தென்னிலங்கை அரசியல் மாற்றமும் இந்தியப் படை வெளியேற்றமும்! - நா.யோகேந்திரநாதன்!
'இந்திய அமைதிப் படை இராணுவ ரீதியாக எல்.ரீ.ரீ.ஈ.யை குறிப்பிடத்தக்களவு வலுவிழக்கச் செய்ததுடன் ஒரு கெரில்லாப் படையணியாக வன்னிக் காட்டுக்குள் அதைக் கட்டுப்படுத்தியிருந்தது. மாகாண சபையில் பதவியேற்க எல்.ரி.ரி.ஈ. உடன்பட்டிருந்தால் அது முழுமையாக ஆயுதங்களைக் களைந்து இந்திய அமைதிப் படையின் கண்டிப்பான மேற்பார்வையின் கீழ் வரவேண்டியிருந்திருக்கும். எல்.ரீ.ரீ.ஈ. அதன் இறுதி இலக்கை இடருக்குள்ளாக்கக்கூடிய எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபடுத்திக் கொள்ள விரும்பவில்லையென்றே தோன்றுகிறது'.
இது இந்தியப் படை இங்கு நிலை கொண்டிருந்தபோது அதன் தளபதிகளில் ஒருவராக அதை வழி நடத்திய இந்தியப் படையதிகாரி 'கல்கத்' அவர்கள் 2001 ஏப்ரல் 21 அன்று இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியின்போது தெரிவித்த கருத்தாகும்.
விடுதலைப் புலிகள் மாகாண சபையை ஏற்றுக்கொண்டு அதிகாரத்தைப் பெற்றிருந்தால் ஆயுதக் களைவு முக்கியமான நிபந்தனையாக அமைந்திருக்கும். அதன்பின்பு புலிகள் இந்திய அமைதிப் படையின் கட்டுப்பாட்டிலேயே செயற்பட வேண்டிவரும். எனவே மாகாண சபை அதிகாரம் என்ற எல்லையைவிட ஒரு அங்குலம் கூட முன் செல்ல முடியாத நிலைமைக்கு புலிகள் தள்ளப்படும் ஆபத்தே ஏற்படும். அந்த நிலையில் தமிழீழம் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போயிருக்கும்.தேவையான சந்தர்ப்பத்தில் ஒரு சர்வஜன வாக்கெடுப்பு மூலமோ அல்லது வேறு விதமாக இரண்டாகப் பிரிக்கக் கூடிய மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் உட்பட்ட ஒரு மாகாண சபையின் அதிகாரத்துடன் முழு விடயங்களும் மட்டுப்படுத்தப்பட்டிருக்கும்.
எனவேதான் புலிகள் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ள பிடிவாதமாக மறுத்தனர்.
புலிகள் ஏற்கனவே எதிர்பார்த்ததைப் போன்றே ஈ.பி.ஆர்.எல்.எவ். தலைமையில் மாகாண சபை அதிகாரம் வந்த பின்பு அதற்கெனச் சட்டப்படி பகிரப்பட்ட அதிகாரங்களை பிரயோகிப்பதில் பாரதூரமான நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. வடக்கு, கிழக்கு மாகாண சபைக்குரிய அதிகாரங்கைளச் செயற்படுத்துவதிலிருந்து தடுப்பதற்கு அரசியலமைப்பில் போதுமான வாய்ப்புகள் காணப்பட்டன. அதில் அதிகாரங்கள் தொடர்பான பொதுப்பட்டியல், தேசியக் கொள்கைகள் மீதான மத்திய அரசின் அதிகாரம் என்பன முக்கியமானவையாகும்.
இந்நிலையில் தென்னிலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களும் வடக்குக் கிழக்குப் பிரச்சினைகளில் தாக்கத்தைச் செலுத்த ஆரம்பித்தன.
1988 இறுதிப் பகுதியில் ஜே.ஆர்.ஜயவர்த்தனவின் பதவிக் காலம் முடிவடையவே புதிய ஜனாதிபதிக்கான தேர்தல் இடம்பெறுகிறது. அதில் ஏற்கனவே பிரதமராகப் பதவி வகித்த ரணசிங்க பிரேமதாச வெற்றி பெற்று ஜனாதிபதியாகப் பதவியேற்கிறார்.
சிங்களத்தின் மேட்டுக்குடியான 'கொவிகம' சாதியில்லாத சாதாரண மட்டத்தைச் சேர்ந்த ஒருவராக பிரேமதாச இலங்கை அரசியலில் ஜனாதிபதியாக முதல் தடவையாகத் தெரிந்தெடுக்கப்படுகிறார்.
இவர் சிங்கள தேசத்தை நேசிக்கும் ஒரு உண்மையான சிங்களத் தேசியவாதியாகவும் சாதாரண மக்களுடன் நெருங்கிப் பழகும் ஒரு ஜனரஞ்சகத் தலைவராகவும் விளங்கினார். இலங்கை - இந்திய ஒப்பந்தத்துக்கு இவர் தனது எதிர்ப்பை வெளியிட்டதுடன் அது கைச்சாத்தான தினத்தன்று நாட்டை விட்டு வெளியேறிவிட்டார்.
இவர் ஒரு நெருக்கடியான சூழலிலேயே பதவியேற்றார். ஒருபுறம் வடக்கில் இந்தியப் படைக்கும் புலிகளுக்குமிடையேயான போர் தீவிரமாக இடம்பெற்று வந்தது. தெற்கில் ஜே.வி.பியினர் இந்திய பொருட்களைப் பகிஷ்கரிக்கும் இயக்கத்தை நடத்தியதுடன், இந்திய வர்த்தக நிலையங்கள் மீது தாக்குதல்களை நடத்தியதுடன் கொழும்பில் உள்ள இந்திய வம்சாவழி மக்கள் மீது வன்முறைப் பிரயோகங்களையும் மேற்கொண்டனர்.
ஒரே நேரத்தில் இரு நெருக்கடிகளுக்கும் முகம் கொடுக்கவேண்டிய இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டார்.
இந்திய இராணுவத்தை வெளியேற்றுவதன் மூலம் ஒருபுறம் ஜே.வி.பியின் வன்முறைகளைக் கட்டுக்குள் கொண்டு வர முடியுமெனவும் வடக்கில் நிலவும் போர் நிலைமையை முடிவுக்குக் கொண்டுவர முடியுமெனவும் அவர் கருதினார்.
1989 ஆரம்பத்தில் பதவியேற்ற அவர் இலங்கையிலுள்ள இந்திய அமைதிப் படையைத் திரும்பப் பெறுமாறு சில மாதங்களுக்குள்ளாகவே ராஜீவ் காந்திக்குக் கடிதம் அனுப்பினார். இலங்கை இந்திய ஒப்பந்தத்தின்படி இலங்கை ஜனாதிபதி விரும்பும்போது இந்தியப் படைகள் வெளியேறுமென உடன்பாடு காணப்பட்டிருந்த போதிலும் இந்திய ஆளும் தரப்பினர் பிரேமதாசவின் கடிதத்துக்குப் பதில் வழங்கவுமில்லை, அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவுமில்லை.
இந்த நிலையில் ஜனாதிபதி பிரேமதாச விடுதலைப் புலிகள் மீது ஜே.ஆர். ஆட்சியின் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்கியதுடன், புலிகளுடன் பேச்சுகளை நடத்துவதற்கான தனது விருப்பத்தையும் பகிரங்கமாக வெளியிட்டார்.
அதனையடுத்து சில இரகசியத் தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டு மணலாற்றுக் காட்டின் எல்லையிலுள்ள சிங்களக் கிராமங்கள் ஊடாக இலங்கை இராணுவத்தின் வாகனங்களில் ஏற்றப்பட்டு புலிகளுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டன. அதேபோன்று யாழ்ப்பாணத்துக்கு அனுப்பப்படுவதாக உணவுப் பொருட்களும், மருந்து வகைகளும் ஏ-9 வீதியால் அனுப்பப்பட்டன. இடையில் புலிகள் பலவந்தமாக இரு லொறிகளையும் கடத்துவது போன்று கைப்பற்றி இந்திய இராணுவத்துக்குக் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு தங்கள் இடத்துக்கு மாட்டு வண்டிகளிலும் தோள் சுமையாகவும் தங்கள் இடத்திற்குக் கொண்டு போய்ச் சேர்த்தனர்.
அதே நேரம் இந்திய அமைதிப் படையினர் செக் மெற்-3 என்ற பேரில் ஏறக்குறைய ஒரு இலட்சம் பேருடன் ஒரு பெரும் சுற்றிவளைப்பை மேற்கொள்கின்றனர். போதுமான ஆயுதங்கள் கிடைத்துவிட்ட நிலையில் புலிகள் புதிய உத்வேகத்துடன் பின்வாங்குவதும் இன்னொரு பக்கத்தால் முன்னேறித் தாக்குவதுமாக தமது தற்காப்புப் போரை நடத்துகின்றனர். புலிகளுக்கு அந்தக் காடு மிகவும் பரிச்சயப்பட்டு விட்டதால் புதியபுதிய வியூகங்களை அமைத்து அவர்களால் போரிட முடிந்தது. ஆனால், இந்தியப் படைகள் பாதைகளைத் தவறவிட்டு ஒரே இடத்தைச் சுற்றி சுற்றி வந்ததும், அவர்களின் அணிகளே ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதுமான சம்பவங்களும் இடம்பெற்றன. ஒரு வாரத்துக்கு மேல் தொடர்ந்த படை நடவடிக்கை இலக்கை அடைய முடியாத நிலையில் பேரிழப்புகளுடன் இந்தியப் படையினர் பின் வாங்குகின்றனர்.
வடக்கில் நிலைமை இப்படியிருக்கத் தென்னிலங்கையில் ஜே.வி.பி.யினர் தங்கள் தாக்குதல் நடவடிக்கைகளை அதிகரித்தனர். இந்தியர்களுக்கெதிராக ஆரம்பித்த வன்முறைகள் பல முனைகளிலும் விரிவடைகின்றன. முக்கியமாக இராணுவத்தினரின் குடும்பங்கள் கொல்லப்படுகின்றன. அரசாங்கத்தின் முக்கிய மையங்கள் தாக்கப்படுகின்றன. இந்த நிலையில் ஜே.வி.பி.க்கு எதிராக இராணுவம் முழுவீச்சில் கட்டவிழ்த்து விடப்படுகிறது. மேலும் பிரேமதாசவின் நேரடிக் கட்டுப்பாட்டில் 'பச்சைப் புலிகள்' என்ற ஒரு குழு களமிறங்குகிறது. ஜே.வி.பி.யினரென்றோ அல்லது அவர்களின் ஆதரவாளர்களென்றோ கருதப்படுபவர்கள் வீதி வீதியாகக் கொன்று குவிக்கப்படுகின்றனர். வெட்டப்பட்ட கழுத்துகள் சந்திகளில் காட்சிக்கு வைக்கப்படுகின்றன. எங்கும் ஒரு பயங்கர சூழ்நிலை நிலவுகிறது. 1989 முற்பகுதிவரைத் தொடர்ந்த இந்த நடவடிக்கை ஜே.வி.பி. தலைவர் ரோஹண விஜேவீர கைது செய்யப்பட்டுக் கொல்லப்பட்டதுடன் முடிவுக்கு வருகின்றது.
இந்த நடவடிக்கையின் போது 70,000 சிங்கள இளைஞர்கள் கொல்லப்படுகின்றனர்.
இச்சந்தர்ப்பத்தில் இலங்கை விமானப் படையின் உலங்கு வானூர்தி இரகசியமான முறையில் மணலாற்றில் தரையிறங்கி, விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தின் தலைமையில் ஒரு சிறு குழுவினர் கொழும்புக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். அங்கு இடம்பெற்ற பேச்சுகளில் பிரேமதாச இந்தியப் படைகளை வெளியேற்ற உரிய ராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்வதெனவும் விடுதலைப் புலிகளுக்கு இந்திய இராணுவத்துக்கெதிராகப் போரிட ஆயுதங்கள் வழங்குவதெனவும் உடன்பாடு காணப்படுகிறது.
அதேவேளையில் இந்தியாவில் இடம்பெற்ற மத்திய அரசுக்கான தேர்தலில் இந்திய காங்கிரஸ் கட்சி தோல்வியடைய 02.12.1989 அன்று ஜனதா தள் கூட்டணியின் சார்பில் வி.பி.சிங் பிரதமராகப் பதவியேற்கிறார். அவர் பிரதமராகப் பதவியேற்றதுமே பிரேமதாச அவரிடம் இந்திய அமைதிப் படையைத் திரும்ப அழைக்குமாறு கோரிக்கையை முன் வைக்கிறார்.
இந்த இடைக்காலப் பகுதியிலேயே செக் மெற்- 3 இந்தியப் படைகளின் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வெற்றிபெற முடியாமல் போனது. அதுமட்டுமின்றி மாங்குளம், மல்லாவி போன்ற இடங்களில் இந்தியப் படை ரோந்து அணிகள் மீது புலிகள் மேற்கொண்ட தாக்குதல் காரணமாக அமைதிப் படைக்குப் பெரும் இழப்புகள் ஏற்பட்டன.
தமிழக சட்ட சபைத் தேர்தலிலும் அ.தி.மு.க. தோல்வியடைய கருணாநிதி முதலமைச்சராகிறார். ஜனதா தள் கூட்டணியில் தி.மு.க.வும் ஒரு பங்காளி என்ற நிலையில் கருணாநிதியும் இந்தியப் படையை 'வாபஸ்' பெறும்படி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கிறார். இந்த நிலையில் இந்தியப் பிரதமர் வி.பி.சிங் இந்திய அமைதிப் படையை இலங்கையை விட்டுத் திருப்பி அழைக்கக் கட்டளையிடுகிறார்.
1989ன் கடைசி நாட்களில் இந்தியப் படை வெளியேறுகிறது. 24.03.1991 அன்று அமைதிப் படையின் கடைசி அணி இலங்கையை விட்டு வெளியேறியது. 32 மாதங்கள் இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கெதிரான போரை நடத்திய இந்திய இராணுவம் இப்போரில் 1,237 படையினரை இழந்தனர். 6,000 பேர் வரை படுகாயங்களுக்கு உள்ளாகியிருந்தனர். 1,100 புலிகள் கொல்லப்பட்டதாக இந்தியத் தரப்பால் அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்தியப் படையினரால் கொல்லப்பட்ட பொது மக்களும் இந்த எண்ணிக்கைக்குள்ளேயே அடங்குவதாகக் கூறப்படுகிறது.
எப்படியிருந்தபோதிலும் 32 மாதங்கள் போராடியும் இந்தியாவால் தனது இலக்கை நிறைவேற்ற முடியாமல் அவமானத்துடன் திரும்ப வேண்டியிருந்தது மட்டுமின்றி தமிழ் மக்கள் இந்தியா மீது கொண்டிருந்த நம்பிக்கையும் இல்லாமலாக்கப்பட்டு விட்டது.
தொடரும்....
அருவி இணையத்துக்காக :- நா.யோகேந்திரநாதன்.
Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இந்தியா, இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம், தமிழ்நாடு