நடிகை லைலா 16 வருடங்களின் பின்னர் மீண்டும் தமிழத் திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார்.
கள்ளழகர் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகிய நடிகை லைலா பல்வேறு முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து பிரபலமாகியிருந்தார்.
கடைசியாக அஜித்தின் திருப்பதி படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
இதன்பின்பு ஈரானிய நாட்டு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு, மும்பைக்கு சென்று குடும்ப வாழ்க்கையில் பயணிக்க தொடங்கியிருந்தார் லைலா
இந்நிலையில், நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் தயாராகி வரும் சர்தார் படத்தில் நடிகை லைலா நடிக்கிறார் என தகவல் வெளிவந்துள்ளது. அவர் முழுநீள கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதற்காக 15 நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்தும் முடித்து விட்டார்.
லைலா நடிப்பதற்கு முன்பு அந்த கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை சிம்ரன் முடிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால், கொரோனா பெருந்தொற்றால் இந்த படத்தின் படப்பிடிப்பில் ஒரு சில மாற்றங்கள் ஏற்பட்டன. வேறு சில படவேலைகளில் இருந்த சிம்ரன், இந்த படத்திற்கு தேதி கொடுக்க இயலவில்லை. அதனால், இந்த கதாபாத்திரத்திற்கு லைலா சரியாக பொருந்துவார் என படதயாரிப்பாளர்கள் உணர்ந்தனர் என்று படப்பிடிப்பு வட்டாரம் தெரிவிக்கிறது.
இதனால், 16 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தமிழ் திரையுலகுக்கு வரும் நடிகை லைலாவை வரவேற்க அவரது ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.