Saturday 12th of October 2024 12:17:39 AM GMT

LANGUAGE - TAMIL
.
இலங்கையை உலுக்கிய பொருளாதார நெருக்கடிகள் - 2

இலங்கையை உலுக்கிய பொருளாதார நெருக்கடிகள் - 2


கடலில் நடத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டம்! - நா.யோகேந்திரநாதன்!

1952ம் ஆண்டில் இரண்டாவது உலகப் போர் முடிவுக்கு வந்த சில ஆண்டுகளே கழிந்துவிட்ட நிலையில் சர்வதேச ரீதியாக உலக நாடுகளை ஒரு பெரும் பொருளாதார நெருக்கடி உலுக்க ஆரம்பித்தது. போரில் ஈடுபட்ட நாடுகள் போர் காலத்தில் தமது பிரதான உற்பத்தியாக ஆயுத தளபாடங்களையும் ஆயுதங்களையும் கொண்டிருந்தபோதிலும்கூட ஏனைய உணவு உற்பத்தி, அபிவிருத்திகள் என்பன கூடப் போர்த் தேவைகளை நோக்கியே முன்னெடுக்கப்பட்டன. எனவே போர் முடிவடைந்த பின்பு உற்பத்தித் துறையில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் காரணமாகப் பல புதிய நெருக்கடிகள் உருவாகின.

அத்தகைய நெருக்கடிகளை ஏகாதிபத்திய நாடுகள் வறிய நாடுகள் மீது சுமத்துவதும், வறிய நாடுகளின் ஆட்சியாளர்கள் அவற்றை மக்கள் மீது சுமத்துவதுமானதுமே முதலாளித்துவப் பொருளாதார முறையாக விளங்கி வருகிறது.

1952ம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காலப்பகுதியிலும் இலங்கைக்கு அதே நிலைமையே ஏற்பட்டது.

அந்தக் காலப்பகுதியில் இலங்கையின் வருமானத்தில் பெரும்பகுதி தேயிலை, இறப்பர் என்பன மூலமே பெறப்பட்டது. பிரித்தானிய நிறுவனங்களே தேயிலை, இறப்பர் தோட்டங்களை நடத்தியதுடன் வர்த்தகத்தையும் பிரித்தானிய நிறுவனங்களே மேற்கொண்டு வந்தன.

இக்காலப்பகுதியில் அமெரிக்கா செயற்கை இறப்பரை உற்பத்தி செய்து மலிவான விலையில் சந்தையில் விட்டது. இதனால் இலங்கை இறப்பரின் விலை படுமோசமாக வீழ்ச்சியடைந்தது. அதேபோன்று பிரிட்டனின் பல குடியேற்ற நாடுகள் சுதந்திரம் பெற்றுவிட்ட நிலையில் அந்த நாடுகளின் வர்த்தக சந்தைகளை அமெரிக்க நிறுவனங்கள் கைப்பற்றிக்கொண்டன. எனவே பொருளாதார நெருக்கடியைப் பாவித்துத் தேயிலை விலையையும் அமெரிக்கா வீழ்த்தி்யது. எனவே தேயிலை, இறப்பர் விலைகளில் ஏற்பட்ட வீழ்ச்சியாலும் உலகச் சந்தையில் அரிசியின் விலை அதிகரித்தமையாலும் சுதந்திரம் பெற்றுச் சில ஆண்டுகளே கடந்துவிட்ட நிலையில் இலங்கை பெரும் நெருக்கடிக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்தது. எனவே அன்று ஆட்சியிலிருந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் உலக வங்கியின் உதவியை நாடியது. வழமைபோலவே உலக வங்கி இலங்கைக்குக் கடன் வழங்கப் பல கடும் நிபந்தனைகளை விதித்தது.

அப்போது மத்திய வங்கியின் ஆளுனராயிருந்த அமெரிக்கரான எக்செற்றல் அவர்கள் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு தேர்தல் மூலம் ஒரு பலமான அரசாங்கத்தை அமைத்துவிட்டு உலக வங்கியின் நிபந்தனைகளை நிறைவேற்றும்படி ஆலோசனை வழங்கினார். ஏனெனில் அந்த நிபந்தனைகளை நிறைவேற்றினால் மக்களின் பெரும் எதிர்ப்பைச் சந்திக்க வேண்டிவரும் என்பதை அவர் நன்கறிந்திருந்தார்.

இலங்கை சுதந்திரம் பெற்றபோது பிரதமராகப் பதவியேற்ற டி.எஸ்.சேனநாயக்க அகால மரணமடைந்த நிலையில் அவரது மகனான டட்லி சேனநாயக்க பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டார். 1952ல் இடம்பெற்ற தேர்தலில் டட்லி சேனநாயக்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி பெரும்பான்மை பலத்தைப் பெற்று ஆட்சியமைத்துக் கொண்டது. அதில் ஜே.ஆர்.ஜயவர்த்தன நிதியமைச்சராகவும், சேர். ஒலிவர் குணதிலக்க பாதுகாப்பு அமைச்சராகவும் பொறுப்பேற்றுக்கொண்டனர்.

1953ல் ஜே.ஆர்.ஜயவர்த்தனவால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் உலக வங்கியின் நிபந்தனைகளை ஏற்று அவைக்கு அமைவாகவே சமர்ப்பிக்கப்பட்டது. அதற்கமைய அரச மானியங்கள் அனைத்தும் வெட்டப்பட்டதுடன் வரிகளும் அதிகரிக்கப்பட்டன. 25 சதமாக விற்கப்பட்ட ஒரு கொத்து அரிசியின் விலை 70 சதமாக உயர்த்தப்பட்டது. போக்குவரத்துக் கட்டணங்கள், தபால் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச மதிய உணவு, காலையில் வழங்கப்பட்ட பால் என்பன நிறுத்தப்பட்டன.

அத்தியாவசியப் பாவனைப் பொருட்களின் கட்டுப்பாட்டு விலைகள் நீக்கப்பட்டன. விலைகள் உயர்த்தப்பட்டன.

இவ்வாறு மக்கள் மீது நேரடியாகச் சுமத்தப்பட்ட சுமைகளை ஏற்க மக்கள் தயாராயிருக்கவில்லை. அதற்கெதிரான மக்களின் எழுச்சி பல்வேறு முனைகளிலும் இடம்பெற்றன.

அந்நாட்களில் தொழிலாளர்கள் பலம் பெற்ற தொழிலாளர் அமைப்புகளாக இடது சாரிகளின் தலைமையில் அணி திரண்டிருந்தனர். கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி, புரட்சிகர சமசமாஜக் கட்சி என்பன மிகப் பலம்பெற்ற தொழிற்சங்க அமைப்புகளாக விளங்கின. திரு.நா.சண்முகதாசனைப் பொதுச் செயலாளராகக் கொண்ட இலங்கை தொழிற் சங்க சம்மேளனமும், பாலாதம்புவைத் தலைமையாகக் கொண்ட வர்த்தக ஊழியர் சங்கமும் மிகப் பலம் வாய்ந்த தொழிலாளர் அமைப்புகளாகவும் விளங்கின.

சண்முகதாசன் தலைமையிலான இலங்கைத் தொழிற்சங்க சம்மேளனத்தின் அழைப்பின் பேரில் சகல தொழிற் சங்க அமைப்புகளும் ஒன்று கூடி 1953 ஆகஸ்ட் 12ம் நாள் ஒரு ஹர்த்தால் போராட்டத்தை நடத்துவதென முடிவெடுக்கப்பட்டது. இப்போராட்டம் தொடர்பாக மேற்படி குழுவினர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவை அணுகி ஆதரவு கோரியபோது அவர் போராட்டங்களுக்கு ஆதரவளிப்பதாகவும் அதில் பங்கு கொள்ளப் போவதில்லையெனவும் தெரிவித்திருந்தார். மலையக மக்களின் தொழிற்சங்கமான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் எஸ்.தொண்டமான் அவர்கள் இந்தியத் தூதரகத்தின் ஆலோசனைக்கு அமைய தாங்கள் “ஹர்த்தால்” போராட்டத்தில் கலந்துகொள்ள மறுத்து விட்டார்.

இந்நிலையில் ஆகஸ்ட் 12ம் நாள் ஏற்பாடு செய்யப்பட்ட நாடு பரந்த ஹர்த்தாலுக்கான தயாரிப்பு நடவடிக்கைகள் தொழிற்சங்கங்களின் கூட்டுக் கமிட்டியின் தலைமையில் பல்வேறு முனைகளிலும் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில் முதல் நடவடிக்கையாக ஜுலை 20ம் திகதி 12,000 துறைமுகத் தொழிலாளர்கள் தங்கள் பலத்தையும், போராட்ட உறுதி்யையும் ஆட்சியாளர்களுக்கு வெளிக்காட்டும் வகையில் 3 மணிநேரம் ஒரு அடையாள வேலை நிறுத்தத்தை மேற்கொள்வதெனத் தீர்மானிக்கப்பட்டது. அதன் காரணமாகத் துறைமுகப் பணிகள் முற்றாக ஸ்தம்பித்ததுடன் துறைமுகத்துக்கு வெளியே பொருட்களை ஏற்ற வந்த லொறிகள் நீண்ட வரிசையில் தரித்திருந்ததால் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டது. அதே நேரத்தில் இரத்மலானையிலி்ருந்த இரயில்வே தொழிற்சாலை ஊழியர்கள் 4,000 பேர் பொறியியலாளர் காரியாலயத்தைச் சுற்றிவளைத்து 3 மணி நேர ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். அரிசி உட்பட அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்துக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளிக்கக் கூடாதெனக் கோரிய 50,000 பேர் கையெழுத்திடப்பட்ட மகஜர் ஒன்று ஊர்வலமாகச் சென்ற தொழிலாளர்களால் பிரதமரிடம் கையளிக்கப்பட்டது.

இவ்வாறான தொழிலாளர் எழுச்சிகளை அரசாங்கம் பொருட்படுத்தாத நிலையில் தொழிற்சங்கக் கூட்டுக் கமி்ட்டியின் தலைமையில் காலிமுகத்தி்டலில் மாபெரும் எழுச்சிப் பேரணி இடம்பெற்றது. ஜுலை 23 இல் இடம்பெற்ற இப்பேரணிக்கு ஆதரவாக கொழும்பிலுள்ள தொழில் நி்லையங்கள், வர்த்தக நிலையங்கள், அரச காரியாலயங்கள் எனச் சகல இடங்களிலும் செங் கொடிகள் பறக்கப்ப விடப்பட்டன.

சண்முகதாசன் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி, சமசமாஜக் கட்சி, புரட்சிகர சமசமாஜக் கட்சி, இலங்கைத் தொழிலாளர் சங்கம், நவலங்கா சமசமாஜக் கட்சி, என்பவற்றின் தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர்.. ஆரம்பத்தில் ஹர்த்தாலில் பங்களிக்கத் தயக்கம் காட்டிய எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க தானாக வந்து இக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அதேவேளையில் பாராளுமன்றத்தைச் சுற்றி வளைத்துத் துறைமுகத் தொழிலாளர்களால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் பொலிஸாரின் கண்ணீர்புகை, தடியடிப் பிரயோகம் உட்பட்ட வன்முறைகளால் கலைக்கப்பட்டது.

ஆனால், திட்டமிட்ட நாள் நெருங்க நெருங்க போராட்ட அலை மேலும் மேலும் சூடு பிடிக்க ஆரம்பித்தது.

இந்த நிலையில் ஆகஸ்ட் 7ம் நாள் ஜே.ஆர்.ஜயவர்த்தனவால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் தி்ட்டம் பாராளுமன்றத்தில் 23 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. அதன் காரணமாக நாட்டில் ஏற்கனவே நிலவிய கொந்தளிப்பான நிலை மேலும் கூர்மையடைய ஆரம்பித்தது.

எனவே எஸ்.எ.விக்ரமசிங்க, லெஸ்லி குணவர்த்தன, பிலிப் குணவர்த்தன, கலாநிதி என்.எம்.பெரேரா, பீட்டர் கெனமன், என்.சண்முகதாசன், ஏ.ஈ.குணசிங்க, சீ.எச்.ஹிக்கடுவ, பாலாதம்பு ஆகிய இடதுசாரித் தொழிற்சங்கத் தலைவர்கள் தங்களால் தலைமை தாங்கப்பட்ட அமைப்புகளை முழுமையாகக் களமிறக்கத் தீர்மானித்தனர். அதேவேளையில் அரசாங்கமும் ஹர்த்தால் முறியடிக்கும் விதத்தில் இராணுவத்தைத் தயார் நிலையில் வைத்தது.

ஜூலை 11ம் திகதி பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் 12ம் திகதி இடம்பெறவுள்ள ஹர்த்தாலுக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்து பேராதனையிலிருந்து கண்டி நோக்கி ஒரு ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை மேற்கொள்கின்றனர். அது கண்டி நகருக்குள் உட்புகுந்தபோது பொலிஸாரால் அதன் மீது கண்ணீர்ப் புகைப் பிரயோகம், குண்டாந்தடியடி என்பன மேற்கொள்ளப்படுகின்றன. எனினும் ஊர்வலம் கலைக்கப்படமுடியாத நிலையில் வானத்தை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்படுகின்றது.

இச்செய்தி எங்கும் பரவிய நிலையில் கொழும்பு பல்கலைக்கழகக் கல்லூரி மாணவர்களும் உடனடியாக ஆர்ப்பாட்டத்தில் இறங்குகின்றனர். அது மொரட்டுவ தொழில் நுட்பக் கல்லூரிக்கும் பரவுகிறது. இவ்வாறான மாணவர்கள் போராட்டம் காரணமாகக் கொழும்பின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் தாமாகவே களமிறங்குகின்றனர்.

12ம் திகதியே தொழி்ற்சங்கக் கூட்டுக் கமிட்டியால் ஹர்த்தால் தி்ட்டமிடப்பட்டிருந்த போதிலும் 11ம் திகதி மாலையே கொழும்பிலும் புறநகர்ப் பகுதிகளிலும் கொந்தளிப்பான நிலை உருவாகி விட்டது.

அரசாங்கமும் அன்று பிற்பகலே தலைநகரெங்கும் கலகமடக்கும் பொலிஸாரை குவித்தனர்.

திட்டமிட்டபடி அடுத்தநாள் ஆகஸ்ட் 12ம் திகதி அதிகாலையிலேயே போராட்டங்கள் ஆரம்பித்துவிட்டன. கறுப்புக் கொடிகள், ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள், வேலை நிறுத்தங்கள், சத்தியாக்கிரகங்கள் எனப் பல்வேறு வடிவங்களிலான போராட்டங்களும் தலைநகரில் மட்டுமின்றி நாடு பரந்த அளவில் ஆரம்பமாகின. முழுப் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டு விட்டன. ரயில் எஞ்சின்களை இயக்க முடியாதபடி தொழிலாளர்கள் எண்ணெயைத் திறந்து வெளியேற்றி விட்டனர். ரயில் ஓட முடியாதபடி தண்டவாளங்கள் கழற்றி விடப்பட்டன.

முதலில் மறுப்புத் தெரிவித்த இலங்கைத் தொழிலாளர் காங்கி்ரஸ் மலையகத்தில் வேலை நிறுத்தத்தில் இணைந்து கொண்டது. தமிழரசுக் கட்சி 13ம் திகதி ஹர்த்தாலுக்கு ஆதரவாகப் பெரும் ஆர்ப்பாட்ட ஊர்வலத்தையும் பொதுக்கூட்டத்தையும் யாழ்ப்பாணத்தில் நடத்தியது. அதாவது ஹர்த்தால் போராட்டம் மக்களையும் ஒன்றிணைத்து பெரும் வீச்சுடன் ஆட்சிக்கெதிராகக் கிளர்ந்தெழுந்து முழு நாட்டையுமே கொந்தளிக்க வைத்தது.

அன்று கவர்னர் மாளிகை, பிரதமரின் அலரி மாளிகை, பாராளுமன்றம், பிரதான தபாலகம், தொலைத் தொடர்பு மத்திய நிலையம், லேக்ஹவுஸ் என்பன ஆத்திரமடைந்த மக்களால் சுற்றி வளைக்கப்பட்டுக் கோஷங்கள் எழுப்பப்படுகின்றன.

இந்நிலையில் கண்டவுடன் சுடும் “மார்ஷல்லோ” பிரகடனப்படுத்தப்பட்டு கலகமடக்கும் பொலி்ஸாரும் இராணுவத்தினரும் களமிறக்கப்படுகின்றனர்.

எனினும் மக்கள் பின்வாங்க மறுத்த நிலையில் ஆங்காங்கே மோதல்கள் இடம்பெறுகின்றன.

அமைச்சர்களோ, பாராளுமன்ற உறுப்பினர்களோ வீதிக்கு இறங்கவோ வீட்டில் அச்சமின்றி இருக்கவோ முடியாத நிலை. அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முடிவெடுக்க அமைச்சரவையைக் கூட்டக்கூட பாராளுமன்றத்திற்குப் போக முடியாதளவுக்கு அது சுற்றி வளைக்கப்பட்டிருந்தது.

அந்த நிலையில் வேறு வழியின்றி துறைமுகத்தில் நின்றிருந்த பிரித்தானிய போர்க் கப்பலான ‘New found Land’ என்ற கப்பலில் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறுகிறது.

ஆட்சியாளர்கள் எவ்வளவுதான் அதிகார பலம் கொண்டவர்களாக இருந்தபோதிலும் அவர்கள் மக்கள் விரோத நடவடிக்கைகளில் இறங்கும்போது எழுச்சி பெறும் மக்கள் சக்தியின் முன்பு அவர்கள் நின்று பிடிக்கமுடியாது என்பதற்கு இலங்கையின் முதலாவது பொருளாதார நெருக்கடி காலத்தில் ஏற்பட்ட மக்கள் எழுச்சியும் அதற்கு முகம் கொடுக்கமுடியாமல் அரசாங்கம் தள்ளாடியமையும் ஒரு நல்ல வரலாற்று உதாரணமாகும்.

தொடரும்....

அருவி இணையத்துக்காக :- நா.யோகேந்திரநாதன்.


Category: கட்டுரைகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE