இந்திய-இலங்கை உறவு பலமடைந்துள்ள காலமாக தற்போதைய காலப்பகுதி காணப்படுகிறது. பொருளாதாரா ரீதியிலும் அரசியல் அடிப்படையிலும் அதிக நெருக்கம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இந்திய வெளியுறவு அமைச்சரான ஜெய்சங்கரது இலங்கை விஜயம் அதிக உடன்பாடுகளையும் நெருக்கத்தையும் ஏற்படுத்தும் விதத்தை அவதானிக்க முடிந்தது. ஆளும் பொதுஜனப் பெரமுன இலங்கைத் தீவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சரிசெய்யவும் அதனால் கடந்த காலத்தில் சீனாவுடனான நெருக்கத்தால் ஏற்பட்டுள்ள இந்தியா மற்றும் மேற்குடனான அரசியல் உறவை சரிசெய்யவும் ஜெனீவாவை அத்தகைய சக்திகளைக் கொண்டு கையாளவும் இந்தியாவுடன் கைகோர்ப்பது தவிர்க்க முடியாதது என்ற புவிசார் அரசியலை செயல்படுத்த முனைகிறதை காணமுடிகிறது. இலங்கைத் தீவின் ஆட்சியாளர்கள் நெருக்கடிகால முகாமை செய்வதில் திறமையுடையவர்களாகவே உள்ளனர்.
அதிலும் புவிசார் அரசியலைக் கையாளுவதில் அதி திறமையாளர்களாக உள்ளனர். இக்கட்டுரையும் இந்திய இராணுவம் இலங்கையில் என்ற செய்திக்கு பின்னாலுள்ள அரசியலை தேடுவதாக அமையவுள்ளது.
இந்திய இராணுவம் இலங்கையில் இல்லை என்பதையும் அது வெறும் வதந்தியெனவும் பாதுகாப்புச் செயலாளரது அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அவ்வாறே அதனைப் பலப்படுத்தும் விதத்தில் இந்திய கொழும்புத் தூதரகமும் அந்செய்தியில் உண்மை எதுவுமில்லை எனவும் ஊடகங்களில் வந்த செய்தி பொய்யான தகவல் எனவும் தெரிவித்துள்ளது. அத்தகைய மறுப்புக்களின் படியும் உண்மையான தன்மையின் பிரகாரமும் இந்திய இராணுவம் இலங்கையில் இல்லை என்பது ஊடகங்களுக்கும் ஆளும் தரப்புக்கும் இந்தியத் தரப்புக்கும் நன்கு தெரியும். அப்படியாயின் அத்கைய பொய்யான செய்தியின் நோக்கம் எதுவாக அமையலாம் என்ற கேள்விக்கான பதில் அவசியமானது. இது ஏனைய பொய்யான செய்திகள் போன்றதல்ல. இதற்கு தனித்துவமும் இன்னோர் நாட்டினதும் இறைமைசார்ந்த செய்தியுமாகும் என்பதை மறுக்க முடியாது. அது மட்டுமல்ல இது வதந்தி எனக்கருதினாலும் அதனை அரசாங்கம் வெளியிட்ட செய்தி நிறுவனம் மற்றும் அதனை வெளியிட்டதன் நோக்கம் தெரியப்படுத்த வேண்டும். அதற்கான சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லாத வரை அச்செய்தியில் ஏதோ ஒரு அரசியல் உள்நோக்கத்துடன் செய்தி வெளியாகியுள்ளதென்பதையே உணர வேண்டிய நிலை எழுந்துள்ளது. அப்படியாயின் அச்செய்தி எதனை அடிப்படையாகக் கொண்டு எழுந்திருக்கலாம். அதனை விரிவாக பார்ப்பது அவசியமானது.
முதலாவது அண்மையில் இந்திய வெளியுறவு அமைச்சர் இலங்கைக்கு வருகை தந்ததுடன் கடல்சார் உடன்படிக்கையிலும் இரு நாட்டு வெளிவிவகார அமைச்சர்களும் ஒப்பமிட்டிருந்தனர். அது தொடர்பில் எதிர்கட்சிகளும் அண்மையில் அரசால் வெளியேற்றப்பட்ட அமைச்சர்களும் அது இலங்கையின் தேசியத்திற்கு ஆபத்தான உடன்பாடு என அறிக்கை வெளியிட்டிருந்தன. அதற்கு மறுப்பறிக்கையினை பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டிருந்தது. அந்த அறிக்கையின் பிரகாரம் இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு எந்த குந்தகமும் ஏற்படுத்தாது இந்தியாவுடன் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கை என தெரிவித்திருந்தது.
இரண்டாவது இரு நாட்டு வெளிவிவகார அமைச்சர்களும் செய்து கொண்ட கடல்சார் உடன்படிக்கையின் உள்ளடக்கத்தை நோக்குவது அவசியமானது. இரு நாட்டுக்குமிடையில் இலங்கையில் மீன்பிடித் துறைமுகங்களை அபிவிருத்தி செய்வதற்க்கான புரிந்துணர்வு உடன்பாடு மேற்கொள்ளப்பட்டது. அதில் இலங்கையில் அமைந்துள்ள மீன்பிடித் துறைமுகங்களை நோக்கி இந்தியக் கப்பல்கள் விஜயம் செய்வும் அதற்கான கண்காணிப்பை மேற்கொள்ளவும் முடியும். இது தொடர்பில் இலங்கைப் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட அறிக்கையை கவனத்தில் கொள்வது பொருத்தமானதாக அமையும். டோனியர் உளவு விமானமானது அடிப்படையில் கடல் கண்காணிப்பு, தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காகவும் தேவையான போது பல்வேறு தளங்களுக்கு தகவல்களை வழங்குவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
இந்த வசதியின்மையை சரிசெய்யவே கடந்த இரு வருடங்களாக இரு நாட்டுக்கும் இடையிலான உரையாடல்கள் நிகழ்ந்தன. இதன் பிரகாரம் ஒரு டோர்னியர் உளவு விமானத்தையும் இலவசமாக இந்தியா இலங்கைக்கு வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. மேற்படி விமானம் உற்பத்தி செய்யப்படும் வரை இந்திய விமானம் இலங்கையிலிருக்கும். மேலும் இலங்கையின் விமானப்படையின் விமானிகளாலேயே இவ்விமானம் இயக்கப்படும். இலங்கை விமானிகளுக்கு தேவையான பயிற்சிகளை வழங்குவதற்காக இந்தியப் பயிற்சிக் குழுவொன்று இலங்கையிலிருக்கும். மேலும் இந்தியா அரசாங்கம் 6 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியில் கொழும்பில் கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையமொன்றை (எம்.ஆர்.சி.சி - Maritime Rescue Co-ordination Centre MRCC) நிறுவுவதற்கான முன்மொழிவை அமைச்சரவை அனுமதியளித்துள்ளன .பாதிப்புக்குள்ளான கப்பல்களின் பாதுகாப்பை சர்வதேச உடன்படிக்கைக்கு அமைய உறுதிப்படுத்தவும் இப்பிராந்தியத்தினுள் பாதிப்புக்குள்ளாகும் கப்பல்களை தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்கும் இந்த மையம் உதவும். மேலும் இலங்கைத் தீவைச் சுற்றியுள்ள கடல்பிராந்தியத்தின் ஊடாகச் செல்லும் வணிகக் கப்பல்கள் தொடர்பில் கடல்சார் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை முன்னெடுக்கும் பொறுப்பும் மையத்தை சாரும். கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையமானது ஏறக்குறைய 1,778,062. 24sq k அளவு பரப்பை தனது தேடுதல் பிரதேசமாகக் கொண்டுள்ளது என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இது மட்டுமன்றி இதன் கண்காணிப்பினை அந்தந்த நாட்டு கடற்படையும் கரையோரக் காவல்படையும் ஈபடும் எனவும் இதற்கான பெங்களூர் அமைந்துள்ள Bharat Electronics Ltd (BEL) உடனான உடன்பாட்டின் பிரகாரம் இலங்கையிலுள்ள மையத்தை மேம்படுத்தும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
இத்தகைய மேம்படுத்தலானது மொன்பொருள் அமைப்புக்களை அமைப்பதன் மூலம் இலங்கையின் தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பிற்கான திறன்களை இந்துசமுத்திரத்தில் ஏற்படுத்தல் என்பதையும் உடன்பாடு கொண்டுள்ளது. மேம்படுத்தலுக்கான மையம் கொழும்பிலுள்ள இலங்கைக் கடற்படையின் தலைமைச் செயலகத்திலிருந்து செயல்படும். ஹம்பாந்தோட்டையில் ஒரு துணைமையம் செயல்படும் எனக் குறிப்பிட்டுள்ளது. ஏனைய ஏழு துணையமைப்புகள் இலங்கையின் கரையோரத்தில் நிறுவப்படும். இந்திய சகாக்களுக்கு தகவல்கள் பரிமாற்றப்படும். இதில் பெங்களூர் பிரதான மையமாக விளங்கும். மூன்றாவது இதில் இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து நிகழாது எனக் குறிப்பிட்டுள்ள பாதுகாப்பு அமைச்சின் முடிவு சரியானதாக அமையலாம். ஆனால் இலங்கையின் மீதான சீனாவின் பிரசன்னத்தை கையாள்வதில் இந்தியா முனைப்புக் காட்டியுள்ளது. ஹம்பாந்தோட்டையில் சீனாவின் ஆழ்கடல் நீர்துறைக்கான நிறுவனம் ஒன்று இயங்குகிறது. அதனை இலக்காகக் கொண்டே இந்தியா துணைநிலையம் ஒன்றை அமைத்துள்ளது. இது சீன-இந்தியப் போட்டியொன்றின் களமாகவே தெரிகிறது.
நான்காவது இலங்கையை இந்தியாவின் இந்து சமுத்திர பாதுகாப்புடன் இணைத்துக் கொள்வதில் இந்தியா அதிக வாய்ப்புக்களை பயன்படுத்தியுள்ளது. நிதி நெருக்கடியை கருத்தில் கொண்டு இலங்கையின் கரையோரத்தை தனது நேரடிக் கண்காணிப்புக்குள் கொண்டுவர முனைகிறதைக் காணமுடிகிறது. இதனால் சீனாவின் கப்பல்களும் நீர்மூழ்கிகளும் இந்து சமுத்திரத்தில் இலங்கையின் துறைமுகங்களை நோக்கி பயணிப்பதை கண்காணிக்கு வசதியும் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.
இதுவே தற்போது இந்திய இராணுவத்தின் பிரசன்னத்திற்கு பின்னாலுள்ள பொய்யான தகவலுக்கான அடிப்படையாகும். அதாவது இலங்கை அரசாங்கத்தின் இந்தியா சார்ந்த போக்கினை அதி தீவிரவாத புலமையாளர்கள் நிராகரித்திருந்தமை கவனத்திற்குரியதாகும். அவர்களைப் பொறுத்தவரை இந்தியாவின் இலங்கையுடனான நெருக்கமானது இலங்கை அரசுக்கு ஆபத்தானதாகவே கருதுகிறது. ஆட்சியாளர்களுக்கு எத்தகைய நெருக்கடி ஏற்பட்டாலும் அரசு என்ற இயந்திரத்திற்கு ஆபத்து நேர்ந்துவிடக் கூடாது என்பதில் கவனம்கொள்கிறது. அதில் ஈழத்தமிழரது இருப்பும் அரசியல் தீர்வும் இந்தியாவால் சாத்தியமாகிவிடும் என்ற அச்சத்தின் பிரதிபலிப்பு அத்தகைய தரப்புக்கு உண்டு. அதனை முன்னிறுத்தியே ஆட்சியும் அதிகாரமும் மேற்கொள்ளப்படுகிறது. இத்தகைய செய்திகள் ஆட்சியாளருக்கும் இலாபகரமானதே. இந்தியாவுக்கு எதிராக மக்களைத் தூண்டிவிட்டு இந்தியாவைக் கையாளமுடியும் என்பதே அத்தகைய தரப்புக்களதும் ஆட்சியாளரதும் இலக்காகும். இதனையே கடந்த காலங்களில் செயல்படுத்தி வெற்றிகண்டவர்கள் தென் இலங்கை ஆட்சியாளர்கள். இலங்கை-இந்திய ஒப்பந்தம் முதல் தற்போது வரை இந்தியத் தரப்பை கையாளுவதில் மகாசங்கங்களும் ஆட்சி அதிகாரமும் வெற்றிகரமாக நகர்கின்றது. இதற்கான ஒரு நகர்வே இந்தியா இராணுவம் தொடர்பிலான செய்தியாகும். இந்தியாவின் பெயராலேயே ஈழத்தமிழர் மீதான அதிருப்தியை மேற்கொள்ளும் தென் இலங்கை ஆட்சியாளர்கள் கடந்த காலம் முழுவதும் அத்தகைய மனோநிலையிலேயே ஈழத்தமிழர் மீதான படுகொலைகளைத் தூண்டியவர்கள் என வரலாற்று ஆய்வாளர்கள் உறுதிப்படுத்துகின்றனர். இதனையே சமகாலத்திலும் நிகழ வாய்ப்புள்ளதாக கலாநிதி தயான் ஜெயத்திலகா தெரிவித்துள்ளார். அதாவது மக்களின் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தை அடிப்படைவாதமாக திரிபுபடுத்தி 1983 ஆண்டு மேற்கொண்ட யூலைக்கலவரத்தைப் போன்று மேற்கொள்ள திட்டமிடுவதாக குற்றம் சாட்டியுள்ளார். அதற்கான வாய்ப்புக்கள் இல்லை என்று வாதிட முடியாது.
அருவி இணையத்துக்காக பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்
Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: வட மாகாணம்