Saturday 12th of October 2024 02:34:04 AM GMT

LANGUAGE - TAMIL
.
அச்சுறுத்தப்படும் இலங்கையின் எதிர்காலம்! - நா.யோகேந்திரநாதன்!

அச்சுறுத்தப்படும் இலங்கையின் எதிர்காலம்! - நா.யோகேந்திரநாதன்!


ஐக்கிய நாடுகள் அமைப்பின் கல்வி, கலாசாரப் பிரிவான “யுனிசெப்” நிறுவனத்தில் இலங்கைப் பிரதிநிதியாக நீண்டகாலம் பணியாற்றியவரும் இலங்கை விவகாரங்களின் ஆழமான பரிச்சயம் கொண்டவருமான “ஹைதர் அலி” அவர்கள் அண்மையில் சர்வதேச ஊடகமொன்றுக்கான நேர்காணலின்போது தெரிவித்த கருத்துகள் இலங்கையின் எதிர்காலம் பற்றி பல தரப்பினர்கள் மத்தியிலும் சில கேள்விகளை எழுப்பியுள்ளது. அவர் தனது நேர்காணலின்போது தான் நீண்ட காலமாகத் தென்னிலங்கை அரசியலை அவதானித்து வருபவன் என்ற வகையில் தனக்கு ஏற்படும் உணர்வானது மக்களுக்கு ஏதோ ஒரு அசம்பாவிதம் நடைபெறப்போவதாகத் தனக்கொரு அச்ச உணர்வைத் தோற்றுவித்துள்ளதாகத் தெரிவித்திருந்தார். உலக நாடுகளில் ஏற்படும் அசம்பாவிதங்கள், நெருக்கடிகள் என்பவற்றை உன்னிப்பாக அவதானிப்பதிலும் அவற்றின் விளைவுகளை அனுபவ ரீதியாக அறிந்து கொள்வதிலும் அக்கறை கொண்டவர் என்ற வகையிலும் அவரின் கருத்துக்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையாகப் பார்க்கப்படுகின்றன. அவருக்கு ஏற்பட்டதைப் போன்ற ஒரு அச்ச உணர்வு இலங்கையின் அண்மைக்கால நெருக்கடிகளையும் அவை ஆட்சியாளர்களால் கையாளப்படும் விதங்களையும் உற்று நோக்கும்போது பலர் மத்தியிலும் ஏற்படுவது தவிர்க்கமுடியாது என்றே தோன்றுகிறது.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் 69 இலட்சம் வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டவர் கோத்தபாய ராஜபக்ஷ். விடுதலைப் புலிகளை ஒழித்து நாட்டைப் பயங்கரவாதத்திலிருந்து மீட்டவர் என்ற ஒரு வீரர் என்ற விம்பம் அவரைப்பற்றி உருவாக்கப் பட்டிருந்தது. ஏப்ரல் 21 தாக்குதல்களையடுத்து முஸ்லிம் பயங்கரவாதத்திலிருந்து நாட்டைக் காக்கும் வலிமையும், தகுதியும் உள்ளவர் கோத்தபாயவே என்றொரு பரப்புரை அலையும் வெகு லாவகமாகப் பரப்பப்பட்டது. அவற்றின் பலனாக ஒரு வீரபுருஷனாக நாட்டின் அதிபரானார் கோத்தபாய ராஜபக்ஷ். ஆனால் தற்சமயம் அவர் ஜனாதிபதியாகி இரண்டே இரண்டு வருடங்கள் கடந்துவிட்ட நிலைவில் நாடு பரந்த ரீதியில் மக்கள் வீதிக்கு இறங்கி “கோத்தா! கோ ஹோம்!” அதாவது “கோத்தா வீட்டுக்குப் போ” என்று கோஷமெழுப்ப ஆரம்பித்து விட்டனர்.

இலங்கையின் வரலாற்றில் எந்தவொரு அரசாங்கமும் இவ்வளவு குறுகிய காலத்தில் இப்படியான நாடு பரந்த எதிர்ப்பைச் சந்தித்ததில்லை.

மீரிஹானவிலுள்ள ஜனாதிபதியின் இல்லம், தங்காலை மற்றும் பொறளை விஜயராம வீதியிலுள்ள பிரதமர் மஹிந்தவின் இல்லம், திஸ்ஸமாறாமவிலுள்ள ஜனாதிபதியின் சமல் ராஜபக்ஷ்வின் இல்லம், அனுராதபுரத்திலுள்ள ஜனாதிபதியின் சோதிடரின் இல்லம், அமைச்சர்கள், அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இல்லங்கள் எனப் பலரின் வீடுகளும் மக்களால் சுற்றி வளைக்கப்பட்டு ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும் ஜனாதிபதி செயலகம், அலரி மாளிகை, நாடாளுமன்றம் என்பனவும் சுற்றி வளைக்கப்பட்டு ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. நாடாளுமன்ற வாசல் மக்களால் தடை செய்யப்பட்ட நிலையில் உறுப்பினர்கள் இரகசியமாகப் பின்புறத்தால் வெளியேற வேண்டிய நிலையும் ஏற்பட்டது. மேலும் பேராதனை, களனி, ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்கள் மீது கண்ணீர்ப் புகை, தடியடி, நீர்த்தாரை ஆகிய பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டன.

ஒட்டு மொத்தத்தில் ஆட்சியாளர்களுக்கு எதிராக நாடு பரந்த அளவில் போராட்டங்கள் வெடித்துள்ளன. அவற்றின் மீது பொலிஸார், விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர் ஆகிய தரப்பினர் ஆர்ப்பாட்டங்களைக் கலைக்க வன்முறைகளைப் பிரயோகித்து வருகின்றனர்.

இங்கு கவனிக்கப்பட வேண்டியவிடயமென்னவெனில் இப்போராட்டங்கள் எந்தவொரு அரசியல் கட்சியின் தலைமையுமின்றி இயல்பாக எழுச்சி பெற்ற போராட்டங்களாக இடம்பெறுகின்றன.

ஆனால் இப்போராட்டங்கள் ஆரம்பிப்பதற்கும், இடைவிடாமல் தொடர்வதற்குமான காரணங்கள் இதுவரை எதுவுமே சீர்செய்யப்படவுமில்லை, அதற்கான ஆணித்தரமான முயற்சிகள் எதுவும் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரியவில்லை.

அரிசி, கோதுமை, பால்மா, பருப்பு, எரிபொருள், எரிவாயு போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம், தட்டுப்பாடு என்பனவற்றை எதிர்த்தே மக்கள் வீதியில் இறங்கியுள்ளனர். அவற்றை அரசாங்கம் கட்டுப்படுத்தத் தவறியதாலே மக்கள் போராட்டம் ஆட்சியாளர்களுக்கு எதிராகத் திரும்பியது.

ஆனால் அரசாங்கமோ அமைச்சரவை இராஜினாமாச் செய்வதன் மூலமும். அமைச்சர்களை மாற்றுவதன் மூலமும் மக்களை ஏமாற்ற முனைகிறது. அதுவே இன்றைய நெருக்கடிகளுக்கான தீர்வு எனக் காட்ட முயல்கிறது.

ஆனால் நடைமுறையில் தட்டுப்பாடுகளும், நீ்ண்ட மக்கள் வரிசைகளும், அவற்றால் எழும் வன்முறைகளும் நிரந்தரமாகிவிட்டன. அப்படியிருந்தும் பொருட்களின் விலைகளை இறக்குமதியாளர்களும், பெரும் வர்த்தகர்களும் தொடர்ந்து அதிகரித்த வண்ணமேயுள்ளனர். அதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை என்பனவும் எவ்வித தயக்கமுமின்றி அனுமதி வழங்கி வருகின்றன.

அதாவது நாட்டில் எவ்வளவு உக்கிரமான போராட்டங்கள் நடந்தபோதும் நாட்டில் நிலவும் நெருக்கடிகளை மக்கள் தலையில் சுமத்துவது தொடர்பாக அரசாங்கம் எவ்வித தயக்கமும் காட்டுவதில்லை.

நாட்டில் எரிபொருள், எரிவாயு போன்றவற்றுக்குத் தட்டுப்பாடு நிலவிய போதிலும் இலங்கைக்கெனக் கொண்டு வரப்பட்ட பொருட்கள் அடங்கிய கப்பல்கள் அவற்றுக்கான பணம் செலுத்தப்படாமையால் கடலில் தரித்து நிற்கின்றன. பின்பு பல நாட்கள் தாமதத்தின் பின் தாமதக் கட்டணமும் சேர்த்து செலுத்தப்பட்டுப் பொருட்கள் இறக்கப்படுகின்றன.

அண்மையில் சிங்கப்பூரிலிருந்து 37,000 மெற்றிக் தொன் எரிபொருளுடன் வந்த கப்பல் பணம் செலுத்தப்படாமையால் 16 நாட்கள் தரித்து நின்றது பின்பு 52 மில்லியன் செலுத்த வேண்டிய பெறுமதியாக உள்ள போதும் 40 மில்லியன் தாமதக் கட்டணத்துடன் 92 மில்லியன் செலுத்தப்பட்டு அது இறக்குமதி செய்யப்பட்டது. ஆனால் மக்கள் எரிபொருளுக்கும் நீண்ட வரிசையில் காத்துக்கொண்டிருக்கும் நிலைமை நாடு பரந்த ரீதியில் நிலவுகின்றது.

இதெல்லாம் டொலர் இன்மையால் தான் நடக்கிறதா அல்லது தாமதக் கட்டணங்களும் அவை தொடர்பான தரகுப் பணங்களும் இலக்கு வைக்கப்பட்டு மேற்கொள்ளப்படுகின்றனவா என்ற கேள்வி எழுகிறது.

அதாவது நாடு எவ்வளவு நெருக்கடிகளை எதிர்கொண்டபோதும் ஊழல் மோசடிகளும் கொள்ளை இலாபமீட்டல்களும் எவ்வத குறைவுமின்றி இடம்பெற்று வருவதாகவே தோன்றுகிறது.

அதேவேளையில் “கோத்தா வீட்டுக்குப் போ” என்ற கோஷம் வலுப்பெற்று வரும் அதே வேளையில் ஆட்சிக்கெதிரான ஆர்ப்பாட்டங்களும் நாளாந்தம் அதிகரித்து வருகிறது.

இன்னொருபுறம் பாதுகாப்புச் செயலர் கமல்குணரத்தின தலைமையிலான 53 படையணி கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி இன்றைய நாட்டு நிலை பற்றி வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கும் இராஜதந்திரிகளுக்கும் இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவே விளக்கமளித்துள்ளர். இப்படியான சந்திப்புகள் முறைப்படி பாதுகாப்பு அமைச்சராலோ அல்லது செயலாளராலோ வழங்கப்படவேண்டியவை. அதேவேளையில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெகத் டி அல்விஸ் பாதுகாப்பு அமைச்சிடம் நாட்டில் நிலவும் குழப்பமான நி்லையைக் கட்டுப்படுத்த முப்படைகளின் உதவிகளையும் பொலிஸாருக்கு வழங்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.

இப்படியான நிலையில் இன்று இடம்பெறும் போராட்டங்களுக்கு அடிப்படைவாதம், பயங்கரவாதம் போன்ற வர்ணங்கள் பூசப்பட்டு இன, மதக் கலவரங்களாக உருமாற்றப்பட்டு ஒரு இராணுவ ஒடுக்குமுறை கட்டவிழ்த்து விடப்படக்கூடுமோ என்ற அச்சம் எழுவது தவிர்க்க முடியாததேயாகும். அதற்கான அறிகுறிகள் தென்படுவதாகவே தோன்றுகின்றது.

இந்நிலையில் ஹைதர் அலி குறிப்பிட்டது போன்று ஏதோ ஒரு அசம்பாவிதம் இடம் பெறக்கூடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளமையை மறுத்துவிட முடியாது. அதாவது மக்களின் நியாயபூர்வமான போராட்டங்கள் திசை திருப்பப்பட்டு அவை பயங்கரவாதம், தீவிரவாதம், மதவாதம் எனப் பெயர்கள் சூட்டப்பட்டு ஒடுக்கப்படுவதும் அப்படியொன்றும் புதிய விடயமல்ல.

அருவி இணையத்துக்காக :- நா.யோகேந்திரநாதன்

12.04.2022


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE