Monday 27th of January 2025 08:00:44 PM GMT

LANGUAGE - TAMIL
-
ஜனாதிபதி - கூட்டமைப்பு சந்திப்பு தேசியப் பிரச்சினைக்கு தீர்வு தருமா? - பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்

ஜனாதிபதி - கூட்டமைப்பு சந்திப்பு தேசியப் பிரச்சினைக்கு தீர்வு தருமா? - பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்


ஈழத்தமிழர் அரசியல் விவகாரம் இலங்கைத் தீவக்குள் தீர்வை எட்டுவதற்காக மீண்டும் ஒர் உரையாடலுக்கு வழிவகுத்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்புடனான இலங்கை ஜனாதிபதியின் பேச்சுவார்த்தை 25.03.2022 முதல் கட்டத்தை எட்டியுள்ளது.

மிக நீண்டகாலமாக இழுத்தடிக்கப்பட்ட பேச்சுக்கான வாய்ப்பானது தற்போதே கைகூடியுள்ளதாக இரு தரப்பும் சந்தித்த போது பரிமாற்றியுள்ளனர். தமிழர் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர்களும் தமிழரசுக் கட்சியின் தலைவரும் கலந்து கொண்டதுடன் ஜனாதிபதி பிரதமர் உட்பட வெளிவிவகார அமைச்சர் நீதி அமைச்சருடன் சமல் ராஜபக்ஷவும் அரச தரப்பு பிரதிநிதிகளாக கலந்து கொண்டனர். தமிழர் தரப்பில் சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதாகவும் அது பற்றிய முடிவுகளை அடுத்த இரு மாதங்களில் வழங்குவதாகவும் அதன் பின்பு அடுத்த கட்டப் பேச்சுக்கள் நிகழும் எனவும் தமிழர் தரப்பில் வெளியான செய்திகள் தெரிவிக்கின்றன.

இக்கட்டுரையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னணியையும் அதனூடாக மேற்கொள்ள வேண்டிய உத்திகளையும் தேடுவதாக அமையவுள்ளது.

முதலாவது பேச்சுக்கள் இராஜதந்திரத்தின் ஒரு செய்முறை என்பதை புரிந்து கொள்ளுதல் வேண்டும். அதிலும் இலங்கை ஆட்சியாளர்களுடன் கடந்த காலத்தில் நிகழ்த்திய பேச்சுவார்த்தைகள் அனைத்துமே தந்திரோபாயமாகவே அரச தரப்பால் கையாளப்பட்டதென்ற அனுபவத்தை கொண்டது. அதிலும் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மகிந்த ராஜபக்ஷவுடன் 11 தடவைக்கு மேல் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பேசிய போது எந்தவித முடிவுமின்றி ஏமாற்றப்பட்ட அனுபவம் முக்கியமானது. அத்தகைய ஏமாற்றுத்தனமும் பேச்சுக்கான இழுபறியும் நிகழ்ந்த பின்பும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தைக்கு சென்றதற்கான காரணம் முக்கியமானது. அவ்வாறே இந்தியாவின் அழைப்புக்கு பல விளங்கங்களை வெளிப்படுத்துவதைத் தவிர்த்துக் கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை ஜனாதிபதியுடனான பேச்சுக்களில் அதிக உணர்ச்சிவசப்பட்டு மேசையில் அடித்துப் பேசியதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அது மட்டுமன்றி 13 திருத்தத்தைக் கூட முழுமையாக அமுல்படுத்த முடியாதுவிட்டால் நாம் எமது வழியில் செல்வோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார். பேச்சுகளில் உணர்ச்சிகளை விட தந்திரமும் உத்தியுமே அவசியமானது. அவரது முதலாவது செயலைவிட இரண்டாவது வெளிப்படுத்துகை அதிக கருத்து நிலை சார்ந்தது.

இரண்டாவது பேச்சுக்களுக்கு அரசாங்கம் இணங்கியதற்கு பின்னால் வலுவான சக்திகளின் நடவடிக்கை முதன்மையானதாக அமைந்திருந்தது. அதாவது அமெரிக்க இராஜதந்திரிகளது இலங்கை வருகை மறுபக்கத்தில் இந்தியாவின் நிதி உதவியும் தமிழர் பற்றிய இந்தியாவின் ஜெனீவா வரையான நிலைப்பாடும் முக்கியமானதாகவே தெரிகிறது. தமிழர்விடயத்தை ஏற்றுகொள்ளாது நிராகரிப்பினை அரசாங்கம் பின்பற்றுமாக அமைந்தால் பாரிய நெருக்கடியை இலங்கைத் தீவுக்கு ஏற்படுத்திவிடுமா என்ற குழப்பம் அரசாங்கத்திற்கு உண்டு. இந்தியாவும் அமெரிக்காவும் ஈழத்தமிழருக்கு எதுவும் செய்யாத போது ஏதும் நிகழ்ந்துவிடும் என இலங்கை ஆட்சியாளர்கள் கருதுகின்றனர். அதனால் இன்றைய சூழலை எதிர்கொள்ள வேண்டுமாயின் கூட்டமைப்புடனான பேச்சுக்கள் அவசியமானவையாக உள்ளன. அதில் நேரடியாக இந்தியாவையும் அமெரிக்காவையும் திருப்திப்படுத்துவதுடன் புலம் பெயர்ந்தவர்களது முதலீட்டுக்கான வாய்ப்புக்களை ஏற்படுத்துவதன் பெயரில் அந்த நாடுகளை திருப்திப்படுத்துவதாகவே பேச்சுக்களை அரசாங்கம் திட்டமிடுள்ளது. மேலும் புலம்பெயர் அமைப்புக்களை கையாளவும் இத்தகைய சூழலை பயன்படுத்திக் கொள்ள அரசாங்கம் முயலுவதனைக் காணமுடிகிறது. காரணம் ஈழத்தமிழரது அரசியல் இருப்பினை பாதுகாப்பவர்களாகவும் தொடர்ந்து முன்னெடுப்பவராகவும் புலம்பெயர்ந்தவர்களே காணப்படுகின்றனர். அதனால் அவர்களை கையாளுவதற்கான நகர்வுகளை ஆட்சியாளர்கள் கொண்டுள்ளனர் என்பதை கவனத்தில் கொள்வது அவசியமானது.

மூன்றாவது தமிழ் தரப்பானது காணாமல் போனோர், காணி ஆக்கிரமிப்பு, அரசியல் கைதிகள் பற்றி விடங்களை உரையாடியதுடன் அதற்கான கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். இவை ஒரு ஆரோக்கியமான நகர்வாக அமைந்தாலும் நடைமுறைச்சாத்தியமான நிலையை உறுதிப்படுத்தக் கூடிய தரப்பினை பேச்சுக்களில் ஈடுபடுத்தியிருக்க வேண்டும். நிச்சயமாக இத்தகைய சூழலில் பொறுப்புக் கூறுவதற்கான தரப்புக்களை பிராந்திய சர்வதேச மட்டத்தில் உள்ள நிறுவனங்களை அழைத்திருக்க வேண்டும். காரணம் இதே போன்று பல பேச்சுக்களும் அதன்பின்பான விளைவுகளையும் ஈழத்தமிழ் அரசியல் வாதிகளும் ஈழத்தமிழர்களும் கண்டுகொண்டவர்கள் என்பது நினைவுகூரத் தக்கது. குறிப்பாக காணி ஆக்கிரமிப்பு தொடர்பில் ஜனாதிபதியின் உறுதிமொழிக்கு அப்பால் அது பற்றி ஜனாதிபதி எழுப்பிய கேள்விகளே பேச்சுக்களின் எதிர்காலம் எப்படியானதாக அமையும் என்பதை கட்டியம் கூறி நிற்கிறது. அவற்றுக்கு எந்தப்பதிலும் மறுப்பும் வெளிப்படுத்தாத கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களது நிலையே அதிகமான குழப்பத்தை தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. அதனையும் கடந்த அவ்விடயத்தை அப்படியே ஊடக வெளியில் விமர்சனம் எதுவும் இன்றி உரையாடுவதென்பது அதனையும் விட மோசமானதாகவே ஈழத்தமிழர் ஒவ்வொருவரும் கருதுகின்றனர்.

நான்காவது அடுத்த கட்ட பேச்சுக்களின் போது அரசியல் தீர்வு பற்றி உரையாடப் போவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். அவ்வாறாயின் நிச்சயமாக மூன்றாம் தரப்பின் அவசியப்பாடு தேவையானதாகவே உள்ளது. குறிப்பாக இந்தியாவும் அமெரிக்காவும் தமிழர் விடயத்தில் சில அழுத்தங்களை கொடுப்பவர்களாக இருப்பதனால் அத்தரப்பை கோருவதென்பது அரசாங்கத்திற்கும் தமிழ் தரப்பிற்கும் ஆரோக்கியமானதாக அமையும். இலங்கை ஆட்சியாளரின் நகர்வுகளை ஏற்கனவே புரிந்து கொண்ட தமிழ் அரசியல்வாதிகள் அதனை கையாளவும் பேச்சுக்களை நிதானமக நகர்த்தவும் தயாராக வேண்டும். பேச்சுவார்த்தைக்கு பின்னால் அமெரிக்க இந்திய சக்திகளின் நிகழ்ச்சி நிரல் இருப்பதாக எதிர்தரப்புக் கூறுவதனை தமிழ் தரப்பு சாதகமான விடயமாகக் கருத வேண்டும். அதற்கான முனைப்புடன் பேச்சுக்களை தொடரவும் அதற்கான நடவடிக்கைகளை இரு நாட்டின் ஈடுபாட்டுடனும் மேற்கொள்ள முனைவது அவசியமானது.

ஐந்தாவது பேச்சுக்களை தென் இலங்கை ஆட்சியாளர்கள் தந்திரமாக கையாள்வது அவர்களது மரபான அரசியல் நகர்வாகும். இதனால் காலம் தாழ்த்துவது பிற்போடுவது போன்ற இழுத்தடிப்புகளை முதன்மைப்படுத்துவார்கள். அவ்வகை அனுபவங்களே தமிழ் மக்களது அரசியலில் கடந்த காலம் முழுவதும் காணக்கூடிய விடயமாக அமைந்திருந்தது. இதனால் தமிழ் தரப்பு பேச்சுவார்தைக் காலத்தை தெளிவாக வரையறுத்துக் கொள்வது அதற்கான அட்டவணையை வரையறுப்பது என்பன உடனடி அவசியமான விடயங்களாக கொள்ளப்படுதல் வேண்டும். குறித்த காலப்பகுதிக்குள் பேச்சுக்கள் நிறைவு பெறவும் அதில் அரசியல் தீர்வின் முடிவையும் கவனத்தில் கொள்வது அவசியமானது.

ஆறாவது அரசியல் தீர்வு விடயத்தில் தமிழரசுக் கட்சியினதும் ஏனைய புதிய பழைய தேசிய அணிகளின் கோரிக்கைகளும் பிரகடனங்களுமாக சமஷ்டி காணப்படுகிறது. அதன் வளர்ச்சிக் கட்டங்கள் அதிகமாக உலகளாவிய அனுபவங்களாக உள்ளன. அவற்றை முன்வைப்பதுவும் அது பற்றிய உரையாடலை மேலெழச் செய்வதும் தற்போதைய தேவையாக உள்ளது. குறைந்த பட்சம் இன்றை சூழலைப் பயன்படுத்திக் கொண்டு உச்சளவான கோரிக்கையை முன்வைப்பது அவசியமான உரையாடலாக உள்ளது. பிராந்திய சர்வதேச சக்திகளது நகர்வை கவனத்தில் கொள்ள வேண்டும். உக்ரையின் போர் நிமித்தம் ரஷ்சிய இந்திய நெருக்கம் அதில் சீனாவின் புரிதல் என்பன குவாட் கட்டமைப்பினை பலவீனப்படுத்தியுள்ளது. அதனை சரிசெய்ய வேண்டிய சூழலுக்குள் அமெரிக்காவும் குவாட் நாடுகளும் காணப்படுகின்றன. அத்தகைய சூழலையும் தமிழ் தரப்பு கவனம் கொள்வது அவசியமானது. அதே நேரம் இலங்கைத் தீவின் பொருளாததார நெருக்கடி மறுபக்கத்தில் அரசியல் நெருக்கடி இரண்டுமே இலங்கை ஆட்சியாளர்களை பாதித்துள்ளது. எனவே இச்சூழல் தமிழருக்கான வாய்ப்பினை ஏற்படுத்தக் கூடியதாக அமைந்துள்ளது. அதனை தமிழ் தரப்பே கவனம் கொள்ள வேண்டும். ஏனைய தரப்புக்கள் தமது நலனுக்கு உட்பட்டே செயல்படுத்துவன. அதனால் அதிக முக்கியத்துவம் உள்ள காலப்பகுதியாகவே தமிழரது அரசியல் உள்ளது.

ஏழாவது வடக்குக் கிழக்கை மீளக்கட்டியெழுப்புவதற்கான நிதியம் தொடர்பிலான உத்தரவாதத்தை சர்வதேச மட்டத்தழிலான நிறுவனத்தின் அனுசரணையுடன் ஆரம்பிக்க வேண்டும். அமெரிக்காவின் வற்புறுத்திலில் பேச்சுக்களை ஜனாதிபதி ஆரம்பித்துள்ளதை தமிழ் தரப்புப் புரிந்து கொண்டு அமெரிக்காவினதும் சர்வதேச நிறுவனங்களதும் ஒத்துழைப்பினை நாடுதல் வேண்டும். அவற்றின் அனுசரணையுடன் வடக்கு கிழக்குக்கான நிதியம் ஸ்தாபிப்பதே ஆரோக்கியமான செய்முறையாகும். சிரான் அமைப்பினதும் முன்னாள் வடக்கு மாகாணசபை முதலமைச்சர் நிதியம் தொடர்பிலான அனுபவத்தை தமிழ் தரப்பு முதன்மைப்படுத்த வேண்டும். அத்தகைய அனுபவம் மிக அவசியமானதாகவே காணப்படுகிறது.

எனவே எதுவும் வழங்கக் கூடாது என்பதற்காகவே இலங்கை ஆட்சியாளர்கள் பேச்சுவார்த்தைகளை தொடக்குவது என்ற பலவவீனமான முன் அனுபவத்தைக் கொண்டு தற்போதைய பேச்சுவார்ததை அணுகப்பட வேண்டும். திட்டமிட்டு உத்திகளை வகுத்து விமர்சனங்களை ஏற்றுக் கொண்டு அதற்கு அமைவாக பேச்சுவார்த்தைகளை எதிர்கொள்வதே அவசியமான செய்முறையாகும். காணி தொடர்பில் ஜனாதிபதியின் வெளிப்படுத்திய உச்சரிப்பு பேச்சுக்கள் எந்த விளைவையும் தமிழ் தரப்புக்கு தராது என்பதைக் காட்டுகிறது. அதற்கு ஏற்றவகையிலேயே தமிழ் தரப்பின் நகர்வுகளும் தென்படுகிறது. எனவே அடுத்த கட்ட உரையாடலுக்கு தயாராக வேண்டும் என்பதும் அதற்கான தகவல்கள் திரட்டப்படுவதுடன் அதனை ஆதாரப்படுத்தும் பணிகளும் முக்கியமானவையாகவுள்ளன. அரசியல் தீர்வு பொறுத்து உரையாடும் போது இந்தியா அமெரிக்கா போன்ற நாடுகளின் பிரசன்னமும் ஒத்துழைப்பும் தவிர்க்க முடியாதது என்பதை தமிழ் தரப்பு உணர்ந்து செயல்பட வேண்டும். மூன்றாம் தரப்பின் பிரசன்னமே பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்த வழிவகுக்கும்.

அருவி இணையத்துக்காக பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE