஒன்று தொடங்குமானால் அது மீண்டும் எழமுடியாத அழிவுக்குள்ளேயே உலகத்தைத் தள்ளும்.

ஆனால் இந்த ரஷ்ய உக்ரேன் போர் உலகின் சகல நாடுகளிலும் அரசியல், பொருளாதாரத் தாக்கங்களை ஏற்படுத்தும் என்பது எக்காரணம் கொண்டும் தவிர்க்கப்படமுடியாதாகும்.

போர் ஆரம்பித்த முதல் நாளிலேயே 100 டொலர் விற்ற அமெரிக்க மசகு எண்ணெய் 105 டொலராக விலை அதிகரித்து விட்டது. அதுமட்டுமின்றி மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு எண்ணெய் எரிவாயு என்பனவற்றை ரஷ்யாவே குழாய் மூலம் விநியோகித்து வருகிறது. உலகில் சவூதி அரேபியாவுக்கு அடுத்ததாக அதிக எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடாக ரஷ்யா விளங்கி வருகிறது. அமெரிக்கா, ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் இப்போரில் எதிரணிகளில் நிற்கும் நிலையில் அது உலகப் பொருளாதாரத்தில் எப்படியான தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதை நாம் புரிந்து கொள்ளமுடியும்.

எனினும் வல்லரசு நாடுகள் எத்தகைய நெருக்கடிகள் எழும்போதும் அவற்றுக்கு முகம் கொடுத்து நிமிர்ந்து நிற்குமளவுக்கு அவர்களுக்கு அரசியல், பொருளாதார, இராணுவப் பலம் உண்டு. ஆனால் இப்போர்களால் படுமோசமாகப் பாதிக்கப்படப்போவது வளர்முக நாடுகளேயாகும்.

ஏற்கனவே அந்நியச் செலாவணி பற்றாக்குறை, கடன் மற்றும் வட்டிக்கான தவணைப் பணங்கள், பண வீக்கம், உற்பத்தி வீழ்ச்சி, சுற்றுலாத்துறை, ஆடைகள் ஏற்றுமதி, தேயிலை ஏற்றுமதி என்பவற்றில் ஏற்பட்ட வருமான இழப்பு என்பன காரணமாக திக்குமுக்காடி வரும் இலங்கை மேலும் மேலும் நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டியுள்ளது.

இலங்கையில் அந்நியச் செலாவணி வருமானத்தில் பெரும் பங்கு சுற்றுலாத்துறை மூலமே கிடைக்கிறது. சாதாரணமாக வருடாந்தம் 15 வீதமான ரஷ்யர்களும் 10 வீதமான உக்ரேனியர்களும் இலங்கையில் சுற்றுலா வருமானத்தில் பெரும் பங்கை வகிக்கின்றனர். இப்போர் அந்த வருமானத்தை இழக்கும் நிலைமையை ஏற்படுத்திவிடும். அவ்வாறே தேயிலை ஏற்றுமதியிலும் ரஷ்யாவாலும் உக்ரேனாலும் கணிசமான அந்நியச் செலாவணி பெறப்படுகிறது. அந்த வருமானமும் தடைப்படும் சாத்தியம் உண்டு.

இலங்கை தேவையான எரிபொருளைப் பெற்றுக்கொள்ளமுடியாமல் திண்டாடி வருகிறது. அந்நியச் செலாவணி பற்றாக்குறை காரணமாகவே இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக மின்வெட்டு, கைத்தொழில் உற்பத்தியில் தாக்கம், விவசாய உற்பத்தி வீழ்ச்சி, போக்குவரத்து நடவடிக்கைகளில் பின்னடைவு, பண வீக்கம் என இயல்பு வாழ்வு குழம்பிப் போயிருக்கிறது.

இந்த நிலையில் எண்ணெய் விலை பீப்பா ஒன்றுக்கு 120 டொலராக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போதே இந்தியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் குறுகிய காலக் கடன்களைப் பெற்று எரிபொருள் வாங்கும் நிலைமையில் எதிர்காலம் அச்சம் தரும் வகையிலேயே உள்ளது.

அடிப்படையில் சுற்றுலா, ஆடை ஏற்றுமதி, தேயிலை போன்ற விடயங்களில் பெரும் வருமான வீழ்ச்சி ஏற்படும் அதேவேளையில் நாம் இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு கூடுதல் விலை கொடுக்க வேண்டியுள்ளது.

ஆட்சியாளர்கள் இதுவரை “கொரோனா“ பிரச்சினையாலேயே நாடு நெருக்கடிக்குள்ளான தெனக் கூறி வந்ததைப் போன்று இனி ரஷ்ய – உக்ரேன் போரைக் காரணம் காட்ட ஒரு வாய்ப்பு கிடைத்துவிட்டது. ஆனால் நாடு பொருளாதார ரீதியில் அதலபாதாளத்தை நோக்கித் தள்ளப்படு கிறது என்பதை வெகு காலத்துக்கு மறைக்கமுடியாது. அதேவேளை இந்த நெருக்கடியிலிருந்து விடுபடுவதற்கான முயற்சிகள் எதுவும் அரசாங்கத்தால் எடுக்கப்படுவதாகவும் தெரியவில்லை. கடன்வாங்கி அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்வதே ஒரு தற்காலிகமான ஏற்பாடாக இருந்தபோதும் நிரந்தரமாக அது நாட்டை அதலபாதாளத்திற்குள் தள்ளும் என்பதை மறுக்க முடியாது.

அருவி இணையத்துக்காக :- நா.யோகேந்திரநாதன்

01.03.2022


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை, உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE