கடந்த வியாழனன்று முன்னிரவுப் பொழுதில் நுகேகொடை மீரிஹானவில் அமைந்துள்ள ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ் அவர்களின் இல்லத்துக்குச் செல்லும் பாதையை மறித்துப் பொதுமக்களால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டம் மெல்ல மெல்ல வலுவடைந்து பெரும் போராட்டமாக மாறி கண்ணீர்ப்புகை, நீர்த்தாரைப் பிரயோகம் என்பனவற்றின் மூலம் கட்டுப்படுத்தப்பட வேண்டியளவுக்கு மோசமடைந்திருந்தது. அதிகாலை 5 மணிவரை கொழும்பு நகரமெங்கும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதுமின்றி இராணுவத்தினர், சிறப்பு அதிரடிப்பைடையினர் களமிறக்கப்பட்டே நிலைமை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருந்தது.
இப்படியான ஒரு எதிர்ப்பு நடவடிக்கை எந்த நேரமும் வெடிக்கக்கூடும் என்ற ஒரு எதிர்பார்ப்பு பல தரப்பினர் மத்தியிலும் நிலவி வந்தது என்பது உண்மை. ஆனால் இது எப்போ எவரின் தலைமையில் முன்னெடுக்கப்படும் என்பது தொடர்பாக இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர், அரசியல் தலைமைகள் உட்பட எவரின் மத்தியிலும் சரியான கணிப்பீடு இருக்கவில்லை. ஆனால் இப்படியான ஒரு நடவடிக்கைக்கான சூழல் முற்றி கனிந்திருந்தது என்பது மட்டும் மறுக்கமுடியாது.
அன்று மாலை ஏழு மணியளவில் மீரிஹானவில் ஜனாதிபதி இல்லத்துக்கு அண்மையில் கூடிய மக்கள் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை, அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம், மின் வெட்டு, எரிபொருட்கள், எரிவாயு என்பவற்றுக்கான தட்டுப்பாடு என்பவற்றைக் கண்டித்துக் கோஷங்களை எழுப்பினர். சுற்றாடலெங்கும் மின் வெட்டால் இருள் சூழ்ந்துள்ள நிலையில், ஜனாதிபதியின் இல்லம் மட்டும் ஒளிமயமாகத் திகழ்ந்த நிலையில் அதன் மீது கல் வீச்சும் இடம்பெற்றது. மேலும் மதவாதத்தையும் இனவாதத்தையும் உருவாக்கிய குடும்பம் அழிக்கப்படவேண்டுமெனவும் ஜனாதிபதி பதவி விலக வேண்டுமெனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சில நூற்றுக்கணக்கானவர்களுடன் ஆரம்பித்த ஆர்ப்பாட்டம் சிறிது நேரத்தில் பல்லாயிரக் கணக்கானோர் கொண்ட போராட்டமாக விரிவடைந்தது.
இந்த நிலையில் பொலிஸார், அதிரடிப்படையினர், இராணுவத்தினர் களமிறக்கப்பட்டு ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்கும் நடவடிக்கைகளில் இறக்கி விடப்பட்டனர். கொழும்பின் பல பகுதிகள், நுகேகொடை, கல்கிசை ஆகிய பகுதிகளிலும் ஊரடங்கு அமுலுக்குக் கொண்டு வரப்பட்டது. அரச தரப்பினர் மேற்கொண்ட குண்டாந்தடியடி, கண்ணீர்ப்புகை, நீர்த்தாரைப் பிரயோகத்தில் ஏராளமான பொது மக்கள் காயமடைந்தனர். 53 பேர் கைது செய்யப்பட்டனர். ஒரு இராணுவப் பேரூந்து தீயிட்டு எரிக்கப்பட்டதுடன் இரு பொலிஸ் வாகனங்களும் சேதடைந்தன. சில பொலிஸாரும் காயமடைந்ததாகத் தெரிய வருகிறது.
ஏற்கனவே எரிபொருள், சமையல் எரிவாயு என்பனவற்றைப் பெறுவதற்கான வரிசைகள் அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடுக்கு எதிரான கொதிப்புகள் எனச் சிறுசிறு சம்பவங்கள், வீதி மறிப்புப் போராட்டங்கள் என்பன இடம்பெற்று வந்தன. ஆனால் அவை எவையுமே பெரிய தாக்கத்தை ஏற்படுத்துமளவுக்கு இருக்கவில்லை. ஆனால் மீரிஹான எதிர்ப்பு நாட்டை ஒரு உலுக்கு உலுக்கி விட்டதென்றே சொல்லவேண்டும்.
முன்னாள் இராணுவ அதிகாரியான ஜனாதிபதி, ஏற்கனவே அவர் அதிகாரத்துக்கு வந்தும் நிர்வாக மட்டங்கள் உட்பட அரசு இயந்திரத்தையே இராணுவ மயப்படுத்தி விட்டார். இன்று முகம் கொடுக்க வேண்டியுள்ள பொருளாதார நெருக்கடிகள் இராணுவ ஒடுக்குமுறைகள் மூலம் சமாளிக்க முடியுமென அவர் எதிர்பார்த்திருக்கலாம். ஆனால், மீரிஹான சம்பவங்கள் அந்த அவரின் எதிர்பார்ப்புகளின் எல்லையைக் கடந்து விட்டதைப் போலவே ஒரு தோற்றத்தைக் காட்டுகிறது.
இச்சம்பவம் தொடர்பாக ஜனாதிபதி செயலகத்தின் ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிக்கை மிகவும் கவனத்துக்குரியதுமாகும்.
அதாவது இச்சம்பவத்தின் பின்னணியில் அடிப்படைவாத சக்திகள் செயற்பட்டதாகவும், ஏற்கனவே திட்டமிட்ட வகையில் இரும்பு, பொல்லு, கொட்டன்கள் போன்றவை கொண்டு வரப்பட்டு வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அரபு வசந்தத்தைக் கொண்டு வரப் போவதாகக் கோஷமிட்டதாகவும் கூறப்படுகிறது.
எனவே அந்த அறிக்கையின்படி பார்த்தால் சில தேசவிரோத சக்திகள் நாட்டில் நிலவும் நெருக்கடி நிலையைப் பயன்படுத்தி குழப்பங்களை விளைவித்துள்ளர் எனக் கருதமுடியும். இன்னுமொரு வார்த்தையில் சொல்லப்போனால் இன்றைய அவல நிலையை மக்கள் ஏற்றுக்கொண்டு பொறுமை காக்கிறார்கள் என்பதும் சில அடிப்படைவாத சக்திகளே குழப்பங்களைத் தூண்டுகின்றனர் என்பதும் அவர்கள் கொடுக்கும் அர்த்தமாகும்.
அப்படியானால் எரிபொருள், சமையல் எரிவாயு என்பவற்றுக்காக வரிசையில் நிற்பவர்கள் மத்தியில் எழும் குழப்பங்களும் வீதி மறிப்புப் போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் அடிப்படைவாதிகளால் தூண்டி விடப்பட்டவையெனக் கூறிவிட முடியுமா?
உயிர்த்த ஞாயிறு நாளில் இடம்பெற்ற ஏப்ரல் 21 தாக்குதலை தற்சமயம் நினைவுகூர்வது பொருத்தமாயிருக்குமெனக் கருதுகிறோம். கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் தேவாலயங்களிலும் உல்லாச விடுதிகளிலும் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களில் 250 இற்கும் மேற்பட்டோர் பலி கொள்ளப்பட்டனர். பலர் காயமடைந்தனர். இவை முஸ்லிம் அடிப்படைவாதிகளால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்பட்டு முஸ்லிம்கள் மீதான கொடிய வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன.
முஸ்லிம் பயங்கரவாதத்திலிருந்து நாட்டைப் பாதுகாக்கும் வல்லமை படைத்தவர் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ்வே என்ற பிரசாரம் நாடு பரந்த ரீதியில் செய்யப்பட்டன. பௌத்த மத பீடங்களும் பல்வேறு வழிகளில் கோத்தபாயவின் வெற்றிக்கு உழைத்தன. முஸ்லிம் அடிப்படைவாதத்துக்கு எதிரான வீரத்தலைவனாக கோத்தபாய ராஜபக்ஷ் 69 இலட்சம் வாக்குகளைப் பெற்று நாட்டின் ஜனாதிபதியானார்.
இன்று அதே வீரத்தலைவனின் ஆட்சியில் அவரால் ஏற்படுத்தப்பட்ட அவலங்கள் தாங்கமுடியாமல் மக்கள் அவருக்கெதிராகவே கிளர்ந்தெழுந்துள்ளனர்.
ஆனால் அப்படியான எதிர்ப்பு நடவடிக்கைக்கும்கூட இன்று அடிப்படைவாத, பயங்கரவாத முலாம் பூசப்படுகின்றது.
அதாவது அத்திவாசியப் பொருட்கள், பால்மா, சமையல் எரிவாயு, எரிபொருள், ஏனைய உணவுப் பொருட்கள் உட்படப் பாவனைப் பொருட்களின் விலைகள் பல மடங்குகளால் அதிகரித்து விட்டன. பல பொருட்கள் சந்தையில் காணாமலே போய்விட்டன. எனவே மக்கள் அன்றாடத் தேவைகளை அரைகுறையாகக் கூட நிறைவேற்ற முடியாமல் திண்டாடவேண்டிய நிலையில். மின்வெட்டு மேலும் மேலும் நிலைமையை மோசமாக்கி வருகிறது.
மக்கள் மூச்சுத்திணறும் நிலையில் வேறு வழியின்றி ஆட்சியாளர்களுக்குஎதிராகக் களத்தில் இறங்கியுள்ளனர்.
மக்களின் அடிப்படைத் தேவையிலிருந்து உயிர்வாழ்வதற்கான தேவையிலிருந்து எழும் போராட்டத்தை அடிப்படைவாதம் எனச் சொல்லி திசை திருப்பமுடியுமா? ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் “அரபு வசந்தம்“ எனக் கோஷமிட்டனர் எனத் தெரிவிப்பதன் மூலம் யதார்த்த நிலைமைகளை மறைத்து விடமுடியுமா?
எந்தவொரு அரசியல் கட்சியின் தலைமையோ, அனுசரணையோ இன்றி இயல்பாகவே எழுச்சிபெற்ற இந்தப் போராட்டம் அடிப்படையில் மக்கள் தங்கள் மீது சுமத்தப்பட்ட சுமை தாங்கமுடியாமல் மேற்கொண்ட ஒரு போராட்டம் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. மேலும் இது தொடர்பாகக் கைது செய்யப்பட்டவர்களுக்காக வாதிட 300 இற்கு மேற்பட்ட சட்டத்தரணிகள் தாமாகவே முன்வந்தமை இது ஒரு மக்கள் போராட்டம் என்பதன் வெளிப்பாடாகும்.
இந்நிலையில் அரசாங்கம் அவசரகால நிலைமையைப் பிரகடனம் செய்துள்ளதுடன், நாடு முழுவதும் இரவு நேர ஊடங்கையும் நடைமுறைப்படுத்தியது.
ஒரு இராணுவ மயப்பட்ட அரசாங்கம் பிரச்சினைகளைத் தீர்க்க எவ்வாறு ஒடுக்குமுறையைக் கையில் எடுக்குமோ அந்த வகையிலேயே பொதுசன பாதுகாப்புச் சட்டம் அமுலுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. அதை நியாயப்படுத்த “அடிப்படைவாதம்”, “அரபு வசந்தம்” போன்ற குரல்களும் ஒலிக்க விடப்படுகின்றன.
எனினும் இத்தகைய திசை திருப்பல்கள் தொடர்ந்து வெற்றிபெறமுடியாது என்பதை நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெறும் கிளர்ச்சிகள் வெளிப்படுத்தி வருகின்றன.
அடிப்படையில் ஆட்சியாளர்கள் மேற்கொண்ட பொருளாதார வழிமுறைகள் மூலமும் திட்டமிடப்படாத ஆடம்பர அபிவிருத்தித் திட்டங்கள் மூலமும் சாதாரணமாக மக்கள் முகம்கொடுக்கும் பிரச்சினைகளை கணக்கிலெடுக்காமலும் மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக உருவான பொருளாதார நெருக்கடி என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டு அதிலிருந்து விடுபட்டு அடுத்த கட்டத்திற்கு முன்செல்வது என்பதை தீர்மானிப்பதற்குப் பதிலாக விஷயங்களை திசை திருப்பி ஏனையோர் மீது பழியைப் போட்டு தப்ப நினைப்பதன் மூலம் பிரச்சினைகள் மேலும் சிக்கலடையும் என்பது அனுபவபூர்வமான உண்மையாகும்.
அருவி இணையத்துக்காக :- நா.யோகேந்திரநாதன்.
07.04.2022
Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: கோத்தாபய ராஜபக்ஷ, இலங்கை