Saturday 12th of October 2024 01:23:40 AM GMT

LANGUAGE - TAMIL
-
காலி முகத்திடல் போராட்டம்; தமிழருக்கான முக்கியத்துவம்? - பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்

காலி முகத்திடல் போராட்டம்; தமிழருக்கான முக்கியத்துவம்? - பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்


காலிமுகத்திடல் போராட்டம் வலுவானதாக மாற்றும் உத்திகளை அதிகம் பரிசோதித்துப் பார்க்கிறது. ஆளும் தரப்பின் அணுகுமுறைகளும் அதற்கு நிகரானதாக அமைந்திருப்பதை காணமுடிகிறது. இரு தரப்பும் சமபலத்துடன் நகர்ந்தாலும் காலிமுகத்திடல் அதிகமான விமர்சனங்களை எதிர்கொள்கிறது. போராட்டக்காரர்கள் தீவிர அணுகுமுறைகளை நோக்கி நகர்வதற்கு முயன்றாலும் அதன் எல்லை வரையறுக்கப்படுகிறதைக் காணமுடிகிறது. உண்ணாவிரதப் போராட்டத்தை 24 மணித்தியாலங்கள் என வரையறுத்தமை போராட்டத்தின் இன்னோர் பரிமாணமாக உள்ளது. இதில் தமிழ் மக்களது முக்கியத்துவமும் அனுபவமும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். இக்கட்டுரையும் தமிழ் தரப்பின் அணுகுமுறை சார்ந்து எழுந்துள்ள நிலைப்பாட்டையும் அதன் நியாயத் தன்மைகளையும் தேடுவதாக அமையவுள்ளது.

காலிமுகத்திடலில் போராடும் தரப்புக்கள் மிகப் பிந்திய நிலையில் ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்துள்ளன. முதலாவது, உடன் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும். இரண்டாவது, பிரதமர் மகிந்த ராஜபக்ஷ அடங்கலாக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் அனைத்து ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்களும் பதவி விலக வேண்டும். மூன்றாவது, அரசியலமைப்பின் 19 வது திருத்தத்தை மீண்டும் அமுலுக்கு கொண்டுவருவதுடன் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ள அத்தியாவசிய சேவைகள், ஏனைய துறைகள் மீட்டெடுக்கப்பட வேண்டும். நான்காவது, இடைக்கால அரசை ஸ்தாபித்து ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்கள் ஏனைய அரசியல்வாதிகள் கொள்ளையடித்த நிதி மற்றும் சொத்துக்களை மீளப் பெறுவதுடன் அவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கை எடுத்தல் வேண்டும். ஐந்தாவது, ஆறு மாதங்களுக்குள் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலை நடாத்த வேண்டும்.

இத்தகைய கோரிக்கைகள் இன்றைய பொருளாதார நெருக்கடிக்கான தீர்வுகளாக அமையுமா? என்பது கேள்விக்குரியதே. காரணம் இன்றைய பொருளாதாரப்பிரச்சினை தனித்து பொருளாதாரப் பிரச்சினை அல்ல என்பதை உணர்ந்து கொள்ளாத தீர்மானமாகவே தெரிகிறது. இது ஒரு அரசியல் பொருளாதாரப் பிரச்சினையே. தீர்வும் அரசியல் பொருளாதாரமாக மேற்கொண்டால் மட்டுமே இலங்கைத் தீவு நிலையான நீண்ட நிலைத்திருப்புக்கும் பொருளாதார நெருக்கடிக்கும் தீர்வைத் தரும். அல்லாத சந்தர்ப்பத்தில் தற்காலிகத் தீர்வே சாத்தியமானது. மீண்டும் இத்தகைய பிரச்சினை தொடரப் போகிறது. இலங்கை அமைதியான பொருளாதார சுபீட்சத்துடன் நிலையான இருப்பினைத் இலங்கைத் தீவு அடைய வேண்டுமாயின் அனைத்து தேசியங்களும் கௌரவமாகவும் சம அந்தஸ்துடனும் வாழ்வதற்கான தெளிவான தலையீடற்ற மீளப்பெற முடியாத அதிகாரப் பகிர்வை வழங்குவது அவசியமானது. இலங்கைத் தீவில் வெளிநாடுகள் மேற்கொள்ளும் பொருளாதார முதலீடுகளும் தென் இலங்கை அரசாங்கங்கள் கடந்த காலத்தில் வடக்கு கிழக்கு உட்பட இலங்கைத் தீவில் மேற்கொண்ட அனைத்து பொருளாதார முதலீடுகளும் அரசியல் நோக்கம் கொண்டவையே அதற்கான அடிப்படை இலங்கையிலுள்ள இனப்பிரச்சினையே அன்றி வேறு எதுவுமில்லை. குறிப்பாக சீனாவின் முதலீட்டுக்கு எதிராக இந்தியாவும் அமெரிக்காவும் இலங்கைத் தீவின் பொருளாதார செளிப்புக்காக முதலீடு செய்யவில்லை. மாறாக சீனாவை இலங்கைத் தீவை விட்டு விரட்டும் செய்முறைக்கான முதலீடுகளே. அவ்வாறே சீனாவும் இலங்கைத் தீவை தனது உரிமத்துக்குள் வைத்துக் கொள்ள இந்தியாவினதும் அமெரிக்கா உட்பட்ட மேற்குலகத்தின் முதலீடுகளைத் தோற்கடிக்கும் முதலீடுகளே செய்துவந்துள்ளது. இவை அனைத்துமே அரசியல் முதலீடுகளே அன்றி பொருளாதார முதலீடுகளல்ல. இதனை தென் இலங்கை ஆட்சியாளர்கள் உத்தியாக கருதி பயன்படுத்திக் கொண்டு வந்தனர். அதாவது உலகளாவிய ரீதியில் ஜெனீவா அரங்கையும் தமிழருக்கு ஆதரவான வாய்ப்புக்களையும் தோற்கடிப்பதற்காக சீனா மாறி இந்தியா, இந்தியா மாறி அமெரிக்கா என முதலீட்டுக்கான வாய்ப்புக்களை வழங்கி இலங்கைக்கு கிடைக்க வேண்டிய பொருளாதார இலாபங்களை அன்னிய நாடுகளும் அவற்றின் நிறுவனங்களும் கொண்டு செல்ல அனுமதித்தனர். மீளவும் தீர்வற்ற சூழல் நீடித்தால் தமிழரது பிரச்சினையை முன்வைத்துக் கொண்டு இந்தியாவும் அமெரிக்காவும் சீனாவும் இலங்கைத் தீவில் தலையீட்டை செய்வது மட்டுமல்ல தமது கம்பனிகளையும் அவற்றின் முதலீடுகளையும் மேற்கொண்டு இருக்கும் வளங்களையும் தமது நாடுகளுக்கு கொண்டு செல்வார்கள். அது மட்டுமல்ல நிறைவேற்று அதிகாரமே பிரச்சினை எனவாதிக்கும் பெரும்பான்மை புலமையாளர்கள் முற்போக்கு வாதிகள் மற்றும் அரசியல்வாதிகள் இப்போராட்டத்தை ஆதரிக்கும் போது போராட்டக்களத்திலிருந்து மீண்டும் ஜனாதிபதி தேர்தல் ஆறு மாதத்தில் மேற்கொள்ள வேண்டும் என கோரியுள்ளமை அதிக குழப்பத்தைத் தருகிறது. அதே நேரம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு கையொப்பமிட்டுள்ளனர். ஏனைய தமிழ் தரப்புக்கள் எதுவும் அவ்வகையான உரையாடலை முன்வைக்காத போது இரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினரது முடிபும் தமிழ் மக்கள் மத்தியில் குழட்பத்தை ஏற்படுத்தியுள்ளது. வெளிப்படையாக நல்லாட்சிக் காலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அணுகுமுறையை அதிகம் விமர்சனத்திற்கு உள்ளாக்கிய தரப்பு ஆட்சிமாற்றத்தை மீண்டும் கோர ஆரம்பித்துள்ளது. ஆட்சி மாற்றமோ அல்லது தற்போதைய ஆட்சியாளர்களோ மாறிவிட்டால் தமிழர் இனப் பிரச்சினைக்கு தீர்வு எட்டிவிட முடியுமா என்ற கேள்வி நியாயமானதே. குறைந்த பட்சம் எதிர்கட்சி முன்வைத்துள்ள தீர்மானத்தில் தமிழர் சார்பில் ஏதும் குறிப்பிட்டுள்ளதா என்ற கேள்வி கூட எழுப்பப்படவில்லை. பாராளுமன்றத்தில் இப்பிரச்சினைக்கு சமஷ்டி முறையிலான தீர்வு வேண்டும் எனக் கோரிய இதே தரப்பு எந்த நிபந்தனையும் இன்றி ஒப்பமிட்டுள்ளது. எதிர்க்கட்சி முன்வைத்த தீர்மானத்தில் ஆட்சிமாற்றம் மட்டுமே முதன்மையான விடயமாக உள்ளது.

அடுத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் அவர்கள் அண்மையில் வெளியிட்ட ஊடக சந்திப்பில் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையெழுத்து இடுவதில் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிபந்தனை விதிக்க வேண்டும் என சிலர் கூறுகிறார்கள். நிபந்தனை விதிப்பதற்கு இது ஏற்ற தரணம் அல்ல. அரசாங்கத்தை மாற்ற வேண்டும் என பெரும்பான்மை மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ள நிலையில் தமிழ் மக்களுடைய பிரச்சினையை மட்டும் ஏனைய தரப்பினரிடம் கோரிக்கையாக வைக்க முடியாது என தெரிவித்துள்ளார். தமிழ் மக்களுக்கும் பொருளாதாரப் பிரச்சினை உண்டு. ஆனால் அதனைவிட வலிமையான பிரச்சினை அரசியல் தீர்வற்ற ஆக்கிரமிப்பு என்பதை மறுக்க முடியாது. தமிழ் மக்கள் மீதான போரும் அதன்பின்பான ஆக்கிரமிப்புக்கான முதலீடுகளும் இனப்பிரச்சினையை மையப்படுத்திய உலக நாடுகளின் அரசியல் ஆக்கிரமிப்பு பொருளாதார முதலீடுட்டுக்கான போட்டிகளுமே தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமாக உள்ளன. அதனை தமிழ் மக்கள் நன்கு புரிந்துவைத்துள்ளது போல் தமிழ் அரசியல் சக்திகளும் விளங்கிக் கொள்வது அவசியமானது.

இதே நேரம் காலிமுகத் திடல் போராட்டத்தை ஆதரித்து யாழ்ப்பாணப் பண்ணைக் கடற்கரையில் தீப்பந்தப் போராட்டம் ஒன்றினை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் தலைமையில் நடந்துள்ளது. அண்மையில் அது தொடர்பில் வீரசிங்கம் மண்டபத்தில் கூடி உரையாடிய போது மிக சொற்பமானவர்களே கலந்து கொண்டமை கவனத்திற்கு உரியது. அவ்வாறே 2020 ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதிக்கு எதிராக மூன்று இலட்சம் வாக்குகள் பதிவான போதும் தீப்பந்தப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானவர்களே பங்கெடுத்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவ்வாறே தமிழ் கட்சிகளின் கூட்டு ஒன்று கடந்த வாரம் இளங்கலைஞர் மண்டபத்தில் கூடி ஆராய்ந்து தென் இலங்கைப் போராட்டத்திற்கு ஆதரவளிப்பது தொடர்பில் குழுவொன்றை அமைத்துள்ளன. ஆனால் காலிமுகத்திடலில் தமிழில் தேசிய கீதம் பாடியதற்கும் அதற்கு எதிர்பு தெரிவித்ததற்கும் அத்தகைய எதிர்ப்புக்கு எழுந்துள்ள ஆதரவையும் சற்று அவதானமாக நோக்குவது அவசியமானது. சிங்கள கலைஞர்கள் தமிழ் மக்களை போராட்டத்தில் இணையுமாறு அழைப்பதுவும் சில தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இணையுமாறு தமிழ் இளைஞர்களை அழைப்பதுவும் காலிமுகத்திடலில் இந்துமத அமைப்புக்கள் போராட சென்றமையும் பற்றிய புரிதல் தேசியகீதத்தின் வாயிலாக விளங்கிக் கொள்வது அவசியமானதல்லவா? இது பற்றி தமிழ் மக்களிடம் தெளிவான புரிதல் உண்டு. அதுவே அவர்கள் போராட்டகளத்திலிருந்து விலகியிருக்க காரணம் என்பதை தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் விளங்குதல் வேண்டும். போராடுவது அவசியம் என குறிப்பிடும் இளையோர் காணாமல் போனேரின் போராட்டத்திலும் அரசியல் கைதிகள் போராட்டத்திலும் வடக்கு கிழக்கு நில ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டத்திலும் பௌத்த மதத்தின் ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டத்திலும் இவ்வளவு முக்கியத்துவம் ஏன் கொடுக்கவில்லை என்ற கேள்வி நியாயமானதே.

எனவே ஈழத்தமிழர் தென் இலங்கையின் போராட்டத்தில் கலந்து கொள்வது அவசியமானது. அதனைவிட அவசியம் தென் இலங்கையில் எழுச்சி பெற்ற போராட்டம் இலங்கைத் தீவிலுள்ள அனைத்து இனமக்களையும் சமத்துவமாக பேணுவதற்கான அரசியல் கட்டமைப்பை ஏற்படுத்தி அகிகாரத்தை பகிந்து கடந்த காலத்தில் இளைக்கப்பட்ட அநீதிகள் அனைத்திற்கும் உரிய தீர்வை தரக்கூடியதான சூழலை ஏற்படுத்த முன்வருமா என்பதாகும். அதற்கான உரையாடலை காலிமுகத்திடல் போராட்டக் குழுவுடன் மேற்கொள்வது அவசியமானது. அத்தரப்புடன் தெளிவான வரைபும் புரிதலும் ஏற்படுத்தப்பட வேண்டும். தேசிய கீதம் வெளிப்படுத்திய செய்தியை கவனத்தில் கொள்வது அவசியமானது.

அருவி இணையத்துக்காக பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE