Wednesday 26th of June 2024 06:21:53 AM GMT

LANGUAGE - TAMIL
.
3 மாதங்களில் இலங்கைக்கு 2.5 பில்லியன் டொலர் கடனுதவியை வழங்கியது இந்தியா!

3 மாதங்களில் இலங்கைக்கு 2.5 பில்லியன் டொலர் கடனுதவியை வழங்கியது இந்தியா!


இந்த ஆண்டின் முதல் காலாண்டு காலப்பகுதியில் இலங்கைக்கு 2.5 பில்லியன் டொலர் கடனுதவியை இந்தியா வழங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரியில் வழங்கப்பட்ட 400 மில்லியன் டொலர் பணப்பறிமாற்றல் உள்ளடங்கலாக இவ்வாண்டின் முதற்காலாண்டில் இந்தியா இலங்கைக்கு 2.5 பில்லியன் கடனுதவியை வழங்கியுள்ளதாக இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் 500 மில்லியன் டொலர் கடன் திட்டத்தின் கீழ் நாட்டை வந்தடைந்த 40 000 மெட்ரிக் தொன் டீசலை இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லேவிடமிருந்து, வலு சக்தி அமைச்சர் காமினி லொக்குகே நேற்று முன்தினம் பெற்றுக் கொண்டிருந்தார்.

இது குறித்து இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

இந்திய கடன் திட்டத்தின் கீழ் நான்காவது கட்டமாக இந்த டீசல் தொகை இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் கடந்த மார்ச் மாதம் 16, 20 மற்றும் 23 ஆம் திகதிகளில் எரிபொருள் தொகை நாட்டை வந்தடைந்தது. அதற்கமைய கடந்த சனிக்கிழமை நாட்டை வந்தடைந்த 40 000 மெட்ரிக் தொன் எரிபொருள் உள்ளடங்கலாக 50 நாட்களில் 200 000 மெட்ரிக் தொன் எரிபொருளை இந்தியா இலங்கைக்கு வழங்கியுள்ளது.

இந்நிகழ்வில் உரையாற்றிய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே, தற்போதைய சூழ்நிலையில் அண்டை நாட்டுக்கு முதலிடம் என்ற கொள்கைக்கு இணங்க இலங்கை மக்களுக்கு இந்தியாவின் அர்ப்பணிப்பின் உறுதியான வெளிப்பாடாக எரிபொருள் விநியோகத்தை சுட்டிக்காட்டினார். இந்தியாவின் இந்த உதவிகளுக்கு வலு சக்தி அமைச்சர் காமினி லொக்குகே நன்றி தெரிவித்தார்.

முன்னதாக, மார்ச் 23 ஆம் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இலங்கைக்கான சமீபத்திய இந்திய பொருளாதார மேம்பாட்டு உதவி மற்றும் கடன் வசதிகளுக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்ததுடன், எதிர்காலத்திலும் இலங்கையின் வளர்ச்சியில் இந்திய அரசாங்கம் சிறப்பு கவனம் செலுத்தும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

பெட்ரோலியப் பொருட்களை வாங்குவதற்கான 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் ஒப்பந்தத்தில் கடந்த பெப்ரவரி 2 ஆம் திகதி இந்தியாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கியும் இலங்கை அரசாங்கமும் கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தத்தில் இலங்கையின் சார்பில் திறைசேறி செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல கையெழுத்திட்டதோடு, எக்ஸிம் வங்கி சார்பில் அதன் பிரதம பொது முகாமையாளர் கௌரவ் பண்டாரி இந்தியாவின் சார்பில் கையெழுத்திட்டார்.

மேலும், இலங்கை அரசாங்கத்தின் தனியான மற்றும் அவசர கோரிக்கைக்கு இணங்க, உணவு மற்றும் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக் கொள்வதற்காக 1 பில்லியன் டொலர் கடன் வசதியை நீடிப்பது இறுதி செய்யப்பட்டுள்ளதுடன், இந்த வசதியின் கீழ் இந்தியாவிலிருந்து அரிசியின் முதல் ஏற்றுமதி விரைவில் இலங்கையை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

துறைமுகங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, உற்பத்தி போன்ற முக்கிய துறைகளில் இலங்கையில் மேம்படுத்தப்பட்ட இந்திய முதலீட்டின் மூலம் நடுத்தர முதல் நீண்ட கால திறன் உருவாக்கத்திற்கான முயற்சிகளை இந்திய அரசு தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: இந்தியா, இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE